(A.R.வேங்கடசலபதி
Madras Institute of Development Studies பேராசிரியர். முதுகலைப்
பட்டம் வரலாற்றில் பெற்றவர். புது தில்லி ஜவஹர்லால் நேரு சர்வகலா சாலையில் முனைவர்
பட்டத்தை “Social History of Tamil Publishing” என்ற
தலைப்பில் முடித்தவர். இவரது “நாவலும் வாசிப்பும்” மற்றும் “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” போன்ற புத்தகங்கள் அபுதின வகைமையில் முக்கியமானவை. இலக்கியத் திறனாய்வு,
கர்த்தாக்களைப் பற்றிய ஆய்வுகள், வரலாறு,
பொருளாதாரம் போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். ஆழமான
அரசியல் நோக்கர். 2016 செப்டம்பர் 16-ந்தேதி The Wire இணையப் பத்திரிகையில் The Atheist
and the Saint என்ற தலைப்பில் வேங்கடசலபதி எழுதிய ஆங்கிலக் கட்டுரையின்
தமிழாக்கம். தமிழில்:
முனைவர் மு.பிரபு)
இருபது
வயதே நிரம்பியிருந்த அந்த இளம் துறவி தருமபுரம் மடத்தில் சேர்ந்த வருடம்
1945. சைவ சித்தாந்தம், தமிழ் இலக்கியம்
மற்றும் சமஸ்கிருதத்தில் மேன்மையான புலமை கைவந்தது அந்தத் துறவிக்கு. குன்றக்குடி திருவண்ணாமலை மடத்தின் ஆதீனம்
தனக்கான இளவலை தேடிக்கொண்டிருந்த பொழுது, அவரது கவனத்தில் இந்த இளம் துறவி விழுந்தார்.
தருமபுரம் ஆதீனத்திற்கு இந்த இளம் துறவியை குன்றக்குடிக்கு அனுப்ப விருப்பமில்லை.
எப்படியோ பேசி, அவரை குன்றக்குடிக்கு அழைத்து வந்தார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு, குன்றக்குடி ஆதீனமானார்
அந்த 23 வயதுத் துறவி.
புதிய ஆதீனம் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அவசரப்பட்டார். சைவ சித்தாந்த மடங்கள் ஏற்படுத்தப்பட்ட
இலட்சியங்களிலிருந்து காலப்போக்கில் விலகி, சாதி இந்துக்களான வேளாளர்களின் கோட்டைகளாக
மாறியிருந்தன. புதிய ஆதீனத்திற்கு இந்த
நிலை சம்மதமில்லை; மடத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக குன்றக்குடி ஆதீனம்
அருகிலிருந்த ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் சென்றார். இதையும் தாண்டிய படிக்கு, தமிழில் அர்ச்சனை
மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆவது என்பதாக சீர்திருத்தங்கள் தொடர்ந்தது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்,
பூதான் இயக்கத்திலும் தீவிரமான பங்கெடுத்தார் குன்றக்குடி ஆதீனம். இதன் காரணமாகவோ என்னவோ, ஆதீனம் மக்களால் குன்றக்குடி
அடிகளார் (1925-1995) என்றே அழைக்கப்பட்டார்.
இறைவனுக்குத் தொண்டு செய்வதையே தனது முழுநேரக் கடமையாகக் கொண்ட ஆதீனம்
ஒருவர், நாத்திகரான பெரியார் ஈ வெ ராமசாமி அவர்களுக்கு ஆப்த நண்பனாக இருந்தது மனித
வாழ்வின் ருசிகரமான விந்தை.
1950களின் மத்தியில் விநாயகர் சிலைகளை உடைப்பது, ராமர் படங்களை எரிப்பது
என்பதாக ஒரு போராட்டத்தைத் துவக்கினார் பெரியார்.
இதற்கான பதிலடியை உடனடியாகத் துவக்கியது குன்றக்குடி அடிகளார். "அருள் நெறித் திருக்கூட்டம்" என்ற
அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் துண்டறிக்கைகளை மாநிலம் முழுவதும் விநியோகிக்கச்
செய்தார் அடிகளார். பெரியாரை எதிர்க்க பிராமணரல்லாத
ஒரு மடாதிபதி தலைமையேற்பதில் உள்ள சௌகர்யங்களை உணர்ந்த காஞ்சி பீடம் அடிகளாருக்கு
வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்தது. இது பிராமணர்களின் அரசியல். ஆனால் விரைவிலேயே காஞ்சி பீடம் ஏமாற வேண்டியிருந்தது.
1955-ன் துவக்கத்தில் பெரியார் மலேசியா பயணமானார். அங்கு கூட்டங்களில் பெரியார் தெரிவித்த
கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில வாரங்கள் கழித்து குன்றக்குடி
அடிகளாரும் மலேசியா சென்றார். பொதுவாக
மடாதிபதிகள் கடல் தாண்டுவதில்லை. ஆனால் சமூகத்தில்
வலுத்து வரும் நாத்திகர்களுக்கு பதில் சொல்லும் தேவை இருப்பதினாலேயே கடல் தாண்ட
வேண்டி வந்தது என்று தனது தூரதேச பயணத்தை நியாயப்படுத்தினார் அடிகளார். தங்களுடைய
மடங்களிலிருந்து வெளியே வந்து மக்களிடம் கடவுளின் கருணையை சொல்ல நேர்ந்தது
மடாதிபதிகளின் கட்டாயம் என்றால், அத்தகைய கட்டாயத்தை ஏற்படுத்திய "நாத்திகப்
பெரியார்களுக்கு" நன்றி சொல்லுதல் அவசியம் என்றார் அடிகளார்.
மலேசியப் பயணம் முழுவதிலும் மிகவும் சாமர்த்தியமாக சர்ச்சைக்குரிய விஷயங்களைக்
கையாண்டார் அடிகளார். சைவம் சாதிகளை அங்கீகரிக்கவில்லை என்றும் பல கடவுளர்களைத்
தொழுவது சைவத்திற்கு ஏற்புடையது அல்ல என்றும் சொல்லி, தனக்கு முன் அங்கு வந்த
பெரியார் என்ன பரப்புரை செய்தாரோ அதையே சைவத்தின் பெயரால் செய்த அடிகளாரை
விமரிசிப்பது பெரியாருக்கு முடியாத காரியமாய்ப் போய் விட்டது. சென்னை வந்து சேர்ந்த பெரியார் அடிகளாரைப்
பற்றி சொன்னார்: "நான் அங்கு இருக்கும்போது ஒரு சாமியார் வந்தார். அவரைப்
பற்றி என்னிடம் கேட்டார்கள். அவர்
எங்களில் ஒருவர் என்றும், அவரது உடையின் நிறம்தான் எங்களுடையதிலிருந்து மாறியிருக்கிறதே
தவிர, கருத்துக்கள் அல்ல என்றும் சொன்னேன்.
அவரை வரவேற்று உபசரிக்கும் படிக்கும் அங்குள்ளவர்களிடம் சொன்னேன்."
பெரியாரும் அடிகளாரும் நட்புறவோடு இயங்குவது தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரிய பேரு
என்பதை உணர்ந்த சில நலம் விரும்பிகள் இருவரின் ரகசியமான சந்திப்பு ஒன்றுக்கு
ஈரோட்டில் ஏற்பாடு செய்தனர். தானே வந்து அடிகளாரைச் சந்திப்பதாக சொன்ன பெரியார்
அவ்வாறே வரவும் செய்தார். மேல்மாடியில்
தங்கியிருந்த அடிகளார், பெரியார் வரும்பொழுது, தரைத்தளத்திற்கே வந்து அவரை வரவேற்க
முன்வந்ததை பெரியார் ஏற்கவில்லை.
அப்படியான செயல் முறையற்றது என்றும், மடாதிபதிகள் பின்பற்றும்
சம்பிரதாயங்களுக்கு மாறானது என்றும், மஹாசன்னிதானம் தன்னை வரவேற்க வாயிலுக்கு
வருவது பிசகான செயல் என்றும் சொன்ன பெரியார் அடிகளாரின் அறைக்கே சென்று அவரை
சந்தித்தார். அதைவிட சிறப்பானது, அடிகளாரை
மஹாசன்னிதானம் என்றே தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் அழைத்து வந்தார்.
பெரியார் அடிகளாரின் அறைக்குச் சென்றதும் அவரை வணங்க அடிகளார் எழுந்தார்.
இதைக்கண்டு பதற்றமடைந்து அவரை அமரச் சொல்லும் அவசரத்தில் தன் கைத்தடியை தவற விட்டார்,
தன் நிலை இழந்தாலும் மரபை மதிக்கத் தவறாத பெரியார். இரண்டு நபர்கள் வசதியாக
அமரக்கூடிய மடாதிபதியின் ஆசனத்தில் அடிகளார் அமர்ந்திருந்தார். அந்த ஆசனத்தில்
தன்னருகே அமரும்படி சொன்ன அடிகளாரை மறுத்த பெரியார், அந்த சந்திப்பு முழுவதிலும் மஹாசன்னிதானத்திற்கு
கொடுக்க வேண்டிய சம்பிரதாயமான மரியாதைகளை மிகவும் கவனமாகவும் உள்ளன்போடும்
கொடுத்தார். மஹாசன்னிதானம் பெரியாரை விட
ஐம்பது வருடங்கள் இளையவர் என்ற போதிலும்.
கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடத்தப் பெறுகிற சாதிப் பிரிவினைகள்,
தீண்டாமை பற்றி கடுமையாகவே அடிகளாரிடம் விவாதித்தார் பெரியார். பெரியாரின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகள்
அடிகளாரை எதுவும் எதிர்த்துப் பேச விடாமல் செய்தது. மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை
உணர்ந்த அடிகளார், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அவலமான
விலகலை எண்ணி மனம் வருந்தினார். அப்பர்,
ராமானுஜர், ராமலிங்க அடிகள் போன்ற குறவர்களின் தத்துவங்கள் மட்டும் நடைமுறையில்
இங்கே இருக்குமானால் ஈரோட்டுப் பெரியார்கள் தோன்றுவதற்கே வாய்ப்பில்லாமல்
போயிருக்கும் என்பதையும் உணர்ந்தார் மஹாசன்னிதானம்.
"நான் ஏன் கடவுளை எதிர்க்கிறேன்? எனக்கும் கடவுளுக்கும் என்ன கொடுக்கல்
வாங்கல்? கடவுளை நான் பார்த்தது கூட கிடையாதே? கடவுளின் பெயரால் நடக்கும்
அக்கிரமங்கள் இந்த நாட்டில் நடந்தேறா விட்டால், நான் ஏன் கடவுள் மறுப்பாளனாக
இருக்கிறேன்?" என்று பெரியார் வினவியதில் உள்ள பேருண்மை புரிந்த நிலையில், மஹாசன்னிதானம்
பெரியாரிடம் சொன்னார்: "நீங்கள் சொன்ன அக்கிரமங்களை எதிர்க்க சேர்ந்தே
போராடுவோம்." அதிர்ந்து போன பெரியார்,
"ஆனால் உங்களை பாரம்பரியமான இந்த மடம் அனுமதிக்குமா?" என்று கேட்டார். "ஐயா,
மாற்றப்படுவதற்குத்தான் மரபுகள் இருக்கின்றன. மாற்றுவோம்" என்றார் மஹாசன்னிதானம்.
அண்மைக்கால தமிழக தத்துவ - சமூக - அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் நட்பு
இப்படித்தான் துவங்கியது. 1956 செப்டம்பர்
மாதம் பெரியாரின் பிறந்த நாள் விழா திருச்சி பொன்மலையில் திராவிடர் கழகத்தால் கொண்டாடப்பட்ட
போது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார் குன்றக்குடி மஹாசன்னிதானம். அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக அழைப்பை
ஏற்றுக்கொண்ட அடிகளார், முதன்முறையாக பெரியாருடன் பொதுமேடையில் தோன்றினார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த பெரியார் விழா நேரம்
முழுவதும் அடிகளாருடன் சிரித்துப் பேசியவாறே காணப்பட்டார். இரண்டு பெரியார்களும் ஒருவரோடு ஒருவர்
சந்தோஷமாக கதைத்துக் கொண்டும், வெடிச் சிரிப்போடும் காணப்பட்டதில் ஊடகக்காரர்களுக்கு
கொண்டாட்டமாகப் போய் படங்களாக எடுத்துத் தள்ளினர். காணக் கிடைக்காத காட்சியல்லவா? கூட்டம்
முடிந்ததும் இருவரையும் தன்னுடைய ஸ்டுடியோவிற்கு ஒரு பிரத்தியேக புகைப்படச்
சந்திப்பிற்கு அழைத்த நபரை பெரியார் கடிந்து கொண்டார். மஹாசன்னிதானம் அவர்களை அப்படியான ஒரு
இடத்திற்கு அழைப்பது சம்பிரதாயமானது அல்ல என்று சொன்னார் பெரியார்.
இந்தக் கூட்டத்தில் இருவருக்கும் முன்பாக பேசிய திராவிடர் கழக பேச்சாளர்
ஒருவர் மதம் - கடவுள் பற்றி கடுமையாகத் தாக்கி பேசியதைக் கேட்டுத் துணுக்குற்ற
பெரியார் அவ்வாறு பிரசிங்கிக்க வேண்டாம் என்று குறிப்புணர்த்தும் விதமாக தனது
கைத்தடியால் அவரை செல்லமாகத் தட்டினார்.
பாராட்டிப் பேச வந்த மஹாசன்னிதானம், பெரியாருக்கு பொன்னாடை ஒன்றைப்
போர்த்தியது, பெரிய சர்ச்சைக்குள்ளானது.
சாதிகளுக்கிடையே இருக்கும் பிளவுகளைச் சமன் செய்ய பெரியார் ஆற்றிவரும்
மகத்தானப் பணிகளைப் பாராட்டிய சன்னிதானம், நாத்திகர்களின் கடவுள் சம்பந்தமான
வாதங்களை மறுத்து விலாவரியாக பதிலளித்தார்.
தன்னுடைய ஏற்புரையில் அடிகளாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பெரியார்,
"தமிழர்கள் சூத்திரர்கள் என்று அவமானப்படுத்தப் படுகின்றனர். இத்தகைய
அவமானங்களை ராமசாமிதான் துடைத்தெறிய வேண்டும் என்பதில்லை. மஹாசன்னிதானமோ அல்லது அவர் வணங்கும் கடவுளோ கூட
இந்த வேலைகளைச் செய்யலாம். வேலை நடக்க
வேண்டும், அவ்வளவுதான். யார் செய்தாலென்ன?
எங்களுடைய குறையை மஹாசன்னிதானம் புரிந்து கொள்ள வேண்டும். குறையைத் தெரிவிக்க நாங்கள் தேர்ந்தெடுக்கும்
முறைகளைப் பற்றி மஹாசன்னிதானம் கோபமடைய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டம் முடிந்தவுடன் இருவரும் ஒரே காரில் திருநெல்வேலிக்குக் கிளம்பிச்
சென்றனர். திருநெல்வேலியில் காரை விட்டு
இறங்கும் போது, சாதியை ஒழிப்பதில் இருவரும் இணைந்து செயல்பட உறுதி
கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இரண்டு துருவங்களிடையே அபூர்வமான நட்பு இப்படித்தான் துவங்கியது. 1973-ல் பெரியாரின் மறைவு வரைக்குமே கொஞ்சமும்
மாசற்றதாகவே அந்த நட்பு நீடித்தது.
0 comments:
Post a Comment