ஏறி வந்த ஏணி

| Sunday, October 9, 2016
 (ராமச்சந்திர குஹா.  அண்மைக்கால இந்தியா பற்றி பல நூல்களை எழுதியுள்ளவர்.  வலது – இடது சார்பு இல்லாமல் இந்தியாவைப் பற்றிய பார்வைகள் கொண்டவர்.  India After Gandhi, Gandhi Before India போன்ற புகழ் பெற்ற புத்தகங்களின் ஆசிரியர்.  டூன் பள்ளியில் படித்தவர்.  பின்னர் தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடித்து, கல்கத்தா இந்திய மேலாண்மைக் கழகத்தில் முதுகலைப் பயின்றவர்.  சர்வதேச பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.  58 வயது நிறைவுறும் நிலையில், மனைவி சுஜாதா கேசவனுடன் பெங்களூருவில் வசிக்கிறார்.  அரசியல் மட்டுமல்லாது, கல்வி, கிரிக்கெட், வரலாறு ஆகியன பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர்.  சூழலியலாளர் என்று இவரை மிக எளிதாக சொல்லலாம்.  தன்னுடைய புதிய நூலான Democrats and Dissenters-ல் குஹா காங்கிரசின் – கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சி, இந்துத்துவாவின் எழுச்சி பற்றி விரிவாகப் பேசுகிறார்.  சில முக்கியமான ஆளுமைகள் பற்றிய இதுவரை காணக் கிடைக்காதவைகள் குஹாவால் இங்கு தெரிவிக்கப்படுகிறது.  அமர்த்யா சென் அவர்களைப் பற்றிய அத்தியாயம் தொடர் விளைவுகள் பலவற்றைத் தொடங்கி வைப்பதாக உள்ளது.  சஞ்சிகையாளர் ஆதித்ய மணி ஜா, பிசினஸ் லைன் நாளிதழுக்காக குஹாவைப் பேட்டி கண்டுள்ளார்.  இந்த நாளிதழின் சனிக்கிழமை இணைப்பான BLink-ல் 8-10-2016  அன்று வெளியாகியுள்ள நேர்காணலின் தமிழ் வடிவம் இது.  தமிழில்: முனைவர் மு. பிரபு.)  

ஆதித்ய மணி ஜா: பிஜேபி அரசுக்கு பல வகைகளிலும் நெருக்கடி அதிகரித்து வரும் நேரம் இது.  ஆனால், இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், காங்கிரசின் “நிகழ்ந்து கொண்டிருக்கும்” இறப்பைப் பற்றி பேசுகிறீர்கள்.  பிஜேபி அரசுக்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனநிலை, அந்தக் கட்சியில் அதிருப்தியாளர்களின் செயற்பாடுகள் ஆகியவை காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

குஹா: இத்தகைய நிலை காங்கிரசுக்கு கொஞ்சம் உதவலாம்.  தற்போது காங்கிரஸ் வைத்திருப்பது வெறும் 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே.  பிஜேபி-யைப் பற்றிய மக்களின் மனநிலை 50, 60, 70 என்பதாக காங்கிரசுக்கு உதவலாமே தவிர 150 அல்லது 200 என்பதாக மாறாது.  எனது கருத்துப் படி, காங்கிரஸ் திரும்பி எழவே முடியாத தனது வாழ்நாளின் கடைசி நோய்மையில் விழுந்து விட்டது.  இந்தியாவின் மிகச் சில பிரதேசங்களில் மட்டுமே அதனுடைய செல்வாக்கு மிச்சமிருக்கிறது.  அதனுடன் ஒன்றிரண்டு குறிப்பிடத்தக்க தலைவர்களே மீதமிருக்கின்றனர்.  கட்சி என்ற அமைப்பு மிகவும் மோசமாக சிதைந்திருக்கிறது.  அதனுடைய தலைமையிடத்தில் கட்சியினரை உத்வேகப்படுத்தக் கூடிய எந்தப் பண்பும் இல்லை.  அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது எவ்வாறு மந்தமாக இருந்தனரோ, அவ்வாறே எதிர்க்கட்சி என்ற நிலையிலும் உள்ளனர்.  அதனுடைய தலைவர்கள் மாறவேயில்லை. புதிய முகங்களை உள்ளிழுக்க காங்கிரஸ் முயலவேயில்லை என்பது வருத்தற்குரிய விஷயம்.  ஏன் ப.சிதம்பரம், கபில் சிபல், ஆனந்த் சர்மா போன்றவர்களே முக்கியமான கட்சிப் பதவிகளில் நீடிக்க வேண்டும்?  காந்தி குடும்பத்திற்கு விசுவாசிகள் மட்டுமே அந்தக் கட்சியில் பதவியில் இருக்க முடியும் என்ற நிலை வேதனையானது.  கட்சியை வளர்ப்பது எப்படி, நல்ல தலைவர்களை வளர்ப்பது எப்படி என்பன பற்றி ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை.    

ஆதித்ய மணி ஜா:  நீங்கள் இந்தப் புத்தகத்தில் குமாரசாமி காமராஜ் அவர்களைப் பற்றி எழுதியுள்ளது நெகிழ்ச்சியானது.  ஹிந்தியோ ஆங்கிலமோ தெரியாத மனிதர்.  ஆனால் 60-களில் காங்கிரஸில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக இருந்துள்ளார்.  இன்றும் அதைப்போலவே நவீன் பட்நாயக் ஓடிசாவில் நீண்ட வருடங்களாக ஆட்சியில் உள்ளார்.  ஆனால், ஓடியா தெரியாது.  இதற்காகவே அவரது அரசியல் எதிரிகளால் ஓயாமல் விமரிசனத்திற்கு உள்ளாகி வருகிறார்.  இந்திய அரசியலின் இந்தப் பரிமாணங்களை நீங்கள் எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள்?

குஹா: நவீன் பட்நாயக்கைப் பொறுத்தவரை, அவரிடம் விளங்கிக் கொள்ள முடியாத கவர்ச்சி இருக்கிறது.  அவரது அப்பாவின் வாரிசு என்பதால் கூட இருக்கலாம்.  மோடி, நிதிஷ் குமார், மாயாவதி போன்றவர்களைப் போல, குடும்பம் ஏதும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மக்களுக்காக உழைப்பவர்கள் என்ற பிம்பம் நவீனுக்கும் உள்ளது.  சொகுசாக வாழ்ந்து வந்த டெல்லி வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு, ஓடிஸா மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளார் என்ற பிம்பமும் அவருக்கு உள்ளது.  அடிக்கடி போய் வருபவன் என்ற முறையில் ஓடிசாவைப் பற்றி எனக்குத் தெரியும்.  அந்த மாநிலத்தைப் பொறுத்த அளவில், எந்த இடத்தில் தேர்தலில் நின்றாலும், நவீன் மிக எளிதாக வெல்வார்.  அவர் விரும்பும் வரையிலுமே அவர்தான் ஜெயிப்பார்.   ஓடிஸா மக்கள் அவரை நம்பும் விதம் ஆச்சர்யமானது.

ஆதித்ய மணி ஜா: அமிதவ் கோஷ் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ஒன்று சொல்கிறார். “எந்த அரசியல்வாதியும் நல்லவர் என்று மக்கள் நம்பவில்லை; இருப்பதில் யார் குறைந்த அளவு அயோக்கியர்கள் என்ற அளவிலேயே அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்”.  இதைப் பற்றிய தங்களின் கருத்து?

குஹா: நான் அப்படி நினைக்கவில்லை.  கடந்த பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, மக்களின் ஆதர்சமான எதிர்பார்ப்பாக மோடி இருந்தார்.  இதற்காக மோடியின் ஆதரவாளர் என்று என்னைப் பற்றி நினைக்க வேண்டாம்.  நிலைமை அப்படித்தான் இருந்தது. இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், தங்களது எண்ணம் பொய்த்து விட்டதாக மக்களில் பலர் நினைக்கலாம்.  ஆனால், அது வேறு விஷயம்.  அன்று தில்லியில் நிலவிய செயலற்ற, தூங்கி வழிந்த, ஊழல் மலிந்த நிர்வாகம் மோடிக்கு பெரிதும் உதவியது என்று சொன்னாலும் தவறில்லை. “எனக்கு ஓட்டளியுங்கள்; இதை மாற்றிக் காட்டும் வல்லமை எனக்கு உண்டு” என்று மோடி சொன்னதை மக்கள் நம்பினார்கள்.  அவரது பேச்சு அலங்காரம் நிரம்பியதாக இருந்தாலும் தன்னிடமான ஒரு இசைவை மக்களிடம் அவரால் ஏற்படுத்த முடிந்தது.  மோடியை “குறைந்த அளவிலான தீமை” என்பதாக மக்கள் நினைக்கவில்லை.  அன்றைய நிலையில், மக்களின் நம்பிக்கையாக மோடி தெரிந்தார்.  இந்திய மக்கள் இன்னும் அந்த அளவு சந்தேகப் பிராணிகளாக மாறவில்லை என்று நினைக்கிறேன்.  நான் ஒட்டுமொத்த இந்தியாவைப் பற்றி சொல்லவில்லை.

ஆதித்ய மணி ஜா: அப்படியானால், சில இடங்களில் மக்கள் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

குஹா:  ஆமாம்.  தமிழ்நாட்டைப் போல.  அங்கிருக்கும் இரண்டு பெரிய கட்சிகளும் ஊழல் மலிந்தவை என்று மக்களுக்குத் தெரியும்.  யார் “குறைவான தீமை” என்று பார்த்து மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள்.

ஆதித்ய மணி ஜா: அல்லது, யார் தங்களது முகத்தை வெள்ள நிவாரணப் பொட்டலங்களில் ஒட்டி விநியோகிக்கிறார்கள் என்பதைப் பார்த்தும் வாக்களிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

குஹா: ஆமாம். அப்படியும் சொல்லலாம்.

ஆதித்ய மணி ஜா: இந்தப் புத்தகத்தின் ஒரு இடத்தில், இந்திய நாளிதழ்கள் 80-களில் சுற்றுப்புற சூழல் செய்திகளுக்காக தனியான செய்தியாளர்களை நியமித்து இருந்ததாகவும், தற்பொழுது அப்படியான நிலைமை இல்லை என்றும் சொல்கிறீர்கள்.  சூழலியலைப் பற்றி தரமான செய்திகள் தற்சமயம் வெளியிடப்படுவதில்லை என்பதுதான் தங்கள் கருத்தா?

உண்மையில் நடந்தது என்னவென்றால், நாளிதழ்களில் பணியாற்றிய சூழலியல் செய்தியாளர்கள், அதற்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் சஞ்சிகைகளுக்கு சென்று விட்டார்கள்.  Down To Earth போன்ற பத்திரிகைகளை உதாரணமாகச் சொல்லலாம்.  70-லிருந்து 90-கள் வரை தரமான சூழலியலைப் பற்றிய பல நல்ல கட்டுரைகளை நாளிதழ்களில் பார்க்க முடிந்தது.  முக்கியமாக சூழலியல் கேடுகள் விளிம்பு நிலை மனிதர்களைப் பாதிக்கும் விதம் பற்றிய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தபடி இருந்தன.  ஆனால் அடுத்த பதினைந்து வருடங்களில், இந்த சூழலியல்வாதிகள் சமூக முன்னேற்றத்தின் எதிரிகள் என்பதாக பார்க்கப் பட்டனர்.  ஆனால், இன்று கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற சொல்ல வேண்டும்.  சூழலியல் பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை என்று அனைவராலும் உணரப்பட்டுள்ளது இன்றைய நிலையில்.  புது தில்லியில் அமுல்படுத்தப் பட்டிருக்கும் மாசுக்கட்டுப்பாடு விதிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  அழிந்து வரும் காடுகள், நீர்த்தேக்கங்கள் பயனற்று போதல், மண் மாசுபடுதல் – என்பன பற்றி நிறைய கட்டுரைகள் முதலில் வெளிவந்தவாறு இருந்தன.  சூழலியல் துறை ஊடகத்தின் முதல் நிலைப்படி அதுதான்.  ஆனால் இப்போது வேறு பல பிரச்சினைகளைப் பற்றியும் அந்த ஊடகம் கவனம் செலுத்துகிறது.  காற்று மாசுபடுதல் என்பது அனைத்துப் பெருநகரங்களையும் பாதிக்கும் விஷயம் இன்று.  ஏழைகள் மோசமாக பாதிப்படைகின்றனர்.  அவர்களின் ஊட்டச் சத்து தேவைகள் மிகவும் அதிகம்.

ஆதித்ய மணி ஜா: இந்தப் புத்தகத்தில் “பழைமைவாத அறிவுஜீவிகளுக்காக” (conservative intellectuals) மட்டுமே ஒரு முழு அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளீர்கள்.  அப்படிப்பட்ட யாரும் இன்று இந்திய அரசியலில் இல்லை என்றும் சொல்கிறீர்கள்.  ஜகதீஷ் பகவதி போன்றோரை நீங்கள் அப்படிப்பட்ட அறிவுஜீவிகள் என்று கருதவில்லையா?

குஹா: தன்னை ஒரு பழமைவாதி என்று ஜகதீஷ் கருதமாட்டார் என்று நினைக்கிறேன்.  தனியார் மயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.  மோடி இன்னும் முழுமையான சந்தைவாதியாக மாறவில்லை என்று ஜகதீஷ் கண்டிப்பதைக் கவனியுங்கள்.  வேறு யாரை அப்படிச் சொல்ல முடியும்? அருண் ஷோரியை சொல்லலாம்.  பிஜேபி கட்சிக்குத் தேவையான அறிவுலகப் பரிமாணங்களை ஷோரியால் வழங்க முடியும்.  அவரின் பங்களிப்பு அந்தக் கட்சி சந்தித்திருக்கும் மோசமான விமரிசனங்களிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும்.  ஆனால் அவரைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டன.  திட்டமிட்டு அவர் அரசிலிருந்து விலக்கப் பட்டார். இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனராக ஷோரி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். (Indian Council for Historical Research).  ஆனால், பிஜேபி யாரை அப்பதவிக்கு நியமித்துள்ளது? ராமாயணம் உண்மைக் கதை என்று நம்பும், தன் வாழ்நாளில் ஒரு ஆய்வறிக்கையைக் கூட எழுதியிருக்காத யாரோ சுதர்சன் ராவ் என்பவரை அந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் அமர்த்தியுள்ளது.  “பழமைவாத அறிவுலகவாதிகள்” ஜனநாயகம் ஒன்றின் இன்றியமையாத தத்துவ மோதல்களுக்கு அவசியம்.  இந்தத் தத்துவ மோதல்களின் வழியாகத்தான் ஜனநாயகப் பண்புகள் வளரும்.  பழமைவாத அறிவுலகவாதிகள் ஒரு நீண்ட பாரம்பர்யத்தைக் கொண்டிருப்பவர்கள். அவர்களை இந்த ஆட்சி புறக்கணிக்கலாகாது.

ஆதித்ய மணி ஜா: ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களுக்கும் நேருவிற்கும் இடையே நடைபெற்று வந்த தத்துவ ரீதியான சம்பாஷணைகளை, இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதற்கு உதாரணமாகக் காட்டியுள்ளீர்கள்.

குஹா: மிகச் சரியாக சொன்னீர்கள்.  காங்கிரஸ் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கப் போவதில்லை.  வலுவான எதிர்க்கட்சி கொண்ட அரசியலுக்குத்  தேவையான கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜேபி நேருவிற்கு எச்சரிக்கை விடுத்த வண்ணமிருந்தார்.  ஆனால்,  நேருவின் காங்கிரஸ் செவிமடுக்கும் நிலையில் இல்லை.  ஒரு மிதப்பான நிலை காங்கிரசிடம் காணப்பட்டது.  இன்றைய பிஜேபி-யைப் போலவே.  தற்போதைய அரசில் தத்துவ – கொள்கை ரீதியான விவாதத்தை மேற்கொள்கிறார்கள் என்று யாரையாவது சொல்ல முடியுமா? கேலியும் கிண்டலுமாக நிறைந்து போய் விட்டது இன்றைய விமரிசனங்கள்.  சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருப்பதும் இதுதான்.  வாஜ்பேயி தலைமையிலான அரசு இந்த விஷயத்தில் மிகவும் மேம்பட்டது என்றே நினைக்கிறேன்.  அருண் ஷோரி, வாஜ்பேயி, அத்வானி, யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் இந்தக் குறையைப் பெரிதும் போக்கினார்கள் என்று சொல்ல வேண்டும்.  அவர்கள் மார்க்சிஸ்டுகள் அல்ல என்ற போதிலும், இடதுசாரி அறிஞர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆகியோரை மிகவும் மதித்தார்கள்.  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), அணு ஆயுதம் ஆகியன மட்டும் நாம் வாழுகின்ற இந்த நாகரீக உலகத்தை உருவாக்கி விடவில்லை. நம்மிடம் இன்று இல்லாமல் போய் விட்ட எத்தனையோ விஷயங்களும் சேர்ந்ததுதான் இந்த உலகம் என்பதை இன்றைய பிஜேபி ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே எனது கணிப்பு.

0 comments:

Post a Comment