மண்டல் குழு அறிக்கை - இரண்டு

| Thursday, October 6, 2016


மண்டல் கமிஷன் அறிக்கை – முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதான வற்புறுத்தல்

(பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற சிறுபான்மையோர் மாநாடு புது தில்லியில் 1983 ஏப்ரல் 13ந் திகதி நடைபெற்றபொழுது திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: முனைவர். மு.பிரபு)

பாகம் இரண்டு

பாரபட்ச வாதிகள் தங்களது அடுத்த வாதமாக சுட்டுவது என்னவென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 14, 15, 16 மற்றும் 29ல் கூறப்பட்டிருக்கும் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்பதை.  சமநிலையில் இருப்பவர்களின் இடையில்தான் சமநிலை இருக்க முடியும் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

ஏற்றத்தாழ்வு இருப்போரிடையே சமநிலை பற்றி பேசுவது சமத்துவமின்மையையே வளர்க்கும்.  வாய்ப்புகளில் சமத்துவம், முடிவுகளில் சமத்துவம் என்பவைகளைப் பார்க்குமிடத்து, முடிவுகளில் சமத்துவம் என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  காட்டாக, ஓட்டப் பந்தயம் ஒன்றில் சிறந்த ஓட்டப் பந்தய வீரர் ஒருவரும், மாற்றுத் திறனாளி ஒருவரும் பந்தயத்தின் துவக்கக் கோட்டில் நிறுத்தப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  இது வாய்ப்பில் சமத்துவம் என்பதாகும்.  பந்தயத்தின் துவக்கத்தில் இருவரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள்.  இது நடத்தும் முறையில் சமத்துவம் என்பதாகும்.  ஆனால், பந்தயம் தொடங்கி இருவரும் ஓடுகிற நிலையில், முடிவு / விளைவு என்னவாக இருக்கும்?  மாற்றுத் திறனாளி பின்தங்க, பந்தய வீரர் வெற்றி பெறுவார்.  ஆகையால், மாற்றுத் திறனாளி நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆகியோருக்கான சலுகைகள் முக்கியமாகிறது.

இந்த நவீன சமூகத்தில், சாதியக் கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்ந்திருப்பதாகவும், இதற்குக் காட்டாக, பிரிட்டிஷ் ரயில்வே நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் செம்மைபடுத்தப்பட்ட திட்டங்கள் (அனைவரும் ஒரே பெட்டியில் பயணிப்பது), சமபந்திகள், நகரமயமாதல், தொழிற்மயமாதல், பெருகிவரும் கல்வி வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுரிமை ஆகியவற்றை நமக்கு எதிராக இருப்போர் சொல்லக்கூடும்.  ஆனால், ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவைகளெல்லாம் மேலெழுந்த வாரியான மாற்றங்களே தவிர, சாதிய அடிப்படைக் கட்டமைப்பில் எவ்வித திருப்புமுனையான மாற்றத்தையும் செய்துவிடவில்லை.  

ராமாயணத்தில் விஷம்புகனின் தலையும், மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டை விரலும் சாதீய அமைப்பால்தான் வெட்டப்பட்டன.  புராண காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நேர்வுகள், தற்காலத்திய சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும்? தங்களுடைய முன்னோர்களின் செயலுக்கு தற்போதைய பிராமணர்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படக்கூடும். தற்காலத்திய பிராமணர்களின் இயங்குமுறையைப் (சமூக ஒழுக்கத்தை) பார்க்கலாம்.  அண்மையில் பனராஸ் நகரத்தில் நிறுவப்பட்ட சம்பூரனந்தா சிலையை திறப்பதற்கு நமது நடுவண் அரசு அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம் அழைக்கப்பட்டார்.  ஆனால், நிகழ்ச்சி முடிந்தவுடன் பனராஸ் நகரத்து பிராமணப் பெருமக்கள் சிலைக்கு புனருத்தான சடங்குகள் உடனடியாக நடத்தினர்.  பாபு ஜகஜீவன் ராம் அவர்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால் சிலை தீட்டுப்பட்டு விட்டதாகவும், ஹிந்து சாஸ்திரப்படி பிராமணரின் சிலையை தாழ்த்தப்பட்டவர் தொடலாகாது என்பதாலும் இந்தப் 'புனிதமாக்கல்' சடங்கு நடந்தேறியது.  பிற சாதியினர் பொருளாதார ரீதியாக எவ்வளவு முன்னேறினாலும், நவீனமயமானாலும், பிராமணர்களின் ஆழ்மனதைப் பொறுத்தவரை, சமத்துவம் என்பது கிடையாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக்குகிறது.

இதே கருத்தை மோகன் - லல்லு நிகழ்வின் மூலம் மண்டல் குழு அறிக்கை நமக்கு விளக்குகிறது.  நகரப் பின்புலத்தில் வசதியான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் மோகன். அவரின் பெற்றோர் இருவருமே நல்ல கல்வி பெற்றவர்கள்.  லல்லு கிராமிய பின்புலத்தைக் கொண்டவர் மட்டுமல்லாமல், அவரின் பெற்றோர் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்.  அங்கு நிலவிய சாதி அமைப்பில் கீழான சமூக அந்தஸ்தைக் கொண்டவர்கள்.  பிறக்கும் போது இருவருமே ஒரே அளவிலான மதி அமைப்பைக் கொண்டிருப்பார்கள்.  ஆனால், சமூக கலாச்சார மற்றும் சூழல் காரணங்களினால் மோகன் லல்லுவை அனைத்திலும் வெல்ல முடியும்.  இதனாலேயே, மோகனின் தகுதி லல்லுவின் தகுதியை விட மேலதிகமானது என்று சொல்லவிட முடியுமா?  இருவரும் மாற்றிப் பிறந்திருப்பின் நிலைமை தலைகீழாக அல்லவா இருந்திருக்கும்?  ஆகவே, தகுதி என்பது இயல்பான குணப்பாடுகளும் சூழலின் சௌகர்யங்களும் இணைந்ததே.  நாகரீகமடைந்த ஒரு சமுதாயத்தின் மனசாட்சியும் சமூக நீதியும், தகுதி மற்றும் சமத்துவம் என்பதை தவறாகப் புரிந்து கொள்ளுதல் ஆகாது. சமமில்லாத இருவருக்கிடையே நடத்தப்படும் எந்தப் போட்டியிலும் தகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சமூகத்திலே முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் அனைத்திந்திய பணிகளில் நீண்டகாலமாக தாங்கள் செலுத்திவந்த மேலாதிக்கம் தகர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வகுப்புரிமையை குலைக்கும் வண்ணம் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மண்டல் அறிக்கை விரிவான விளக்கங்களை அளிக்கிறது.  மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவது என்பது தேசத்தின் வறுமையை நீக்குவதான பிரச்சினை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  ஆனால், இந்த தேசத்தை முன்னேற்றுவதற்காக அரசால் அமுலாக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களால் இதுவரை என்ன பயன் நேர்ந்துவிட்டது? கிராமப்புற மக்களுக்கான கடன் வசதிகள், நிலச் சீர்திருத்தங்கள், நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள், விதைகள் மற்றும் விவசாயக் கருவிகள் சலுகை விலையில் வழங்கல், சிறு தொழில் மற்றும் கனரகத் தொழில்களைத் துவக்குதல், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் ஆகியவைகள் உண்மையில் இந்த தேசத்தின் ஏழைகளுக்கு ஒன்றுமே செய்து விடவில்லை.  இவைகளால் பயனடைந்தது நவ முதலாளிகளும், தொழிலதிபர்களும்தான்.  அவர்கள் மேலும் வசதி படைத்தவர்களாக ஆகிப்போன அதே வேளையில் ஏழைகள் மிக மோசமாக கீழே சரிந்துவிட்டனர். நியாயமான கூலிக்காக தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுவருவதை நாம் மறந்துவிடலாகாது.  இவைகளால் தெரிய வருவது என்னவென்றால், பொருளாதார முன்னெடுத்தல்கள் மூலமாக சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியோருக்கு எவ்விதப் பயனையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதைத்தான்.  பிற்படுத்தப்பட்டோரை முன்னேற்ற சாதி அடிப்படையிலான வகுப்புரிமையே நிரந்தரத் தீர்வு.

மண்டல் அறிக்கையின் படி, இந்த நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவிகிதத்தினர் பிற்படுத்தப் பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.  அரசு வேலை, அதிலும் குறிப்பாக, நடுவண் அரசு வேலை, அதிகாரம் மற்றும் பெருமையின் குறியீடாக இங்கு பார்க்கப்படுகிறது.  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் போது, ஆட்சி அதிகார அமைப்பில் தானும் பங்கெடுப்பதாக அவர் உணர்கிறார்.  அவ்வகுப்புகளைச் சார்ந்த ஒருவர் மாவட்ட ஆட்சியராகவோ, மாவட்ட காவல் அதிகாரியாகவோ பதவி பெறும் பொழுது, அவர் சார்ந்த சமூகமே தாங்கள் சமூக நிலையில் உயர்ந்து விட்டதாக நினைக்கத் தலைப்படுகிறது. 

வகுப்புவாரி சலுகைகள் வேண்டாம் என்று சொல்லுபவர்களின் இன்னொரு வாதம் என்னவென்றால், சலுகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அரசு வேலைகளில் அமர்த்தும் பொழுது, அரசு இயந்திரத்தின் தரம் மற்றும் திறன் குலைந்துவிடுகிறது என்பதாகும்.  ஆனால், உண்மை நிலை என்ன? தற்போது அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்போரில் பெரும்பாலானோர் "தகுதி" அடிப்படையில் அப்பதவிகளுக்கு வந்தவர்கள்தான்.  ஆனால், அந்தத் துறைகள் மிகவும் மோசமான செயற்பாட்டுடனும் நட்டம் ஈட்டியும்தான் வருகின்றன. பொதுமக்களின் கடுமையான விமரிசனத்திற்கும் உட்பட்டு வருகின்றன அந்த நிறுவனங்கள்.  பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆகியோரை பெருவாரியாக அரசுப்பணிகளில் நியமிக்கும் போது, அந்தத் துறைகளின் தரம் குறைகிறது என்பது மிகவும் தவறான வாதம்.  இந்தச் சமூக மக்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தால் உருவாகும் விமரிசனம் இது.  உண்மையில், இவர்கள் பணியமர்த்தப்படும் போதுதான், இந்தச் சமூக மக்களின் சிக்கல்களை, பிரச்சினைகளை அரசு இயந்திரம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகுப்பினரின் சமூக கலாச்சார தேக்கத்தால், அவர்கள் தற்சமயம் போட்டியில் வெல்ல முடியாதவர்களாக இருக்கலாம்; ஆனால் போட்டி என்பது சமத்திறன்கள் இருப்போரிடையேதான் நடத்தப்பட வேண்டும்.  மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து உருவாகும்போது அதனால் கிடைத்திடும் சமூகப்பயன் மிகப் பெரிது.

இன்னொரு தந்திரமான வாதமும் முன்வைக்கப் படுகிறது.  வகுப்புரிமையின் பயன்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே உள்ள ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக உள்ளது என்பதே அது.  பிற்படுத்தப்பட்டவரிடையே பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களிடையே பிணக்குகளை உருவாக்க செய்யப்படும் சதி இது.  ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, தவிர்க்கவியலாத படிக்கு சில பிழைகள் நேரலாம்.  ஆனால் இவைகளைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.  பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறபோது, அவர்களில் ஒரு சிலர் செல்வாக்கான நபர்களாக இருப்பதை அவர்களின் சமூகத்தின் செல்வாக்காக கொள்ள முடியாது.  வகுப்புரிமை சரியான முறையில் அமுல்படுத்தப்படும் போது, முற்பட்ட வகுப்பினரின் ஏகபோக உரிமை ஆட்சியதிகாரத்தில் சரியும் என்பது மட்டுமல்ல, அதிகாரப் பகிர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்த நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வாய்ப்புக் கிடைக்கும். 

இதில் மேல் சாதியினர் ஜீரணித்துக் கொள்ள முடியாத விடயம் ஒன்றும் இருக்கிறது.  இதுநாள் வரை அரசுப் பணிகள் முழுவதும் அவர்களாலேயே கையாளப்பட்டு வந்தன.  தற்போது பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆகியோரின் கைகளில்  இந்தப் பணிகள் வருவதால், அவர்களின் அதிகாரம் குறைவது மட்டுமன்றி, இன்று வரை அரசு அலுவலகங்களின் வாயிற்படிகளின் ஏக்கமுடன் காத்துக் கிடந்த இந்த "கீழ்சாதியினர்" அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர் என்பது மேல்சாதியினர் சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்.  ஆனால், இயற்கை நீதியை அமுல்படுத்த வேண்டிய நேரம் இது. வயிறு நிரம்பியுள்ளவர்கள் பசித்தவர்களுக்கு வழிவிட்டு நின்றாக வேண்டும். தங்களின் முன்னோர்களின் செயலுக்காக தாங்கள் பழிவாங்கப்படக் கூடாது என்பது மேல்சாதியினரின் வாதமாக இருக்கலாம். உண்மைதான். இது மனிதாபமான உணர்வுடன் அணுகவேண்டிய சிக்கல்தான்.  ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆகியோரின் பிரச்சினைகளும் மனிதாபமான உணர்வுடன் அணுகப்பட வேண்டிய பிரச்சினைதான்.  தங்களின் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்த ஆசாரங்களை, புனஸ்காரங்களை, மரபுகளை மற்றும் பழக்கவழக்கங்களை இந்த மேல்சாதியினர் கைவிடத் தயாராக உள்ளனரா? அவர்களின் இந்தவிதமான ஆசாரங்கள் சமூக நன்மைக்குக் கேடு என்று தெரிந்தும், அவைகள் காலாவதியானவை என்று தெரிந்தும் கூட, அவைகளை இன்னும் பிடித்துக் கொண்டிருப்பதேன்?  உண்மையில், மேல்சாதியினரால் தங்களின் சாதீய உணர்வுகளை விட்டுவிடவே முடியாது.  தங்களின் முன்னோர்களின் செயற்பாடுகள் தவறு என்று அவர்கள் உணரும் பட்சத்தில், அவைகள் தவறானவை என்று பொதுவெளியில் அவர்கள் அறிவிப்பார்களா?  தங்களின் சாதிய மேன்மைக்கு அடையாளமாக அவர்களின் தோள்களின் குறுக்காக அணிந்திருக்கும் பூணூல் கயிறை அறுத்து எறிவார்களா? இந்தச் சிறிய தியாகத்தைக் கூட செய்ய அவர்கள் முன்வரமாட்டார்கள்.  இவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.  தங்களின் தம்பட்டமான நிலையை விட்டு இவர்களே இறங்கி வரா விட்டால், விரைவில் இறக்கி விடப்படுவார்கள்.  இது வெறும் வாய்ப்பேச்சு எச்சரிக்கை அல்ல.  மாறாக, வரலாற்றுக் கட்டாயமாகும்.  காலங்கள் மாறிவிட்டன; பிற்படுத்தப்பட்டோர் தங்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பற்றி நன்கு அறிந்துள்ளார்கள்.

மண்டல் குழுவின் அறிக்கை பற்றியும், தனி ஒதுக்கீட்டின் அவசியத்தைப் பற்றியும் விரிவாக இதுவரை சொல்லப்பட்டது.  தனி ஒதுக்கீடு கட்டாயமானது; தேவையானது; மட்டுமன்றி, சமரசத்திற்கு இடமில்லாதது.
இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு நடுவண் அரசால் அமைக்கப்பட்டு அது தன் அறிக்கையை 1980ம் ஆண்டு சமர்ப்பித்துள்ளது.  இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடுவண் அரசை வலியுறுத்துவதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம்.  இந்தப் பரிந்துரைகள் முதலில் நடுவண் அரசுப் பணிகளிலும், பின்னர் மாநில அரசுப் பணிகளிலும் நடைமுறைபடுத்தப்படல் வேண்டும். இந்தப் பரிந்துரைகளை அமுல் செய்திடல் வேண்டும் என்று மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
(1) இதுநாள் வரை நடுவண் அரசுப் பணிகளின் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி ஒதுக்கீடு கிடையாது.  27 சதவிகித பணிகளை பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைக்கிறது.
(2) தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கான 22.5 சவிகித தனி ஒதுக்கீடு முழுமையாக இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
(3) சில மாநில அரசுகளைப் பொறுத்தவரை 27 சதவிகித தனி ஒதுக்கீட்டை அவர்கள் அமுல்படுத்தவில்லை.  அவர்கள் உடனடியாக இதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.  தனி ஒதுக்கீட்டை கொஞ்சமும் நடைமுறைப்படுத்தாத மாநில அரசுகள் உடனடியாக அமுல்படுத்த முன்வருதல் வேண்டும்.
இந்தக் குழுவின் அறிக்கைகளை நடைமுறைப்படுத்த, நடுவண் அரசுப் பணிகளில் பரிந்துரைக்கப்பட்டவாறு தனி ஒதுக்கீட்டை செயற்படுத்த, முதலில் நடுவண் அரசு முன்வர வேண்டும்.  ஆனால், இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்வேகம் எதையும் காட்டாமல் தாமதப்படுத்தும் தந்திரங்களில் அரசு ஈடுபட்டு வருகிறது.  பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது குழு தனது அறிக்கையை 31-12-1980 அன்றே அரசுக்கு சமர்ப்பித்திருந்த போதிலும், அரசு அதனை 30-0-1982 அன்றுதான் பொதுப்பார்வைக்குக் கொண்டுவந்தது.    மேலும் இருபது அம்ச திட்டத்தைக் கலந்தாலோசிப்பதற்காக கூட்டப்பட்ட முதல் அமைச்சர்கள் மாநாட்டில் (3-4-1983) மாலை நேரக் கூட்டமர்வில் மேலோட்டமாக இந்தக் குழுவின் அறிக்கை விவாதிக்கப்பட்டது.
நடுவண் அரசு, இந்த விடயத்தைப் பொறுத்தவரை, தானாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.  நாம் ஒன்றிணைந்து நடுவண் அரசு வற்புறுத்தாவிடின், எதுவும் நடக்கப் போவதில்லை.  எவ்வித தாமதமும் இனி ஏற்படா வண்ணமும், மண்டல் குழுவின் பரிந்துரைகளில் எவ்வித மாற்றமுமின்றி அவைகளை நடைமுறைப்படுத்த வேண்டியும் நடுவண் அரசை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வற்புறுத்துவோம்.

உங்களுக்கு எனது நன்றிகள்.

0 comments:

Post a Comment