இந்தியா
டுடே டெலிவிஷன் ஆசிரியர் (Consulting Editor) ராஜதீப் சர்தேசாய் அண்மையில்
மலாலா யூசுப்சாய் அவர்களை சந்தித்தார்.
சந்திப்பு செப்டம்பர் மாதம் 15ந்தேதி நடைபெற்றது. கல்வி மனித
உரிமைகளில் ஒன்று என நிலைநாட்ட மலாலா கொடுத்த விலை அதிகம். சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசு மலாலா
பெற்றிருந்த நிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.
பதினெட்டு
வயதை இப்போதுதான் தொட்டிருக்கிறார் மலாலா. வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் மிக மோசமான
பாடங்களை ஏற்கனவே படிக்க வேண்டி வந்தது.
பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்தல் என்பதில் மலாலா எடுத்த
தீவிரமான போராட்டத்திற்கு பெரிய விலையை கொடுத்திருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு கல்வி கூடாது என்று
தலிபான் விதித்த தடையை மீறி அதன் மீது உலக கவனத்தை ஈர்த்தது முதல், தலையில்
தலிபானின் துப்பாக்கிக் குண்டைத் தாங்கியது வரை,
மலாலா
கொடுத்த விலை அதிகம். ரொம்பவும். இவரது தீரமான வாழ்க்கை தற்போது He Named Me Malala என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது
இங்கிலாந்தில் வசிக்கும் இவர், சர்தேசாய் அவர்களிடம்
பேசியதிலிருந்து: (தமிழில்
முனைவர் எம்.பிரபு)
சர்தேசாய்:
பதினேழு வயதிற்குள் நோபல், உடனடியாக தங்களைப் பற்றி ஒரு
செய்திப்படம். குறுகிய காலத்தில் புகழின்
உச்சியில் நிற்கிறீர்கள். எப்படி
உணர்கிறீர்கள்?
மலாலா:
சாதாரணமாகத்தான் உணர்கிறேன். எளிமையான
சிறுமி நான். நமது சமூகத்தில் நடக்கும் தீமைகளை எதிர்த்து போராடுவது என்பது நமது
அனைவரின் கடமைதானே. பெண்களுக்கான அடையாளம்
மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது
சகித்துக் கொள்ள முடியாதது. இதை
வேண்டிதான் நான் போராடுகிறேன்; இது நமது
அனைவரின் கடமையும் கூட.
சர்தேசாய்:
இந்த தைரியம் எங்கிருந்து வந்தது? வயதிற்கு
மீறிய மன முதிர்ச்சி உங்களிடம் இருக்கிறது.
மலாலா: நீங்கள்
உங்களை நம்பினால், நீங்கள் செய்வது
சரிதான் என்னும் உறுதி உங்களிடம் இருந்தால் தைரியம் தானாக வருகிறது என்று
நினைக்கிறேன்.
சர்தேசாய்:
உங்களுக்கு இந்த தைரியத்தையும் ஆன்ம பலத்தையும் தந்தது 2012ம்
ஆண்டு அக்டோபர் மாதத்தின் அந்த மோசமான நாள் என்று சொல்லலாமா?
மலாலா: அவர்கள் என்னைக்
குறி வைத்த போது நான் பயந்துதான் போனேன்.
ஆனால், இந்தச்
சிறுமிகளின் கல்விக்காக போராட முடிவு செய்ததும் அப்போதுதான். இந்த உலகமே
எதிர்த்தாலும் இதற்காக போராட முடிவெடுத்தேன். இந்தப் போராட்டம் நீண்டது என்பதையும்
அறிவேன்.
சர்தேசாய்:
உங்களை பற்றிய ஆவணப்படம் - "அவன் எனக்கு மலாலா என்று பெயரிட்டான்" -
பார்த்தேன். அதில் நீங்கள்
சொல்கிறீர்கள்: "தாலிபான் இஸ்லாமோடு
சம்பந்தப்பட்டதல்ல, அது அதிகார வசப்படுத்தல் என்பதைப்
பற்றியது." ஆனால், அவர்களின் அதிகாரம் துப்பாக்கிகளின்
வழியே வெளிப்படுவது. அதை எதிர்த்து போராட
முடியும் நீங்கள் நம்புகிறீர்களா?
மலாலா:
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்து நாம் போராட வேண்டுமானால், நமது மக்களுக்கு - குழந்தைகளுக்கு கல்வி
கொடுக்க வேண்டும். இவைகளை
எதிர்க்கும் சக்தியை கல்வியின் வழியேதான்
நாம் பெற முடியும். நமக்கு வேண்டிய
ஆயுதங்கள் புத்தகங்கள், பேனாக்கள்
மற்றும் நமது ஒட்டுமொத்த குரல்தான். இங்கு
இதுவரை கல்விக்காக எவ்விதமான முதலீடும் செய்யப்படவில்லை. உடனடியாக அத்தகைய முதலீடு
செய்தாக வேண்டும். இதற்கான முன்னெடுப்பைச் செய்ய நமது தலைவர்கள் போர்க்கால
அடிப்படையில் முன்வர வேண்டும். கல்வியின்
மூலமாகத்தான் நமது எதிர்கால சந்ததிகள் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவார்கள்.
சர்தேசாய்:
தலிபான் குழந்தைகளைத் தற்போது குறிவைக்கிறது. பெஷாவரில் என்ன நடந்தது என்பதை
அறிவீர்கள். ஒவ்வொரு சிறுமியும் சிறுவனும் மலாலா போல துணிவார்களா?
மலாலா:
குழந்தைகள் குறிவைக்கப்படுவது மிகவும் வேதனையானது. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இரண்டொரு
நாட்கள் துக்கம் அனுசரித்து விட்டு எதுவும் நடக்காதது போல அரசியல்வாதிகள் நகர்ந்து
விடுகிறார்கள். ஏதாவது செய்தாக வேண்டும்.
ஒவ்வொருவருக்கான பாதுகாப்பும் உறுதி செய்திப்பட வேண்டும்.
சர்தேசாய்:
உங்களைக் கொல்ல முயன்றவர்கள் மீது உங்களுக்கு எந்த கோபமும் கசப்புணர்வும் இல்லை
என்று தெரிகிறது. அந்தக் குரூரமான நாளைப் பற்றி வினவும்போது புன்னகைத்தவாறே
பதிலளிக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே அதைப்பற்றிய கோபம் இல்லையா?
மலாலா: நாம்
மற்றவர்களை பற்றி நினைக்கும் போது, ஒரு விஷயத்தை
நினைவுபடுத்திக்க கொள்ள வேண்டும். என்னை
மற்றவர்கள் அன்போடும், மன்னிக்கும்
கருணையோடும், நியாயவுணர்வுடனும்
நடத்த வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நானும் அப்படியே நடத்த வேண்டும் அல்லவா? ஒரு பயங்கரவாதி என்னை சுடக்கூடாது என்று நான் விரும்பினால்,
அவரை மன்னிப்பதற்கு நான்
ஆயத்தமாக இருக்க வேண்டும்.
சர்தேசாய்:
2012க்குப் பிறகு உங்களது வாழ்க்கை நிறைய மாறிவிட்டது. இந்த மூன்று வருடங்களில் உங்களுக்கு எது கடினமாக இருந்தது?
மலாலா:
இங்கிலாந்தில் வாழுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். முற்றிலும் புதிய நாடு, கலாச்சாரம்.
முக்கியமாக எனது அம்மாவிற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மூன்று வருடங்களை
எப்படியோ ஒப்பேற்றி விட்டோம்.
சர்தேசாய்:
மறுபடியும் பாகிஸ்தான் போக விரும்புவீர்களா?
மலாலா: அதுதான்
எனது விருப்பம். இன்ஷா அல்லா, அங்கு மறுபடியும் போவேன். பாகிஸ்தான் மக்களுக்காக உழைக்கவே விருப்பமாக
உள்ளேன். எனது போராட்டம் அங்கு
இருப்பதுதான் நியாயமும் கூட. உண்மையில்,
நான் படிக்கக்கூடாது
என்று தடுத்தவர்கள்தான் போராடுவதற்கான உத்வேகத்தை அளித்திருக்கிறார்கள். எனது
போராட்டத்தை அங்குதான் தொடரப்போகிறேன்.
சர்தேசாய்:
உங்களது தந்தையார் மிகப்பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார் அல்லவா? இந்தப்
படம் உங்களுக்கும் உங்களது தந்தைக்குமான உறவை அழகாக சொல்கிறது. அவர்தான் உங்களது உத்வேகம், உங்களுடைய
குரு என்று சொல்லலாம் அல்லவா?
மலாலா:
நிச்சயமாக. என்னுடைய அம்மாவும் அப்படிப்பட்டவர்தான். உண்மையில், எங்கள் இருவரையும் உத்வேகப்படுத்துவது அம்மா
என்று சொல்ல வேண்டும். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்பதில் அம்மா மிக
உறுதியாக இருப்பார். சரி என்று நம்புவதை எந்த நிலையிலும் விட்டுத்தருதல் ஆகாது
என்பார். எது சரி எது தவறு என்று எந்த நிலையிலும் தைரியமாக சொல்வார்.
அப்பாவின் தீவிரம் பிடிக்கும். பெண்களின் உரிமை மற்றும் கல்வி என்கிற
விஷயங்களில் தைரியமாக போராடும் குணத்தை எனக்கு அளித்தது அவர்தான் என்று சொல்ல வேண்டும்.
சர்தேசாய்:
ஆனால் மலாலா மேற்கத்திய உலகம், குறிப்பாக அமெரிக்கா என்ன சொல்கிறதோ
அதைத்தான் பின்பற்றுகிறார் என்று சிலர் சொல்கிறார்களே? பாகிஸ்தானியர்களின்
பிரச்சினைகளை பற்றி மலாலா பேசுவதில்லை என்ற விமரிசனமும் உண்டு. நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்?
மலாலா:
பாகிஸ்தான் எனது நாடு. எனது மக்கள் என்னை விரும்புகிறார்கள். சிலர் என்னை
விமரிசனம் செய்யலாம். கல்விக்காக நான்
போராடுவது என்பது மேற்கத்திய கருத்தாக்கமோ கீழை கருத்தாக்கமோ அல்ல. அது ஒரு மனித உரிமைப் பிரச்சினை. இதை நாம் தவிர்க்கலாகாது.
சர்தேசாய்:
நீங்கள் இந்தியா வர விரும்புகிறீர்களா? இந்திய பெண் பிள்ளைகள் உங்களை
மிகவும் நேசிக்கிறார்கள்.
மலாலா: அப்படியா!
நல்லது. இந்தியாவில் நான்
நேசிக்கப்படுகிறேன் என்பது விசேஷமானது.
எனக்கு உண்மையில் மதத்தைப் பற்றி கவலை ஏதும் இல்லை. என்னுடைய நாடு மட்டும்தான் எனக்கு உரிமை
கொண்டாட வேண்டும் என்பதுமில்லை. நல்ல
காரியங்களுக்காக மலாலா போராடுகிறாள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவிற்கு வர நான் மிகவும்
விரும்புகிறேன். டெல்லி, பம்பாய் போன்ற இடங்களைப் பற்றி நிறைய
கேள்விப்பட்டிருக்கிறேன்.
சர்தேசாய்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின் போது, பாகிஸ்தானைத்தானே
உற்சாகப்படுத்துகிறீர்கள்?
மலாலா:
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல அமைதியான உறவு வேண்டும் என்பதே எனது
விருப்பமாக இருந்தாலும், கிரிக்கெட்
போட்டிகளின்போது எனது ஆதரவு நிச்சயமாக பாகிஸ்தானுக்குத்தான்.
சர்தேசாய்:
என்றாவது ஒருநாள் பெனாசிர் பூட்டோவைப் போல, பாகிஸ்தானுக்கு பிரதமராக விருப்பம்
உள்ளதா?
மலாலா: மக்கள்
எனக்கு வாக்களித்தால் அதுவும் நடக்கலாம்.
ஆனால் எனது கனவு என்பது இந்தப் பெண்பிள்ளைகளின் கல்வி என்பது பற்றியதாகவே
இருக்கிறது.
0 comments:
Post a Comment