நானே எனக்கு நிகரானவன்

| Sunday, October 9, 2016
(The Telegraph நாளிதழில் ராமச்சந்திர குஹா 9-7-2016 அன்று எழுதியிருந்த THE SEDUCTIONS OF SELF-PRAISE என்ற கட்டுரையின் பிரதிபலிப்பு. தமிழில்: முனைவர் எம்.பிரபு)

சில மாதங்களுக்கு முன்பு Times Now தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் அர்னப் கோஸ்வாமிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியைத் தொடர்ந்து, ராமச்சந்திர குஹா எழுதிய THE SEDUCTIONS OF SELF-PRAISE எனும் பத்தியைப் படிக்க வாய்த்தது.  பத்தி நெடுகிலும் மோடி பல்வேறு தலைவர்களுடன் ஒப்பிடப்படுகிறார்.  தான் பதவியேற்கும் தருணத்தில் இந்தியா படு மோசமான நிலையில் இருந்ததாகவும், இந்த நாட்டில் மதிப்பு உலக அரங்கில் பின்னடைந்து இருந்ததாகவும், தான் பிரதமரான இந்த இரண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் மோடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று சொல்லும் குஹா, இன்னொரு நேர்காணலோடு மோடியின் நேர்காணலை ஒப்பிடுகிறார்.   தனியார்மயமாக்கம் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் விதமாக மன்மோகன் சிங் அளித்த பேட்டிதான் அது.  

தான் நிதியமைச்சராக நரசிம்ம ராவால் அழைத்துவரப் பட்டதாகவும், நம்பமுடியாதபடிக்கு தனக்கு அரசுக்குள்ளும், வெளியேயும் ஆதரவும் பெருகி இருந்ததாக குறிப்பிடும் மன்மோகன், தன்னிடம் அமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம் போன்றோரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.  இன்னமும் ஒரு படி மேலே போய், தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் வாஜ்பேயி அரசுகள் தான் தொடங்கி வைத்த சீர்திருத்தங்களை தொடர்ந்துப் பேணி வந்ததால் மட்டுமே இன்று நாம்  காணும் மாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன என்று சொல்லும் சிங், அன்று பிரதமர் அலுவலகத்தில் இருந்த இந்திய குடிமைப் பணி அதிகாரிகளையும் நன்றியோடு நினைவு கூர்கிறார்.  குறிப்பாக, பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் ஏ.கே.வர்மாவின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டும் சிங், மற்ற அனைத்து குடிமைப் பணி அதிகாரிகளின் ஆதரவும் தனக்குத் தொடர்ந்து கிடைத்திட வர்மாவின் ஆளுமை உதவியது என்றும் சொல்கிறார்.  தனக்குத் துணையாக இருந்தார்கள் என்று மொத்தம் 14 பொருளாதார நிபுணர்களின் பெயர்களை குறிப்பிடும் பொழுது மன்மோகன் சிங்கின் அடக்கம் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது என்று சொல்லும் குஹா, மோடி இத்தகைய குணநலனுக்கு நேரெதிரான தன்மைகளை கோஸ்வாமி பேட்டியின் போது வெளிப்படுத்தினார் என்பதாக சொல்கிறார்.  இந்தியாவிற்கு தான் புது ரத்தம் பாய்ச்ச உள்ளதாக உரக்க அறிவிக்கும் மோடி, தன்னுடைய தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்களால், இந்தியாவைப் பற்றிய எண்ணம் உலகத் தலைவர்களிடம் மாறிவருகிறது என்று பறைசாற்றிக் கொள்வதை சுட்டுகிறார் குஹா.  தனக்கு எதிரான விமரிசனங்கள் உள்நோக்கம் கொண்டவை என்று சொல்லும் மோடி, பிரதமர் என்ற நிலையில் தன்னுடைய சாதனைகளைப் பார்த்து சிலர் கொண்டிருக்கும் பொறாமையின் விளைவுதான் இந்த விமரிசனங்கள் என்றும், தான் எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருப்பதாகவும் 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடினாலும் 200 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் “அடக்கமுடன்” கூறுகிறார்.  தன்னுடைய சாதனைகளை விளக்கும் பொருட்டு தூர்தர்ஷன் ஒரு செய்திப்படம் தயாரிக்க முன்வருமாயின், அது இடைவிடாது ஒரு வாரம் ஒளிபரப்பாகும் நீளம் கொண்டதாக இருக்கும் என்றும் நம்பமுடியாத தைரியத்துடன் சொல்கிறார் மோடி.

இந்தப் பேட்டிக்கு முன்னதான சொற்பொழிவு ஒன்றில் (புது தில்லி ஸ்ரீராம் கல்லூரி, பெப்ரவரி 2013) பேசும்போது, ஒட்டுமொத்த தில்லிக்கும் குஜராத்தான் பால் கொடுத்து வருவதாகவும், அதற்கு தானே முழு காரணம் என்ற வகையிலும் பேசிய மோடிக்கு ஏன் வர்கீஸ் குரியன் என்ற பெயர் நினைவுக்கு வரவில்லை என்பது ஆச்சர்யமானது.  தான் பிறந்த கேரளாவை விட்டு குஜராத் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து அங்கு வெண்மைப் புரட்சியை நடத்திக் கொடுத்த வர்கீஸ் குரியனை நினைவு கூர்வது தன்னுடைய சுயபுராணத்திற்குத் தடையாக இருக்கும் என்று மோடி நினைத்ததுதான் காரணம் என்றும் சொல்கிறார் குஹா.  இன்றைய குஜராத்தின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு தான் மட்டுமே காரணம் என்பதாகப் பேசிய மோடி, கவனமாக லால்பாய் – சாரபாய் போன்ற பெயர்களைத் தவிர்த்தார். அவருடைய சுயபுராணத்தில் வேறெந்த கதை மாந்தர்களுக்கும் இடம் இல்லை என்று தெளிவாக அறிவித்தது மோடியின் இந்தப் பேச்சு. 

ஆனால் நேர்மையான பிரதமர் ஒருவர் உலக அரங்கில் இந்தியாவின் நிலை இன்று என்னவாக இருக்கிறதோ அதற்குக் காரணமாக நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தன்னுடைய முன்னிட்டவர்களின் பெயர்களை நன்றியறிதலோடு குறிப்பிட்டிருக்கக் கூடும்.   இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த கிளெமென்ட் அட்லீ மற்றும் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா ஆகியோரை மோடிக்கு எதிர் துருவங்களாகக் குறிப்பிடும் குஹா, மண்டேலாவின் தன்னடக்கமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இணக்கமும் எப்படி அவருடைய அரசியல் எதிரியான F.W.de Klerk-ஐக் கூட அவருடைய அரசில் இணைந்து பணியாற்ற வைத்தது என்று குறிப்பிடுகிறார். 

உலகம் முழுவதும் போயிருக்கிறார் மோடி.  தென்னாப்பிரிக்காவிற்கும் போயிருக்கிறார். மண்டேலாவைத் தெரியாமல் இருக்காது. FW de Klerk-ஐயும் தெரிந்திருக்கும்.  அரசியல் எதிரியாக இருந்தாலும் மண்டேலாவின் அரசில் பணியாற்ற de Klerk முன்வந்தது முன்னவரின் சுயபுராணம் பாடும் தன்மையற்ற பண்புதான் என்பதையும் மோடி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment