(ஆ.இரா.வேங்கடசலபதி
Madras Institute of Development Studies பேராசிரியர். ஜவஹர்லால் நேரு
பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் ஆராய்ச்சி எழுத்தின்
அதி முக்கியமானவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து இலக்கியம்,
பொருளாதாரம், சமூகம் பற்றி எழுதி வருகிறார். அபுனைவ எழுத்துக்களில்
இவருக்கென்று தமிழில் இடம் உண்டு. "அந்தக் காலத்தில் காபி இல்லை" இவரது
சிறப்பான படைப்பு. ஞானபீடம் ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து
Outloook வாராந்தரியில் 2005 ஏப்ரலில் வேங்கடசலபதி எழுதிய கட்டுரை இங்கே
தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில்: முனைவர் மு.பிரபு)
1972-ம்
ஆண்டு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பொழுது ஜெயகாந்தனுக்கு வயது
கிட்டத்தட்ட 40 இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் அன்று இது அரிதான நிகழ்வு.
தலைமுடி நரைக்காத பொழுதே சாஹித்ய அகாடமி அதுவரை யாருக்கும்
சாத்தியப்படவில்லை. அது தொட்டு, இலக்கிய கர்த்தாக்களுக்கு வழங்கப்படும்
பெரும்பாலான விருதுகள், கவுரவங்கள் தண்டபாணி ஜெயகாந்தனுக்கு
வழங்கப்பட்டுள்ளது, ஞானபீடம் உட்பட. எவ்வளவு எழுதியிருக்கிறார் இவர்?
நாற்பது நாவல்கள், நூற்றுக்கணக்கில் கட்டுரைகள், சில திரைக்கதைகள்,
பத்திரிகைகளில் பத்திகள் - எல்லாம் இருந்தாலும் நூற்று ஐம்பது சொச்சம்
சிறுகதைகள் இன்னும் பலகாலம் தமிழின் சிறந்த கர்த்தாக்களில் ஒருவராக இவரை
அடையாளம் காட்டிக்கொண்டிருக்கும்.
தற்போதைய
கடலூர் மாவட்டத்தின் மஞ்சகுப்பம் பகுதியில் பிறந்தவர். பள்ளியிலிருந்து
இடைநின்று சென்னைக்கு ஓடிவந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அடைக்கலம்
தேடியவர். கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்து தெரு
முனைகளில் நோட்டிஸ் விநியோகித்தவர். அதற்குப்பிறகு கட்சியோடு எத்தனையோ
முரண்பாடுகள் வந்து கட்சியை காட்டமாக இவர் விமரிசித்திருந்தாலும்,
பெரும்பாலான கம்யூனிஸ்டுகள் இன்றும் இவரை விரும்புவதற்கு காரணங்கள் நிறைய
இருக்கின்றன, நெருக்கடியான காலகட்டத்தில் கட்சிப் பணியாற்றியவர் என்பது
உள்ளடங்க.
இவரின்
ஆரம்பகால படைப்புகள் அன்னாரது பதின்ம வயதுகளிலேயே சாமரம், சரஸ்வதி என்ற
இதழ்களில் வெளியாகின. புதுமைப்பித்தனுக்குப் பிறகு, நகர - கீழ் - நடுத்தர
வர்க்கத்தின் வாழ்க்கையை ஜெயகாந்தன் அளவுக்கு நிஜமாக எழுதியவர்கள் என்று
யாரையும் சுட்டக்கூடுவதில்லை. தமிழ் நாவல் வரலாற்றில் முதன்முறையாக ரிக்சா
இழுப்பவர்கள், அன்றாடங்காய்ச்சிகள், அச்சகர்கள், விலைமாதர்கள், கூலித்
தொழிலாளிகள், சாமியார்கள் கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் அந்தஸ்து
பெற்றது ஜெயகாந்தனிடம்தான். 'ட்ரெடல்' கதையின் நாயகன் அச்சகத்தில்
பணியாற்றுபவன். எத்தனையோ கல்யாணப் பத்திரிகைகளை அச்சடிக்கிறான். அவனுக்கு
கல்யாணம் ஆகவேயில்லை. ஜெயகாந்தனின் விளிம்புநிலை மனிதர்கள் தமிழ் வாசகர்
உலகை அதிருப்திக்கு உள்ளாக்கினர் என்றால், அவர்களது பாலியல் வேட்கைகள் -
தீவிரங்கள் பற்றிய ஜெயகாந்தனது விவரணைகள் வாசகரை பெரும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கின.
ஜெயகாந்தனின்
"அதிர்ச்சி எழுத்துக்களில்" வியாபாரத்தை மோப்பம் பிடித்த வெகுஜன
பத்திரிகைகள் அவருக்கு தொடர்ந்து பக்கங்களை அள்ளிக்கொடுத்தன. ஆனால்,
முதன்முறையாக அந்தப் பத்திரிகைகள் தரமான எழுத்துக்களை தங்களது பக்கங்களில்
ஏந்திச் சென்றதும் அப்போதுதான். தரமான எழுத்துக்கள் என்பது, தமிழ்
இலக்கியத்தைப் பொறுத்த அளவில், சிறு பத்திரிகைகளுக்குள்ளேயே முடங்கிக்
கிடந்தபோது, நல் எழுத்தை வெகுஜன வாசக வெளிக்குக் கொண்டு வந்தவர் ஜேகே தான்.
பெரும் பத்திரிகைகளின் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாதவர்.
கட்டுப்படுத்தப்பட முடியாதவர். எந்த சமரசங்களுமின்றி, சிறு பத்திரிகைகளில்
எழுதுமிடத்து என்ன எழுதுவாரோ, அதையே வணிக இதழ்களிலும் சஞ்சலமின்றி
எழுதியவர். குறிப்பிட்ட தசாப்தத்தில், இவரது எழுத்துக்கள் பெருமளவில்
ஆனந்தவிகடன் வாராந்தரியில் வெளிவந்தன. இதே காலகட்டத்தில்தான், இவரது
கதைமாந்தர்கள் சேரி மனிதர்களிலிருந்து அக்கிரகாரத்து மனிதர்களாக மாறியதும்.
நடுத்தர வர்க்க பிராமண வாழ்க்கை இவரளவுக்கு வேறு யாரும் சிறப்பாக
கையாளவில்லை என்பது விசேஷமானது. ஈடிபஸ் மனச்சிக்கல், திருமணத்திற்கு
முந்தைய பாலுறவு, தனிநபர் அந்தரங்கங்களின் புனிதம், தனியுரிமைக் கோட்பாடு
போன்ற கருத்தாங்களுக்கு தமிழர் உலகில் பெரும் பங்களித்தவர் என்று எளிதாக
ஜெயகாந்தனைப் புரிந்து கொள்ளலாம். இன்னொன்று கூட சொல்ல வேண்டும், பிராமண
எழுத்தாளர்கள் கூட இவரளவுக்கு பிராமணாள் பாஷையை அதன் சிறப்புத் தன்மைகளோடு
பயன்படுத்தவில்லை என்று சொல்ல வேண்டும்.
சிறுகதைகளிலேயே
தனிக்கவனம் செலுத்திவந்த ஜெயகாந்தன் மெல்ல மெல்ல நாவல்களின் பக்கம்
திரும்பினார். பாரீசுக்குப் போ, சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற சில நேரங்களில்
சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற நாவல்கள் சமூகத்தோடு
இணக்கம் காணமுடியாத தனியர்களின் அகம் / புறப் போராட்டங்களை விவரிக்கின்றன.
1950களின் இறுதியிலிருந்து 1970களின் ஆரம்ப வருடங்கள் வரை, ஒவ்வொரு
வருடமும் ஜெயகாந்தனால் துவக்கப்பட்ட சர்ச்சைகளையே தமிழ் சமூகம் பெரும்
இரைச்சல்களுடன் விவாதித்து வந்தது. 'அக்கினிப்பிரவேசம்' இதில் தலையானது
என்று சொல்லலாம். வயதின் அலைக்கழித்தலால் தன்னை ஒருவனிடம் இழந்த பிராமண
இளம் பெண்ணை அவளது அம்மா தலையில் தண்ணீர் ஊற்றி புனிதப்படுத்துவதை இந்தப்
பாரதப் பெரு நாட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஜெயகாந்தனின்
பெண் பாத்திரங்கள் அவரது ஆண் மாந்தர்களை விட வலிமையானவர்கள் மற்றும்
புரட்சிக்காரர்கள்.
அவர்
தனது வாழ்நாளின் கடைசி முப்பது முப்பத்தைந்து வருடங்கள் எதுவுமே
பொதுவெளியில் எழுதி பிரசுரிக்கவில்லை என்றாலும், அவரது புகழ் எள்ளளவும்
குறையவில்லை என்பது முன்னுவமை இல்லாதவாறு ஆச்சர்யமானது. இவரது இளமைக் காலம்
இலக்கியத்தில் மட்டுமல்லாது திரைப்படம், இதழியல் என்பதில் செலவிடப்பட்டது.
தமிழின் முதல் கலைப்படம் என்று இன்றளவும் போற்றப்படுவது ஜெயகாந்தன்
இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன்'. குடியரசுத் தலைவரின் பரிசும் பெற்ற படம் இது
(1965). எம்ஜியாரின் அதிசாசக கதாநாயக கருத்தாக்கத்தால் கட்டுண்டு கிடந்த
தமிழ் சினிமா ரசிகனுக்கு ஜெயகாந்தனின் சினிமாக்கள் ஒரு தர்க்க மாற்றாக
இயல்பிலேயே அமைந்துவிட்டன. தமிழை மையப்படுத்திய அரசியல் மற்றும் திராவிட
அரசியல் ஆகியவைக்கு மாற்றுகள் எவை என்பதை ஜெயகாந்தனின் திரைப்படங்கள்
பேசின.
திராவிட
அரசியலை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டுகளின் சார்பாக, கே.பாலதண்டாயதத்தோடு
சேர்ந்து தொடர்ந்து குரலெழுப்பியவர் ஜேகே. ஒரு முறை பெரியாரை எதிர்த்தும்
மேடை நிகழ்வொன்றில் கண்டனம் எழுப்பியவர். இவரது அரசியல் கடந்த
தசாப்தங்களில் எவ்விதம் கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பது சுவராஸ்யமானது.
இடது சாரி இயக்கங்களுடன் தீவிரமான பற்றுக்கொண்டிருந்தாலும் இந்திய
தேசியத்தின் ஆதரவாளர், காமராஜரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்,
நெருக்கடி நிலையை எதிர்த்தவர், சீறி லங்காவில் இந்திய அமைதிப்படையின்
இருப்பை ஆதரித்தவர், மத மாற்றத்திற்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை
நியாயப்படுத்தியவர் என்றும் இவரைப் புரிந்து கொள்ளலாம். சிறந்த மேடைப்
பேச்சாளர். தானே கட்டமைத்துக் கொண்ட எதிரிகளின் கருத்தாங்களை கடுமையாக
விமர்சனம் செய்வார். இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி
நிலையை எதிர்த்து இப்படி சொன்னார்: "இந்திய அரசியலில் பாரதப் போர் நடந்து
கொண்டிருக்கிறது. ஆயுதமேந்தி நான் போராட விட்டாலும், தேரோட்டியாக நிச்சயம்
இருப்பேன்."
தனது
படைப்பாற்றல் குறைந்து வருவதாக உணர்ந்ததும் எழுதுவதை முற்றிலும் நிறுத்தி
விட்டார். இருப்பினும், பத்திரிகைகளில் பத்திகள் எழுதி வந்திருக்கிறார்.
குத்தலும் நையாண்டியும் மிகுந்த இவரது உரைநடை இவரது பத்திகளுக்கு தனி
அடையாளத்தை ஏற்படுத்தின. பரபரப்பு மிகுந்த தனது அரசியல் நிலைப்பாடுகளால்
நீண்ட காலம் பொதுமக்களின் மனதில் நீங்காதிருந்தவர். அமெரிக்காவிற்குப் போய்
வந்த பிறகு சொன்னார்: "அமெரிக்கா ஒரு சோஷலிச அரசு." எழுபதுகளில் இவர்
எழுதிய 'ஜெயஜெய சங்கர' தன்னை வருத்திக்கொண்டு துறவு என்ற மேன்மையின்
புனிதத்தை உலகுக்கு துலக்கிக்காட்டிய உத்தமரை ஸ்படிகம்போல வாசகனுக்கு
ஓதியது என்றால், தொண்ணூறுகளில் இவர் எழுதிய 'ஹர ஹர சங்கர' காஞ்சியில்
தற்போது மடத்தில் இருக்கும் சர்ச்சைக்கார ஜெயேந்திரருக்கு வக்காலத்து வாங்க
முயற்சித்தது.
இன்னொரு
அளவில் கூட ஜெயகாந்தன் விசேஷமானவர்தான். தமிழ் எழுத்தாளருக்கு ஜிப்பாதான்
சீருடை. ஜிப்பா அணியாத ஒருவரை எழுத்தாளர் என்று நம்ப தமிழ் சமூகம் தயாராக
இல்லாத போது, நவ நாகரீக உடைகளை அணிந்து, பெரிய மீசை வைத்து, உதட்டில் பெரிய
பைப் என்று உலா வந்தவர் ஜேகே. அப்போது இந்தப் தோற்றம் பெரிய கலாச்சார
அதிர்ச்சி. தமிழ் எழுத்தாளன் வறுமையில் சிக்கி அன்றாடங்காய்ச்சியாக நலிந்து
மரபை போற்றும் சமூகச் சக்கரங்களில் சிக்குண்டுத் தவித்த பொழுது, கஞ்சா
பிடிப்பது நல்லது என்று நல் அகந்தையுடன் சொல்லித் திரிந்தவர் ஜேகே.
கடந்த
இரண்டு மூன்று தலைமுறை வாசகர்கள் ஜெயகாந்தனைக் கற்றுத் தேர்ந்தவர்கள்தான்.
ஆனால், பல்வேறு காரணிகளால் இன்றைய இளைஞர் கூட்டத்திற்கு ஜேகே-யைப் பற்றி
அதிகம் தெரியவில்லை. சில திறனாய்வாளர்களால் வேறொரு விமரிசனமும்
வைக்கப்படுகிறது. "அதிக இரைச்சல், சர்ச்சைகள் இவற்றால் மட்டும் ஒருவர்
சிறந்த கர்த்தாவாகிவிட முடியாது" என்பதே அது. கதைகளில் இவர் நடத்தும்
பிரசங்கங்கள் தவிர, முன்னுரைகள் என்ற பெயரில் இவர் நீண்ட சொற்பொழிவுகள்
செய்திருப்பது அலுப்பைத் தரக்கூடியது என்றும் சிலர் அபிப்பிராயப்
படுகின்றனர். இவரது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்த பிரபஞ்சன் இதுபற்றிக்
கூறும்பொழுது, "காலையிலிருந்து சாயந்திரம் வரை இடைவிடாமல் கேட்க நேரும்
அலுப்பான மேடைப்பேச்சு போன்றவை இவரது முன்னுரைகள்" என்கிறார்.
ஜெயகாந்தனை
சிலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். A.A.ஹக்கீம், கே.திரவியம் போன்றோர்
ஜெகே-வின் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்
என்றாலும், அவைகள் வெற்றியடையவில்லை. இவரது படைப்புகள் ரஷ்ய மொழியிலும்
பெயர்க்கப்பட்டுள்ளன. சொல்லிக்கொள்ளும் படிக்கு, அவை அமையவில்லை என்பது
துரதிர்ஷ்டமே.
ஜெயகாந்தனுக்கு
மிகவும் தாமதமாகத்தான் ஞானபீடம் அளிக்கப்பட்டது. 'சித்திரப்பாவை'
நாவலுக்காக அகிலனுக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட களங்கத்தை
ஜேகே-விற்கு அளிக்கப்பட்ட ஞானபீடம் ஓரளவு போக்கியுள்ளது என்று சொல்லலாம்.
தொடர்ந்து ஞானபீடம் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்
போன்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஜேகே-விற்கு
வழங்கியிருப்பதின் மூலம் கமிட்டியார் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வேறொரு
தருணத்தில் ஜேகே சொன்னது ஞாபகம் வருகிறது: "எனக்கு வழங்கப்பட்டிருப்பதின்
மூலம் இந்தப் பரிசு தன்னை கௌரவப்படுத்திக் கொண்டுள்ளது."
0 comments:
Post a Comment