(ஜனங்களின் பாடகன் டிலன் தாமஸ் இந்த வருட இலக்கியத்திற்கான நோபெல்
வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அமித்
வர்மா "How this Nobel has redefined literature?" என்ற கட்டுரையை
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் 5-10-2016 அன்று எழுதியுள்ளதின் தமிழாக்கம் கீழே. தமிழில்: முனைவர் மு. பிரபு)
இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் பரிசு ஒன்று
வழங்கப்படும்போது, அரிதாகவே பெறுபவனால் அது தன்னைப் பெருமைபடுத்திக்
கொள்கிறது. இந்த வருடம் பாப் டிலனுக்கு
(Bob Dylan) இலக்கியத்திற்கான நோபெல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதுதான்
நடந்திருக்கிறது. டிலன் உலகம் போற்றும்
பாட்டுக் கலைஞன்; அவருக்கு வெளிச்சம் தேவையில்லை.
நோபெல் வெளிச்சம் தேடிக்கொண்டுள்ளது.
முதலில் ஒருவர் கவனிக்க வேண்டியது, கவிதைக்காக
டிலனுக்கு இந்தப் பரிசு வழங்கப்படவில்லை. தங்களது
பாராட்டுப் பத்திரத்தில் நோபெல் கமிட்டியார் "பாரம்பரியம் மிக்க அமெரிக்க
இசைப்பாடல் வரலாற்றில் புதிய கவித்துவமிக்க வெளிப்பாடுகளுக்காக" டிலனுக்கு
இந்தப் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இசைப்பாடலுக்காக இருவரை யாரும் இப்பரிசைப் பெற்றதில்லை. டிலனுக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருப்பத்தின்
மூலமாக, இலக்கியம் புதிய வடிவங்களில், ஜனரஞ்சகமான தளங்களில், மேன்மை பொருந்திய ராஜபாட்டைகளில்
மட்டுமல்லாது, குக்கிராம எல்லைகளில் ஓடி மறையும் சிற்றோடைகளுக்கு நம்மை இழுத்துச்
செல்லும் ஒற்றையடித் தடங்களிலும் பயணம் செய்யும் என்று உரக்க
சொல்லப்பட்டிருக்கிறது. டிலனின்
வரிகளைப்பற்றிய விமரிசனம் எப்போதுமே இருந்து வந்திருப்பதற்குக் காரணம், அவை
கவிதையாக எழுதப்படவில்லை, மெட்டுக்குள் கட்டமைக்கப்பட்டவை என்பதை மறந்துவிடுவதால்தான். அந்த வரிகள் தனியாக கவிதையாக நின்று
குரலெடுத்துக் கூவ எழுதப்பட்டவை அல்ல.
முதன்முறையாக நோபெல் கமிட்டி இத்தகைய மரபு சாரா வடிவமொன்றுக்கு -
ஒத்துக்கொள்ளப்பட்ட வடிவங்களில் இலக்கியம் படைக்காத கர்த்தா ஒருவனுக்கு பரிசு
தருவது ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த உணர்வை நம்முள் எழுப்புகிறது.
இலக்கியம் என்பது என்ன? வரையறுக்குள் அடங்காததுதான்
இலக்கியம் என்றாலும், பிரான்சிஸ் காப்கா சொல்வது எனக்கு மிகவும் ஏற்புடையது. "நல்ல புத்தகமானது நம்முள் உறைந்து
போயிருக்கும் பனிக்கடலை உடைக்கும் கோடலி போன்றது" என்று காப்கா சொன்னதைத்தான்,
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தனது பாடல்கள் எனும் கோடலிகளைக் கொண்டு
கோடிக்கணகான பனிச் சமுத்திரங்களை உடைத்தெறிந்து நிருபிக்கிறார் டிலன். இவரின் பாடல்கள் அரசியல் தளத்திலிருந்து சொந்த
வாழ்க்கை வரை நீண்டிருப்பவை. தற்காலத்திய சமூகம்
முதல் தனது அந்தரங்க உணர்வெழுச்சிகள் வரை தொடர்ந்து கூவிக் கொண்டிருக்கும் கலைஞன்
இவர். வயதேற ஏற இவரது படைப்புகளில் கூர்மை
கூடிக்கொண்டே வந்துள்ளது இன்னொரு ஆச்சர்யம்.
இவரது பாடல்கள் எந்த இலக்கியத்திற்கும் சளைத்தவை அல்ல.
அமெரிக்கப் பொதுவெளியில் டிலனின் பங்களிப்பு
என்ன? ஜனரஞ்சக இசை என்பதற்கான இலக்கணத்தை
மாற்றியமைத்தவர்; தனக்குப் பின் வந்த அத்துனைப் பாடலாசிரியர்களின் மீதும் தனது
ஆளுமையைச் செலுத்தியவர் என்பது மட்டுமன்றி, இவரது பாதிப்பு இலக்கியம் -இசை
தாண்டிச் செல்கிறது. அமெரிக்க நீதிமன்றத்
தீர்ப்புகளில், கடந்த ஐம்பது வருடங்களில், அதிக முறைகள் மேற்கோள்
காட்டப்பட்டிருக்கின்றன டிலனின் பாடல் வரிகள்.
இதுவரை இலக்கியத்திற்காக நோபெல் வழங்கப்பட்ட எந்த கர்த்தாவையும் விட
அதிகமான மனங்களை கோபப்படுத்தி, அழவைத்து, சந்தோஷப்படுத்தி, ஆச்சர்யப்படுத்தியுள்ளவர்
டிலன்.
இலக்கியம் என்ற வார்த்தைக்கான வரைவிலக்கணத்தை
கூகிள் தேடுபொறியில் இட்டபோது முதன்முதலாக காண்பிக்கப்பட்டது இது:
"காலமெல்லாம் நீடிக்கும், எல்லாவற்றையும் விட மேன்மையான தகுதிவாய்ந்த கவித்துவமான எழுத்துக்கள்."
(Written works, especially those considered of superior or lasting artistic
merit.) இதன் அடிப்படையில்தான் டிலன், இப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது
குறித்து, விமரிசிக்கப்படுகிறார்.
"டிலன் சிறந்த வரிகளை எழுதியிருக்கலாம்; ஆனால் அவைகள் எழுத்து வடிவில்
படிப்பதற்காக அல்ல. அப்படியிருக்கும்போது இலக்கியத்திற்கான பரிசு ஒன்றுக்கு டிலன்
எப்படி தேர்ந்தெடுக்கப்பட முடியும்? - என்ற விமரிசனம்தான் அது. ஏன்
"எழுதப்பட்ட வார்த்தைகள்" என்றே இலக்கியம் மதிப்பிடப்பட வேண்டும்? வெறும் "வார்த்தைகள்" என்ற அளவில்
இலக்கியம் மதிப்பிடப்படலாகாதா? எழுத்து
வடிவம் உருவாவதற்கு முன்னர் இலக்கியம் இருந்ததே இல்லையா? ஆகப் பெரும் காவியங்கள்
முதலில் செவிவழியாகத்தானே தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டன? அவைகளைப் பேரிலிக்கியங்கள் என்று நாம்
கொண்டாடவில்லையா? ஷேக்ஸ்பியர் கூட, நாம்
படிப்பதற்காக எந்த நாடகத்தையும் எழுதவில்லையே?
அவரின் நாடகங்கள் உலகப் பெரும் இலக்கியங்கள் என்று கொண்டாடப்படவில்லையா?
உண்மையில், எழுத்து - பேச்சு ஆகியவை வார்த்தைகளின் இரு வேறு ஊடகங்கள்தான். ஊடகம் பெரிதல்ல; உள்ளீடு பெரிது.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். உண்மையில், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மேடை நிகழ்த்துக்
கலையின் திரைக்கதைகள்தான் (screenplays). இன்று திரைப்படங்களைப் பொறுத்தவரை திரைக்கதைகளுக்காக வழங்கப்படும் விருதை
ஷேக்ஸ்பியருக்கும் வழங்குவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? தொலைக்காட்சி நாடகங்கள் ஷேக்ஸ்பியரின்
நாடகங்களிலிருந்து எவ்விதம் வேறுபட்டவை?
பால் ஷ்ரடர் (Paul Schrader in Taxi Driver, Raging
Bull), வில்லியம் கோல்ட்மன் (William Goldman in All the President's Men, The
Princes Bride) மற்றும் டேவிட் சைமன் (David Simon in The Wire, Treme) ஆகியோருக்குக்
கூட இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்படுமா? கன நேர நகைச்சுவைத் துணுக்குக்காகவும்
இப்பரிசு வழங்கப்படுமா? நமது காலத்தின்
ஆகச் சிறந்த கலை மேதை சி கே லூயி (C K Louis) அவர்களுக்கு, அவரது டிவி நாடகங்களுக்காக
நேபெல் பரிசு வழங்கப்படுமா? அவரது டிவி நாடகங்கள் எத்தனையோ முறைகள் "உறைந்து
போயிருந்த எனது பனிக்கடலை கோடலியாக உடைத்து எறிந்துள்ளன." அவருக்கு நோபெல் வழங்கப்படுமா?
குறிப்பிட்ட கலைஞர்களை மையப்படுத்தி இப்படியான
விவாதங்கள் தொடரத் தேவையில்லை. எது இங்கே முக்கியம் என்றால், முதன்முறையாக நோபெல்
கமிட்டி இலக்கியம் என்பது, இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளுக்கு வெளியேயும் ஜீவித்திருக்க
முடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்காகவே கமிட்டியார் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
0 comments:
Post a Comment