எங்க பாட்டன் சொத்து

| Monday, October 17, 2016

(புது தில்லியிலிருந்து வெளியிடப்படும் The Telegraph நாளிதழில் ராமச்சந்திர குஹா 26-12-2015 அன்று எழுதிய Why Can't the Congress Dump the Nehru - Gandhis? என்ற கட்டுரையின் தமிழாக்கம்.  தமிழில்: முனைவர் மு.பிரபு)
 
2014 மே மாதம் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பொதுத் தேர்தல்கள் நடந்தன.  இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி 2010-ல் பெற்ற இடங்களை விட இருபத்து நான்கு இடங்கள் குறைவாகப் பெற்றது. 2014-ல் இந்தக் கட்சி 232 இடங்களில்தான் வென்றது.  பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.  என்றாலுங்கூட, குறைவான இடங்களைப் பெற்றதற்கான தார்மீகப் பொறுப்பு ஏற்று, கட்சித் தலைவர் எட் மிலிபான்ட் (Ed Miliband) உடனடியாகப் பதவி விலகினார்.

இந்தியாவின் தேர்தல் முறை இங்கிலாந்திடமிருந்து பெற்ற கொடை.  2014-ல் காங்கிரஸ் வெறும் 44 இடங்களில்தான் வெற்றி பெற்றது.  2010-ல் அது 194 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.  இருப்பினும், அதன் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பதவி விலகவில்லை. காங்கிரஸ் கட்சியின் மிக மோசமான தேர்தல் தோல்விக்கு அதன் தலைவரோ துணைத் தலைவரோ பொறுப்பேற்கவில்லை.  

தேர்தல் முடிந்த இந்த ஒன்றரை வருடங்களில் காங்கிரஸ் மீதான தங்களது செல்வாக்கை சோனியா - ராகுல் பல மடங்கு அதிகப்படுத்தியும் உறுதி செய்தும் உள்ளனர். இந்தியாவின் மிகப் பழைய அரசியல் கட்சி ஒன்று காந்தி குடும்பத்திற்கு முழுவதுமாக தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு நிற்கிறது.  2015 திசம்பர் 19-ந்தேதி நேஷனல் ஹெரால்ட் சம்பந்தப்பட்ட வழக்கின் போது அம்மாவும் மகனும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தபோது இது வெளிப்படையாகத் தெரிந்தது.  கட்சிக்கு எந்த வகையிலும் தொடபில்லாத வழக்கு இது என்ற போதிலும், தனி மனுதாரர் ஒருவர் எதிர்மனுதாரரும் தனியர் என்ற நிலையில் தொடர்ந்திருந்த வழக்கு இது என்றாலும், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் படைசூழ நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து கட்சியின் மீது தங்களது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை நிரூபித்தார்கள்.  இது கட்சியினரின் தன்னெழுச்சியான ஆதரவா அல்லது காந்திகளின் அடிவருடிகளா என்ற கேள்வி பார்வையாளர்களின் மனங்களில் எழுந்திருக்கலாம்.  யாருக்கு அதைப் பற்றி கவலை?  சோனியாவையும் ராகுலையும் நெருங்கி நின்றவாறு கட்சியினர் தங்களுடைய விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனர். இரண்டு பேரிடமும் கூட்டம் மிதமிஞ்சி சூழ்ந்து கொண்டிருந்த தருணங்களில், கூடவே அங்கு வந்திருந்த பிரியங்கா காந்தியிடம் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.  

இந்தக் குடும்பத்தை விட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வேறு கதியே கிடையாதா?  ஒரு குடும்பத்தின் மீது தங்கள் மொத்த எதிர்காலத்தைப் பணயம் வைக்காமல், அவர்களைத் தாண்டி காங்கிரஸ் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.  கட்சியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி எப்படி சாத்தியமானது என்று அந்தக் கட்சி சிந்திக்க வேண்டிய காலம் இது.  மட்டுமன்றி, நேரு - காந்தி குடும்பத்தின் புகழும் மகிமையும் மங்கிக் கொண்டு வருகிறது என்பதை - குறிப்பாக இளைஞர்களிடம் என்பதை - வாக்களிக்கின்ற நேரத்தில் இந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேருவும் அவரது மகளும் முதல்முறை வாக்காளர்களின் நினைவுக்கு வருவதில்லை என்ற உண்மையை அந்தக் கட்சி சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.  இந்த நாட்டிற்கான அவர்களது பங்களிப்பை யாரும் ஞாபகப்படுத்தி நெகிழ்ந்து போவதில்லை என்பதை காங்கிரஸ் இப்போதாவது உணர வேண்டும்.  மேலும், குடும்ப விசுவாசம் - வாரிசு அரசியல் என்பதெல்லாம் இப்போது செல்லுபடி ஆவதில்லை என்றும் காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்.  வாக்காளர் யார், அவரது கல்வித் தகுதி என்ன என்பது அவர்களின் குடும்ப வரலாற்றைவிட முக்கியமாகப் போய்விட்டது இந்த இளையதலைமுறை வாக்காளர்களிடம்.  எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்காலம் என்று யாரை நினைக்கிறதோ அந்தத் தலைவர் - ராகுல்காந்திக்கு - இந்திய அரசியலுக்கு வேண்டிய மதிநுட்பமோ, குணாதிசியமோ, ஏன் உடற்தகுதியோ கூட இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னொரு கவலைப்படும் விஷயமும் இதில் இருக்கிறது.  தங்களை வழிநடத்த ஒரே ஒரு குடும்பத்தினரைத் தவிர, அந்தக் குடும்பத்தின் வாரிசுகளைத் தவிர, வேறு யாரும் இல்லை என்று அந்தக் கட்சி தொடர்ந்து நம்பிவந்தால், இந்த நாட்டின் வேறு எங்காவது இருந்து வரக்கூடிய நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட தலைவர்களை இழக்கும் நிலையும் வரலாம். 

தனது எதிர்கால நலம் பொருட்டேனும், காங்கிரஸ் தனது தலைமையை ஒரே ஒரு குடும்பத்திடம் மட்டுமே கோருவதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான தலைவரை நாடு முழுவதிலும் தேடி டில்லிக்குக் கொண்டுவருதல் அவசியம்.  ஆனால், அது அப்படியான செயலை செய்ய முன்வருமா என்பது சந்தேகமே.  காங்கிரசின் மீது அப்படி என்னதான் நேரு - காந்தி குடும்பத்தின் செல்வாக்கு?

இதற்கான காராணத்தை நுட்பமாக பார்ப்போமேயானால், காங்கிரஸ் கட்சி வரலாற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை நேரு - காந்தி குடும்பத்தின் செல்வாக்கு எதோ ஒரு வகையில் அதன் மீது இருந்தே வந்துள்ளது.  மிகவும் வெளிப்படையாக தன்னுடைய அரசியல் வாரிசு என்று சஞ்சய் காந்திக்கு 1975-ல் இந்திரா காந்தி மகுடம் சூட்டினார்.  ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகான ஓரிரு ஆண்டுகளைத் தவிர, அதற்குப் பிறகு காங்கிரஸ் முற்று முழுவதும் ஒரு குடும்பத்தின் சொத்தாகிப் போய் விட்டது.  மொத்தக் கட்சியுமே இந்தக் குடும்பத்தைச் சார்ந்திருப்பதும், மிக மூத்த காங்கிரஸ் தலைவர்களுமே கூட நேரு - காந்தி குடும்பத்தின் மேல், பிறந்த குழந்தையானது தாயைச் சார்ந்திருப்பது போல, ஒட்டுண்ணிகளாக இருப்பதும் வேதனைக்குரியது.

மற்றொரு காரணமும் உண்டு.  காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த ஆயிரமாயிரம் வாக்காளர்களை விட்டொழியுங்கள்.  மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே, ஷீலா தீட்சித் மற்றும் மீரா குமார் போன்றவர்களே கூட இன்னும் நேரு - காந்தி குடும்பத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நம்புவது ஆச்சர்யமளிக்கிறது.  காங்கிரசைப் பொறுத்தவரை தாங்கள் பிரதேசத் தலைவர்கள் என்றும், சோனியா - ராகுல் ஆகியோர்தான் இந்தப் பிரதேச எல்லைகளைத் தாண்டிய தேசம் முழுவதிற்குமான தலைவர்கள் என்று இவர்கள் நினைப்பதும் வியப்பானதே.  சோனியா - ராகுலின் கவர்ச்சி குறைந்து வருவது கட்சிக்கு வெளியே இருப்பவர்களுக்குக் கூட தெளிவாகப் புலப்படும்போது, கட்சிக்குள் இருக்கும் தலைவர்களுக்கு இன்னும் இது விளங்காதது ஏன் என்பதும் மர்மமாகவே உள்ளது.  நேருவோ இந்திராவோ தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து அவர்களின் பலத்தால் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி தேடித்தந்ததைப் போல, சோனியா - ராகுலால் முடியாது என்பது முதலில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
     
காங்கிரசைப் பொறுத்தவரை, சோனியா - ராகுல் குடும்பத்திற்கும் கட்சிக்காரர்களுக்கும் உள்ள உறவு மன்னர் - மக்கள் என்பதைப் போன்றது.  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்பதான அந்தஸ்து மாயை போற்றப்படுகிறது.  சோனியா - ராகுல் குடும்பத்தின் செல்வாக்கு இந்திய அரசியலிலும், காங்கிரசைப் பொறுத்த மட்டிலுமே கூட, அதிவேகத்தில் சரிந்து கொண்டிருந்தாலும், மிச்சமிருக்கும் காங்கிரஸ்காரர்கள் நேரு - காந்தி குடும்பத்திற்குப் பதிலியாக வேறு நபர்களைப் பரிசீலிப்பதற்கு தைரியமற்றவர்களாக இருக்கிறார்கள்.  

1977-க்குப் பிறகு, 1980-ல் காங்கிரஸ் மீண்டும் எழுந்து வந்ததைப் போல, இன்றும் கூட காங்கிரசுக்குப் புத்துயிர் உண்டு; அதைக் கொடுக்கப் போவது சோனியா - ராகுல் குடும்பம்தான் என்று கட்சிக்காரர்கள் நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது  மட்டுமன்றி, முட்டாள்தனமானதும் ஆகும்.  இதில் வேடிக்கையானது என்னவென்றால், சோனியா - ராகுல் கவர்ச்சி கட்சிக்குப் போதாது என்று உணரும் காங்கிரஸ்காரர்கள், இயக்கத்திற்கு வலுவூட்ட வேண்டி மீண்டும் அந்தக் குடும்பத்தையே மன்றாடுவதுதான்.  இவர்கள்தான் பிரியங்கா வதேரா காந்தியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.

சோனியா - ராகுல் குடும்பத்தை உடும்பாக காங்கிரஸ் பிடித்துக் கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.  இந்தக் குடும்பத்தால் மட்டுமே கட்சியை உடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அது.  கட்சியின் உள்ளே எத்தனையோ கோஷ்டிகள் இருந்தாலும் அவைகளைப் பசைபோட்டு ஒட்டி ஒன்றாக இருப்பதுபோல் தெரியவைத்துக் கொண்டிருப்பது சோனியா - ராகுல் குடும்பம்தான் என்று காங்கிரஸ் நம்புகிறது.  இந்தக் குடும்பத்தின் தலைமை இல்லாவிட்டால், கட்சி சுக்குநூறாக உடைந்துவிடும் என்று கட்சியினரே நம்புகிறார்கள்.

மற்றுமொரு காரணமும் உண்டு. கட்சியின் மொத்த நிதி வளத்தையும் சோனியா - ராகுல் குடும்பமும் அவர்களுக்கு மிகவும் வேண்டிய நபர்களுமே நிர்வகிக்கிறார்கள் என்ற செய்தி பொதுவெளியில் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளப்படாமலும் மறுக்கப்படாமலும் நம்பக்கூடிய வதந்தி என்ற அளவில் உள்ளது.  மத்திய தகவல் ஆணையர் அனைத்துக் கட்சிகளின் வரவு செலவு கணக்குகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் வரம்பிற்குட்பட்டவை என்று உத்தரவு பிறப்பித்திருந்தாலும், காங்கிரஸ் - பிஜேபி போன்ற கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களின் வரவு செலவு கணக்குகள் பொதுவெளியின் பார்வைக்குத் தரப்படாதது மட்டுமல்ல, அந்தக் கட்சித் தலைவர்களின் கவனத்திற்கே கொண்டுவரப் படுவதில்லை.  காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கஜானாவின் சாவி 10, ஜன்பத் என்ற முகவரியில் இருக்கிறது என்றே அதன் தலைவர்கள் உட்பட அனைவரும் முழுமையாக நம்புகிறார்கள்.  தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பினும், கட்சியின் மீது அந்தக் குடும்பத்திற்கு இருக்கும் செல்வாக்கு ஏன் கொஞ்சமும் குறையவில்லை என்ற கேள்விக்கு இதில் பதில் இருக்கலாம்.

மேற்கண்ட விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஒருவருக்குத்தான் அண்மையில் ப.சிதம்பரம் கொடுத்த நேர்காணலின் சூசகம் புரியும்.  நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாளைப் பற்றியது இது.  நேஷனல் ஹெரால்ட் காங்கிரஸ் செய்தித்தாள் என்பதால், காங்கிரஸ் அதற்கு கடன் கொடுப்பதில் தவறில்லை என்றும், அந்த செய்தித் தாளின் பெருவாரியான பங்குகளை காங்கிரஸ் தலைவர் மற்றும் துணைத் தலைவர் வைத்திருக்கிறார்கள் என்றும் ப.சிதம்பரம் கூறியது பல்வேறு கேள்விகளை என்னுள் எழுப்பிய வண்ணம் இருக்கிறது.  இந்தப் பங்குகளை சோனியா - ராகுல் இருவரும் தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்களா அல்லது காங்கிரசின் தலைவர் - உப தலைவர் என்ற பொறுப்பில் வைத்திருக்கிறார்களா என்பது சிதம்பரத்திடம் வினவப்படவில்லை.  எப்போதுமே மிகவும் சாதுர்யமாகவும் சமத்காரமாகவும் கேள்விகளை எதிர்கொள்ளும் சிதம்பரம் இப்படியான கேள்விகளுக்கு என்ன பதிலளித்திருப்பார் என்று யூகிப்பது சுவையானது.

சில மாதங்களுக்கு முன்னர், எம்.ஜே.அக்பர் கொடுத்த பேட்டியொன்றில் சோனியா - ராகுல் இருவரையும் மிகவும் கடுமையாகத் தாக்கியிருந்தார்.  திறமையற்ற தனது மகனை வளர்க்க சோனியா தீவிரமாக முயற்சிப்பதால்தான், ராகுல் "உதவாத பிள்ளையாகப்" போய் விட்டார் என்றார்.  சோனியா தன் மகன் மேல் வைத்துள்ள கண்மூடித்தனமாக பாசம், காங்கிரசை மட்டுமன்றி தேசத்தையும் அழிக்கக்கூடியது என்றும் அக்பர் தாக்கினார்.

காங்கிரசில் இருந்த அக்பர் தற்போது பிஜேபி கட்சியில்.  ஆனால், இந்தக் கருத்தை அவர் காங்கிரசின் முன்னாள் உறுப்பினர் என்ற நிலையிலோ அல்லது பிஜேபியின் இன்றைய உறுப்பினர் என்ற நிலையிலோ இருந்து சொல்லவில்லை.  நவீன இந்தியாவின் வரலாற்றாசிரியர் என்ற நிலையிலும், ஜவஹர்லால் நேருவைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தின் ஆசிரியர் என்ற நிலையிலும்தான் மேற்கண்ட கருத்தை சொல்கிறார்.  வரலாற்றாசிரியராக, நவீன இந்தியாவில் காங்கிரசின் பங்களிப்பு என்ன என்பது அக்பருக்குத் தெரியும்.  இந்திய சுதந்திரத்திற்கு காங்கிரசின் பங்கு என்னவாக இருந்தது என்பது பற்றியும், 1947-க்குப் பிறகு இந்தியாவை ஒரே நாடாக ஒன்றிணைத்து அதன் ஒன்றியத்தைப் பேணுவதிலும் காங்கிரசின் பங்கு என்ன என்பதை அறிந்த நிலையில்தான் அக்பர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார்.  சிறந்த வல்லமை வாய்ந்த எதிர்க்கட்சி ஜனநாயக அரசியலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதும், சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக எத்தகைய நேர்மறையான அரசியலுக்குப் பங்களிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் நிலையில்தான் அக்பரின் இந்தக் கருத்து என்று நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், அக்பரின் கருத்து பிஜேபியின் கருத்தாக இருக்கவில்லை.  காங்கிரஸ் அழிந்து போகும் என்பதான கருத்தை பிஜேபியின் எந்தச் செய்தித் தொடர்பாளரும் தெரிவிக்க நியாயமேதும் இல்லை.  ஆனால், அக்பரின் கருத்துதான் என்னுடைய கருத்தும்.  நான் எந்த அரசியல் கட்சியையும் எப்போதும் சாராதவன் என்ற போதும், அக்பரின் கருத்துதான் என்னுடையதும். இந்த நாட்டின் மிக முக்கியமான அங்கமாக இருந்த பாரம்பரியம் மிக்க ஒரு தேசிய கட்சி அமைப்பு ரீதியாகவும், அறம் இழந்தும் சீர்கெட்டு வருவதை பார்க்கச் சகியாத குடிமகன் ஒருவன் இப்படித்தான் நினைக்க முடியும்.

0 comments:

Post a Comment