நரசிம்ம அவதாரம்

| Sunday, October 2, 2016
(சஞ்சய பாரு.  மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவருக்கு செயலராக பிரதமர் அலுவலகத்தில் பணி செய்தவர்.  2014 தேர்தலுக்கு முன் இவர் வெளியிட்ட புத்தகம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.  தற்போது “1991: How Narasimha Rao Made History” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  1991 பல வகைகளில்  முன்னோடியான ஆண்டு என்று சொல்கிறார்.  2-10-2016 நாளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாவிற்காக (சண்டே டைம்ஸ்) ரஜீவ் தேஷ்பாண்டேவிற்கு சஞ்சய பாரு அளித்த செவ்வியின் தமிழ் வடிவம்.  தமிழில் மு.பிரபு)
 
1991ம் ஆண்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அரசியல் ரீதியாகப் பார்த்தால் 1984, 1996 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளும் முக்கியமானவைதானே?
இருக்கலாம்.  ஆனால் 1991ம் ஆண்டில் நிறைய முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன.  அப்பொழுது நிலவிய பொருளாதார நெருக்கடியையும், கொள்கைகளில் ஏற்பட்ட பாரியமான மாற்றத்தையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.  மட்டுமன்றி, அமெரிக்கா – ரஷ்யா இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது, சோவியத் யூனியன் தகர்ந்து போனது, இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட பெரிய மாற்றம் போன்றவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அமெரிக்க போர் விமானத்தை இந்திய வான் எல்லையில் பறக்க அனுமதித்த பிரதமர் சந்திரசேகரின் முடிவு இந்தியா வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா பக்கம் சாய்கிறது என்ற உண்மையைச் சொன்னது.  இஸ்ரேலுக்கும், தென் கொரியாவிற்கும் நரசிம்ம ராவ் மேற்கொண்ட பயணங்களும் இந்த ஆண்டில்தான்.  பொருளாதாரக் கொள்கையிலும் வெளியுறவுக் கொள்கையிலும் இவ்வளவு பெரிய மாற்றங்கள் வேறு எப்போதும் இதற்கு முன் நடந்ததில்லை.  இது மட்டுமன்றி, ராஜீவின் மரணம் இந்திய அரசியலில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்திய ஒரு சம்பவமாகும்.  நேரு – காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் பிரதமராவார் என்பதை நான் நம்பவில்லை.

நிஜமாகவா?
ஆமாம்.  1989க்குப் பிறகு அக்குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ஆட்சித் தலைமையில் இருந்ததில்லை.  ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி ஒரு கூட்டாட்சிதான்.  பிரதமர் அந்தக் குடும்பத்திலிருந்து, அதற்குப் பிறகு, வரவில்லை.  ராஜீவின் கொலை அந்தக் குடும்பத்தின் ஆட்சித் தலைமைப் பொறுப்பிற்கு முடிவு கட்டி விட்டது.

இந்தப் புத்தகத்தில், ராஜீவின் பொருளாதாரக் கொள்கைதான் 1991ம் ஆண்டின் நிதிச் சிக்கலுக்குக் காரணம் என்று வாதிடுகிறீர்கள்.  ஆனால், அவரை அனைவரும் ஒரு “புதுமைவாதி” என்று சொல்கிறார்கள்.
அறிவுரீதியாக அவர் ஒரு புதுமைவாதி என்பதில் சந்தேகமில்லை.  நாட்டைக் கணினிமயப்படுத்தியது அவர்தான்.  ஆனால் 1991ம் ஆண்டு நிதிப் பற்றாக்குறையில் புதிய உச்சத்தைத் தொட்ட ஆண்டு.  தாங்கவே முடியாத பற்றாக்குறை. ஜகதீஷ் பகவதி, ஐ ஜி பட்டேல், விஜய் ஜோஷி மற்றும் ஐஎம்டி லிட்டில் போன்ற பொருளாதார நிபுணர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.  1985-89 மற்றும் 1990 ஆண்டுகளின் பொருளாதாரக் கொள்கைகள்தான் 1991ம் ஆண்டைய பெரும் பின்னடைவுக்குக் காரணம் என்று அவர்கள் அனைவருமே சொல்கிறார்கள். (1990ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்தார்).

1991ம் ஆண்டு சந்திரசேகர் அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாமல் போனது மிகப் பெரிய பாதகமான விளைவை உருவாக்கும் என்பதை ராஜீவ் தெரிந்து வைத்திருந்தாரா?
அப்படித்தான் நினைக்கிறேன்.  ஆர்.வெங்கட்ராமன் எழுதிய சுயசரிதையில், ராஜிவிற்கு இந்த விளைவுகளை தான் உணர்த்தியதாக சொல்கிறார்.  சந்திரசேகர் ஒரு வருடத்திற்காவது பிரதமராக நீடிக்க அனுமதியுங்கள் என்றும் அவர் ராஜிவை கேட்டுக்கொண்டுள்ளார்.  வரவிருக்கும் பேரழிவை வெங்கட்ராமன் உணர்ந்திருந்தார்.

பிரதமரான முதல் வருடத்தில், ராவிற்கு எத்தகைய செல்வாக்கு அரசைப் பொறுத்தவரை இருந்தது?
என்னுடைய புத்தகத்தில் நான் 1991ம் ஆண்டைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன்.  மற்றவர்கள் எழுதியிருப்பதை நீங்கள் படிக்க வேண்டும்.  ராவ் தன்னுடைய சுய அதிகாரத்தை நிறுவியிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.  அவர் தொடர்ந்து திருமதி சோனியா காந்தியை சந்தித்து வந்தார் என்றாலும்,  அது தன்னுடைய முன்னோடியின் விதவை என்ற அளவில் மட்டும்தான் இருந்தது.  தான் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதற்கான உத்தரவைப் பெறத்தான் அந்த சந்திப்புகள் என்பதை நான் நம்பவில்லை.  ஆனால், சோனியாவைச் சுற்றியிருந்த ஒரு கும்பல், அவர்தான் அரசின் தலைவர் என்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்பியது.  வெறும் முகமனை மட்டும் சோனியா விரும்பவில்லை; முழு அதிகாரமும் தன் கைகளில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அப்படியானால்,  பொருளாதாரப் பின்னடைவுகளை காரணம் காட்டி நரசிம்ம ராவ் அரசியல் ரீதியாக தாக்கப்பட்டாரா?
அப்படித்தான் ஜெயராம் ரமேஷ் சொல்கிறார்.  அர்ஜுன் சிங், ஏ.கே.ஆண்டனி, வயலார் ரவி மற்றும் காங்கிரசில் இருந்த இடது சாரி சார்பு கொண்டவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ராவிற்கு தொந்தரவு கொடுத்ததாக ஜெயராம் ரமேஷ் சொல்கிறார்.  ராவின் மீதான அரசியல் ரீதியான தாக்குதல் பாப்ரி மசூதி சம்பவத்திற்குப் பிறகுதான் தொடங்கியது எனலாம்.

பாப்ரி மசூதி நிகழ்வு, ராவ் அவர்களின் மற்ற பங்களிப்புகளை மங்கச் செய்து விட்டது என்று சொல்லலாமா?
“சம்பவங்கள் சாதியான திசையில் நகருமேயானால், அனைவரும் பாராட்டப்படுவர்; இல்லையேல் நான் மட்டுமே குற்றம் சாட்டப்படுவேன்” என்று ராவ் சொல்லியிருக்கிறார்.  சோனியாவிற்கும் மன்மோஹனுக்கும் இடையில் இருந்த சமன்பாடும் இதுவேதான்.  நிறைகள் இருந்தால், பெருமை கட்சிக்கு.  குறைகள் இருப்பின், அரசே காரணம்.  இந்தச் சமன்பாட்டை மன்மோகன் ஏற்றுக் கொண்டார்; ராவ் ஏற்கவில்லை.

நேரு – காந்தி குடும்பத்தின் பாதிப்பு இந்திய அரசியலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்மை ஏதும் செய்திடவில்லை என்பதான தங்களுடைய கருத்து நம்பும்படியாக இல்லை.
நானே ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன்தான்.  எனது பெரிய மாமா அலகாபாத் ஆனந்த பவனில் நேருவிடம் பணியாற்றியவர். எனது அப்பா காங்கிரஸ் இளைஞர் அணிச் செயலாளராக பல முதலமைச்சர்களிடம் இருந்தவர்.  காங்கிரஸ் கட்சியை ஒரு தேசிய கட்சியாகவே பார்த்து வளர்ந்தவன் நான். 1980ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிப்போய் விட்டது.

மன்மோகன் சிங் – நரசிம்ம ராவ் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக இருந்தது?
ராவ் அவர்களுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக சிங் நினைத்தார்.  இவர்களுக்கிடையே இசைவான நிலையை உறுதி செய்ய நான் பாடுபட்டிருக்கிறேன்.  1991ல் துவங்கிய சீர்திருத்தங்கள் முழுவதும் பொருளாதார நிபுணர்களால் சாத்தியமானது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஆனால், இந்தச் சீர்திருத்தங்களில் ராவ், சந்திரசேகர் போன்ற அரசியல் தலைமைகளின் பங்கு அதிகம்.  இந்தியாவிற்கு சர்வதேச முக்கியத்துவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணரின் தேவையை ராவ் உணர்ந்ததின் காரணமாகவே, மன்மோகன் இங்கு அழைக்கப்பட்டார்.  ராஜீவ் அல்லது சோனியாவால் வரவழைக்கப்பட்டவர்தான் மன்மோகன் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். 
 
ராவ் ஒரு “காவி ஆதரவாளர்” என்ற குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அயோத்தியில் நடந்தது பற்றியதான தனது தரப்பை எழுதியுள்ள ஒரே பிரதமர் ராவ் மட்டும்தான்.  அவருடைய வாதங்களை மறுப்பதற்கான முகாந்திரம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

0 comments:

Post a Comment