போய் வருகிறேன் டாடா

| Monday, October 24, 2016


சரியாக அது 1974 ஏப்ரல்.  பட்ட மேல்வகுப்பில் என்னைத் தவிர அனைவரும் ஆண்கள்.  பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன்.  என்னுடன் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் வெவ்வேறு அறிவியல் துறைகளில் பயின்று கொண்டிருந்தார்கள்.  நான் கணினி அறிவியலில்.  முனைவர் பட்ட ஆய்விற்காக வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் உதவித் தொகையுடன் சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து பணி புரிவது என்பது பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை.
 
கல்லூரியின் பிரதான கட்டிடத்திலிருந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன்.  நோட்டிஸ் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது.  டெல்கோ நிறுமத்திற்காக ஆட்டோமொபைல் இஞ்சினியர்களுக்கான வேலைவாய்ப்பு விளம்பரம் அது.  திறமை கொண்ட இளம் பொறியாளர்களை விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அந்த விளம்பரம்.  நகரும்போதுதான் கடைசி வரியைப் பார்த்தேன். "பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்."  தேள் கொட்டியது போலிருந்தது. டாடா நிறுவனத்திலுமா பெண்களை ஓரவஞ்சனையாக நடத்த வேண்டும்?

அந்த வாசகம் என்னைத் தொந்தரவு செய்யவே, அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வது எனத் தீர்மானித்தேன்.  பள்ளிப்பருவத்திலிருந்து பட்டமேற்படிப்பு வரை யாரும் குறை காண முடியாதவாறு இருந்த சான்றிதழ்கள் எந்த ஆண் விண்ணப்பதாரருக்கும்  சளைத்தவளாக என்னைக் காட்டாது என்று தெரியும்.  ஆனால், கல்லூரிக்கு வெளியே, நிஜ வாழ்க்கையில் வெற்றிபெற, இந்தச் சான்றிதழ்கள் மட்டும் போதுமா?

அந்த விளம்பரத்தின் கடைசி வாக்கியம் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.  அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு அஞ்சலட்டையில் பெண்களுக்கு எதிரான டெல்கோவின் இந்தப் போக்கை விமரிசித்தும், டெல்கோ இத்தகைய அநியாயத்தைச் செய்யலாகாது என்றும் படபடப்புடன் எழுதி முடித்தேன்.  ஆனால் யாருக்கு முகவரியிடுவது?  யார் அந்தச் சமயத்தில் டாடாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தார் என்று தெரியவில்லை.  ஏதோ ஒரு டாடாவாக இருக்க வேண்டும்.

டாடா குழுமத்தின் தலைவர் JRD டாடா என்று தெரியும்.  அவரது படங்களை தினசரிகளில் பார்த்திருக்கிறேன். JRD டாடாவின் முகவரியை எழுதி அந்த அட்டையை அஞ்சல் செய்தேன். (உண்மையில் அப்போதைய குழுமத் தலைவர் தமந்த் மூல்கோகர்.) என்ன எழுதினேன் என்பது இன்றுவரை வார்த்தைப் பிசகாமல் நினைவில் இருக்கிறது. "டாடா எந்தத் துறையிலும் முன்னோடிதான்.  கட்டுமானம், இரும்பு, ரசாயனம், ஜவுளி மற்றும் வாகனங்கள் தயாரிப்புத் துறைகளில் இந்தியாவில் டாடாதான் முன்னோடி.  உயர்கல்வித் துறையில் 1900 முதல் டாடா முழுவீச்சுடன் இயங்குகிறது.  பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம் துவங்கப்படுவதற்குக் காரணம் டாடாதான்.  இந்தப் பெருமைமிக்க கழகத்தில்தான் நானும் படிக்கிறேன்.  ஆனால் டெல்கோ பெண்களுக்கு எதிராக இப்படி பாரபட்சமான முடிவெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை." 

அஞ்சல் செய்ததையே மறந்துவிட்டேன்.  பத்து நாட்கள் இருக்கும்.  டெல்கோவில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.  டெல்கோவின் புனே தொழிலகத்தில் நேர்காணல் நடக்கவிருந்தது.  டெல்கோவின் செலவிலேயே புனேவிற்குப் போகலாம். புனே புடவைகளுக்கு பிரபலம் என்பதால், புனேயிலிருந்து புடவைகள் வாங்கிக் கொண்டு வர என்னுடைய தோழி யோசனை கூறினாள்.  விடுதியில் யார் யாரெல்லாம் புனே சேலை வேண்டும் என்றார்களோ, அவர்களிடம் தலா 30 ரூபாய் வசூலித்துக் கொண்டு புனே போனதை நினைத்தால் சிரிப்பு வருகிறது.  ஆனால் அந்தப் பயணம் எப்படியான ஒரு திருப்புமுனை!

புனே போவது அதுதான் முதல் முறை.  பார்த்தவுடனேயே அந்த நகரைப் பிடித்து விட்டது.  அந்த நகரம்தான் எத்தனை வழிகளில் என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது!  நேர்காணல் நடக்கவிருந்த டெல்கோவின் பிம்ப்ரி (Pimpri) அலுவலகத்திற்குப் போனேன்.  ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு என்னை நேர்முகம் செய்தது.  "இந்தப் பெண்தான் JRD-க்கு கடிதம் எழுதியவள்" என்று ஒருவர் முணுமுணுத்தது எனது காதில் விழுந்ததும் இந்த வேலையை எனக்குக் கொடுக்கமாட்டார்கள் என்று முடிவு செய்து விட்டேன்.  உடனே பயம் எல்லாம் போய்விட்டது. கொஞ்சம் அலட்சியமாகவே உட்கார்ந்தேன்.  "இது ஒரு தொழில்நுணுக்கப் பேட்டி மட்டும்தானே" என்று நான் அனாவசியமாகக் கேட்டது அந்தக் குழுவை அதிர வைத்திருக்க வேண்டும். நான் காட்டிய கடுமையையும், நடந்து கொண்ட விதத்தையும் இப்போது நினைத்தாலும் வெட்கப்படுகிறேன்.  இருப்பினும் அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்களைச் சொன்னதாகவே நினைவு.

அந்தக் குழுவிலிருந்த வயதான மனிதர் என்னைக் கனிவுடன் பார்த்து சொன்னார்: "பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று நங்கள் ஏன் நினைத்தோம் தெரியுமா? தொழிற்சாலையின் விற்பனையகத்தில்தான் உனக்கு வேலை.  பொறியியல் படிப்பு முடித்ததும் பெண்கள் ஆய்வுக் கூடங்களில் பணி செய்யலாமே தவிர, விற்பனையகங்களில் அல்ல."  நான் சொன்னேன்: "ஆனால் சார், எதற்கும் ஒரு துவக்கம் உண்டல்லவா? இல்லாவிட்டால் உங்கள் தொழிற்சாலையில் பெண்கள் பணி புரியாமலேயே போய் விடலாம்." 

எனக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டது.  நான் இங்கேதான் எனது எதிர்காலத்தைக் கழிக்கப் போகிறேன்.  புனேவில் எனது பணிவாழ்வைத் தொடங்க வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை.  ஆனால் புனே டெல்கோவில்தான் இன்னொன்றும் நடந்தது.  கர்நாடகாவில் இருந்து அங்கே பொறியாளராக பணி புரிந்த இளைஞருடன் நட்பாகி கல்யாணம் செய்து கொண்டதும் புனேவில்தான்.

டெல்கோவில் பணியாற்றத் தொடங்கிய பிறகுதான் JRD டாடாவைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அன்று அவர் இந்தியத் தொழில் உலகத்தின் சத்ரபதி.  பம்பாய் மாநகருக்கு நாம் மாற்றலாகியதும் JRD-யைச் சந்திக்க நேர்ந்தது.  எங்களது குழுமத் தலைவர் மூல்கோகரிடம் ஒரு அறிக்கையைக் காண்பிப்பதற்காகப் போயிருந்தேன்.  டாடா குழுமத்தின் தலைமையிடமான பாம்பே ஹவுசில் (Bombay House) முதல் தளத்தில் இருந்தது அவரது அறை.  நான் அறையில் இருந்தபோது JRD உள்ளே வந்தார்.  அவரை அப்போதுதான் முதல்முறையாக நேரில் பார்க்கிறேன்.  எனது அஞ்சல் அட்டை ஞாபகம் வந்தது.  படபடப்புடன் இருந்த என்னை மூல்கோகர் JRD-யிடம் அறிமுகப்படுத்தினார். "இந்தப் பெண் ஒரு பொறியாளர்.  பட்ட மேற்படிப்பு முடித்தவர்.  டெல்கோ தொழிலகத்தின் விற்பனைத் தளத்தில் பணி செய்கிறார்."

JRD என்னைப் பார்த்தார்.  அஞ்சல் அட்டை விவகாரத்தைப் பற்றி அவர் எதுவும் கேட்டுவிடக் கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.

JRD சொன்னார்: "நம் நாட்டில் பெண்கள் பொறியியல் படிப்பது சந்தோஷமாக இருக்கிறது.  உனது பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?"

"சார், டெல்கோவில் சேரும்பொழுது எனது பெயர் சுதா குல்கர்னி.  இப்போது சுதா மூர்த்தி."

என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு மூல்கோகரிடம் பேச ஆரம்பித்தார் JRD. நான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தேன்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு JRD-யை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.  அவர் டாடா குழுமத் தலைவர்.  நானோ சின்னஞ்சிறிய ஒரு இன்ஜினியர். அவரைப் பற்றிய பிரமிப்பு முழுவதுமாக என்னை ஆக்கிரமித்திருந்தது.

ஒருநாள் அலுவலகத்தின் வெளியே எனது கணவர் மூர்த்திக்காக காத்துக் கொண்டிருந்தேன்.  அருகில் நின்று கொண்டிருந்தது JRD என்று உணர்ந்ததும் செய்வதறியாமல் திகைத்துப் போனேன். நல்லவேளையாக அஞ்சல் அட்டை விவகாரம் அவருக்கு நினைவில்லை.  அவரைப் பொறுத்தவரை அது சாதாரண விஷயமாக இருக்கலாம்.  எனக்கு அப்படி இல்லை.

"அலுவலக நேரம் முடிந்து ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறாய்?" - JRD-தான் கேட்டது.

"சார், எனது கணவர் வந்து கூட்டிச் செல்வதற்காகக் காத்திருக்கிறேன்."

"இருட்டாகிக் கொண்டு வருகிறது, பார்.  இங்கே யாருமே இல்லை. உனது கணவன் வரும்வரை நான் இருக்கிறேன்."

மூர்த்திக்காக காத்திருப்பது எனக்கு வழக்கமானது என்றாலும், இன்று என்னருகில் அவருக்காகக் காத்திருப்பது JRD என்றதும் எனக்கு நிலை கொள்ளவில்லை.  ஓரப்பார்வையால், படபடப்புடன் JRD-யைப் பார்த்தேன்.  வெள்ளை சட்டை - பேண்ட்.  வயதாகிய நிலையிலும் அவரிடம் தேஜஸ் குறையவில்லை.  எந்தவிதமான பந்தா இன்றி அமைதியாக நின்றிருந்தார்.  நாட்டின் மிகப்பெரிய தொழிற்குழுமத்தின் அதிபதி.  மொத்த தேசத்தின் மரியாதைக்குரியவர்.  ஒரு சிறிய பெண்ணிற்காக - அவரது ஊழியருக்காக - துணைக்கு நின்று கொண்டிருக்கிறார்.

நல்லவேளை.  கொஞ்ச நேரத்தில் மூர்த்தியின் தலை தெரிந்தது.  அவரிடம் நகர்ந்த என்னை அழைத்து JRD சொன்னார்: "யங் லேடி, உன்னுடைய கணவனிடம் சொல்.  இன்னொரு முறை மனைவியை காக்க வைக்க வேண்டாம் என்று."

டெல்கோவிலிருந்து 1982-ம் ஆண்டு ராஜினமா செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது.  விருப்பமில்லை என்றாலும் போய்த்தான் ஆக வேண்டும் என்ற நிலை.  எனது இறுதி பண முடிப்பு விவகாரங்களை முடித்து விட்டு பாம்பே ஹவுஸின் நீண்ட படிக்கட்டுகளில் கனத்த மனதுடன் இறங்கி வரும்போது, JRD மேலே ஏறி வந்து கொண்டிருந்தார்.  அவரிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டும் போலிருந்தது. நின்றேன்.  அதன் பிறகே என்னைக் கவனித்தார்.

"திருமதி குல்கர்னி! எப்படி இருக்கிறீர்கள்?"

"சார்! நான் டெல்கோவை விட்டுப் போகிறேன்."

"எங்கே?"

"புனேவிற்கு சார். எனது கணவர் அங்கே இன்போசிஸ் (Infosys) என்ற நிறுமத்தைத் துவக்குகிறார். அவருடன் போகிறேன்."

"ஓ அப்படியா!  உனது நிறுவனம் ஜெயித்தால் என்ன செய்வதாக உத்தேசம்?"

"சார், நாங்கள் ஜெயிப்போமோ என்று தெரியவில்லை."

"சந்தேகத்துடன் எதையும் ஆரம்பிக்காதே.  தைரியம்தான் முக்கியம்.  ஜெயித்தால் இந்த சமூகத்திற்கு ஏதாவது திருப்பிக் கொடு.  இந்தச் சமூகம் நமக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கிறது! நாமும் திருப்பிச் செய்ய வேண்டும். Wish you all the best!"

JRD படிகளில் ஏறி மேலே போனார்.  நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.



(பின்குறிப்பு: Infosys Foundation தலைவரும் Infosys நிறுவன முன்னாள் தலைமை செயல் அலுவலர் திரு. நாராயண மூர்த்தி அவர்களின் மனைவியுமான திருமதி.சுதா மூர்த்தி அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ஒன்றின் சிறு பகுதியைத்தான் மேலே படித்தோம். உண்மையில் எனது நண்பர் ஒருவர் WhatsApp மூலமாகத்தான் இதை அனுப்பினார்.  படித்துக்கொண்டிருக்கும் போதே, தமிழ்ப்படுத்தி வாசகங்கள் மனதில் ஓடின.  படித்து முடித்தவுடன், பேப்பரும் பேனாவுமாக ஆரம்பித்து விட்டேன்.  இதில் என்னென்னவோ செய்திகள் எனக்காக இருப்பது போலிருந்தது.  எவ்வளவு பெரிய மனிதர் JRD! டாடா குழுமத்தின் பிரம்மாண்டம் சொல்லி மாளக் கூடியதா? எத்தனை கொடுத்திருக்கிறார்கள்!  
  
திருமதி சுதாவிற்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும், அவர் JRD-யைப் பார்த்துக்கொண்டேயிருந்ததைப் போல. - முனைவர் மு.பிரபு)

0 comments:

Post a Comment