மண்டல் கமிஷன் அறிக்கை – முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்
என்பதான வற்புறுத்தல்
(பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
மற்றும் பிற சிறுபான்மையோர் மாநாடு புது தில்லியில் 1983 ஏப்ரல் 13ந் திகதி
நடைபெற்றபொழுது திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு
ஆற்றிய உரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: முனைவர். மு.பிரபு)
பகுதி - ஒன்று
பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற
சிறுபான்மையோர் நலனுக்காக கூட்டப்பட்டிருக்கும் இந்தப் பெரும் மாநாட்டில் கலந்து கொள்ள
விழாக் கமிட்டியாரால் அழைக்கப்பட்டிருப்பதை சிறப்பாகக் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
அதே வேளையில், நானொன்றும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை என்பதையும்
அறிவேன். பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள்
செய்து வந்திருக்கிற பணியை தொடர்ந்து செய்வது மட்டுமே என்பதாகத்தான் எனது பணி
இருந்து வருகிறது. பல்கிப்
பெருகியிருக்கும் லட்சக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்காக தன்னலமின்றி அவர் ஆற்றி
வந்திருக்கிற அரும்பெரும் பணியை நன்றியுடன் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊருக்குத் தண்ணீர் கொண்டு வந்து தருபவர்களாகவும், விறகு
சுமந்து வருபவர்களாகவுமே நீடித்து தேய்ந்து போன இந்த சாதாரண மக்களின் உரிமைப்
போராட்டத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து வந்த அவரை இப்பொழுது நன்றியோடு
நினைத்து பார்ப்பது மிகப் பொருத்தமானதே.
ஏற்கனவே முன்னேறிய, நல்ல நிலையில் இருக்கும் பிரிவினருக்காக உழைக்க முன்வரும்
நபர்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள்.
அவர்களின் பயணம் எளிது, மற்றும் ஆபத்தில்லாததும் கூட. ஆனால், சமூக மற்றும் கல்வித் தளங்களில் தங்களது
அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு பரிதாபமாக தவிக்கும் பின்தங்கியோர்,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்காக பாடுபட முன்வருவோர்
அரிது. அத்தகைய பயணமானது மரியாதைக்
குறைவானது மட்டுமல்ல, அல்லல் நிறைந்ததும் சலிப்பைத் தரக்கூடியதும் ஆகும். ஒருவகையில் நன்றியைக் கூட எதிர்பார்க்க முடியாத
ஒன்றாகும். கிரீடத்தைச் சுமக்கும் தலை பாதுகாப்பற்றது
என்பார்களே, அதைப்போலவே, விளிம்புநிலை மனிதருக்காக பாடுபட முன்வருவோரின் நிலையும்
பாதுகாப்பற்றதே. கிரேக்க தத்துவ ஞானி
சாக்ரடிஸ், ஏன் நமது ஈவெரா ஆகியோரின் வாழ்க்கை இதற்கான சிறந்த சான்றுகளாகும். பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடியினர் இதுநாள் வரை அடைந்திருக்கும் சமூக முன்னேற்றமானது உடனடியாக
ஏற்பட்டுவிடவில்லை; பெரியார், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா மற்றும் அறிஞர்
அண்ணாதுரை போன்றோர் தம் வாழ்நாள் முழுக்க போராடியதின் விளைவேயாகும்.
பின்தங்கிய வகுப்பினரின் இரண்டாவது குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதைப்
பற்றி இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது என்பதால் நான் நேரடியாகவே
விடயத்திற்கு வருகிறேன்.
இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு மதங்கள், சாதிகள், சமூகங்கள், மொழிகள்
சார்ந்தோர் வாழ்கின்றனர். மேற்கிலிருந்து
வந்த இஸ்லாம், கிறித்துவம் மதங்களைச் சார்ந்தோரும் இங்கு வசிக்கின்றனர். வரலாற்றை உற்று நோக்குவோம் என்றால், ஒரு
சிலரைத் தவிர, மற்ற இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் மேற்கிலிருந்து வந்தவர்கள்
அல்ல. அவர்களும் நேற்று வரை நமது மதத்தில்
இருந்தவர்கள்தான். இந்து மதத்தைப்
பீடித்து வரும் சாதிக் கொடுமையைத் தாங்கவொண்ணாமல் மற்ற மதங்களைச் தழுவியவர்களே
அவர்கள். இந்து சாதிக்கொடுமை என்பதுதான்
என்ன?
நாம் அனைவரும் ‘இந்து’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறோம். ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள்
கூற்றுப்படி ‘இந்து’ என்ற வார்த்தையின் மூலமே இந்த நிலப்பரப்பு அல்ல. இந்த மதம் கீழிருந்து மேலாய் பல அடுக்குகளைக்
கொண்டது. மனுவின் விதிகளுக்குக்
கட்டுப்பட்டு சாதிகளுக்கு வெவ்வேறு கடமைகளையும் தண்டனைகளையும் உள்ளடக்கியது. இந்த நவீன உலகத்தில் மனுவைப் பற்றி பேசுவது கேலியானதாகவும்
விசித்திரமானதாகவும் தெரியலாம். ஆனால்
உண்மையை உற்றுப் பார்க்க வேண்டும். இந்திய
நீதிமன்றங்கள் அனைத்திலும் இன்றுவரை பின்பற்றப்படும் ‘இந்திய சிவில் சட்டம்’
மனுவின் தாத்பர்யத்தை அடிப்படையாகக் கொண்டது.
சற்றே மேம்போக்காக பார்க்குமிடத்து இந்திய சாதி அமைப்பு பிராமணர் –
சூத்திரர் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
தாங்கள் பிராமணர் என்ற உயர் பிரிவில் சேரமாட்டாதோர் என்பதால்,
சத்திரியர்களும் வைசியர்களும் தங்களை சூத்திரர் பிரிவில் இணைத்துக் கொண்டனர். சமூகத்தின் எந்தத் தளத்தை எடுத்துக் கொண்டாலும்
சரி, சூத்திரர்கள் பின்தள்ளப் படுவதைப் பார்க்க முடியும். இப்படியாகவே, காலப்போக்கில் சூத்திரர்கள் சமூக
கல்வித் தளங்களில் பின்னடைய நேர்ந்தது.
நமது சமூகத்தின் மாட்சிமைதாங்கிய உயர் கனவான்கள் சிலர் என்னிடம் இப்படியாகக்
கேட்கக் கூடும்: “சாதியைப் பற்றி இவ்வமயம் பேசுவது சரியா? அவைகள் எப்போதோ
வழக்கொழிந்து விட்டனவே? நமது அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வேறு எத்தனையோ விடயங்கள்
இருக்க, சாதியை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பது சரியா?” எதையும் சாதியக் கண்
கொண்டு பார்ப்பது, குறுகிய கண்ணோட்டமாகவும், சாதீயமாகவும், தேசத் துரோகமாகவும் கூட
சிலருக்குத் தெரியலாம். ஆனால், உண்மை
என்னவென்றால், இந்த சாதி அமைப்பின் மூலம் பயன் பெற்றவர்கள் நமது கண்ணோட்டத்தைக்
குறைகூறத்தான் செய்வார்கள். சாதிய
அமைப்பால், அதன் கொடுமையால், பல இன்னல்களுக்கு ஆளானவர்களான நாம் இதைப் பற்றி
பேசித்தான் ஆகவேண்டும். தன்னுள்
புரையோடிப் போயிருக்கும் சாதீய உணர்வை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, தன்னுடைய
வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் சாதியத்தைக் கொண்டே நிர்ணயித்து வருபவர்கள், நம்மை
சாதியைப் பற்றி பேசலாகாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? அப்படிப்பட்ட நபரை
நாம் என்னவென்று அழைப்பது? அத்தகைய
பகல்வேடக்காரர்கள் முதலில் தங்களின் சாதிய உணர்வை அழித்துவிட்டு, சாதி
அடுக்குகளைக் கலைந்துவிட்டு வரட்டும்.
பிறகு நமக்கு அவர்கள் புத்திமதி சொல்லலாம். உனது சாதியின் மேலதிகாதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக் கொண்டே, ‘சாதியைப் பற்றி பேசாதே’ என்று மற்றவர்களுக்கு
அறிவுரைக்கும் இவர்களை ‘நாகரீகமானவர்கள்’ என்றுகூட அழைக்க முடியாது. சாதி அடுக்குகளைக் களைய எதுவும்
முயற்சிக்காமல், “சாதியைப் பற்றி யாரும் பேசுதல் ஆகாது” என்று சொல்வது
ஆட்சியாளர்களுக்குப் பழக்கமாகிவிட்டது.
நான் மீண்டும் அத்தகையோரிடம் சொல்வது என்னவென்றால், ‘சாதீய உணர்வை உனது
மனதிலிருந்து துடைத்தெறிந்த பிறகு, சாதியைப் பற்றி பேசாதே என்று என்னிடம்
சொல்”. சாதீயத்தை வேரறுக்க நினைத்து
செயல்படும் ஒருவனுக்கும், சாதீயத்தால்
மட்டும் சகல ஆதாயங்களையும் அடைந்துவரும் ஒருவனுக்கும் கடலளவு வேற்றுமை
உண்டு. நான் கீழே சொல்லப்போவது,
பிராமணர்கள் தங்களுடைய சாதிக்கட்டை எப்படிப் பேணுகிறார்கள் என்பதை விளக்கும்.
திரு.தாக்கூரதா தன்னுடைய “வங்கிகளில் தனி ஒதுக்கீட்டு கொள்கை – சாதியக்
கேட்டைப் பற்றிய ஒரு ஆய்வு” என்ற கட்டுரையில் (Business Standard January 7 &
8, 1983), வங்கிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பணியமர்த்தப்படும்
நேர்வுகளில் அவர்களுக்கு முக்கியமற்ற துறைகளே ஒதுக்கப்படுவதைச் சுட்டுகிறார். இதில் முக்கிய கேடு என்னவென்றால், அவர்களுக்கு
பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமல் போவதே.
சமர் எனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ‘சந்தா’ வங்கி ஆக்ரா
கிளையில் எழுத்தராக ஒன்றரை வருடங்கள் பணியாற்றினார். பேரேட்டு பராமரிப்பு வேலையை அவர் கவனித்து
வந்தார். கிளையின் மேலாளரான திரு.ராவ்
இந்த எழுத்தரை காசாளாராக பணிமாற்றி அது மூன்று மாதங்கள் நீடித்தது. இந்த எழுத்தர் மேற்கு உத்திர பிரதேசத்தைச்
சேர்ந்தவர். இந்த தருணத்தில் பிராமண வகுப்பைச்
சேர்ந்த ஒருவர் அந்த வங்கியில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். கணக்காளரிடமிருந்து ரசீதுகள், பற்று வரவுச்
சீட்டுகள் மற்றும் காசோலைகளைப் பெற்று காசாளரிடம் கொடுக்க வேண்டிய வேலை அந்த
கடைநிலை ஊழியருடையது. தான் ஒரு
தாழ்த்தப்பட்டோருக்கு இவ்விதமான வேலைகளை செய்யமாட்டேன் என்று மறுத்ததோடு அல்லாமல்,
காசாளருக்கு தண்ணீர் கொண்டு வந்து தரவும் மறுத்தார். இதன் உச்சமாக, இந்தக் கடைநிலை ஊழியர் வங்கியில்
இரண்டு பானைகளை குடிதண்ணீருக்காகப் பராமரிக்கத் தொடங்கினார். காசாளருக்காக மட்டும் ஒரு பானை. ஏனைய பணியாளர்களுக்காக மற்ற பானை. பணியில் மட்டுமானால் தான் ஒரு கடைநிலை ஊழியராக
இருக்கலாம்; ஆனால், சமூக அந்தஸ்தில் தான் ஒரு பிராமணர் என்று அனைவரிடமும் அவர்
கூறி வந்தார். இந்த
விடயம் பரவி அந்த நகரில் உள்ள பிற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி
ஊழியர்கள் அந்தக் கிளை மேலாளரிடம் முறையிட்ட பொழுது, ஆந்திராவைச் சேர்ந்த அந்த
மேலாளர், கோட்ட மேலாளருக்கு தன்னுடைய கிளையின் காசாளரை உடனடியாக பணிமாற்றம்
செய்யும்படி கடிதம் எழுதினார். காசாளர் வேண்டுமென்றே கூட்டம் சேர்த்து முறையற்ற
செயல்களில் ஈடுபடுவதாகவும், அடிக்கடி பிராமண வகுப்பைச் சேர்ந்த பணியாளர்களிடம்
சண்டையிடுவதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காசாளராக பணிபுரிவதால்தான் அந்த
கிளை நட்டத்தில் இயங்கி வருகிறது என்றும், பெண் கடவுளான லட்சுமி இதனால்
அவமதிக்கப்பட்டு விட்டாள் என்றும் அந்தக் கடைநிலை ஊழியர் மேலாளரிடம் முறையிட்டார்.
“இப்படியாக சாதீயம் எல்லா பணியிடங்களிலும் பரவியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மேல்சாதிகளைச் சேர்ந்த பணியாளர்களிடம் சுமூகமான உறவை
விரும்பினாலும், அத்தகைய நிலை பின்னவரால் முடக்கப்படுகிறது என்பது சமூக ஆய்வுகளில்
தெரிய வருகிறது. தாழ்த்தப்பட்டோருக்கான தணி
ஒதுக்கீடை இந்திய அரசு சட்டமாக்கி ஊர்ஜிதப்படுத்திய பிறகும் கூட மேல்சாதியினரின்
மனப்பாங்கில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.” (தலித் குரல், ஏப்ரல் 1-5,
1983)
இந்த நிலப்பரப்பில் இதுநாள் வரை நடந்திருக்கும் அனைத்து சமூக மோதல்களும்
பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையிலானது என்று பெரியார் தொடர்ந்து கூறி
வந்ததை நினைவுபடுத்துகிறேன். இந்தப்
போராட்டங்கள் எல்லாம் சமூகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டதுதானே தவிர, அரசியல்
காரணிகளை முகாந்திரமாகக் கொண்டதல்ல.
ஆனால், தந்திரமான பிராமணர்கள் இந்த போராட்டங்களுக்கெல்லாம் அரசியல்
காரணங்களையே கூறி வந்தனர். தங்களுடைய
மேலான சமூக அந்தஸ்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக பிராமணர்கள் செய்யும் சூழ்ச்சி
இது. இடங்கள், நிகழ்வுகள், மனிதர்கள்
வேண்டுமானால் மாறலாம்; ஆனால் காரணம் மட்டும் ஒன்றேதான். பிராமணர்கள் எதிர் சூத்திரர்கள் என்ற காரணம்
மட்டும்தான். பின்தங்கிய
வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற
சிறுபான்மையினருக்கான போராட்டத்திற்கு புது வடிவம் கொடுப்பதற்காகத்தான் இங்கே நாம்
கூடியிருக்கிறோம். இதில் அரசியல்
இல்லை. நாம் இணங்கிப்போகும் காரணிகளை
முன்னிறுத்தி, முரண்படுபவைகளை ஒதுக்கிவிட்டு, போராடத் துணிய வேண்டிய நேரம் இது.
இந்தியத் துணைக்கண்டத்தில் இதுவரை நடந்திருக்கும் அனைத்துப்
போராட்டங்களுக்கும் பின்னணியில் ‘வகுப்புரிமை’ இருக்கிறது என்பதை நாம் உணர
வேண்டும். பின்தங்கிய வகுப்பினர்,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற சிறுபான்மையினருக்கான தனி
ஒதுக்கீட்டு போராட்டத்தில், தந்தை பெரியாரின் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான அயராத
உழைப்பினால் தமிழகம் வென்றெடுத்த உரிமைகளைப் பற்றி நாங்கள்
பெருமைப்படுகிறோம். மற்ற மாநிலங்களில் தனி
ஒதுக்கீட்டிற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் தமிழகம் அளவுக்கு வெற்றி பெற
முடியவில்லை; மாநில அரசுப் பணிகளைப் பொறுத்த மட்டில் இது பிழையற்ற உண்மை.
ரயில்வேயைப் பொறுத்தவரை, முன்னிருந்த தென்னிந்திய ரயில்வே நிறுவனம் ஒரு
தசாப்தத்திற்கு மேலாக தமிழக அரசின் தனி ஒதுக்கீட்டு முறையையே பின்பற்றி வந்தது.
இது காரணமாய் பின்தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற
சிறுபான்மையினர் இனங்களைச் சார்ந்த பலர் ரயில்வே துறையில் நல்ல நிலைகளில் வேலை வாய்ப்பு
பெற முடிந்தது. தலைமையகமான
திருச்சிராப்பள்ளியில் தென்னிந்திய ரயில்வே பிரத்யேகமான பணியாளர் தேர்வு வாரியத்தை
அமைத்து தனிஒதுக்கீடு முறைமையின் படி பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து வந்தது. ஆனால் இந்திய அரசியல் விடுதலைக்குப் பிறகு இந்த
முறை கைவிடப்பட்டது பெரிய வருத்தம் தரும் விடயமாகும்.
நடுவண் அரசு குடிமைப் பணிகள் நீண்ட நெடுங்காலமாக பிராமணர்களின் கோட்டையாகவே
இருந்து வந்துள்ளது. ரயில்வே, தபால்
தந்தித் துறை, வருமான வரித்துறை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கலால் துறை, ஆயுள்
காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாரத் மிகுமின் நிறுவனம் ஆகிய பொதுத் துறைகள்
பிராமணர்கள் மிகுந்திருக்கும் பணியிடங்களாகவே இன்றளவும் இருந்து வருகின்றன. இந்தத் துறைகளில் ஏனையோர் மிகுந்த முனைப்போடு
உள்நுழைய வேண்டிய தேவை உள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான தனியான
ஒதுக்கீடு இருப்பினும் கூட, அது வெறும் சட்டம் என்ற அளவிலேதான் உள்ளது. அவர்களுக்கான சரியான விகிதாச் சாரத்தில்
அவர்களின் பணியமர்த்தல் இந்த நிறுவனங்களில் இல்லை என்பதே உண்மை. பிற்படுத்தப்பட்டோரின் நிலையும் கூட இதுதான்.
இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோரின் குழுவின் தலைவர் காகா கலேல்கர் என்ற
பிராமணர். 29-1-1953 அன்று அமைக்கப்பட்ட
இந்தக் குழு 30-3-1955 அன்று தனது அறிக்கையை சர்ப்பித்தது. நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்தில் இருந்த
எதேச்சதிகாரவாதிகள் யாரும் அறியும் முன்னரே இந்த அறிக்கைக்கு சாவு மணி
அடித்துவிட்டனர். “பிற்படுத்தப்பட்டோர்
யார் என்பதற்கு மாநில அரசுகள் தங்களுக்கான வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம் என்ற
போதிலும், நடுவண் அரசைப் பொறுத்தவரை, தனி ஒதுக்கீடு என்பதற்கு சாதியை விட
பொருளாதார அளவுகோல்களை வைத்து கணக்கிடுவது பொருத்தமாக இருக்கும்” என்ற
நீதிபோதனையோடு அந்தக்குழுவின் பரிந்துரைகளுக்கு கல்லறை கட்டப்பட்டது.
இரண்டாவது பிற்படுத்தப்பட்டோருக்கான குழு ஜனதா அரசால் 1-1-1979 அன்று
B.P.மண்டல் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு, அது தனது அறிக்கையை 31-12-1980
அன்று அரசுக்கு சமர்ப்பித்தது. நடுவண்
அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்று, அதுவும் அந்தக் குழு நடுவண் அரசாலேயே
அமைக்கப்பட்ட நிலையில், வெளியிடப்படாததின் மர்மம்தான் என்ன? பதினாறு மாதங்களுக்கு
மேலாக இருட்டடிக்கப்பட்ட அந்த அறிக்கை இறுதியாக 30-4-1982 அன்று வெளியிடப்பட்ட
போது, பிரச்சினையின் அடிவேர் வரை ஆராய்ந்து, சமூகத்தை இதுநாள் வரை பீடித்திருந்த
நோயை அடியோடு வெட்டிச் சாய்க்க முற்பட்டதின் காரணமாகவே, அந்த அறிக்கை
வெளியுலகத்தின் வெளிச்சத்தைக் காண அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதின் காரணம்
புரிந்தது. வேறு எந்த குழுவும் செய்யத்
துணியாத ஆய்வுகளை மண்டல் குழு சமூகத்தின் மீது நடத்தியிருந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்து
விரவியிருக்கும் சமூக குழுக்களை நுண்ணியமாக ஆய்ந்து, வெவ்வேறு அளவுகோல்களைப்
பயன்படுத்தி, ஏன் சமூகத்தின் பெருவாரியான மக்கள் சமூக பொருளாதார
அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான காரணங்களை
முறையாகவும் பாராபட்சமற்ற முறையிலும் தெரிவித்திருந்த மகத்தான அறிக்கை அது. இந்தக் காரணம் பொருட்டுத்தான் பெரும் சக்தி
கொண்ட அந்த எதேச்சதிகார வாதிகள் இந்த அறிக்கையினை வெளியிடத் தயங்கினர் என்பது
வெளிப்படை. முதல் பிற்படுத்தப்பட்ட
குழுவின் அறிக்கைக்கு நேர்ந்த கதியை இரண்டாவது குழுவின் அறிக்கைக்கும்,
காலதாமதத்தால், ஏற்படுத்திவிட வேண்டும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். இரண்டாவது, தனி ஒதுக்கீடை தீர்மானிப்பது
சாதியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொருளாதார நிலை அல்ல என்பதை மண்டல் அறிக்கை யாரும்
எதிர்வாதம் செய்ய இயலாதபடிக்கான சான்றுகள் மற்றும் நியாயங்களோடு நிறுவியிருந்ததும்
காரணமாகும். நடுவண் அரசில் நிரம்பியிருந்த எதேச்சாதிகார வாதிகள் மண்டல்
அறிக்கையினை முறித்துப்போட எத்தனையோ தந்திரங்கள், வேதங்கள், சதிகள், இரட்டை
நிலைகள் தரித்து இக்குழுவின் பரிந்துரைகளை நடுவண் அரசு ஏற்கா வண்ணம் முயற்சித்தனர். ஆனால், தங்கள் முயற்சிகளால் பயன் எதுவும்
ஏற்படவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமும் வந்தது. மண்டல் குழு அறிக்கையினை பொதுப்பார்வைக்கு
கொண்டுவந்ததற்கான முயற்சிகள் பெரிதும் பாராட்டத்தக்கவை. எதிச்சதிகார வாதிகள் வழக்கமாக பயன்படுத்தும்
சொல்லாடல்களான “தேசத்துரோக”, “வகுப்புவாத”, “இந்திய ஒற்றுமையை குலைக்கும்
படிக்கான” போன்றவைகள் கடந்தகாலத்தைப் போல அன்றி, இந்த முறை அவர்களுக்கு வேண்டிய
விளைவைத் தரவில்லை. எந்த அறிக்கையாவது
அவர்களுக்கு லாபம் தராத வகையிலே அமையுமானால், வழக்கமாக இப்படித்தான் அவைகளின் கதை
முடித்துக் கட்டப்படும்.
இது தொடர்பாக, நமது அடுத்தகட்ட போராட்டம் மண்டல் குழு அறிக்கையினை
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்ததாக அமைந்தது. ஆனால், அது ஒன்றும் சுலபமான காரியமாக
இருக்கவில்லை. அரசின் மீது பொதுமக்களின்
நிர்ப்பந்தத்தை சாத்தியப்படுத்துவதின் வழியாகவே இப்பணியை நம்மால் நிறைவேற்ற
முடிந்தது. இந்தியப் பாராளுமன்றம்
11-8-1982 அன்று மண்டல் பரிந்துரைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. கட்சி வேறுபாடன்றி, பிற்படுத்தப்பட்ட –
தாழ்த்தப்பட்ட – பழங்குடியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மண்டல் குழுவின்
பரிந்துரைகளை விரைந்து செயற்படுத்த வேண்டும் என்று நடுவண் அரசை நிர்ப்பந்தித்தது
மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது.
ஆனால், நமது எதிரிகள் தொடர்ந்து நம்மை பலவீனப் படுத்துவதான முயற்சிகளில்
ஈடுபட்டு வந்தனர். நமக்கிடையே பிளவை
ஏற்படுத்தும் பணியை தங்களால் இயன்றவரை சிறப்பாகவே செய்தனர். மண்டல் குழு பரிந்துரைகள்
பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே நலம் பயப்பதாக உள்ளதென்றும், இக்குழுவால்
தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் எவ்வித பயனும் அடைய முடியாதென்றும் அவர்கள்
பேசியும் எழுதியும் வந்தனர். உண்மைகளைப்
பொதுப்புத்திக்குக் கொண்டு வரும் விதமாக, தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினருக்காக நடுவண்
அரசு நிர்ணயித்த 22.5 சதவிகித தனிஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப் படவேயில்லை
என்பதையும், அதை அமுல்படுத்தி தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினருக்கான சமூக நீதியை
வழங்க நடுவண் அரசு உடன் ஆவன செய்ய வேண்டும் என்பதையும் நாம் வலியிறுத்தினோம். நடுவண் அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் –
பழங்குடியினருக்கான பணியிடங்களில் நிரப்பப்படாமலேயே இருந்துவந்த பணியிடங்கள்
எவ்வளவு என்பதை மண்டல் குழு தனது அறிக்கையில் விரிவாக எடுத்துக்காட்டியிருப்பதை
எடுத்துச் சொல்ல வேண்டி வந்தது.
0 comments:
Post a Comment