மலாலாவின் பக்கத்து தேசம்

| Wednesday, November 2, 2016

(தோழியொருவர் அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் Women Studies துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள வேண்டி முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.  இந்தியாவைக் களனாக வைத்து தன்னுடைய ஆய்வைத் துவக்கலாம் என்றிருக்கிறார். ஆய்வுக் கரு ஒன்று பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டதில் இந்தக் கடிதத்தை எழுதினேன்.  முடித்ததும், ரொம்பவும் தனிப்பட்ட அளவில் இல்லை என்பதாலும், எதோ ஒரு வகையில் நம் எல்லோருக்குமே சம்பந்தப்பட்ட பொருள்தான் இது என்பதாலும் உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.  எதிர்வினை செய்யாமல் இருப்பதும் ஒரு எதிர்வினைதான், நிஜம்தானே? - முனைவர் மு. பிரபு)
 
திருமதி உமா அவர்களுக்கு,

நலம்.  அங்கும் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.  உங்கள் குழந்தைக்கு எனது அன்பைச் சொல்லவும்.

முனைவர் பட்ட ஆய்வு என்று வரும்பொழுது ஏதாவது ஒன்றை கடமைக்காகச் செய்ய வேண்டாம்.  ஆய்வறிக்கையானது செறிவூட்டப்பட்ட நிலையில் பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டால், அதற்கு social relevance நிறைய இருக்க வேண்டும்.  இல்லையென்றால், அந்த ஆய்வறிக்கையானது சர்வகலா சாலையின் நூலக அலமாரியை விட்டு வெளியே வரவே வராது.  அதிகபட்சமாக, அது உங்களுக்கு ஒரு பேராசிரியர் வேலையைப் பெற்றுத் தரலாம். Women Studies என்று வரும்பொழுது இந்தியாவை விட ஏற்றதாக வேறு களம் இருக்க முடியுமா என்று நிஜமாகவே தெரியவில்லை.

பெண் இங்கே கேவலமானது போல் வேறு எங்காவது சாத்தியமாகியிருக்கிறதா?  சாதி (தில்லைப் பெண் எல்லை தாண்டாது), பொருளாதாரம், படிப்பு (அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு), வீட்டை விட்டு வெளியே உலாவுதல் (ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது), சிரித்தல் (பொம்பளை சிரிச்சாப் போச்சு, புகையில விரிஞ்சாப் போச்சு), முடிவெடுத்தல், இன்னும் எத்தனையோ வழிகளில் பெண் எப்படி அடிமையாகி இருக்கிறாள் என்பதைப் பற்றி ஆராய முடியும். 

என் அளவில் சொல்ல முடியும், இந்த பொருளாதார முன்னெடுப்புகளுமே கூட பெண்ணை ரொம்பவும் மாற்றிவிடவில்லை. விவாகரத்திற்குப் பின் அவள் அன்னை தெரசாவாக மாற முயற்சித்த வண்ணம் இருக்கிறாள். கல்யாணத்தில் அவளது கணவன் ஏமாற்றினான் என்றால், விவாக முறிவிற்குப் பின் அவளது தந்தையோ சகோதரனோ நண்பனோ ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.  மொத்தத்தில் ஆணை நம்பியே வாழ்கிறாள்.  வாழ விரும்புகிறாள்.  ஆணால் சூழப்படவில்லை என்றால், தான் பெண் இல்லை என்று அவள் நம்புவது விந்தையிலும் விந்தை.

இந்தியாவின் Gender Politics பற்றியதான பிரச்சினைகள் சிக்கல்கள் உலகில் வேறு இடங்களில் இருப்பவைகளிலிருந்து மாறுபட்டவை.  மிகவும் சூட்சுமமானவையும் கூட.  வேறு இடங்களில் பெண் அடிமைப்படுத்தப் பட்டாள்.  அவ்வளவுதான்.  மிகவும் நேரடியான அரசியல் அது.  உடல் பலம், இரையைக் கொண்டு வருவது, பாதுகாப்பு அளிப்பது போன்ற செயல்கள் அவளிடம் வியாபாரம் பேசப்பட்டது.  "நான் உனக்கு இந்த மூன்றையும் தருகிறேன். எனக்கு உடல்ரீதியாக விசுவாசமாக இரு; என்னுடைய குழந்தைகளைப் பெற்றுத் தா" என்ற பேரத்தில் பெண் என்றோ பணிந்து விட்டாள்.  உலகம் முழுவதுமே, அபீசீனியா போன்ற விலக்கான பிரதேசங்களைத் தவிர, இந்த நிலைதான் என்றாலும் இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு உள்சரடுகளைக் கொண்டு இந்த விஷயம் வேறெங்கும் இல்லாதவாறு சிக்கலாகியிருக்கிறது. 

பெண்ணை அடிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட சூழ்ச்சிகளில் ஒன்று அவளைப் புனிதமாக்கியது. புகழ்ச்சிக்கு அவளை மயக்கியது. அது கூட தவறல்ல.  அவள் மயங்கியது பெரிய அரசியல்.  எனக்குத் தெரிந்தே சாதிகளின் புனிதத்தை ஆணை விட, பெண் பெரிதும் போற்றும் சில குடும்பங்கள் இருக்கின்றன.  இரையும் பாதுகாப்பும் அவளுக்குப் பெரிய தேவையாக இருந்து வருகிறது.  யார் இதை உறுதி செய்தாலும் அவர்கள் பக்கம் சாய்வது அவர்களின் போக்காக இருந்திருக்கிறது.  நாடு பிடிபட்டதும் அந்தப்புரத்தில் உள்ள ராணிகள் புதிய ராஜாவின் ராணிகளாக மாறுவதற்கு கடும் போட்டியிட்டிருக்கிறார்கள்.  சில வாரங்கள் முன்பு தவ்லீன் சிங் எழுதியுள்ள DURBAR படித்தேன்.  ராஜீவ் காந்தி பிரதமரானதும் அவருக்கு நெருக்கமான வட்டத்திற்குள் வருவதற்கு தில்லி மாநகரின் புகழ் பெற்ற குடும்பங்களிலிருந்தும் பெண்கள் போட்டிபோட்டார்கள் என்ற பதிவு இதை உறுதி செய்கிறது. 
 
இந்த சமயத்தில் "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற பெரியார் ஈ வெ ராமசாமி நாயக்கரின் சின்னஞ்சிறிய புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறது.  வாழ்வியல் சௌகர்யங்களுக்காக ஆணை நம்பியிருக்க வேண்டி வந்தால், பெண்ணுக்கு இந்த அவலங்கள் நேரும். நேர்ந்திருக்கிறது.  இந்திய அரசியலை எடுத்துக் கொண்டு இந்த விஷயத்தைப் பார்த்தோமானால், பெண்களுக்கான தனி ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, சரத் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகள் உலகமே அழிந்துவிட்டதைப் போன்று கூப்பாடு போட்டதை எளிதில் மறந்து விடுவதற்கில்லை. பெரிய அரசியல் திரைமறைவு வேலைகள், பிரயத்தனம் போன்றவைகளுக்குப் பிறகு சாத்தியமான பெண்களுக்கான தனி ஒதுக்கீடு நியாயமாக நடைமுறையில் இருக்கிறதா? வார்டு மெம்பர் முதல் முதலமைச்சர் / பிரதமர் வரை பெண்களாக இருந்தால் அவர்கள் தங்களின் கணவன், அப்பா அல்லது சகோதரன் ஆகியோரின் பினாமிகளாகத்தான் இருக்கிறார்கள். கனிமொழி, சுப்ரியா சுலே, பிரதிபா பாட்டில் போன்றோர் பிரபலமான உதாரணங்கள்.  ராப்ரி தேவியை மறந்துவிடவே கூடாது.  லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத்பவார், கருணாநிதி போன்றோர் தங்களது கட்சியை வீட்டுச் சொத்து போன்றுதான் நடத்தி வந்திருக்கிறார்கள்.  தங்கள் வீட்டுப் பெண்களுக்கு சொத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுப்பது போலத்தான் எம்எல்ஏ அல்லது எம்பி பதவிகளைக் கொடுக்கிறார்கள். இந்தப் பெண்களும் கைமாறாக தங்கள் வீட்டு ஆண்களை மகாத்மா என்பதாகக் கூவி செஞ்சோற்றுக் கடன் அடைக்கிறார்கள். 

பெண்களை நுகர்வுப் பொருளாக ஆக்கிய கருத்து மாற்றத்தில் மொழியின் பங்கு என்பதாக சில ஆய்வேடுகளைப் பார்த்திருக்கிறேன்.  (பெண்களை ஏன் fairer sex என்று அழைக்க வேண்டும்?)  அப்படியான ஒரு ஆய்வேட்டில் படித்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது.  "பெண்ணியம் என்பதே பெண்களை ஆண்களாக மாற்றுவதே ஆகும்." இந்த வரியில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை.  Gender Equality-ல் பெண் திருப்தியடைந்து விடுவாளா? எனக்கென்னவோ முடியாது என்றுதான் தோன்றுகிறது.  Gender Speciality-ல் ஒருவேளை இது சாத்தியமாகலாம்.  Gender Speciality என்பது பெண்ணைப் புனிதப் படுத்துவது அல்ல.  அவளுக்கே மட்டும் சாத்தியமாகக் கூடிய களங்களை, திறன்களை, செயல்களை கண்டுணர்ந்து ஆணை இயல்பாகக் கடந்து செல்வது பற்றிச் சொல்கிறேன்.  

பஞ்சாயத் ராஜ், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்றவை gender politics-ல் முக்கியமான நிகழ்வுகள்தான், இந்தியாவைப் பொறுத்த வரை.  பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் இந்தியாவில் நடந்தேறுவதற்கும் ஐரோப்பிய அமெரிக்க தேசங்களில் நடந்தேறுவதற்கும் பின்புலத்தில் - காரணங்களில் - சமூகச் சிந்தனையில் - கலாச்சாரக் கூறுகளில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று பார்த்திருக்கும் ஆய்வேடுகள் இருக்கின்றன.  எனக்குத் தெரிந்து மைசூர் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு ஆய்வாளர் கோயம்புத்தூருக்கு வந்து தங்கி கோவையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் மொழிப் பயன்பாடு பற்றி ஆய்வு செய்தார்.  பலமுறை அவருடன் விவாதித்திருக்கிறேன். அந்தத் தொழிலாளர்கள் மொழியை மிகவும் தேர்ச்சியுடன் பயன்படுத்துகிறார்கள் என்றும், குறைந்தது நான்கு மொழிகளில் சரளமாக உரையாடுகிறார்கள் என்றும் அவர் சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கும்.  அவர்களுக்கான jargon ஒன்று பெரிய சொல் வளத்தோடு இருக்கிறது. அதையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கவலைப்படுவார்.

காலையில் ரயில்வே நிலையத்தில் கொலையுண்ட ஸ்ருதி, அதையடுத்து பொதுவெளியில் நடத்தப்பட்ட விவாதங்கள், ஊடகப் பார்வைகள், பெண்ணின் உடலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகள், சாதிக்குழுக்களின் நிலைப்பாடுகள் போன்றவையும் ஆய்வுக்காக விஷயங்களே.  பெண் நல்லவள் என்று கூவித் திரிய வேண்டியதில்லை.  பாவப்பட்டவள் என்று கழிவிரக்கமும் கொள்ள வேண்டியதில்லை.  தனிப்பட்ட அளவில் பெண் நல்லவளாகவோ கெட்டவளாகவோ இருக்கலாம். அது ஆய்வுக்கான விஷயம் இல்லை.  ஆனால், ஒரு அதிர்வான சம்பவத்தில் பெண் ஒருத்தி சம்பந்தப்படும் போது, சனாதனங்கள் எப்படி அதைப் பார்க்கின்றன என்பது ஆய்வுக்குரிய விஷயமே. 
 
பெண்ணின் பக்தி முதற்கொண்டு இங்கே அவளுக்கெதிராய்ப் போகிறது.  காஞ்சிபுரத்தில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள பெண் கடவுளின் சிலை மீதே பக்தையொருத்தி மல்லாக்க வைத்து புணரப்பட்டதை அவள் எங்கும் புகார் செய்யவில்லை. அவளுக்கு அதில் ஆட்சேபம் இருந்ததாகக் கூட செய்தியில்லை. பூசாரியின் செல்போன் பழுதடைந்து கடையில் சரி செய்ய கொடுக்க அங்கே அது கசிவிற்கு உட்பட்டு வெளியே வந்து பிரபலமான காட்சித் துணுக்கானது.  இதில் யார் குற்றவாளி? என்னைக் கேட்டால், இதற்குப் பின்னால் இருக்கும் தமிழ் / தென்னிந்திய / இந்திய / சாதிய / ஆணாதிக்க மனோபாவம்தான் குற்றவாளி. 

சிக்கல் நிறைந்த சமூகம் இது.  பெண் என்பவள் சொத்து.  உடமை.  எளிதில் விட்டுத் தர மாட்டார்கள்.  ஆணவக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது இந்த 'தனியுடமை' மனோபாவம்தான்.  எல்லோருக்கும் இது தெரியும்.  தெரியாவிட்டால் அவர்களுடைய வீட்டுப் பெண்பிள்ளை "சாதி கெட்டு" ஓடும்போது தெரிய வரும்.  நாம் எல்லோரும், நான் - நீங்கள் உட்பட - இந்த மனோபாவத்தின் குழந்தைகள் தான்.  Gender Politics பற்றி ஆய்வை நடத்த இந்தியாவைப் போல களம் ஒன்று கிடைப்பது அரிது.  மலாலாவின் தேசம் போட்டியிடலாம்.  ஆனால் அங்கே பெண்ணுக்கு எதிரான அரசியல் சூட்சுமமும் சூழ்ச்சிகளும் நிறைந்தது அல்ல.  அதிக பட்சமாக, குரோதம் நிறைந்தது.  அவ்வளவே. 

உமா, நான் என்ன நினைக்கிறேன் என்றால், நீங்கள் திராவிடர் கழகம் பதிப்பித்துள்ள பெரியாரின் சிந்தனைகள் 24 தொகுப்புகளையும் படியுங்கள்.  கொஞ்சம் BR அம்பேத்கரின் புத்தகங்களையும் படியுங்கள்.  Gender Politics குறித்த பிரச்சினைகளின் ஆயிரமாயிரம் ஆய்வுக்கருக்கள் உங்களுக்கு அங்கே தட்டுப்படலாம்.  மற்றவர்களுக்கு - எனக்கு அப்படி என்றால் உங்களுக்கும் அப்படித்தானே?

"என்ன தலைப்பின் கீழ் நான் ஆய்வு செய்ய முடியும்? பரிந்துரையுங்கள்" என்று கேட்டதற்கு நன்றி.  இந்தக் கடிதம் நீங்கள் கேட்டது குறித்துத்தானா என்று எனக்கு தெளிவில்லை.  ஆனால், நீங்கள் கேட்டதை சாக்காக வைத்து கொஞ்சம் இது குறித்து யோசிக்க முடிந்ததில் சந்தோசம்தான். 

இன்னொரு முறை எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
பிரபு

0 comments:

Post a Comment