('உயிர்மை' இதழ்
மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர்.
கவிஞர். ஊடகவியலாளர். திமுக பிரமுகர் - இவையெல்லாம் மனுஷ்யபுத்திரன் என்கிற
அப்துல் ஹமீதுவின் அடையாளங்கள். சன்ஸ்கிருதி சம்மான் விருதை 2002-லும், தமிழ்
இலக்கியத் தோட்ட விருதை 2015-லும் பெற்றவர்.
தனித்த சொல்லாடல் மூலமாக தன்னை வெளிப்படுத்துபவர். மிகவும் துணிச்சலாக விமரிசனங்களுக்கு அஞ்சாமல்
கருத்துக்களை சொல்பவர்.
கவிஞரைப் பற்றிய கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா
நாளிதழில் இன்று (15-11-2016) வெளிவந்துள்ளது.
நாளிதழை மடித்து கால்களின் மீது வைத்துக் கொண்டு வரிகளைப் படிக்கின்ற
நிமிடங்களிலேயே மனதில் மொழிபெயர்ப்பு நடந்து, அம்மா சுட்ட இட்டிலிகள்
தீர்ந்துவிடும் என்ற அவசரத்தில் விரல்கள் விசைப்பலகையில் ஓடி உருவான கட்டுரை
இது. நிறைய படிக்கிறேன். அவைகளில் கொஞ்சம்தான் கூப்பிடுகின்றன. கூப்பிட்ட குரலுக்குப் போய் நின்று நன்றி
சொல்லி மொழி பெயர்க்கத் துவங்குகிறேன். அப்படியான ஒன்று இது. - முனைவர் மு.
பிரபு)
திருச்சிக்கு அருகிலுள்ள துவரங்குறிச்சி என்ற தன்னுடைய கிராமத்திலிருந்து
2000-த்தில் சென்னைக்கு புலம் பெயர்ந்த போது, பெருநகரைப் பற்றிய பயத்தோடுதான்
நுழைந்தார் அப்துல் ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரன். ஆனால் சென்னை அப்படியாக பயமுறுத்தவில்லை; மாறாக
ஹமீதை வரவேற்றது. படைப்பூக்கத்தின்
இன்னொரு வெளியைத் திறந்து விட்டது மட்டுமன்றி, கவிதைக்கான புதிய பாடுபொருளையும் பாடும்
முறைமையையும் தந்தது.
நகர வழக்குகள் புதுக்கவிதையில் தமக்கே உரிய ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ளும்
என்பதற்கு சாட்சியாக நிற்பவை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். நகரத்திற்கு புலம் பெயர்ந்ததோடு
இவரது கவிதைகள் தம்மை முற்றிலும் புத்தாக்கம் செய்து கொண்டன. பின்பற்றி வந்த மரபான கவிதைப் பாரம்பரியங்களைக்
கைவிட்டு புதிய வடிவத்தோடு வாழும் உலகத்தின் சிக்கல்களை எளிமையான மொழியில் நமக்கு
சொல்பவை ஹமீதின் கவிதைகள்.
"புதுக்கவிதை என்பது மேட்டுக்குடி சமாச்சாரமாக கருதப்பட்டு வந்ததை
உடைத்தெறிய பிறந்தவை எனது கவிதைகள்.
கவிதைக்கு நாகரிகப் பூச்சு எதுவும் தேவையில்லை. புதுக்கவிதையின் பூடகமும் மர்மங்களும் தவிர்க்கப்பட
வேண்டியவை. கவிதை அந்தரங்க சுத்தியிலேயே
இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. அது பண்பாட்டின் குரலாக, சமூகச் செயற்பாடாக இருக்க
வேண்டிய அவசியத்தைப் புறக்கணிக்கலாகாது" என்கிறார் மனுஷ்யபுத்திரன்.
அப்துல் ஹமீதாக பிறந்து மனுஷ்யபுத்திரனாக பரிணமித்திருக்கும் 49 வயது
திருச்சிக்காரர் புதுக்கவிதையின் எல்லைகளை கணிசமாக விரிவாக்கியுள்ளார். இவரிடம் நகரத்து மனிதனின் மன அவசங்கள் அவனுடைய
சொல்லாடல் மூலமாகவே இலக்கிய அந்தஸ்து பெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால்,
பெருவாரியான தமிழ்க் கவிஞர்கள் போல, மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் கிராமத்தைப்
புனைவுக் கண்களோடு பார்ப்பதில்லை.
கிராமங்களில் நூற்றாண்டுகளின் அழுக்கு மண்டிக் கிடக்கிறது. சாதீயம், அடக்குமுறை போன்றவை இன்னும்
கிராமங்களில் எளிதாகக் காணக் கிடக்கிறது. "நகரம் உங்களுக்கு சுதந்திரத்தை
சாத்தியமாக்குகிறது. தங்களுடைய சாதிச் சிலுவையை சுமந்து கொண்டு நகரும் அவலம்
நகரத்து மனிதர்களுக்கு இல்லை. நகர
வாழ்க்கை நூற்றாண்டுத் தளைகளிலிருந்து விடுபட்டது." இதற்கும் மேலே ஒரு படி
போய் கவிஞர் சொல்லுகிறார்: "நமது கிராமங்கள் பண்பாட்டு ரீதியாக
பார்த்தோமானால், அழித்தொழிக்கப்பட வேண்டியவை." விவசாயமும் கிராமப் பொருளாதாரமும் தொடர
வேண்டியவை என்றாலுங்கூட, சாதீயமும் மதச்சார்பும் பெண்களுக்கு மற்றும்
தலித்துகளுக்கு எதிராகவும் கிராமங்களில் வீரியத்தோடு இயங்குகின்றன. நமது கற்பனையில் மிதக்கும் கிராமங்கள் பூமியில்
காணக் கிடைப்பதில்லை."
சமீபத்திய தனது கவிதைகளை தொகுப்பாக கொண்டு வர விரும்பி அதற்கான ஏற்பாடுகளை
மனுஷ்யபுத்திரன் செய்திருந்தாலும், சென்னைப் பெருவெள்ளம் (திசம்பர் 2015) காரணமாக
முடியாமல் போயிற்று. அதே மாதத்தில் தான்
அடைந்த மன அவசங்களை 52 கவிதைகளாக எழுத அது தனி தொகுப்பு ஒன்றுக்கு உள்ளீடாகப்
போனது. சென்னைப் பெருவெள்ள விளைவுகளான
அந்தக் கவிதைகள் "ஊழியின் தினங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. "யாருமில்லா அநாதைகளும் தெரு நாய்களும்
அந்த வலிமிகுந்த தினங்களில் என்ன செய்தார்கள்? சோறும் போர்த்திக்கொள்ள துணியும் - இதற்கான
பரபரப்பும் மட்டும்தான் அவர்களின் அடையாளமாக இருந்தன. இவை மட்டும்தான் அவர்களா என்ற கேள்வி உந்தித்
தள்ள பிறந்தவை இந்த 52 கவிதைகளும். ஆங்கில
இலக்கியத்தில் போர்க்கால கவிதைகள் (war poetry) என்ற வகைமை உண்டு. அவை போன்றவைதான் இந்தக் கவிதைகளும்"
என்கிறார் மனுஷ்யபுத்திரன். மிக நெருக்கடியான சூழலில், மனிதர்கள் மீது திடீரென்று
திணிக்கப்பட்ட வாழ்வாதார வன்முறைகள் மனிதனை உயிர் வாழ்வது மட்டுமே லட்சியம் என்கிற
ஆதி உலகத்தின் துடிப்பை மீட்டுக் கொண்டு வருகின்றன. சுற்றி எங்கேயும் பெருகும் குழப்பங்கள் மனிதனை
துரத்திக் கொண்டே இருந்த அந்தப் பெருவெள்ளத் தினங்கள் நகரத்தின் மீது கவிழ்ந்துவிட்ட
போர்ச்சூழலை நினைவுபடுத்தின என்கிறார் மனுஷ்யபுத்திரன்.
மனுஷ்யபுத்திரனின் கவிதை மொழியை மிகவும் தீர்மானமாக வரையறுத்தது இவரது 2009-ம்
ஆண்டின் "அதீதத்தின் ருசி" என்ற தொகுப்புத்தான். அதற்கு முந்தைய இவரது
கவிதைகள் சுயத்தின் வெளிப்பாடாகவும் அந்தரங்க தொனியோடும் பிறந்தவை. பிற்பாடு இவரது படைப்புகள் சமூகத்தின்
நிதர்சனங்களை கூர்ந்து கவனிப்பவையாகவும் அவற்றை தனித்த பார்வையில் எடைபோடும்
சாட்டைக் கண்களாகவும் மடைமாற்றம் பெற்றன. ஆனால்,
இவரது கவிதைகள் ஒரே சிக்கலில் மாட்டிக்கொண்டவை என்றதான திறனாய்வும்
இருக்கிறது. இதை மறுக்கிறார்
மனுஷ்யபுத்திரன். "சச்சிதானந்தன், விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெருடா
கவிதைகளைப் பார்த்தவுடன் யாருடைய கவிதைகள் என்று சொல்லிவிடலாம். அவர்களுடைய குரல் - மொழி அவ்வளவு அழுத்தமாக
வாசகனின் மனதில் பதிந்திருக்கிறது. அதைப்போலவேதான் எனது கவிதைகளும். இது எனது
வடிவம் - எனது மொழி - எனது கவிதை."
மனுஷ்யபுத்திரன் என்ற மனிதரைப் பற்றிய விமரிசனம் வேறு தளத்தில் இருக்கிறது.
தொலைக்காட்சிகளில் தினமும் தோன்றி கருத்துக்களைச் சொல்வதும் கட்சிரீதியான
அரசியலில் இவர் ஈடுபட்டிருப்பதும் பெருத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அரசியல் இவருக்குப் புதிதல்ல. பதின்மப் பருவம்
முழுவதும் பெரியாரையும், மார்க்சையும் படிப்பதில் செலவழித்துள்ளார். "பெரியாரின் சிந்தனைகள் என்னிடம்
தேங்கியிருந்த அச்ச உணர்வை முழுதாகத் தகர்த்தெறிந்து விட்டன."
பெரியாரின் சிந்தனைகள் வழியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
வந்திருப்பதாகக் கூறுகிறார் மனுஷ்யபுத்திரன்.
ஆகஸ்டு 2015-ல் திமுக-வில் இவர் இணைந்தபொழுது, காட்டமான கண்டனங்கள்
எழுந்தன. படைப்பு வெளி - அரசியல் தளம் இரண்டுக்குமான முரணை எப்படி மனுஷ்யபுத்திரன்
சமாளிக்கிறார்? "கவிஞன் - ஊடகவியலாளன் - அரசியல்வாதி என்பவற்றை தனித்தனியாக
நான் பார்க்கிறேன். இந்த மூன்றுக்குமே
உரிய பிரத்தியேக வெளிகளை உணர்ந்தே இருக்கிறேன்.
தொலைக்காட்சியில் என்னைப் பார்க்கும் பலருக்கு நான் ஒரு கவிஞன் என்று
தெரியாது. என்னுள் உயிர்ப்புடன் உலவும்
கவிஞனை ஸ்டுடியோ வெளிச்சமும் அரசியல் மேடையும் சேதப்படுத்திவிட முடியாது."
இத்தனைக்கும் நடுவில் இவரது படைப்புலகம் ஊக்கமுடன்
விரிந்து கொண்டே போகிறது. கடந்த மூன்று
மாதங்களில் மட்டும் நானூறுக்கும் அதிகமான கவிதைகளைப் படைத்திருக்கிறார்
கவிஞர். இவரது "இருளில் நகரும்
யானை" திசம்பர் 25, 2016 அன்று வெளியிடப்பட இருக்கிறது.
0 comments:
Post a Comment