அமெரிக்காவில் மோடி

| Thursday, November 10, 2016
 
Trump comes up trumps
(அமெரிக்காவில் குடியேறியிருக்கும் தோழி ஒருவர் How do you view Trump's victory? என்று கேட்டிருந்தார். என்னிடம் இருக்கும் ஒன்றிரண்டு 500 /1000 ரூபாய்த் தாள்களை எப்படி மாற்றுவது என்ற கவலையில் இந்தக் கேள்வி பெரிதாகத் தோன்றவில்லை. இன்று அதிகாலை செய்தித் தாள்களில் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று படித்ததும் இதை எழுத ஆரம்பித்தேன்.  - முனைவர் மு. பிரபு)

அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகத்தான் ட்ரம்ப் ஜெயித்துள்ளார். எல்லா சமூகங்களும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கின்றன என்று எனது நண்பர் சொல்கிறார்.  பெண்ணை தலைவியாக மனித சமூகங்கள் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அல்லது இந்தியர்கள் போன்று மன்னன் - மக்கள் மனோநிலை அமெரிக்கர்களுக்கு இல்லாததும் ஒரு காரணம்.  இந்தியாவில் பெண்களைத் தலைவிகளாக ஏற்றுக் கொள்ளும் காரணம் அவர்களைத் தங்களுடைய தலைவரின் மனைவியாகவோ மகளாகவோ, குறைந்தபட்சம் காதலியாகவோ பார்ப்பதால்தான்.  இந்திரா காந்தி, ராப்ரி தேவி, சுப்ரியா சுலே, ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார்கள்.  மாயாவதி கூட கன்ஷிராம் அவர்களால் தன்னுடைய அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர்தான்.  இதில் ஒரே விலக்காக மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மட்டும் இருக்கிறார். 

இது தவிர உலகெங்கும் தங்கள் சாதி, தங்கள் மதம், தங்கள் இனம் என்ற போக்கைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் RSS தலைமையின் கீழ் செயலாற்றிவரும் அத்துனை கட்சிரீதியற்ற, கட்சி ரீதியான அமைப்புக்களும் சாதி அல்லது மத ரீதியாக இயங்குபவைதான்.  இவர்களின் எழுச்சி இதைத்தான் காட்டுகிறது.  குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் இதைத்தான் செய்திருக்கிறார்.  முஸ்லிம்களை உள்ளே விடமாட்டேன் என்று அவர் திரும்பத் திரும்ப கூறிவந்தது அதிகம் படிக்காத அமெரிக்கர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.  இளவயது ஆண்களுக்கும் இதில் கவர்ச்சி உண்டு.  வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா outsourcing பணிகளைத் தராது என்ற ட்ரம்ப்-பின் கோஷம் இளைஞர்களிடம் எடுபட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்திய ஊடகங்கள் திருமதி கிளிண்டன் ஏன் தோற்றார் என்பது பற்றி நிறைய எழுதியும் பேசியும் வருகின்றன.  புலனாய்வுத் துறை மின்னஞ்சல்கள் இவரால் கசிய விடப்பட்டன என்பது இவருக்கு எதிராகப் போயிருக்கலாம் என்றும் செய்திகள் ஆங்கில அச்சு ஊடகங்கள் எழுதுகின்றன. 

பெண்ணை தங்களது அதிபராக ஏற்றுக் கொள்வதில் அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக அமெரிக்க ஆண்களுக்கு, தயக்கம் இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  எனக்கென்னவோ, திருமதி கிளிண்டன் ஒரு refined, suave and sophisticated அமெரிக்காவிடம் ஓட்டுக்கேட்டதாகவும், ட்ரம்ப் குடியான, கிராம, அடிப்படைவாத, வேலைகிடைக்காத இளைஞர்கள் நிறைந்துள்ள அமெரிக்காவிடம் ஓட்டுக்கேட்டதாகவும் தோன்றுகிறது. இப்படித்தான் நடந்தது என்றால் ட்ரம்ப்-தான் ஜெயித்திருக்க முடியும். 
 
ஆனால், மோடியின் தலைமையிலான அரசு தன்னுடைய சித்தாந்தங்களையே கொண்டிருக்கும் ஒரு அரசியல்வாதி அமெரிக்காவிற்கு அதிபரானது குறித்து திருப்தி அடைகிறது என்று இந்திய ஊடகத்தின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.  பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ட்ரம்ப் மாறலாம் என்றும் நம்புவதற்கு இடமிருக்கிறது.  ரஷ்யாவை ஆதரிக்கிறார் ட்ரம்ப். ரஷ்யா இந்தியாவுடன் மிகவும் நட்பு பாராட்டி வரும் நாடு. அமெரிக்கா - ரஷ்யா - இந்தியா என்ற ஒரு அச்சு உருவாகலாம் என்ற நம்பிக்கையும் இங்கு இருக்கிறது.   
  
மற்றபடி ட்ரம்ப் ஒரு பெண் பித்தர் என்பது எடுபடவில்லை.  எழுபது வயதான ட்ரம்ப் அவர்களின் தற்போதைய மனைவிக்கு 48 வயதுதான் ஆகிறது.  பத்து வயதில் அவர்களுக்கு ஒரு பையன் இருக்கிறான்.  இது சரியா என்ற கேள்விகளெல்லாம் விழுந்துவிட்டன.  வெள்ளை அமெரிக்கர்களைத் தவிர பிற வாக்காளர்கள் (கருப்பு அமெரிக்கர்கள், ஹிஸ்பானியர்கள், அமெரிக்க முஸ்லிம்கள்) பெருவாரியாக வந்து வாக்களித்தார்களா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது.

மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அடுத்த வருடமோ அல்லது அதற்கடுத்த குடியரசுத் தினத்திலோ தலைமை விருந்தினராக ட்ரம்ப் தில்லிக்கு வந்து இந்திய முப்படைகளின் மரியாதையை ஏற்று பிஜேபி-யின் இந்தியாவை கெளரவிப்பார் என்றுதான் தோன்றுகிறது.

0 comments:

Post a Comment