சென்னை சில்க்ஸ்

| Tuesday, November 8, 2016

பெரியாரை ஒரு கலகக்காரர் என்று சொல்வது தற்போதைய மோஸ்தர்.  கலகக்காரர், தென்னகத்து சே குவாரா என்ற 'பட்டங்கள்' எதுவும் அவருக்குப் பொருந்தாதவையே.  இந்திய அரசியல் தன்மைகளை அவரை விடவும் வேறு யாரும் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்திருப்பார்களா என்பது ஐயமே.  இந்திய அரசியல் மேட்டுக்குடி அரசியல். சாதி நிலைப் படிக்கட்டுகளில் கடைசி வரியில் இருப்பவனை அரவணைப்பது போல பாசாங்கு செய்து அங்கேயே வைத்திருக்கும் அரசியல்.  வெகுஜன கல்விக்கு எதிரான அரசியல்.  சடங்குகளைத் தீவிரமாக பின்பற்றுவதின் மூலமாக மதத்தின் செல்வாக்கை அதிகப்படுத்துவதான சனாதனிகளின் அரசியல். 
 
இந்தியக் கலாச்சாரத்தின் ஆதி முதல் இன்று வரை எந்த அதிகாரப் பகிர்விலும் இடம் தரப்படாத மக்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டுமானால் வெறும் கலகம் மட்டும் போதாது, அரசிடம் செய்து கொள்ளும் பேரங்களும் முக்கியமானவை என்று தெளிவாக உணர்ந்தவர் பெரியார்.  அவரின் அரசியலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.  ஆனால் பேரங்கள் உண்டு.  மாசற்ற பேரங்கள் அவை.  பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற வேண்டி, அரசுப் பணிகளில் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப தனி ஒதுக்கீடு கேட்டுப் பெற்ற பேரங்கள் அவை.  எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாத தனது போராட்டத்தின் விளைவாக அவர் பெற்றுத் தந்திருக்கும் சௌகர்யங்களை முற்று முழுதாய் அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் / அதிகாரிகள் தங்களது வரலாறு என்ன என்பதே தெரியாமல், சனாதன மேல் சாதியினர் போலவே பாவனைகள் செய்துகொண்டு பரம்பரையாகவே தாங்கள் அரண்மனைகளில் பிறந்து வளர்ந்தவர்கள் போன்ற பாசாங்குகளுடன் திரிகின்ற இந்த நாட்களில் 'பெரியார் மீண்டும் அவதரித்தாக' வேண்டிய கட்டாயம் அன்று இருந்ததை விட இன்று அதிகம் உணரப்படுகிறது.

அண்மையில் துர்கா பூஜையின் போது எனது அலுவலக சகாக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அதற்கு முன்பாக அவர்கள் அனைவரையும் ஒரே பார்வை வீச்சில் உள்வாங்க ஆசையாக இருந்தபடியால் சற்றே உயரமான நாற்காலியில் ஏறி நின்றேன்.  அனைவருமே, நான் உட்பட, தனி ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால் அரசு வேலை கிடைத்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமர்ந்திருக்கும் நாற்காலிகளை கடந்த இருநூறு வருஷங்களாக ஒரே ஒரு சாதியினர் மட்டுமே ஆக்கிரமித்திருந்தனர்.  தங்களது வரலாற்றைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி துர்கா பூஜை ஏற்பாடுகளில் ஒருவகையான வன்மத் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தனர், "அவர்களே பரவாயில்லை" எனும் படிக்காக. அரசு அதிகாரம் கையகமானதும், சற்றே பொருளாதார வசதி வந்ததும், சமூக நிலைப்பாடுகளில் கீழே இருந்தவன் தன்னை மேலடுக்கில் இருப்பவனோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான் என்பது மட்டுமல்லாமல், தனக்கும் கீழே படிக்கட்டுகள் இருப்பதையும் அங்கே ஆட்கள் நிறைந்திருப்பதையும் உறுதி செய்து கொள்கிறான். தன்னுடைய வரலாறு அவனுக்கு அச்சம் தருவதாகவும், நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாததாகவும் இருக்கிறது.  தன் சமூக வரலாற்றை அடியோடு புறக்கணிக்கிறான். அதை - தன்னுடைய சமூக வரலாற்றை - யாரும் நினைவுபடுத்தி விடக்கூடாது என்பதில் அதிகவனமாக இருக்கிறான்.  தன்னுடைய மகனும் மகளும் தனி ஒதுக்கீட்டு சலுகையால் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இந்தப் புதிய 'மனுதர்மர்கள்' தங்களது புதிய அந்தஸ்துகளுக்கு, மோஸ்தர்களுக்கு காரணமாக இருந்த பெரியவர்களை தற்செயலாகக் கூட நினைப்பதில்லை.  அடிக்கடி ராமேசுவரம், திருப்பதி, திருச்செந்தூர், இன்ன பிற ஸ்தலங்களுக்குச் சென்று தமக்கு ஏற்பட்டிருக்கும் சௌகர்யங்களுக்கு நன்றி கூறியும், புதிய தேவைகளுக்கான விண்ணப்பித்தையும் பாதாதிவிந்தங்களில் சமர்ப்பித்து விட்டு காரில் ஊர் திரும்பும் இந்தப் புதிய மனுதர்மர்கள் ராமசாமி நாயக்கர் அவர்களை நினைக்க மட்டும் ஆகாது.  நினைத்துவிட்டால் தொண்டைக்குக் கீழே சோறு இறங்காது.  தண்ணீர் குடிக்க மனசாட்சி இடம் தராது. விக்கித்துச் சாக வேண்டியதுதான்.

இவர்களின் upward mobility மோஸ்தர்தான்; சந்தேகமில்லை. இந்தப் புதிய பவுசுகள் தவிர்க்கப்பட முடியாதவைகளாகக் கூட இருக்கலாம். இந்தச் சமூகத்தின் வரலாற்றைப் படிக்காதவன் எவனும் செய்யும் பிழைதான் அது; புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால், இவர்களின் இந்த சாரமற்ற upward mobility மூலம் சனாதனிகளின் / மனுநீதிப்படி மேல்தட்டில் இருப்பவர்களின் செல்வாக்கும் ஆதரவும் கூடிக்கொண்டே போகிறது.  தமிழகத்தில் RSS மற்றும் இந்துத்வா குரல்கள் சமீப காலங்களில் வலுத்துக்கொண்டு வருவதை மறுக்க முடியுமா? இப்படியானது நமது புதிய மனுதர்மர்களின் குழந்தைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ இடையூறாக முடியும்.  Equlaity - Equity இடையே வித்தியாசம் தெரியாத சில மேட்டுக்குடி குரல்கள் வலுவடைந்து கொண்டு வரும் இந்த வேளையில், நமது புதிய மனுதர்மர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நமது குழந்தைகளுக்கு பெரிய தடை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். 

இதில் பெண்கள் விஷயம் கவலையளிக்கக் கூடியது. முதன்முறையாக அரசுப் பணிக்கு வந்துள்ள ஆயிரமாயிரம் பெண்கள் சமூக அரசியல் பரிணாமம் பற்றிய தெளிவு ஏதுமின்றி உள்ளனர் என்று எளிதாகச் சொல்ல முடியும்.  விலக்குகள் இருக்கலாம். இருப்பின், அரிதானவையே.  புதிய கோவில்கள் - புதிய தெய்வங்கள் - புதிய தேவைகளுக்கு ஏற்ப போகவேண்டிய ஸ்தலங்கள் - செய்தாக வேண்டிய சடங்குகள் - இவைகளைப் பற்றிய போதனைகளை வழங்கும் பிரத்தியேகமான பத்திரிகைகள் - ஆகியன பற்றி நம்ப முடியாத அளவு தகவல் களஞ்சியமாக விளங்கும் இந்த  முதல் தலைமுறை அரசுப் பணி பெண்கள் தாங்கள் எங்கிருந்து வந்தோம், இங்கு வந்து சேர்ந்தது எப்படி, எந்த அரசியல் தத்துவத்தின் வெற்றியால் தங்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்கு கிடைத்திருக்கிறது, அப்படியான தத்துவத்தை உருவாக்கித் தந்தோர் யார், பூலே - அயோத்திதாசர் - ராமசாமி நாயக்கர் - அம்பேத்கர் - மண்டல் போன்றோருக்கும் தங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது பற்றி எதுவுமே தெரியாமல் உலா வருவது காலக்கொடுமையன்றி வேறென்ன?

பல்லாயிரக்கணக்கான ஒளிவிளக்குகளோடு மின்னும் சென்னை சில்க்ஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லரி அருகில் சிதிலமடைந்த சிறு கட்டிடத்தில் பெரியார் படிப்பகம் இருக்கக் கூடும்.  இந்தக் கடைகளிலிருந்து பெரும் பைகளோடும், வாய் கொள்ளா சிரிப்போடும் வெளிவரும் அரசுப் பெண் பணியாளர்கள், அந்தப் படிப்பகத்தை கடைக்கண்ணிலாவது பார்த்து தங்கள் பாவத்தைத் தீர்க்கலாம்.

0 comments:

Post a Comment