உற்சவர்களின் வரலாறு

| Tuesday, November 15, 2016
ஆனந்தவிகடன் வெள்ளிக் கிழமைகளில் வரும்.  பேப்பர்கார ஐயர் சைக்கிளில் ரொம்பவும் ஸ்டைலாக வருவார்.  சின்னப் பையன்களான எங்களிடம் பத்திரிகைகளை தர மாட்டார்.  அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பாடு போட்டு தலை தெரிந்ததும் விட்டினுள் கடாசி விட்டு பெடலை வேகமாக உந்தி நகருவார்.  சாயரட்சை பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் படிக்கலாம் என்று சொல்லி கதவு கொண்ட அலமாரியில் வைத்துப் பூட்டி அப்பா நகர்ந்ததும், ஐயரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்த நாட்கள் ஞாபகத்தில் நேற்று நடந்தது போல இருக்கின்றன.  ஸ்டெல்லா புரூஸ் 'அது ஒரு நிலாக்காலம்' தொடர்கதை எழுதி வந்த வாரங்களில் விகடனை யார் முதலில் படித்தார்கள் என்ற போட்டி சிநேகக்காரர்களுடன் உறைப்பாக நடக்கும்.  குமுதம் விஷயமும் அப்படித்தான்.  சுஜாதா தொடர்கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும். காந்தி ஸ்டேடியத்திற்கு பின்னால் இருக்கும் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்த சுஜாதாவைப் பார்த்த சந்தோசத்தில் பல்டி அடித்துக் கொண்டே வீட்டிற்கு போனது ஜோராக நினைப்பிருக்கிறது.  குங்குமம், இதயம் பேசுகிறது, தாய், கல்கி போன்ற வாராந்தரிகள் பெரும் கிளர்ச்சியூட்டும் விஷயங்களாகத்தான் எங்களுக்கு இருந்தன.  குமுதம், பொம்மை போன்ற பத்திரிகைகளில் வந்திருக்கும் நடிகைகளின் படங்களை மாற்றி மாற்றி தன் கடையில் ஒட்டி வைப்பார் தெருவில் கடை வைத்திருந்த பார்பர் அண்ணாச்சி.  அலைகள் ஓய்வதில்லை படத்தின் நாயகி ராதாவின் புது ஸ்டிக்கரைப் பார்ப்பதற்கே ஒரு அண்ணன் தினம் அந்தக் கடைக்கு வருவார்.  அவருக்கு 'ராதா அண்ணன்' என்றே பெயர் வைக்கப்பட்டது.  விஜயகாந்துக்கு புரட்சிக்கலைஞர் பட்டம் மாதிரி அவருக்கு 'ராதா அண்ணன்' என்பது அவ்வளவு பொருத்தமாக வாய்த்தது. ராதா செத்துப் போனால் நானும் செத்துப் போவேன் என்று அரை போதையில் முன் இரவு ஒன்றில் அண்ணன் அழுது பார்த்தபோது, அண்ணன் காலத்திற்கு முன்னால் ராதாவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பயமாக இருந்தது.  ராதா இன்னும் இருக்கிறார்.  அண்ணன்தான் இல்லை.
 
இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டி வந்தது என்றால், அந்த வருடங்களுக்குப் பிறகு எந்தப் பத்திரிகையும் அந்த அளவுக்கு எதிர்பார்க்க வைக்கவில்லை. நான் வெகுஜனப் பத்திரிகைகளைச் சொல்கிறேன். சிற்றிதழ்களைப் படிக்கிறவர்களின் கதை தனி.  வெகுஜன ஊடக நிறுவனங்களிலிருந்து இலக்கியத்திற்காகவே தனி இதழ்கள் கொண்டு வரப்படும் போது, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் விநியோக பலத்தால் அதிக வாசகர்களுக்கு சென்றடைவதை குமுதம் குழுமத்தின் தீராநதி ஏற்கனவே நிரூபித்திருக்கிறது.  இந்த வரிசையில்தான் விகடன் குழுமம் 'தடம்' இதழைக் கொண்டு வந்துள்ளது.

நான் எப்பொழுதுமே நண்பர்களிடமும் மாணவர்களிடமும் சொல்லி வந்திருக்கிறேன்.  படிப்பதுதான் முக்கியம்.  அது ஏற்படுத்தும் உணர்வுகளும் அனுபவங்களுமே கூட இரண்டாம் பட்சம்தான்.  சேலத்தில் ஒரு புத்தகக் கடையில் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் இளைஞனுக்கும் எனக்கும் அடிக்கடி நடக்கும் உரையாடல்களில் என்னை ஒரு பொய்யன் என்றே அந்த இளைஞன் சொல்லுகிறார்.  'எப்படி உங்களால் எதிரெதிர் தரப்புகளை தொடந்து வாசிக்க முடிகிறது? யாரை வாசிக்கிறீர்களோ அவரின் கருத்துகள் உங்களைப் பாதிப்பதில்லை என்று சொல்வது பொய்தான்' என்றபடிக்கு சாட்டும் அவரின் புகார்களில் உண்மை இருக்கிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.  என்னைப் பொறுத்த அளவில், வாசிப்புதான் முக்கியம்.  கருத்து இரண்டாம் மூன்றாம் பட்சம்தான்.  வாசிப்பது ஒரு தொழில்.  பரோட்டா சுடுவது, செருப்பு தைப்பது, வங்கி மேலாளராக இருப்பது மாதிரிதான் வாசிப்பதும்.  அதைத் தொடர்ந்து திருப்தியுடனும் சந்தோசத்துடனும் இடைவிடாமலும் செய்து வருகிறேனா என்பதுதான் முக்கியம்.  முத்து காமிக்ஸ் புத்தகமானாலும், கரமாசொவ் சகோதரர்கள் நாவலானாலும், நான் வாசித்தபடியே இருக்கிறேன். உயர்வு தாழ்ச்சி இல்லை.  சில எழுத்துக்களை - ஆளுமைகளைப் படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது.  நண்பர்களிடம் எழுத்திலோ பேச்சிலோ பகிர்ந்து கொள்கிறேன்.  Richard Dawkins, Christopher Hitchens, Bertrand Russell, ராமசாமி நாயக்கர் போன்ற கடவுள் மறுப்பாளர்களைப் படிக்கும் போது என்னுள் ஏற்படுகிற பிரமிப்பு சில ஆத்திகர்களைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது.  உரைநடையில் கண்ணதாசனும் பெரியாரும் என்னை ஆச்சர்யப் படுத்தியவாறே இருக்கிறார்கள்.  அவர்கள் இருவருக்குமே தாங்கள் சொல்வதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.  அவர்களது உரைநடை அதைப் பிரதிபலிக்கிறது. எழுத்து சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பாரின் படைப்பும் என்னைக் கவர்கிறது.  இலக்கியம் இலக்கியத்திற்காகவே (Art for Art's sake) என்பாரின் படைப்பும் என்னை இழுக்கிறது. இதில் முக்கியமானது வாசிப்புதான்.  வாசிப்பது மனிதத் தொழில்களிலேயே சிரமமானது என்பதையும் நான் அறிவேன்.  வாசித்தல் பள்ளிக்கூட பையன் முதல் பல்கலைக் கழக பேராசிரியர் வரை விரும்பாத காரியமாகவே கருதப்படுகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி விடலாம் என்றே எல்லோருக்கும் நினைப்பு.  "கடந்த வருடத்தில் நீங்கள் வாசித்த ஐந்து ஆங்கிலப் புத்தகங்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் எழுதுங்கள்" என்ற வேண்டுகோளுடன் ஆங்கில ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியில் வெள்ளைத் தாள்களை விநியோகித்த பொழுது, அந்த விலாசமான சபையில் இருந்த நூற்று இருபதிற்கும் அதிகமான ஆசிரியர்களும் தாள்களை எந்த மைக்கறையும் இல்லாமலேயே திருப்பித் தந்தனர்.  மீண்டும் அவற்றை விநியோகித்து 'கடந்த வருடத்தில் எந்த மொழியிலும் நீங்கள் படித்த ஐந்து புத்தகங்கள் - ஆசிரியர் பெயர்களை எழுதித் தாருங்கள்' என்ற போதும் ஒன்றிரண்டு தாள்களில் மட்டும் சில பெயர்கள் தப்பும் தவறுமாக எழுதப்பட்டு வந்தன.  வாசிப்பது கேனத்தனம் என்றே ஆசிரியர் நினைக்கிறார்.  விலக்கானவர்கள் ரொம்பவும் கொஞ்சமே.  இலக்கியத்தை கொஞ்சமாவது வாசிக்கிறார்கள் என்று நினைக்க வைத்த ஓரிரு ஆசிரியர்களும் மொழி ஆசிரியர்கள் அல்ல.  எனக்குத் தெரிந்து, இயற்பியல் பாட ஆசிரியர் ஒருவர் தீவிரமான வாசிப்பாளர்.  நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்ப பண்டிதம். எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் அவரை தமிழ்ப் பாடம் எடுக்கச் சொல்வேன்.  Qualifications do not guarantee delivery. 'இதனை இதனான் இவண் முடிக்கும்' என்பதை attitude முடிவு செய்கிறது; certificates அல்ல.

இருக்கட்டும்.  இந்தப் பத்தியை எழுத ஆரம்பித்தது நவம்பர் மாத "தடம்" இதழைப் பற்றிச் சொல்லத்தான்.  எஸ்ராவின் நீண்ட செவ்வியோடு இந்த கனமான இதழ் தொடங்குகிறது.  பாப் டிலனுக்கு நோபெல் வழங்கப்பட்டது குறித்து எஸ்ரா ஆட்சேபிக்கிறார். தான் கவிதைகள் எழுதாததற்கு அவர் சொல்லும் காரணம் ரசிக்க வைக்கிறது.  ஆனாலும் எஸ்ராவின் நேர்காணலை விட இரண்டு நெகிழ்ச்சியான எழுத்துக்கள் இந்த தடம் இதழில் உள்ளன.  சிற்பி ராஜன் அவர்களைப் பற்றிய கட்டுரையும், வண்ணதாசனைப் பற்றி கலாப்பிரியா எழுதியிருக்கும் கட்டுரையும்.  சமீபத்தில் நான் படித்த அபுதின எழுத்துக்களில் மனதை கசியச் செய்யும் படிக்கான ஒரு அந்தரங்க சுத்தியோடு இவைகள் எழுதப்பட்டுள்ளன.

சிற்பி ராஜனைப் பற்றிய கட்டுரையை வடிவமைத்திருக்கிறார் இளமுரசு. அற்புதமாக வந்திருக்கிறது.  இதைப் போன்ற கட்டுரைகளை எழுத ராஜனைப் போல மனிதர்களைச் சந்தித்தாக வேண்டும்.  எல்லா மேதைகளிடமும் பொதுவான குணம் ஒன்று இருக்கிறது. Rebellion.  வழக்கத்தை எதிர்ப்பது.  வளமையான குடும்பத்தில் பிறந்தவர் ராஜன்.  இவரது சகோதரர்கள் பெரிய நிலைகளில் இருப்பவர்கள்.  பியூசி வரை ஆங்கில வழியில் படித்தவர்.  சிற்பக்கலை படிக்க சுவாமிமலை போவதாக சொன்னது வீட்டாருக்கு பிடிக்காமல் எதிர்க்கவே, அவர்களின் முன்னாலேயே பியூசி சான்றிதழை கிழித்துப் போட்டுவிட்டு, கைலி சட்டையோடு வெளியேறியிருக்கிறார்.  ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் திரும்பப் போகவில்லை.  ராஜன் தீவிரமான பெரியாரிஸ்ட். சிற்பக் கலையைக் கற்றுத் தேர்ந்தது மட்டுமன்றி தலித் சமூகங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களை கொண்டுவந்து தன்னுடைய கூடத்தில் ஆண்டுக் கணக்கில் தங்க வைத்து கலையைப் பயிற்றுவித்து அவர்களால் உருவாக்கப்பட்ட கடவுளர் சிலைகள் தமிழகம் உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு இந்துக் கோவில்களில் உற்சவர்களாக பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன என்பது எப்படியேற்பட்ட முரண்நகை!  கடவுளர் சிலைகள் செய்யும் ராஜனின் கூடத்தில் வருடத்திற்கு மூன்றே நிகழ்வுகள்தான் கொண்டாடப்படும்.  பெரியார் - அம்பேத்கர் பிறந்த நாள்கள் மற்றும் மே தினம்.  மூன்று தினங்களையும் சிறப்புச் செய்வது மாட்டுக்கறி பிரியாணி.  இவரிடம் சிற்பக் கலை பயின்றிருக்கும் இருநூற்று சொச்சம் மாணவர்களும் இப்படித்தான் என்கிறார் ராஜன்.  ராஜனின் வார்த்தைகளில் "கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை.  அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார்.  திறமையும் ஆர்வமும் கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும்."  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் பிரபலமான உலோகச் சிற்பக் கலைஞர்களில் ஒருவராக விளங்கும் சிற்பி ராஜன் தற்போது சிற்பம் செய்வதை நிறுத்திவிட்டு, முழுநேர பெரியாரிய பிரசாரகராக இருக்கிறார்.   ராஜனின் வாழ்வு சராசரி மனிதனாகிய நான் எட்டிப்பிடிக்க முடியாதது.  நிறைவானது.  பிறருக்கு பயனுள்ளது. 'சோற்று மனிதர்களாகிய' நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

"அன்பெனும் தனி ஊசல்" என்ற கட்டுரை வண்ணதாசனைப் பற்றி கலாப்பிரியா எழுதியது.  ஒரே தெருக்காரர்கள்.  கல்யாணி அண்ணனாகவும் கோபாலாகவும் இருந்த காலங்களை அழியாத கோலங்களாக நம்முடைய மனங்களில் வரைந்து காட்டுகிறார் கலாப்பிரியா என்கிற கோபால். தி.க.சி.-யின் புதல்வர்களான கணபதி அண்ணனும் கல்யாணி அண்ணனும் தடம் புரண்டு போயிருக்கக் கூடிய தனது வாழ்க்கையை எப்படி நெறி செய்து தந்தார்கள், தனது எழுத்துலக வாழ்க்கையில் கூடவே இருந்து வழிநடத்தி தந்தார்கள் என்ற உணர்வுப் பெருக்கு பத்தி நெடுக வழிந்தோடுகிறது.  கலாப்பிரியாவின் கவிதைகள் அபூர்வமானவை. புதிய சொல்லாடல்களின் வழியே பின்னப்பட்டவை.

ஒவ்வொரு புது வாக்கியமும்
மொழி செய்துகொள்ளும்
சுயமைதுனம்.

கலாப்பிரியாவின் சுயசரிதைத் தொகுப்புகளான உருள்பெருந்தேர், நினைவின் தாழ்வாரங்கள், மற்றும் சுவரொட்டி ஆகியவையை அவற்றின் எளிமையான தமிழ் உரைநடைக்காக போன வருடம் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தேன். அறுபதுகளின் திருநெல்வேலியை, தமிழ் சினிமாவை, தமிழரின் நெஞ்சத்தை இவரைப் போல எழுத்தில் சொல்வது வேறு யாருக்கும் கைகூடும் என்று நான் நம்பவில்லை. 

"தடம்" வணிக ரீதியாக வெற்றியடையுமா என்பது சந்தேகம்.  விகடன் குழுமத்தில் இருந்து வருவதால் கொஞ்ச வருடங்கள் தாக்குப் பிடிக்கலாம்.  வரும்வரை, இதே போல வந்தால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு நல்லது.  ஒரு ஐநூறு தரமான வாசகரையாவது புதிதாக உருவாக்கிவிட முடியும்.

வாசிப்பு அற்ற சமூகத்திடம் political consciousness இருக்காது.  வாசிப்பு பரவலாக உள்ள சமூகத்திடம் அரசியல் பம்மாத்துகள் பலிப்பதில்லை.  தமிழ் சமூகம் வாசிப்புப் பழக்கம் பரவலாக உள்ள சமூகமாக மாற இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படலாம். அதை நோக்கிய எத்தனையோ முயற்சிகள் இதுவரை செய்தாகி விட்டது.  புதியதாக அதில் ஒன்றுதான் 'தடம்'.  இதுமாதிரியான முயற்சிகளைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் வாசிப்பவர்களின் கடமை.  காற்றில் கலக்கும் எத்தனையோ மில்லியன் வார்த்தைகளில் இந்த மாதிரியான முயற்சிகளைப் பற்றிப் பேசுவது காலப் பெருவெளியில் என்றாவது தடம் பதிக்கலாம்.

0 comments:

Post a Comment