Modus Operandi

| Wednesday, September 13, 2017


ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் "ஆஷ் அடிச்சுவட்டில்" இன்னும் சில அத்தியாயங்கள் பாக்கியிருக்கிறது.  இந்த மாதிரியான புத்தகங்களை போகிற போக்கிலோ, இரவு உணவிற்குப் பிறகு தூக்கம் வருவதற்கு முன்போ படிக்கக் கூடுவதில்லை.  இதற்காக நேரம் ஒதுக்கி பென்சிலும் கையுமாக உட்கார்ந்து அடிக்கடி குறிப்பெடுத்துக் கொண்டு படிக்க வேண்டியிருக்கிறது.  வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களைப் பற்றிய அத்தியாயம் துப்பறியும் கதை ஒன்றைப் படிப்பதைப் போன்ற பரபரப்பைத் தருகிறது.  அதிலும், குறிப்பாக காங்கிரசை கைப்பற்ற மிதவாதிகளும் திலகரின் ஆதரவாளர்களும் போட்டியிடுவது, டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளுக்கிடையே நடந்து வரும் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.  மெட்ராசிலிருந்து தனித் தனியே ரயிலேறுகிறார்கள். சிதம்பரம் பிள்ளை திலகரின் தளகர்த்தர்.  முப்பது பேர்கள் கொண்ட அணிக்கு தலைமையேற்று பிள்ளையவர்கள் முதலில் பம்பாய்க்கு செல்கிறார்.  இவர்களுக்கு மட்டும் அங்கு ஒரு தங்கும் விடுதி - சர்தார் கிருஹம் - திலகரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அங்கிருந்து சூரத் செல்கிறார்கள். மாநாட்டில் லஜபதி ராய் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்க திலகர் அணி கடுமையாக முயல்கிறது.  ஆனால் மிதவாதிகளோ காங்கிரசின் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் அவர்களைத் தலைவராக்க ஆவன செய்கிறார்கள். மாநாட்டிற்கு முந்தைய இரண்டு தினங்களில் இரண்டு அணிகளும் மீண்டும் மீண்டும் கூடி சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  முந்தைய மாநாட்டில் தீர்மானங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதைப் பற்றிய முறுகல் முற்றுகிறது.  மாநாட்டின் இரண்டாம் நாள் - 27-12-1907 - பெரும் சர்ச்சைக்கிடையே தலைவராக ராஷ் பிகாரி கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு விட, அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரைக் குறுக்கிட்டு திலகர் மேடையேற, அவரை நோக்கி செருப்பு வீசப்படுகிறது.  இலக்கு திலகர்தான். ஆனால், அது சுரேந்திரநாத் பானர்ஜியின் கன்னத்தைப் பதம் பார்க்கிறது.  தொடர்ந்த அடி உதை குத்தின் உச்சமாக போலீசார் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்து தடியடி நடத்த வேண்டி வருகிறது. தன்னை முற்றிலும் சூழ்ந்து பாதுகாப்புக் கொடுத்த தீவிரவாதத் தொண்டர்களின் உதவியுடனேயே திலகர் அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார்.  "திலகர் நின்ற நிலையை மதம்பிடித்து கர்ஜித்துக் கொண்டிருந்த பல நூறு யானைகளின் முன் அமெரிக்கையாய் அடங்கி ஒடுங்கி நின்ற ஒரு சிங்கத்தின் நிலைக்கு ஒப்பிடலாம்" என்று சிதம்பரம் பிள்ளை அந்த நிகழ்ச்சியை பின்னாளில் நினைவு கூர்கிறார்.

இன்று கூவத்தூர் - கூர்க் - கட்சி மாநாடுகள் - சட்டமன்றக் கூத்துகள் - யார் தலைவர் என்ற கலவரம் - அடிதடி போன்ற எதையும் பத்திரிகைகள் "வரலாறு காணாத" என்று செய்தி போடத் தேவையில்லை.  இவையெல்லாம் 1907-ம் ஆண்டே சீரும் சிறப்பாக நடந்தேறியுள்ளன.  ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அடித்துக் கொண்டவர்கள் தேசாபிமானிகள். இன்று அடித்துக் கொள்பவர்கள் தேசத்தின் வியாதிகள்.  ஆனால் modus operandi ஒன்றுதான்.

அரசியல் மாறவேயில்லை!   

0 comments:

Post a Comment