மனுஷ்ய புத்திரனுக்கு வீடு கிடைக்காதது இன்று பலருடைய விலாசத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. ஜெயமோகன் கடுமையான கருத்தை அவரது வலைத்தளத்தில் பதிந்து, அதைப் பற்றிய எதிர் விளைவுகள் மிகக் கடுமையாகக் கிளர்கின்றன. அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக, இப்போதுதான் கூடி வந்தது.
அவர் சொல்வதில் உண்மை கொஞ்சம் இருக்கிறது. வீடு கிடைப்பது எல்லோருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. பெரு நகரங்களில் மட்டுமன்றி, சிறு நகரங்கள் - ஏன் கிராமங்களில் கூட இது சிக்கல்தான். யார் என்னுடைய வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாமல் எப்படி வாடகைக்கு விடுவது? எங்கள் மாவட்டத்திற்கு உயர் கல்வி அலுவலர் ஒருவர் மாற்றலாகி வந்தார். குழந்தைகள் வேறு ஊரில் படித்துக் கொண்டிருத்ததால் அவரது துணைவியாரும் அவர்களுடனேயே இருந்தார். எங்கள் அலுவலர் தனியாகத்தான் இங்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் அவருக்கு வீடு பார்க்கத் தொடங்கினோம். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் தலைமை அலுவலரான அவருக்கு வீடு தேடி வந்த நாட்களில், ஜெயமோகன் சொல்லும் பிரச்சினையை நேரடியாக சந்திக்க வேண்டி வந்தது. தனியாக இருக்கப் போகும் ஆண் ஒருவருக்கு, அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, வீடு கிடைப்பதில் சிக்கல்கள் நிறைய உண்டு. ஒருவர் நிபந்தனையோடு வீடு தர சம்மதித்தார். அதாவது, அலுவரின் குழந்தைகளை சேலத்து பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டு அதற்கான ரசீதுகளைக் காண்பித்தால், உடனே வீடு தருவதாகவும், அப்படியான நிலையில், அந்த உயர் அலுவலர் குடும்பத்தோடு தன்னுடைய வீட்டில் குடியிருப்பது தனக்குப் பெருமை என்றும் சொன்னார். அது சாத்தியமில்லை என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதவை எங்கள் முகங்களில் சாத்திவிட்டுப் போய் விட்டார்.
வீடு தேடுவது உண்மையில் ஒரு பெரிய பிரச்சினைதான். ஜெயமோகன் இதுவரை சரியாகவே தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார். அதற்குப் பிறகுதான், வழக்கம் போல தன்னுடைய வில்லங்கத்தைத் துவக்குகிறார். தென் மாவட்டங்களில் 'ஒரு சாதியினர்' என்றால் வீடு தரமாட்டார்கள் என்கிறார். முஸ்லிம்களை பேர் சொல்லி - அவர்களின் பிரிவுகளையும் சொல்லி - இவர்களுக்கு வீடு தராமல் தமிழ் நடுத்தர வர்க்கம் இழுத்தடிப்பது சரிதான் என்ற அளவில் சொல்கிறார். முஸ்லிம்கள் முரடர்கள் - அவர்களை நம்புவதற்கில்லை என்றெல்லாம் தைரியமாக சொல்லும் ஜெயமோகன், தென் மாவட்டங்களில் இருக்கும் "அந்த சாதியினரை" ஏன் பெயரை சொல்லிக் குறிப்பிட தயங்குகிறார். தேவர்கள் அரிவாளோடு வந்து விடுவார்கள் என்ற பயத்திலா? இஸ்லாமியர்களில் மட்டும்தான் 'வலுவான அமைப்பினர்' இருக்கிறார்களா? எனக்கெல்லாம் திரு ஹெச்.ராஜா-வின் பேச்சைக் கேட்டாலே குலை நடுங்குகிறது. பிரதமரின் பெயரை செய்தியாளர் சொல்லி முடிக்கும் முன்னரேயே கோபமாக "நீ ஒரு தேசத்துரோகி!" என்று ரௌத்திரமாக நாற்காலியை விட்டெழுந்து கை நீட்டி கத்துகிறார். அவர் முன்னால் பேசுவதற்கு - ஏன் நிற்பதற்கே - நிருபர்கள் பயப்படுகிறார்கள். டிவியில் அவர் பேசுவதைப் பார்க்கும் பொழுதெல்லாம் வயிற்றைக் கலக்குகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியரையும் வன்முறையாளராக மாற்ற இந்த மாதிரி ஒருவர் போதும்.
மற்றபடிக்கு, ஜெயமோகன் உணராததை எதுவும் எழுதிவிடவில்லை. இஸ்லாமியர் என்றாலே தனக்கு அச்சம் இருக்கிறது என்று சொல்கிறார். ஒன்றும் தப்பில்லை. எனக்கெல்லாம் பிஜேபி- காரர் என்றாலே குலை நடுங்குவது போலத்தான் இதுவும். பெரும்பான்மை சாதீயம்/ மதவாதம் மற்றும் சிறுபான்மை சாதீயம் / மதவாதம் - இரண்டுக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை ஒரு பக்கம் சார்ந்து நிற்கும்போது ஒருவர் அறிய முடியாது என்பது மட்டுமல்ல, தெரிந்தாலும் சொல்ல முடியாது.
இஸ்லாமியரைப் பற்றி - வீடு வாடகைக்கு கொடுப்பதில் - இந்துப் பெரும்பான்மை சமூகத்திற்கு ஒரு அச்சம் இருக்கிறது. இருக்கலாமா என்றால் இருக்கலாகாது. நாகர்கோவில் பக்கம் பெந்தகொஸ்தே பிரிவினருக்கு வீடு தர மாட்டார்கள் என்று ஜெயமோகன் சொல்லியிருப்பது உண்மையாக இருக்கலாம். இதற்கு எது காரணம் என்றால், வாடகைக்கு வருபவன் அல்ல; வாடகைக்குத் தருபவன்தான்.
கடந்த இருபது வருடங்களில், இன்னும் சரியாகச் சொன்னால் - இந்திய அரசியலில் பிஜேபி தலையெடுத்த பிறகு, நாட்டின் பெரும்பான்மை பகுதிகளில் சிறுபான்மை மதத்தினர் - சாதியினர் ஆகியோருக்கு காலம் கெட்டுவிட்டதாகவே கருதுகிறேன். உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது இது. இதில் கம்யூனிஸ்டுகள் பெரிய பங்களிக்க முடியும். தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். பெரும்பான்மை இன - சாதிய வாதத்தை இங்கே வளர விடுதல் ஆகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். பெரியாரிஸ்டுகள் - கம்யூனிஸ்டுகள் - மற்றும் இந்த விடயத்தில் வலதுசாரிகளுக்கு எதிரான அரசியல் நிலையுடையோர் அனைவரும் சேர்ந்து வலுவான மாற்று கருத்தாக்கத்தை நிலைப்படுத்தி, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் பங்கெடுக்க வைத்தல் வேண்டும்.
ஒரு வகையில் மனுஷ்யபுத்திரனுக்கு வீடு கிடைக்காதது நல்லதுதான். இதைப் பற்றிய விவாதம் ஒன்றை துவக்கி வைத்திருக்கிறார். தமிழ் அறிவுலகம் இரண்டு பக்கமும் கட்சி கட்டிக்கொண்டு விவாதித்து வருகிறது. Pro-majority மற்றும் Pro-minority இரண்டு பக்கங்களும் களைகட்டி நிற்கின்றன. தேவர் - கவுண்டர் - வன்னியர் உள்ளிட்ட பெரும்பான்மையினரும் முஸ்லிம் - கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பன்மைத் தன்மையில்தான் இந்திய அரசியல் சாசனம் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது.
ஹமீதிற்கு எப்படியாவது வீடு கிடைத்து விடும். இதைப் பற்றிய விவாதம் பொது வெளியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில், ஹமீதுகள் சிரமமின்றி வாடகைக்கு வீடுகளை அமர்த்திக் கொள்ள முடியும். ஹெச்.ராஜாக்கள் கடுமையான கோபத்துடன் நம் அனைவரையும் 'தேசத்துரோகிகள்' என்று அழைத்துக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அண்ணாச்சிகள் வாடகைக்கு வீடு பிடித்து சந்தோஷமாக கோழி அடித்து பிரியாணி செய்து நமக்கும் போடட்டும். நம்மில் பலர் ஸ்டார் ஓட்டல் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தவர்கள்தானே?
அந்த பிரியாணி வாசமும் சுவையும் லேசுப்பட்டதா என்ன?
0 comments:
Post a Comment