வாழும் சவங்கள்

| Thursday, September 14, 2017
மே மாதத்தின் தடம் இதழில் அ.முத்துலிங்கம் அவர்களின் நீண்ட செவ்வி வந்திருக்கிறது.  பல்வேறு விடயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.  எண்பது வயது நிறைவடைந்திருக்கிறது.  உலகத்தின் பல இடங்களில் பணி செய்திருக்கும் காரணத்தால் உலக இலக்கியத்தின் போக்கை நன்கு உணர்ந்த வார்த்தைகள். 
ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது கூட அதைப் பற்றிய பாதிப்புகள் அவருடைய எழுத்தில் ஏன் அதிகம் காணப்பெறவில்லை என்று எனது நண்பர் சினந்து கேட்டார்.  உண்மைதான்.  முத்துலிங்கம் எழுத்தில் ஈழப் போராட்டம் அவரின் எழுத்தைத் தீர்மானித்த விடயம் என்பதாக இல்லை.  இந்தக் கேள்வி அவரிடமே இந்த செவ்வியில் வினவப் படுகிறது.  இதற்கான முத்துலிங்கம் அவர்களின் பதிலில் இலக்கிய மதிப்பு அதிகம் இருக்கிறதாகப் படுகிறது.  எனக்கு எப்போதுமே ஒரு ஆவல் உண்டு.  1885 முதல் 1947 வரையிலான இந்திய இலக்கியத்தின் போக்கை காலக்கிரயப் படிக்கு ஆராய வேண்டும்.  எனக்குத் தெரிந்து, சுதந்திரப் போராட்டத்தின் போக்கை தன்னுடைய எழுத்தில் ஏந்தியிருக்காத எந்தவொரு எழுத்தாளரைப் பற்றியும் அதிக செய்திகள் சம காலத்திலோ அல்லது இப்போதோ பிரசுரிக்கப்படவில்லை / படுவதில்லை.  க.நா.சுப்பிரமணியம் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே இதுதான்.  விடுதலைப் போராட்டம் அவரை அதிகம் கவர்ந்திழுத்தது போல தெரியவில்லை.  அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தில்லிக்கு டைப்ரைட்டரோடு கதை எழுதப் போய் விட்டார்.  அண்மையில் முடிந்திருந்த சுதந்திரப் போராட்டம் - அதன் பாதிப்பு - எதுவும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை.  இது காரணத்தால், அவரின் சிறப்பு எதுவும் குறைந்துவிடவுமில்லை.  ராமசாமி நாயக்கர் அவர்களின் போராட்டமுமே கூட, காங்கிரசோடு ஒப்பீட்டளவில், வெள்ளையர் அரசிடமிருந்து பெற விழைந்த அரசியல் அதிகார சுதந்திரம் பற்றியதானது இல்லை. சொல்லப் போனால், சுதந்திரம் வேண்டாம் என்பதைப் பற்றியதாகக் கூட பெரியாரின் களமாடல் இருந்திருக்கிறது. 
Contemporary mainstream literature - என்பதின் போக்குடன் காத்திரமான எழுத்துகள் பல நேரங்களில் உறவாடுவதில்லை.  சமூகத்திலே ஒரு விஷயம் மிகவும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருப்பதின் காரணமாகவே, இலக்கியவாதி அந்தத் தருணத்தை தன்னுடைய எழுத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.  அவனுக்கு எழுத ஆயிரம் இருக்கிறது.  வரலாற்றின் தொடர்ச்சி அவன்.  அதை குறுக்கு முறுக்காகவும் அவன் விசாரணை செய்வான்.  அரூபமான ஒன்றின் குரல் அவன்.  எப்படியும் வீசியடிக்கும் காற்று.  திசை தெரிந்து பயணிப்பதில்லை எழுத்து.  அது போகும் வழி திசை என்றாகிறது.  டி ஹெச் லாரன்சை இதன் அடிப்படையில்தான் புரிந்து கொள்ள முடியும்.  வாழ்ந்த காலத்தோடு முரண்டு பிடித்தவன்.  அன்றிருந்த கருத்துருவாக்கத்தை அடித்து நொறுக்கியவன். அவன் போன பிறகு அவனுடைய எழுத்தோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது இந்த உலகத்திற்கு.  காலத்தைக் கடந்தும் பெரும் எழுத்தும் எழுத்துக்காரனும் ஜீவித்திருப்பது இதனால்தான்.  ஜெயகாந்தன் போய் சேர்ந்து விட்டார். நன்றாக வாழ்ந்தார்.  நன்றாக எழுதினர்.  பூரண ஜீவிதம்.  சுப மரணம். அவரோடு முரண்டு பிடித்த உலகு அவரிடம் சமரசம் செய்து கொண்டே ஆக வேண்டும்.  குறிப்பிட்ட காலம் ஒன்றின் முகவரி அவர்.  அவரைத் தவிர்த்து அந்தக் காலத்தை அணுகவே முடியாது.  அந்தக் காலத்தையே தனதாக்கிக் கொண்டவர்.  திராவிடக் கனல் எதுவும் அவரின் எழுத்துக்களில் காணப்படவில்லை.  முக்கியமாக அவரின் புனைவிலக்கிய படைப்புக்களில். அந்தக் காலத்தின் அரசியலையே தீர்மானித்த திராவிடக் குரலை ஏன் ஜேகே தவிர்த்தார்? அவரின் அரசியல் நிலைப்பாடா? இருக்கலாம்.  அதைவிட முக்கியமான பணிகள் தமக்கிருப்பதாக அவர் நம்பியதுதான் முதன்மையான காரணம்.
ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி முத்துலிங்கம் எதுவும் அதிகமாக எழுதவில்லை என்னும் சாட்டிற்கு இதுதான் பதில்.  எழுத்துக்காரனின் படைப்புலகத்தை அவன் சுயமாக பல நேரங்களில் தீர்மானிக்க முடிவதில்லை.  அவனது சுபாவமும் ஆர்வமுமே தீர்மானிக்கின்றன.  எழுத்துக்காரன் காலத்தின் குழந்தை என்றால், அவன் எழுதியதும் காலத்தின் அம்சம்தான்.  கடந்த நாற்பதாண்டுகளில் அரசியல் போராட்டம் தவிர்த்த விடயங்களையும் எழுத வேண்டிய தேவை ஈழத்து எழுத்துக்காரனுக்கு இருந்திருக்கிறது என்பதாகவே இதைப் புரிந்து கொள்கிறேன்.  ஜெயகாந்தன் ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்விக்கு, அப்படியான விஷயங்கள் ஏன் அன்று இருந்தன என்பதுதான் பதிலாகும்.  லாரன்ஸ் ஏன் பாலுறவு விடுதலையைப் பற்றி எழுதினார் என்றால், ஏன் பாலுறவு அடிமைத்தனம் அன்று அங்கீகரிக்கப் பட்டிருந்தது என்பதுதான் விளக்கமாகும்.
ஏன் பன்னீர்செல்வம், சசிகலா, ஸ்டாலின், மோடி போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள் என்றால், அப்படியான தலைவர்கள் மக்களால் ஏன் வரவேற்கப்படுகிறார்கள் என்பதுதான் பதில். 
காலத்திடமிருந்து யாருமே தப்பிக்க ஆகுவதில்லை. சில மகாமனிதர்கள் சக ஜீவன்களால் வாழும் காலத்தில் புரிந்து கொள்ளப்படுவதில்லை.  அவர்கள் காலத்திற்கு முந்தி பிறந்து விட்டார்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல.  மற்றவர்கள் காலத்தை இன்னும் எட்டிப் பிடிக்காமல் பிந்தியிருந்தார்கள் என்பதுதான் பொருள்.
முத்துலிங்கம், ஜெயகாந்தன், ராமசாமி நாயக்கர், லாரன்ஸ் ஆகியோரோடு நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்பதில் நான் எவ்வளவு காலத்திற்குப் பிந்தி இருக்கிறேன் என்பது தெரிகிறது.
கடந்த காலத்திலேயே பிறந்து, கடந்த காலத்திலேயே வாழ்ந்து, கடந்த காலத்திலேயே மடிந்து கொண்டிருக்கிறோமா நாம்?       

0 comments:

Post a Comment