என் தமிழ் உபாத்தியாயர்

| Thursday, September 14, 2017
இது சம்பிரதாயமான பதிவாக இருந்துவிடக் கூடாது என்ற பயம் நிறைய இருக்கிறது. லட்சோப லட்சம் பதிவுகள் இன்று அவரைப் பற்றி இருக்கும். அனைத்து அச்சு மற்றும் காணொளி ஊடகங்கள் இன்று அவரைப் பற்றிய வியந்தோதுதல்களை ஏந்தி வந்திருக்கின்றன.
முகநூலில் தன்னுடைய சிறு பதிவாக மருத்துவர் ருத்ரன் நெகிழ்வாக திருமிகு கலைஞர் அவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். தமிழைக் கற்றுத் தந்தவர், பால்ய காலத்து நாயகன், அரசியல் புரிய ஆரம்பித்ததும் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக தொடர்பவர் என்று ருத்ரன் கூறியிருப்பது உண்மையே. இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் இமையம் நெகிழ்வான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். திமுகவின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்சித் தலைவரைப் பற்றிய கட்டுரை உருக்கமாக வந்திருக்கிறது. தந்தையார் என்பதை விடவும் தலைவர் என்றே அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதாக சொல்கிறார். கிடைத்தற்கரிய வாய்ப்புதான் அது. தி ஹிந்து நீண்ட தலையங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. மார்க்ஸ் அந்தோணிசாமி கலைஞரை நினைவு கூறியிருக்கிறார். நேற்று இரவு நியூஸ்18 தொலைக்காட்சியில் வே மதிமாறன் கலைஞரின் அரிய பண்புகளைப் பட்டியலிட்டது கவர்ந்தது. "மாற்றுத் திறனாளி" என்ற சொற்றொடர் கலைஞர் தந்ததுதான் என்று மதிமாறன் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. ஓய்வு பெற்ற இந்திய அரசுப் பணி உயர் அலுவலர் ஒருவர் கலைஞரின் மேலாண்மைத் திறன்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.
என்னுடைய தந்தை துவக்கப் பள்ளி ஆசிரியர். சாயந்திர வேளைகளில் அவர் தனது சகாக்களோடு வீட்டின் முன் மணிக்கணக்காக அரசியல் பேசிக்கொண்டு இருப்பார். அலைஓசை, முரசொலி போன்ற தினசரிகள் அவர்களின் கைகளில் இருக்கும். நழுவி விழும் தருங்களில் ஓடிப்போய் எடுத்துப் படிப்பேன். அவர்களின் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டுக்கொண்டு இருந்ததால் படிக்கும் விஷயங்கள் சிலது புரியும். எனது ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அப்பாவின் நண்பர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்து "நெஞ்சுக்கு நீதி பாகம் ஒன்று மற்றும் இரண்டு" ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுத்து படிக்கச் சொன்னார். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அதற்கு முன்பாகவே, கலைஞரின் வசனங்கள் உள்ள படத்தின் சிறு பாகங்களைத்தான் பள்ளி நாடகங்களாக முத்து வாத்தியார் நடத்துவார். சேரன் செங்குட்டுவன், சாக்ரட்டீஸ், மனோகரன் போன்றவர்கள் கலைஞரின் மூலமாகத்தான் எங்கள் எல்லோருக்கும் அறிமுகமானார்கள்.
அண்ணாதுரை அவர்கள் காலமானபோது கலைஞர் அவர்கள் படித்த கவிதாஞ்சலி என்னை வருடக்கணக்கில் ஆட்டுவித்த படிக்கு இருந்தது. "பூவிதழின் மென்மையினும் மென்மையான அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்...." என்றவாறு துவந்து அந்த நீண்ட கவிதாஞ்சலி முழுவதையும் மனப்பாடம் செய்து பெண்பிள்ளைகளின் முன்னால் கரகரத்த குரலில் பேசி அசத்திய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன. அடிக்கடி நண்பர்களிடம் சொல்லுவேன். திமுகவிற்கு மாற்றுக் கருத்து இருப்பவர்கள் கூட, அவரின் நெஞ்சுக்கு நீதி அய்ந்து (அல்லது ஆறு?) பாகங்களையும் கசடறக் கற்க வேண்டும்; அப்போதுதான் அன்றைய அரசியல் நிகழ்வுகள் தெரியும் என்று. மூன்று பாகங்களை படித்திருக்கிறேன் என்று நினைவு.
பின்னால் கல்லூரி காலங்களில் எனது அரசியல் நிலைப்பாடு முற்றிலும் திமுகவை விட்டு விலகிப் போயிற்று. அரசியல்வாதியாக கலைஞர் ரொம்பவும் வசீகரிக்கவில்லை; என்றாலும், தமிழ் மொழி மேல் காதல் நிரம்பியவராக, பேச்சு என்ற கலையில் நிகரில்லாமல் நிலைத்திருப்பவராக, அறிஞர்களை ஆதரிக்கும் அரசுத் தலைவராக, ஓரளவு ஜனநாயகத் தன்மையோடு தனது கட்சியை வழிநடத்திச் சென்றவராக, இன்னும் பல்வேறு காரணங்களுக்காக என்னை தொடர்ந்து தன்வயப்படுத்தி வந்திருக்கிறார்.
என்னுடைய தமிழ் ஆர்வத்திற்கு காரணம் கலைஞர்தான். என்னுடைய அப்பாவிற்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதற்காக இன்னுமே அவரைப் பிடித்துப் போனது. எவ்வளவு பெரிய மகத்தான வாழ்க்கை! தொண்ணூற்று மூன்று வருடங்களைக் கடந்து விரியும் இந்த சமுத்திரம் எத்தனை திமிங்கிலங்களை சுனாமிகளை சமாளித்திருக்கிறது. இவ்வளவு நீண்ட அரசியல் அனுபவம் வாய்த்த தலைவர் யாரேனும் இந்த நாட்டில் இன்று இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
உண்மையில், எவ்வளவு எழுதினாலும் மாளாது. என்னுடைய பள்ளிப் பருவம் முழுமையும் திமுக-காரனாகவே நண்பர்களால் அறியப்பட்டிருக்கிறேன். எம்ஜியார் என்ற ஆளுமை என்னை வசப்படுத்தியதேயில்லை. ஒரே காரணம்தான். கலைஞரின் தமிழ்தான். ஓர் இளம்பெண்ணின் மதர்த்த அழகுக்கு இணையானது கலைஞரின் தமிழ். மொழியும் இசையும் ஆபத்தானவை. எல்லோரையும் பின்னால் கூட்டிக்கொண்டு போகக்கூடிய வல்லமை இவை இரண்டுக்கும் உண்டு.
கலைஞரின் பின்னால் வந்த லட்சோப லட்சம் இளைஞர்களுக்கும் ஆதர்சம் இவரின் தமிழாகத்தான் இருக்க முடியும்.
இவர் உடல்நலம் பெற்று நடைமுறை அரசியலுக்குத் திரும்பினால் தமிழ் - திராவிட அரசியலுக்கு நல்லது. தேவையானது. இன்னும் இந்த முதியவரைத்தான் நம்பியிருக்க வேண்டிய நிலை என்பது இவர் யார் என்பதை நமக்கு உரக்கச் சொல்லுகிறது.

கலைஞர் நீடூடி வாழ எனது பிரார்த்தனைகள்!

0 comments:

Post a Comment