புள்ளிக் கோலம்

| Thursday, September 14, 2017
இரண்டரை மணி நேர காணொளி ஒன்று YouTube-ல் பார்த்தேன். டாக்டர் BM Hegede. கர்நாடகாவில் உள்ள மணிபால் சர்வகலாசாலையின் மேனாள் துணைவேந்தர். அலோபதி - ஆயுர்வேதம் - தவிர ஏனைய மாற்று மருத்துவங்களில் அறுபது வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர். மருத்துவத் துறையின் ராமசாமி நாயக்கர் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். கலகக்காரர்.
நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாத நினைவுத் திறன். நூற்றுக்கணக்கான நூற்கள், ஆசிரியர்கள், பக்கங்கங்களின் எண், பதிப்பு எண்கள், பதிப்பகங்கள், பத்தி எண் - இவைகளை விட முக்கியமாக, கேட்டுக்கொண்டிருப்பவர்கள் எழுதிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நூல் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களுக்கான spelling-ஐ ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கும் பண்பு, எல்லாவற்றையும் விட முக்கியமாக அற்புதமான சரளமான மணிப்பிரவாள ஆங்கிலம் - எண்பது வயதானவர் என்பதை நம்புவது கடினம்.
இதைப்போல சொற்பொழிவுகளை எல்லோருமே கேட்க வேண்டும். உ்டம்புக்கும் மனதுக்கும் நல்லது. அதைவிட ஆங்கில ஆசிரியர்கள் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து கேட்க மாட்டான் நமது இங்கிலீஷ் வாத்தி. நடக்கவிருக்கும் in-service பயிற்சிகளில் இந்த மற்றும் இதைப் போன்ற காணொளிகளை எல்லா இங்கிலீஷ் வாத்திகளும் பார்ப்பதை கட்டாயமாக்கலாம். இந்தக் காணொளிகள் கற்பிப்பதை விட, வேறு எந்த இங்கிலீஷ் expert-ம் அதிகமாக பங்களித்து விட முடியாது.
LSRW அடிப்படையான மொழித் திறன்கள் என்று வாய் கிழிய பேசி என்ன சாதித்து விட்டோம்? அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் டிகிரி படிப்பை முடித்து விட்டு TET / TRB-களில் புள்ளிக்கோலம் வைத்து இங்கிலீஷ் வாத்திகளான அண்ணாச்சிகளுக்கும் அம்மணிகளுக்கும் Prof.BM Hegede-வின் உரை உதவும். அண்ணாச்சி அம்மணி ரகங்களுக்கு மனசுதான் வேண்டும் இதைப் போன்ற காணொளிகளைக் கேட்பதற்கு.
பள்ளிக் கல்வித் துறை செயலர் இதைப் போன்ற விஷயங்கள்தான் ஆசிரியர் பணிப்பட்டறைகளில் செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள். அப்படித்தான் என்றால், இதைப் போன்ற காணொளிகளையும், நல்ல ஆங்கில திரைப்படங்களின் பட்டியல் ஒன்றையும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வது, வரவிருக்கும் பயிற்சியினை ஆங்கில ஆசிரியர்கள் தங்களது பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகலாம்.
திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஆங்கில ஆசிரியர்களின் மொழித் திறனை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் வேறு எந்த முயற்சியும் விழலுக்கு இறைத்த நீர்தான். நான் ஆங்கிலம் பேசாமல் என்னுடைய மாணவன் எப்படி ஆங்கில பாஷையைக் கேட்பான்? Listening இல்லாமால் Speaking எப்படி சாத்தியப்படும்? Reading Skill இல்லாத ஒருவன் எப்படி எழுதுவான்? முப்பத்தைந்து வருடங்களாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இடைவிடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். எதோ நாலு வார்த்தை எழுத ஆரம்பித்து பத்து வருடங்கள்தான் ஆகிறது. இருபத்தைந்து வருடங்கள் படித்தால் எழுதத் துவங்கலாம் என்பது எனது அனுபவம். அண்ணாமலை யுனிவர்சிடியில் BA படித்து TET/TRB-ல் புள்ளிக்கோலம் வைத்து வாத்தி ஆனால் creative writing சாத்தியப்படுமா?
எனது மாணவி ஒருத்தி. நான் கேந்திரிய வித்யாலயாவில் வாத்தியாக இருந்த பொழுது நடந்தது. 1997 என்று ஞாபகம். கிரிக்கெட் வீரர்கள் சிலர், அசாருதின் உட்பட, betting குற்றம் சாட்டப்பட்டு ரொம்பவும் பரபரப்பாக இருந்த நேரம். சம்பவத்தன்று தொடர்ந்து வகுப்புகள் இருந்ததால் அடுத்து மீண்டும் நாற்பது நிமிடங்கள் கத்துவதற்கு களைப்பு. ஒரு Free Composition கொடுத்தேன். IS CRICKET STILL A GENTLEMAN'S GAME? மாணவர்கள் இரண்டு பக்க அளவு இந்த தலைப்பின் கீழ் எழுத வேண்டும். அந்த மாணவியின் பெயர் AMRUTHA KALVIT. அவள்தான் முதலில் எழுதிக் காண்பித்தவள். அக்கட்டுரையின் முதல் வாக்கியம் சாகும் வரையில் என்னால் மறக்க முடியாதது. The game as well as the societal platform, both played by the scallywags and not anymore by the spirited, have been dumped into the ditch from which no recovery seems imminent. அவள் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். பின் நாட்களில் அமெரிக்காவில் உள்ள Massachusetts Institute of Technology-ல் Electrical - Neuro Energy-ல் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது வேறு ஒரு ஐரோப்பிய சர்வகலா சாலையில் படிப்பித்துக் கொண்டிருக்கிறாள்.

கேட்டுக்கொண்டிருந்தால் பேசலாம். படித்துக் கொண்டிருந்தால் எழுதலாம். புள்ளிக்கோலம் போட்டால் அரசுப் பள்ளியில் இங்க்லீஷ் வாத்தி ஆகலாம்.

0 comments:

Post a Comment