நான் புனிதன் அல்ல

| Thursday, September 14, 2017
பள்ளிக்கூடங்கள் திறந்தாகிவிட்டது.இந்த இரண்டு நாட்களாக WhatsApp மற்றும் குறுஞ்செய்திகளில் புதிய கல்வி ஆண்டிற்கான வாழ்த்துக்கள் சக ஆசிரியர்களிடமிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன. நன்றி. எல்லோருக்கும் நானும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.
இதிலெல்லாம் எனக்கு சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிய பிரச்சினை இல்லை. என்னை எரிச்சலடைய வைக்கும் வேறு விஷயம் இதில் உண்டு. குரு என்பவன் புனிதமானவன்.ஆசிரியத் தொழில் புனிதமான தொழில். இந்த புனிதமானத் தொழிலை மேற்கொள்ளுபவர்கள் மெழுகுவர்த்திகள் போன்றவர்கள். ஏணி போன்றவர்கள். இவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. இவர் சொல்லியிருக்கிறார், அவர் சொல்லியிருக்கிறார் - ஆசிரியர்களால்தான் இந்த உலகமே உய்யுகிறது என கதைக்கப் படுகிறது. இந்தக் கதைகளை என்னால் தாங்க முடியவில்லை. செருப்பு தைப்பவன், மின்சாரத் துறை ஊழியன், மருத்துவன், சிகை அலங்காரம் செய்பவன், தெருக்களைக் கூட்டுபவன் போன்றோருக்கு என்ன முக்கியத்துவமோ அதே அளவுதான், கொஞ்சமும் கூடாமல் குறையாமல், ஆசிரியனுக்கும் உண்டு என்பது எனது நெடுநாள் அபிப்பிராயம்.
ஆசிரியன் ஒரு தியாகி என்பதெல்லாம் அயோக்கியத்தனமான கட்டமைப்பு. எவராவது சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டு வருவாராயின், அவர் இந்த மாதிரி கொஞ்சம் கதைத்துக் கொள்ளலாம். முப்பது நாட்கள் சொல்லிக்கொடுத்து விட்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொள்ளும் எனக்கு "தியாகி" என்பதாக கதையடித்துக் கொள்ள என்ன யோக்கியதை இருக்கிறது? சம்பளம் வாங்காமல் இந்தத் தொழிலை செய்து வருகிறேனா? வருடா வருடம் ஊக்க ஊதியம், இரண்டு முறைகள் அகவிலைப் படி உயர்வு, பொங்கல் போனஸ் மற்றும் இத்யாதி இத்யாதி நட்ட ஈடுகள், ஊதியம், சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு "நான் புனிதமான தொழிலைச் சேர்ந்தவன்" என்று எப்படி சொல்லிக் கொள்ள முடியும்?
எனக்கு செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவதைப் பற்றிக் கூட பெரிய அனுகூலமான எண்ணங்கள் எதுவும் இல்லை. ஐயா ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்தவர். உதவிக் குடியரசுத் தலைவர் பதவி கிடைத்ததும் வாத்தியார் வேலையை ராஜினமா செய்துவிட்டு டெல்லிக்குப் போய் விட்டார். அவரது பிறந்த நாள்தான் ஆசிரியர் தினம். (சரிதானே?) இது எப்படி சரியானதாக இருக்க முடியும்? ராதாகிருஷ்ணன் உதவி ஜனாதிபதியாக நீடித்த நிலையில் ஆந்திராப் பல்கலைக் கழகம் அவருக்கு ஆசிரியர் பதவியைக் கொடுத்திருந்து, ஐயா மனம் மகி்ழ்ந்து, "ஆகா! எனக்கு வாத்தியார் ஆவதற்கு ஒரு நல்வாய்ப்பு கனிந்திருக்கிறது. இந்த உதவி ஜனாதிபதி வேலை வேண்டாம். இதைவிட ஆசிரியர் வேலைதான் உயர்ந்தது!" என்று கருதி வாத்தியார் வேலைக்கு வந்திருந்தால், ஒருவேளை அவரது பிறந்த நாள் "ஆசிரியர் தினமாக" கொண்டாட இன்னும் சரியானதாக இருந்திருக்கும்.
ஆசிரியர் வேலையைப் புனிதப் படுத்துவதின் அபாயம் என்ன தெரியுமா? ஒருமுறை மங்களூரில் மதுவருந்தும் விடுதி ஒன்றில் எனது ஆசிரியர் நண்பர்களோடு மதுவருந்திக் கொண்டிருந்தேன். எங்கள் பக்கத்தில் கனவான் என்று மதிக்கத் தகுந்த, அறுபது வயது இருக்கலாம், ஒருவர் மது அருந்திக் கொண்டிருந்தார். நாங்கள் ஆசிரியர்கள் என்று புரிந்த நிலையில், மெதுவாக எங்களிடம் பேசத் தொடங்கினார். "ஆசிரியர்களான நீங்களே மதுவருந்தினால் நாடு கெட்டுவிடாதா?" என்று கேட்டதும் எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. "ஆசிரியர் நான். ஏன் குடிக்கக் கூடாது? அடுத்து சிகரெட் புகைக்கக் கூடாது என்று சொல்லுவீர்கள். காதலி இருக்கக் கூடாது என்று சொல்லுவீர்கள். கெட்டவார்த்தைகள் பேசக் கூடாது என்றும் சொல்லுவீர்கள். ஆசிரியர்களுக்கு செக்ஸ் கூடாது என்றும் சொல்லுவீர்கள். ஆனால், நீங்கள் எல்லோரும் இவற்றை அனுபவித்துக் கொண்டு சந்தோஷமாக சாவீர்கள். வாத்தியார்கள் என்ன கேனையர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?" என்று சரமாரியாக அடித்ததும் எழுந்து தொலைவில் இருந்த வேறு மேசைக்கு சென்று விட்டார்.
இப்படித்தான் சமூகம் இருக்கிறது. இந்த எண்ணத்தை ஆசிரியர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை, நான் ஒரு தொழில்முறை ஆசிரியன். பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களிடம் பாடங்களை நியாயமாக நடத்திச் செல்கிறேன். தொடர்ந்து பாடம் சம்பந்தமான விஷயங்களை update செய்து கொள்கிறேன். விடைத்தாள்கள் திருத்துகிறேன். எனக்கான பிற கடமைகளை செய்கிறேன். நான்கரை மணிக்கு bell அடித்ததும் நடையைக் கட்டுகிறேன். இதில் புனிதம் எங்கு வந்தது? செய்கின்ற வேலைக்கு சம்பளம் வாங்கிக் கொள்ளும் எவனுக்கும் புனிதன் என்ற யோக்கியதையை யார் கொடுத்தது?
அப்பாக்களும் அம்மாக்களும் புனிதர்கள் என்று தைரியமாக நான் சொல்லுவேன். பிள்ளைகளை வளர்த்தெடுக்கவும், அவர்களைப் படிக்க வைக்கவும், கல்யாணம் செய்து கொடுக்கவும் அவர்கள் எந்த சம்பளமும் யாரிடமும் பெற்றுக் கொள்வதில்லை; பெற்றுக் கொள்ளவும் இந்த மாதிரியான அரசமைப்பில் வாய்ப்பு இல்லை. இதன் காரணம் கொண்டே, அப்பா அம்மா புனிதர்கள். பிரதிபலன் எதிர்பாராமல் எனக்கு ஒருவர் உதவி செய்தால், என்னைப் பொறுத்தவரை, அவர் புனிதர். முப்பது நாட்களுக்கு ஒருமுறை பத்தாயிரக் கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு "புனிதமான" தொழிலை மேற்கொள்ளுவது எப்படி சாத்தியம்?
புனிதர்கள் ட்யூஷன் எடுப்பார்களா? புனிதர்கள் மாணவர்களை தண்டிப்பார்களா? புனிதர்களின் மனோதர்மம் என்ன? புனிதர்கள் பற்றிய கதையளப்புகளுக்கு முடிவே இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு கணித ஆசிரியர். நல்லாசிரியர். கணிதப் புலி என்று நாணயமாகவே அவரைப் கணிப்பேன். இத்தகைய ஆசிரியர், கணக்குப்பாடம் சரியாக வராத ஒரு மாணவனை பதினொன்றாம் வகுப்பில் பெயிலாக்கி விட்டார். அந்த மாணவனின் தந்தையார் "எனது மகனை எப்படியாகிலும் பதினொன்றாம் வகுப்பில் பாஸ் செய்து தாருங்கள். அதற்கான மறு தேர்வு முறை ஏதேனும் இருந்தால் அந்த வாய்ப்பை எனது மகனுக்குத் தாருங்கள் என்று நிறுவனத்திடம் முறையிடுகிறார். ஆனால், இந்தக் கணித ஆசிரியர் மாணவனுக்கு எதிரான நிலையை எடுக்கிறார். "இந்த மாணவனை பனிரெண்டாம் வகுப்பிற்கு அனுமதித்தால், இவனுக்கு நான் கணக்குப் பாடம் எடுக்க வேண்டி வரும். இவன் கண்டிப்பாக பெயிலாகி விடுவான். என்னுடைய தேர்ச்சி சதவிகிதம் பாதிக்கும். என்னைத் தாளாளரும் உயர் அலுவலர்களும் கண்டிப்பார்கள்" என்றதான நிலைப்பாட்டை எடுக்கிறார். எனது கேள்வி என்னவென்றால், அந்த மாணவன் இன்னும் ஒரு வருடம் கழித்து பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறான். வரப்போகும் ஒரு வருடமும் இவரின் கண்காணிப்பில்தான் இருக்கப் போகிறான். இவர்தான் கணக்குப் பாடம் அந்த மாணவனின் வகுப்பிற்கு நடத்தப் போகிறார். இந்த மாணவன் அடுத்த வருடம் பெயிலாகப் போகிறான் என்பது நிச்சயமாகத் தெரிந்த இவர், வரவிருக்கும் இந்த ஒரு வருடத்தில் அந்த வகுப்பில் தான் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் முடிவு செய்து விட்டாரா?
உண்மையில், இவரை எனக்குப் பிடித்திருக்கிறது. இவர்தான் இன்றைய ஆசிரியர். தொழில் முறை ஆசிரியர். என் தொழிலை காப்பாற்றிக் கொள்ள, எனது புகழையும் பெயரையும் காப்பாற்றிக் கொள்ள எத்தனை உபாயங்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் நான் செய்வேன் என்பது தொழில் முறை ஆசிரியனின் உத்தி. நானும் இதைத்தான் செய்வேன். நானும் தொழில்முறை ஆசிரியனே. இதில் புனிதம் எங்கு வந்து தொலைத்தது?
நான் தொழில்முறை ஆசிரியன். புனிதன் அல்லன். புனிதர் பட்டம் வேண்டுபவன் அல்ல. என்னைப் பிற "புனிதர்களோடு" சேர்த்துவிட வேண்டாம். நண்பர்களே, அடுத்தமுறை நாம் எந்த மதுவருந்தும் விடுதியிலாவது சந்திக்க நேரலாம். நான் தொழிமுறை ஆசிரியன் என்பதை அப்போதும் நீங்கள் மறக்காதீர்கள். நீங்கள் ஒரு தச்சராகவோ, மாவட்ட ஆட்சியராகவோ, மருத்துவராகவோ, வணிகராகவோ இருக்காலாம். ஏன் குடிக்கிறீர்கள் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை. என்னையும் கேட்காதீர்கள்.
நான் புனிதன் அல்ல.
வெறும் தொழில்முறை ஆசிரியன்.

0 comments:

Post a Comment