"குண்டர்" காந்தி

| Thursday, September 14, 2017
திருமுருகன் காந்தி என்ற பெயர் எனக்குத் தெரியாது. மிக அண்மையில் முன்னிரவில் தனியார் தமிழ் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது கண்களில் கீழே கருவட்டம் கட்டியிருந்த ஒல்லியான இளைஞன் ஒருவர் பதட்டப்படாமல் ஏன் தமிழகத்தில் மீதேன் கிணறுகள் துளையிடப்படக்கூடாது என்று புள்ளி விவரங்களோடு விவரித்துக் கொண்டிருந்தார். அரசியல்வாதியின் சல்லியடி பேச்சில்லை அது. பக்கத்தில் அமர்ந்திருந்த பாஜக செய்தித் தொடர்பாளர் கேடி ராகவன் சம்பந்தமில்லாமல் இடைமறிக்க இந்த இளைஞர் உடனே தன் பேச்சை நிறுத்திவிட்டு அவரைக் கூர்ந்து கவனித்து இடைமறித்தலை உள்வாங்கிக் கொண்டு, பேச வாய்த்த தருணத்தில் மீண்டும் தன்னுடைய கருத்தை தெளிவாகச் சொன்னார்.
இதுதான் திருமுருகன் காந்தி எனக்கு அறிமுகமான நிகழ்வு. இந்தப் பையனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விழைவில் YouTube, facebook, Google உதவியுடன் தேடியதில் நிறைய காணொளிகளைப் பார்க்க முடிந்தது. பிரமிப்பாக இருக்கிறது. நியாய விலைக் கடைகளுக்கான smart card பின்னால் மறைக்கப்பட்டிருக்கும் ஆபத்தைப் பற்றிச் சொல்கிறார். இந்துமாச்சமுத்திரத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆபத்தைப் பற்றிச் சொல்கிறார். இலங்கையின் வடக்கு புலிகள் கைவசம் இருந்த வரையில் சீன மற்றும் அமெரிக்க கப்பல்கள் இந்தியக் கடற்கரைக்கு வராமல் இருந்ததை விளக்குகிறார். நெடுவாசல் பற்றி பேசுகிறார். பேசும் விடயங்களைப் பற்றி நிறைய homework செய்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
மே பதினேழு இயக்கம் என்பது இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதற்கான நினைவு தினம். மெரினாவில் கூடக்கூடாது என்பதுதான் தடையா? கைது செய்து சாயரட்சை விட்டிருக்கலாம். குண்டர் சட்டம் எதற்காக? நாட்டிலேயே கொஞ்சம்தான் படித்தவன் இருக்கிறான். அவனை எல்லாம் எண்ணி குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிட்டால், வெளியே குண்டர்கள் அதிகமாகிவிட மாட்டார்களா? ஏற்கனவே, பாஜக சார்பாக டிவியில் தோன்றும் செய்தித் தொடர்பாளர்களின் பேச்சுக்களைப் பார்த்தால், உள்ளே இருக்கும் திருமுருகன் காந்திக்கு பேச்சுத் துணையாக இருக்க வேண்டியர்வகள் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் வெளியே இருந்து கொண்டு அராத்து பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமுருகன் காந்தி ஒரு ரவுடி அல்ல. ஆனால், அரசின் பார்வையில், பயங்கரவாதியாகத் தோன்றுகிறார். மாற்றுக்கருத்து அரசுகளை எப்பொழுதுமே பயமுறுத்துகிறது. எவன் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் திருமுருகன் காந்தி போன்றோரின் கருத்துகளை கையில் இருக்கும் அலைபேசியின் மூலமாகக் கேட்க முடிகிறது. "அட... இந்தப் பையன் சொல்வது சரியாக இருக்கும் போலிருக்கிறதே..!" என்று வெகுஜனம் நினைக்கத் தலைப்படுவது ஒருவேளை அரசுகளை கோபப்படுத்தியிருகலாம்.
குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தியதற்குப் பதிலாக, குண்டர்கள் போலவே தோற்றம் கொண்டிருக்கும் தன்னுடைய ராசாக்களையும் ராகவன்களையும் நிறைய தெரிந்து கொள்ளச் சொல்லியிருக்கலாம். அவர்களுக்கு அரசியல் பால பாடங்களை - இன்றைய மக்கள் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் உள் விடயங்களைத் தெரிந்து கொள்ளச் சொல்லியிருக்கலாம்.
திருமுருகன் காந்தி - தொல் திருமாவளவன் - ரவிக்குமார் - மார்க்ஸ் அந்தோணிசாமி, இளங்கோ கல்லணை - சீமான் - தமிழன் பிரசன்னா என்ற மாதிரியானவர்களை பாஜக தங்களின் தத்துவங்கள் சார்பாக உருவாக்கியிருந்தால், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்று தோன்றுகிறது.
திருமுருகன் காந்தியை உள்ளே தள்ளியது எடப்பாடி பழனிசாமி அரசு; இதில் பாஜக எங்கே வந்தது என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது?
"என் அம்மாவிடம் பால் குடித்து 46 வருசங்கள் ஆகிறது."

0 comments:

Post a Comment