கங்கை நதியோரம்

| Thursday, September 14, 2017
இந்தப் பதிவை மிகவும் கவனமாக எழுத வேண்டியிருக்கிறது. எழுதாமல் கூட இருக்கலாம். ஆனாலும் இந்தியப் பாராளுமன்றம் தனது சாசனத்திலேயே உறுதி செய்து தந்திருக்கிறது. Freedom of expression எல்லோருக்கும் உண்டானது போலவே சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்களுக்கும், ஏன் எனக்குமே கூட உண்டு. தமிழிசைகள், ராஜாக்கள், மோடிகள் போலவே எல்லோரும் இங்கே தங்களின் கருத்துக்களை சொல்லலாம். இருந்தாலுமே கூட கொஞ்சம் பயமும் தயக்கமும் வந்து தொலைக்கிறது. அடிக்கடி இந்த பிஜேபி-காரர்கள் தோன்றி பேசும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருந்திருந்தால், இந்த பயமும் தயக்கமும் இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.
சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையை Social Scientist இதழில் முதன்முதலாக எழுதிய காலத்தில் அவருக்கு நான் சொல்லும் இந்தப் பயமும் தயக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ராமராஜ்ஜியம் மறுபடியும் நிறுவப்படாத காலம் அது. இருந்தாலுமே இந்தப் பதிவை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆவல், ஐஸ்க்ரீமை பார்த்த பள்ளிக்கூட சிறுவனைப் போல மேலோங்குகிறது. எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இருந்தாலுமே ஐஸ்க்ரீமைப் பார்த்தாகி விட்டதே. சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்களின் கட்டுரையைத்தான் சொல்கிறேன் - "அயோத்தியின் ராமன் - ஒரு மறுமதிப்பீடு."
இந்தப் பதிவை மிகவும் முக்கியமாக உணர்கிறேன். என்னுடைய தோழிகளிடம் இது பற்றிய எதிர்வினையைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தேவையானது. சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்கள் அயோத்தி ராமனை இந்தக் கட்டுரையில் மீள் வாசிப்பு செய்கிறார். ராமனைப் பற்றிய மக்களின் ஆழ் மனதில் காலங்காலமாக உறைந்திருக்கும் விழுமியங்களின் மீது புதிய வெளிச்சம் செலுத்தும் சுகுமாரி ராமனைக் கடவுளாகப் பார்க்க மறுக்கிறார். மனிதர்களின் - இவர்களின் விழுமியங்களின் வாயிலாகவே ராமனைப் பற்றிய தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார்.
ராமன் பதவியேற்பதற்கு வசதியாகத் தலைநகரில் இருந்து பரதன் அகற்றப்படுகிறான். இந்த வேலையை தசரதன் பார்த்துக் கொள்கிறார். முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக நடக்க வேண்டிய சம்பிரதாயங்களில் சிறப்பாக பங்கு கொள்கிறான் ராமன். ஆனால் கதை வேறு மாதிரி திரும்புகிறது. கைகேயியின் வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும். தன்னுடன் வர வேண்டாம் என்று தனது அன்பு மனைவியையும் தம்பி லட்சுமணனையும் தடுக்கிறான் ராமன். சீதை ஒப்ப மறுக்கிறாள். அடம் பிடித்துத்தான் அவனுடன் செல்கிறாள். ஆனால் இதே உரிமை லட்சுமணின் மனைவிக்கு மறுக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வேறு ஒன்றை சொல்ல வேண்டும். சிவனின் வில்லை ஒடித்து சீதையை மணக்கத் தகுதி பெறும் ராமன் மற்ற திருமணப் பரிசுகளாக ஆண்-பெண் அடிமைகளுடன், நூறு பெண்களையும் பெறுகிறான். (வால்மீகி ராமாயணம் 1/25/27). முடிசூட்ட வேண்டிய காலையில் அவனுக்கு கதை திரும்பிய விஷயம் சொல்லப்படுகிறது. "ஏன் என்னுடைய தந்தையானவர் இதை நேரில் என்னிடம் சொல்லவில்லை? பரதனுக்காக நான் எதையும் தியாகம் செய்வேன். எனது நாடு, சீதை, எனது உயிர் எதுவும் பரதனுடன் ஒப்பிடும்போது முக்கியமில்லை" என்று சொல்கிறான். மனைவியானவள் அவளுடன் சீதனமாகக் கொடுக்கப்பட்ட நூறு பெண்களுடன் ஒருத்தி என்பதாகத்தான் பார்க்கிறான். மனைவி என்பவள் பரிமாறிக் கொள்ளக்கூடிய பொருளாகப் பார்க்கப்படுகிறாள். தன்னுடன் வர வேண்டாம் என்று சீதையிடம் ராமன் சொல்லுவது கூட, அவள் அங்கேயே தங்கியிருந்து தன்னுடைய குடும்பத்தாருக்கு பணிவிடைகள் செய்து வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான். உண்மையில், "ஒரு பெண் தனது கணவனின் சுற்றத்துக்கு அளிக்கப்படுவதாக பிராமண இலக்கியம் கூறுகிறது." ஆனால், சீதை புரட்சிகரமானவள். தன்னுடைய சாதியின் மரபை எதிர்க்கத் துணிகிறாள். "நீ இல்லையெனில் சொர்க்கம் கூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. நீ பிரிந்தால் உயிரை விட்டுவிடுவேன்" என்று கூறுகிறாள். அவளது சாதியின், பண்பாட்டின் மீது அவளுக்கு ஏதும் பெரிய அபிப்பிராயமில்லை. ரொம்பவும் புதுமைப் பெண்ணாகத்தான் இருக்கிறாள். கணவனின் மீதுள்ள அன்பின் மிகுதியால் இளம் மனைவியானவள் என்ன பேசுவாளோ அதையே பேசுகிறாள். கணவனுடன் சென்று காட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பதினான்கு ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள்.
ஆனால், அவளுடைய கணவனோ அவளின் அன்பை மறுதலித்தவாறே இருக்கிறான். தன்னுடைய சகோதரன் லட்சுமணனுக்கு கொடுக்கும் இடத்தை சீதைக்குத் தர அவன் எப்பொழுதுமே ஆயத்தமாக இல்லை. இருவரையுமே அடிமையாகத்தான் அவன் கருதுகிறான். லட்சுமணனைப் பொறுத்தவரை, மூத்த சகோதரன் எப்படி நடந்து கொள்வானோ அப்படியே நடந்து கொள்கிறான். மூத்த சகோதரன் தந்தையின் பிரதிபலிப்பாகவே இந்துப் பண்பாட்டில் கருதப்படுகிறார்கள். இளைய சகோதரர்கள் மீது அவனுக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. நாடு திரும்ப வேண்டியது; பரதனிடமிருந்து அதிகாரத்தை வாங்கிக் கொள்வது என்பது பற்றி எந்தவித சந்தேகமும் அவனுக்கு என்றும் இருக்கவில்லை.
வனவாசத்தின் போது அடிக்கடி அசுரர்களைக் கொள்கிறார்கள் சகோதரர்கள். காரணம் என்னவென்றால், முனிவர்களின் - ரிஷிகளின் தவத்தைக் கலைக்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுத்தான். கீழ்பட்ட சாதியினரை உயர்சாதியினர் துன்புறுத்தும் மனநிலை இது என்று சுகுமாரி பட்டாச்சார்ஜி சொல்கிறார். வனவாசத்தின் முதல் நாளிலேயே ஒரு மகத்தான மனிதனை சந்திக்கின்றனர். குகன். ஆனால், அவனுடைய வீட்டில் விருந்துண்ண மறுக்கிறான் ராமன். வெறும் பழங்களை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், பின்னர் அனுசுயா மற்றும் பரத்வாஜர் குடில்களில் விருந்துண்ண எந்தத் தடையும் இல்லை ராமன் மற்றும் கம்பனியாருக்கு. சாதிதான் காரணமாக இருந்திருக்க முடியும் என்கிறார் சுகுமாரி பட்டாச்சார்ஜி. வர்ணாமசிர தருமங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை அல்லவா?
ஆனால், சீதையைப் பொறுத்தவரை, சுகுமாரி பட்டாச்சார்ஜி அவளை மிகுந்த அன்புள்ளம் கொண்டவளாக, கணவனின் மீது தீராத காதல் கொண்டவளாகத்தான் பார்க்கிறார். மாரீசனைத் துரத்திக் கொண்ட போன ராமன் வரவில்லை என்ற நிலையில் லட்சுமணனை அவள் கடிந்து கொள்வது கூட, ராமனின் மீது அவளுக்குள்ள அன்பின் மிகுதியால்தான். தன்னை மயக்க முயலும் ராவணனிடம் சொல்கிறாள்: "நீ என்ன விஷயத்தில் ஈடுபட்டுள்ளாய் என்று உனக்குத் தெரியவில்லை. குள்ள நரி நீ; பெண் சிங்கத்தின் மீது ஆசைப்படுகிறாய். நச்சுப் பாம்பின் வாயில் விரல் விட்டு அதன் பற்களைப் பிடுங்க நினைக்கிறாய்; கண்களில் ஊசியை செருகிக் கொள்கிறாய்; வெறும் கையால் சூரியனைப் பிடிக்க நினைக்கிறாய்; ஒரு கட்டையைக் கொண்டு சமுத்திரத்தைக் கடக்க நினைக்கிறாய்; ராமனின் மனைவி நான். என்னையா நீ மானபங்கப்படுத்தி விட முடியும்? துணியைக் கொண்டு நெருப்பைப் பிடித்து விட முடியுமா? (3/62/13). சுகுமாரி பட்டாச்சார்ஜியைப் பொறுத்த வரை, ராமனின் மீதுள்ள அன்பின் மிகுதியாலும், அவன் மீதுள்ள நம்பிக்கையாலுமே இந்த வார்த்தைகள் அவளிடமிருந்து வருகின்றன.
ஆனால், ராமனுக்கோ தன் மனைவியை விட, சகோதரனே முக்கியமாகத் தோன்றுகிறான். போரில் தன்னுடைய சகோதரன் மூச்சற்றுக் கிடக்கும் பொழுது, கதறி அழும் ராமன் தேவையில்லாமல் ஒரு ஒப்பீட்டில் ஈடுபடுகிறான். "என்னுடைய உயிர் சீதாவை மீட்பதில் இப்போது எவ்வாறு உதவும்? இவ்வுலகம் முழுவதும் தேடினால் சீதா போன்று வேறு மனைவி கிடைத்தாலும் கிடைப்பாள். ஆனால் வீரனாகவும் யோசனை சொல்பவனாகவும் இவனைப் போல ஒரு தம்பி கிடைக்க மாட்டான்." (6/49/5). இந்த வார்த்தைகளால் திருப்தி அடையாமல் மேலே சொல்கிறான்: "மனைவிகளும் நண்பர்களும் எளிதாகக் கிடைப்பது போல சகோதரன் எளிதாகக் கிடைக்கும் எந்த இடமும் நான் அறியவில்லை." (6/10/15) இதற்கான காரணமாக சுகுமாரி பட்டாச்சார்ஜி சொல்வதைப் பகுத்தல் தகும். "இதில் முக்கிய விஷயம் என்னவெனில், லட்சுமணன் ஒரு சகோதரன் மட்டுமல்ல; ஆணாக இருப்பதால் சீதைக்கு மேலான நிலையைப் பெறுகிறான்."
அடுத்ததாக, கிஷ்கிந்தா மீது தனது கவனத்தைத் திருப்பும் சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்கள் ராமன் பல பொய்யான வாதங்களை வாலியிடம் முன் வைக்கிறான் என்கிறார். "வேடர்கள் எப்போதுமே மறைந்திருந்துதான் தாக்குவார்கள்" என்றும் கூறும் ராமனிடம் வாலி கூறுகிறான்: "குரங்குகளின் மாமிசம் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆகையாலே நீ எப்படி ஏன் மீது மறைந்திருந்து அம்பெய்த முடியும்?" "உண்மையில், வாலியை நேராக மோதி வெல்ல முடியாது என்று ராமன் பயப்படும் அளவுக்கு வாலியின் வலிமை இருந்தது. எனவேதான், தன்னைக் காத்துக் கொள்ள வீரர்களின் மரபை மீறினான் ராமன்." (சுகுமாரி பட்டாச்சார்ஜி)
ராமனை முதலில் ஹனுமான் கண்டபோது, கட்டழகனாக, காளையைப் போன்று வலிமை உள்ளவனாக, யானையின் துதிக்கை போன்று கைகளைக் கொண்டவனாக பார்க்கிறான். ஆனால், இலங்கையில் சீதாவை மெலிந்த, பரிதாபமான, தேயும் நிலைவைப் போன்ற நிலையில் பார்க்கிறான். பிரிவு ராமனை ஒன்றும் செய்ய வில்லை. ஆனால், அவளையோ அது பாடாய்ப்படுத்துகிறது.
போர் முடிந்த நிலையில் ராமனை சந்திக்க விரும்புவதாக சீதை ஹனுமனிடம் சொல்கிறாள். ஆனால், அவளைக் குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து பிறகு அழைத்து வர விபீஷனினடம் சொல்கிறான் ராமன். பிறகு, அவள் பல்லக்கில் அழைத்து வரப்படுவதைப் பார்த்த ராமன், சினந்து சொல்கிறான்: "அவள் நடந்து வரட்டும்". (6/114/30). அவள் தீக்குளிக்க நேர்ந்தது பிறகான கதை. "அவளின் தூய்மை மீது தனக்கு தந்தேகம் இல்லை என்றும் மக்கள் சந்தேகப்பட்டு விடுவார்களோ என்ற பயம்தான் அவளைப் பிரியத் தூண்டியது என்றும் கூறுகிறான்." மேலும் அவளிடமே சொல்கிறான்: "நான் எனது எதிரிகளை எல்லாம் அழித்து உனது விடுதலையைப் பெற்று விட்டேன். எனது ஆண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. எனது பழிவாங்கும் நடவடிக்கை நிறைவடைந்தது. ஒரு தவறை நிவர்த்தி செய்துவிட்டேன். எனது சுயகட்டுப்பாட்டை நான் அடைந்துவிட்டேன்."
மற்றவர்களின் முன்னிலையில் அவளை அவமானப் படுத்தியவாறே இருக்கிறான் ராமன். "நான் செய்தது உனக்காக இல்லை; எனது வம்சத்தின் பெருமைக்காகவே. உனது ஒழுக்க நிலை இனியும் நம்பத் தக்கதல்ல. இனி நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீ எனக்குத் தேவையில்லை. உயர் குலத்தில் பிறந்த எந்த ஆணும் இன்னொருவன் இல்லத்தில் தங்கிய பெண்ணை ஏற்க மாட்டான். உன்னை ஏற்று எனது வம்சத்திற்குக் களங்கத்தை உண்டாக்க மாட்டேன்" என்று சொல்லும் அவன் இப்படியும் சொல்கிறான்: "பரதனையோ, சத்ருக்கனையோ, லட்சுமணனையோ யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள். ராவணன் உன்னைப் போன்ற அழகான பெண் மீது கை வைக்காமல் இருந்திருக்க முடியாது. நீ நாயினால் நக்கப்பட்ட வெண்ணெயைப் போன்றவள்." (6/115/15-24). ராவணன் விரும்பியதாலேயே சீதை நாயினால் நக்கப்பட்ட வெண்ணெயைப் போன்றவள் என்றால், சூர்ப்பனகையும்தான் ராமனின் மீது ஆசைப்படுகிறாள். அப்படியென்றால், ராமனும் நாயினால் நக்கப்பட்ட வெண்ணெயைப் போன்றவன்தானே என்று கேட்கிறார் சுகுமாரி பட்டாச்சார்ஜி. இதைவிட அலாதியான வேறு விஷயம் இருக்கிறது. ராமனின் பாட்டாபிஷேகத்தின் போது, இந்த சிறப்பான காட்சியைக் கண்ட ராமனின் மனைவிகள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தசரதனுக்கு பல தாரம். ராமனுக்கு? மேலும், ஒரு தார மணம் மட்டுமே ராமன் செய்திருந்தாலும் அதில் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவனுடைய தம்பிகள் அனைவருமே ஒரு தாரம் மட்டும் கொண்டவர்கள்தான்.
ராமன் சீதையை வெறும் உடலாக மட்டும் பார்க்கிறான். அந்நியன் ஒருவன் தீண்டிவிட்டதால் அவள் தனக்கு தகுந்தவள் அல்ல என்பது அவன் வாதம். ஆனால், அவள் அவனைக் காட்டிலும் அறிவில் சிறந்தவள். மனதையும் உடலையும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறாள். "நான் குழந்தையாக இருந்தபோது என்னை மணந்தாய். நான் உன்னுடனேயே வளர்ந்தவள். இருந்தும் என்னை அறிய மறுக்கிறாய். நான் உணர்வற்று இருந்தபொழுது ராவணனால் எனது உடல் தீண்டப்பட்டது. நான் அடக்கப் பட்டிருந்தேன். அதற்காக என்னை எப்படி குற்றம் சாட்ட முடியும்?" (6/116/6,9,10,15,16).
நாடு திரும்பிய பிறகும் அவளை சந்தேகப் பட்டவாறே இருக்கிறான் ராமன். தன்னுடைய குழந்தைகளை (லவா, குசா) தனக்குப் பிறகு அரியணை ஏற அவன் அனுமதிக்கவில்லை. அந்தத் தகுதியை பரதனின் வாரிசுகளுக்கே ராமன் தருகிறான். "சீதை தனது தூய்மையை நிரூபித்த பின்னரும், இஷவாகு வம்சத்தின் அரியணை அவளது வாரிசுகளுக்குக் கிடைக்கவில்லை." ராமனின் மீது தான் வைத்திருந்த அளவுக்கு மீறிய அன்பை அவன் உணர்ந்து கொள்ளாதது ஒருபுறம்; தொடர்ந்து தன்னை அவன் சந்தேகப்பட்டு வந்தது மறுபுறம்; மற்றவர்களின் முன்னிலையிலேயே தன்னை அவன் அவமானப்படுத்தி வந்தது இன்னொருபுறம். இவைகளைத் தாங்கவொட்டாமல், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தாயை வேண்டி தாயின் மடியிற்குள் செல்கிறாள் மண்ணின் புத்திரி.
இப்படியொரு வாசிப்பு ராமனைப் பற்றி சாத்தியமாகக் கூடிய நிலையில், இன்று சக்திவாய்ந்த அமைப்புகளால் கட்டமைக்கப்படும் "ராமராஜ்யத்தின்" தன்மையைப் பற்றி யாரே அச்சப்படாமல் இருக்க முடியும்? சூத்திரர்களும், பெண்களும் அடக்கப்படுவது ராம ராஜ்ஜியம். சம்புகன் சூத்திரன். பிராமணனுக்காக ராமனால் கொல்லப்படுகிறான். கருவுற்ற பெண் ராமராஜ்ஜியத்தில் தள்ளி வைக்கப்படுகிறாள். எந்த மாதிரியான ராமராஜ்ஜியத்தை நமக்குத் தர இன்று முயற்சி நடந்து கொண்டிருக்கிறது? உண்மையாகவே ராமராஜ்ஜியம் இங்கே நிறுவப்பட்டு விட்டால், பெண்களின் - சூத்திரர்களின் நிலைதான் என்ன? சம்புகர்கள் கொல்லப்படுவார்களா? பெண்களின் நிலை அந்த மாதிரியான ராஜ்ஜியத்தில் சீதையின் நிலையைப் போலத்தானா? தனக்கு கணவனால் வழங்கப்பட்ட பழியை எதிர்த்து சீதை போராடியே மடிந்து போகிறாள். இன்று ஒவ்வொரு பெண்ணும் வீட்டை விட்டு வெளியே சென்று வயிற்றுப் பிழைப்பிற்காக போராட வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த மாதிரியான பழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்? இந்த மாதிரியான நிலை பெண்களுக்கு சம்மதம்தானா? - இந்தக் கேள்விகள் sub-text-களாக சுகுமாரி பட்டாச்சார்ஜியின் புத்தகத்தைப் படிக்கும்பொழுது ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
இப்படியான ஒரு மதிப்பீட்டை செய்ய சுகுமாரி பட்டாச்சார்ஜி அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் சர்வகலா சாலையின் முன்னாள் சமஸ்கிருதப் பேராசிரியர். இந்தக் கட்டுரை Social Scientist இதழில் வெளிவந்தது. தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் கி.ரமேஷ் மொழிபெயர்ப்பில் சிறு ஏடாக வந்துள்ளது.

0 comments:

Post a Comment