டயஸ்போரா லிட்ரேச்சர்

| Thursday, September 14, 2017
இன்றைய தமிழ் தி ஹிந்துவில் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் வாராந்தரக் கட்டுரையில் ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியங்கள், பிரதேச மொழிகளில் எழுதப்படுபவைகளை விட சிறந்ததாக இருக்கின்றன என்று சல்மான் ருஷ்டி சொன்னதைக் குறிப்பிட்டு, அது உண்மை இல்லை என்றும் சல்மான் ருஷ்டி பிரதேச மொழிகளில் எழுதப்பட்டிருப்பவைகளைப் படித்திருக்க சந்தர்ப்பம் இல்லாத நிலையில் அவரது இந்த விமர்சனம் அசந்தர்ப்பமானது என்று சொல்லியிருக்கிறார். இதில் எனக்கு முழுவதும் உடன்பாடே. ருஷ்டி குறிப்பிடும் பிரதேச மொழிகளில் ஒன்றான தமிழில் எழுதப்பட்டு வரும் நவீன இலக்கியங்களில் ஓரளவு பரிச்சயம் உண்டு என்ற நிலையிலும், ஆங்கில இலக்கிய மாணவனாதலால் தொடர்ந்து அந்த மொழியில் வாசித்து வருபவன் என்ற முறையிலும் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கருத்தில் முரண்பட எதுவும் எனக்கு இல்லை.
முல்க்ராஜ் ஆனந்த், ராஜாராவ், ஆர்கே நாராயண் எனும் மும்மூர்த்திகள் தவிர ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கும் - வரும் இந்தியர்களில் - புதினம் மற்றும் அபுதினம் - பலர் "செமையான எழுத்துக்காரர்கள்" என்பதில் சந்தேகமில்லை. ஆனாலுமே கூட, தமிழில் நான் படித்த வரைக்குமே, (எனக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் கொஞ்சமும் பரிச்சயம் கிடையாது) அற்புதமான எழுத்துக்காரர்கள் உண்டு. அதேபோல, ஆங்கிலத்தில் மிகவும் சராசரியான எழுத்துக்காரர்கள் உண்டு. பல புத்தகங்களை முழுவதுமாக படிக்க முடியாமல் கைவிட்டிருக்கிறேன். ஐம்பது பக்கங்கள் கூட முடிக்க முடியாமல் ஆயாசப்பட்டிருக்கிற எண்ணற்ற ஆங்கிலப் புத்தகங்கள் எனது பரணில் இருக்கின்றன. இதைப் பற்றி நண்பர்கள் வினவும் பொழுது, professional hazard என்று சொல்லி முடித்து விடுவது வழக்கம். ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம்', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' போன்றவை மாதிரி ஆங்கிலத்தில் ஏதேனும் படித்திருக்கிறேனா என்று நினைவில்லை. Rohinton Mistry எழுதிய A Fine Balance நினைவில் எட்டிப்பார்த்தாலும் ஜெயகாந்தன் வேறு ஒரு ஜாதி. "ஒரு மனிதன் ஒரு வீடு உலகம்" எதிர்மறைக் கதாபாத்திரங்களே இல்லாத ஒரு படைப்பு. ஹென்றி வாசகருக்கெல்லாம் ஆதர்சமானவன். "இப்படி எல்லாம் நடக்க முடியுமா? இந்த மாதிரி மனுசர்கள் இருக்க முடியுமா?" என்று கேட்கப்பட்டதற்கு, ஜெயகாந்தன் சொல்லுவார்: "இப்படி எல்லாம் நடக்க வேண்டும்; இந்த மாதிரி மனிதர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட படைப்பு இது."
தமிழில் எழுதப்பட்டிருக்கிற ஆகச்சிறந்த படைப்புக்களை பட்டியலிட்டு, "இவைகளைப் பார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவைகளுக்கு கொஞ்சமும் சளைக்காத இந்தப் படைப்புக்களைப் பற்றி என்ன சொல்கிறாய்?" என்று ருஷ்டியிடம் சவால் விட ஆயாசமாக இருக்கிறது. அவரது அனுபவம் அப்படி இருக்கலாம். அவர் சொல்லியவற்றில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று பார்த்தால், இருக்கிறது. அதாவது, கேவலமான கழிசடைப் படைப்பும் மிக எளிதாக அச்சில் ஏறி விட முடியும் தமிழில். பதிப்பகச் செலவும் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால் எழுத்தாளரே தனது படைப்பை எளிதாகப் பிரசுரித்து சில நூறு பிரதிகளையாவது தள்ளிவிட முடியும். எனக்குத் தெரிந்த கவிஞர் ஒருவர் இருக்கிறார். நல்ல மனுஷன். பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு புதிய கவிதைத் தொகுதியைக் கொடுத்து படித்துப் பார், இப்போதுதான் பிரசுரித்தேன் என்பார். இதற்குப் பதிலாக, தனது மகளுக்கு நகை எடுத்திருக்கலாமே என்று தோன்றும். இந்த மாதிரி விஷயங்கள் ஆங்கிலத்தில் குறைவு.
அப்புறம், ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்காரர்கள் இடையில் குடிமிப்பிடி சண்டை குறைவு - ஒப்பீட்டளவில் இதைச் சொல்கிறேன். கட்சி கட்டிக்கொண்டு கொலைவெறியோடு மாற்று அணியைத் தாக்கிக் கொண்டிருக்கிற அளவு வேலையற்றவர்கள் அங்கு அதிகம் இல்லை.
ஜேகே, வண்ணநிலவன் போன்றவர்கள் எல்லாம் ருஷ்டி-யை விடவும் தகுதிவாய்ந்தவர்கள் என்று தைரியமாக சொல்லலாம். ருஷ்டி நல்ல எழுத்துக்காரர் அல்ல என்று இதற்கு அர்த்தமல்ல.
ஜேகே-யும் வண்ணநிலவனும் உலகதரத்துக்காரர்கள் என்று அர்த்தம்.

0 comments:

Post a Comment