ராஜா வீட்டு கலகக்காரன்: ஒரு சிறு குறிப்பு

| Thursday, September 14, 2017
Why I Am Not A Christian மற்றும் Marriage and Morals ஆகிய புத்தகங்களுக்காக தீராப் புகழ் கொண்டவர் பெர்த்ராந்து ரஸ்ஸல் (Bertrand Russell). இவரது Marriage and Morals புத்தகத்தை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். இதற்காகத்தான் இவருக்கு 1953ம் ஆண்டு நோபெல் வழங்கப்பட்டது. திருமண முறிவிற்கு நியாயமான காரணங்களாக மூன்றே மூன்றைத்தான் குறிப்பிடுகிறார். 1. தொடர்ந்த திருத்தமுடியாத குடி (habitual drunkenness), 2. மன நலப் பிறழ்வு (lunacy), மற்றும் 3. குழந்தையின்மை (infertility). இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் திருமண முறிவிற்கு காரணமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்கிறார்.
அண்மையில், ஒரு பிரபலத்தின் திருமண முறிவு சம்பந்தமான தாவாவில் மனைவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் தன்னை தினமும் கணவரின் வீட்டார் ஐந்து முறைகளுக்கு மேலாக காபி தயாரிக்கச் சொல்லிக் கொடுமைப் படுத்துவதாகவும், இது மனித உரிமை மீறல் என்றும், தான் திருமண முறிவு வேண்டும் என்பதான காரணங்களில் இது மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருந்ததைப் படித்த பொழுது, இந்தப் பெண்ணிடம் பெர்த்ராந்து ரஸ்ஸல் அவர்களின் புத்தகத்தைக் கொடுக்கத் தோன்றிற்று. இந்தப் புத்தகத்தில் இவர் தெரிவித்திருக்கும் பல கருத்துகள் இன்றைய அளவிலும் மிகவும் புரட்சிகரமானவை. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் சில நூறு ஆண்டுகள் கழித்துத்தான் இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முடியும். வட இந்தியாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்த யுகத்தில் (ஏதேனும் அப்படி இருந்தால்) அவர்கள் இதைப் புரிந்து கொள்ளலாம்.
United Kingdom என்கிற பெடரல் அமைப்பு நான்கு நாடுகளை உள்ளடக்கியது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை. பெர்த்ராந்து ரஸ்ஸல் அவர்களின் குடும்பம் வேல்ஸ் ராஜ குடும்பம். பிறந்தது 1872ம் ஆண்டு. இவரின் இளம் பிராயத்திலேயே தந்தை மரித்துப் போக, தாயாரின் பராமரிப்பிலும் பாட்டனாரின் கண்காணிப்பிலும் வளர்ந்தார். இவரின் பதின்மப் பருவம் வேதனைகள் நிறைந்தது. ஓரிரு முறைகள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணிதத்தின் மீதிருந்த காதலால்தான் தான் தப்பியதாக பின் நாட்களில் குறிப்பிட்டுள்ளார். புகழ் மிக்க ட்ரினிடி கல்லூரியில் கணிதப் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றினார். கணிதத்தின் மீதிருந்த காதலோடு, ஷெல்லியின் மீதும் காதல் தீ பற்றிக் கொண்டது. தீவிரமான இலக்கியவாதியாகவும் தன்னை வரித்துக் கொண்டார். இவரது அரசியல் நிலைப்பாடு சோஷலிசப் பின்னணி கொண்டது. தாராளமயவாதி. இவரது முதல் திருமணம் 1894ல் நடந்தது. நீண்ட பிரிவிற்குப் பின், முறிவுற்றது. பின்னர் அடுத்தடுத்த மூன்று திருமணங்கள். எல்லாமே முதல் திருமணத்தின் நிலையையே வந்தடைந்தன.
இவரது Principicia Mathematicia என்ற படைப்பு 1903ல் வெளிவந்து ரஸ்ஸலை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. முதல் உலகப் போரின் போது, இவரது அரசியல் நிலைப்பாடு பிரிட்டிஷ் அரசை சங்கடப்படுத்தியதால், பணிபுரிந்து வந்த கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டார். அமெரிக்காவை போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததை விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையிலடைக்கப் பட்டார். ரஷ்யப் புரதிசியின் துவக்க நிலையில் அதன் ஆதரவாளராக இருந்த பெர்த்ராந்து ரஸ்ஸல், முதல் உலகப் போர் முடிந்ததும், 1920ல் ரஷ்யா சென்றார். சுற்றுப் பயணத்தின் போதே அவரது நிலைப்பாடு மாறியது. லெனின் குறித்த தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட அவர், ரஷ்யாவை கடுமையாக விமரிசிக்கத் துவங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரை கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஜெர்மனிக்கு எதிராக தொடர்ந்து சஞ்சிகைகளில் எழுதி வந்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் தனது அடுத்த புத்தகமான A History of Western Philosophy-1945ம் ஆண்டு வெளியிட்டார். இதனுடைய ராயல்டி தொகை அவரது வாழ்நாள் முழுவதும் அவரை செல்வந்தராகவே வைத்திருந்தது. அறுபதுகளில், வியட்நாமில் தலையிட்டதற்காக அமெரிக்காவைக் கடுமையாக விமரிசித்தார். பாலஸ்தீனத்திலிருந்து இசரேல் வெளியேற வேண்டும் என்பதான கொள்கையை உடையவர். தொண்ணூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பெர்த்ராந்து ரஸ்ஸல் அவர்கள் 1970-ம் ஆண்டு காய்ச்சலால் சில நாட்கள் அவதியுற்று அதன் காரணமாக இயற்கை எய்தினார்.
இவருடைய சுய சரிதம் Autobiography என்ற பெயரிலேயே வெளிவந்தது. நான் படித்த சுய சரித நூல்களிலேயே சிறந்தது இது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

0 comments:

Post a Comment