WE BOUGHT A ZOO
எப்படி எப்படியோ நடந்திருக்க வேண்டியதெல்லாம் நடக்காமல் போன காரணம் நாம் வாய் திறந்து பேசாமல் இருந்ததுதானோ என்பதான தருணங்கள் எவ்வளவு தரம் நமக்கு நேர்ந்திருக்கிறது! தோல்வி, நிராகரிப்பு பற்றிய பயம் நம்மிடமிருந்து எத்தனை பிடித்தமானவைகளை, பிடித்தமானவர்களை விலக்கியிருக்கிறது! தோல்வியைப் பற்றிய பயமே சாகசத்தின் மீது நமக்கிருக்கும் பிரேமையை அழுத்தியிருக்கிறது. தோல்வியடைய, நிராகரிக்கப்பட தயாராகிவிட்டால், வெற்றியடைவதும், ஏற்றுக்கொள்ளப்படுவதும் சுலபமாகிவிடும். ஒரு அசட்டுத் தைரியம் தேவை இதற்கு. கொஞ்ச நேர அசட்டுத் தைரியம் போதும்.
"இருபது நொடி அசட்டுத் தைரியம்" சாதிக்கும் அற்புதங்களைப் பற்றிச் சுவையாக சொல்கிறது WE BOUGHT A ZOO என்ற ஹாலிவுட் படம். Matt Dimon மற்றும் Scarlet Johansson ஆகியோர் பிரதான கதை மாந்தர்களாக நடித்துள்ள படம். அண்மையில் மனைவியை இழந்த Benjamin Mee அவளின் நினைவுகளில் இருந்து தப்பிக்க மகன் மகளோடு வேறு இடம் தேடுகிறான். மகன் அச்சு அசலாக மனைவியைப் போன்றே இருப்பதால் அவனிடம் முகம் கொடுத்துப் பேச முடியாமல் தடுமாற, அப்பாவை தவறாக நினைத்து அன்புக்காக ஏங்கி, பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் கெட்ட பெயர் வாங்கி, பள்ளியை விட்டே துரத்தப் படுகிறான் மகன். மகளோடு பல்வேறு வீடுகளைப் பார்த்த தந்தை, இறுதியாக ஒரு வீட்டை தெரிவு செய்ய, பின்னாலிருக்கும் ஒரு கைவிடப்பட்ட மிருகக் காட்சி சாலையையும் வாங்கினால்தான் முடியும் என்று முகவர் விளக்க, குழம்பிப் போகும் தந்தை, அங்கிருக்கும் மயில்களோடு மகள் கொஞ்சிப் பேசுவதைப் பார்த்த தருணத்தில், அதை வாங்க முடிவு செய்கிறான்.
மிருகக்காட்சி சாலை அங்கே தொடர்ந்து பணி புரியும் சில நபர்களால் போதிய பணம் இல்லாத காரணத்தால் மோசமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. 28 வயதே ஆனா Kelly Foster என்பவள் தலைமையில் பணியாட்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை பற்றிய முன் அனுபவம் கொஞ்சமும் இல்லாத Benjamin Mee ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தாலும், இதை மிருகங்களிடம் அன்பு இல்லாத வேறு எவரிடமோ விற்று விடுவானோ என்ற கவலையும் மிகுகிறது இவர்களுக்கு. அரசுத் துறை அதிகாரி மிருகக் காட்சி சாலையை மீண்டும் திறக்க பல்வேறு நிபந்தனைகளை விதிக்க, அவைகளை நிறைவேற்ற பெரும்தொகை தேவைப்படுகிறது. தன்னுடைய மனைவி $84,000 மதிப்புள்ள முதலீட்டை தனக்காக விட்டுச் சென்றிருக்கிறாள் என்பது தெரியவர, அதை மிருகக்காட்சி சாலையின் மேம்பாட்டுக்காக செலவு செய்ய முடிவு செய்கிறான் Benjamin Mee. மொத்த அணியும் கடுமையாக உழைத்து, ஒரு நாள் பொதுமக்களுக்காக ZOO திறக்கப்பட இருக்கும் நாளின் முன் அந்தியில் இந்த நூற்றாண்டின் அதிகபட்ச மழை பெய்து, அடுத்த நாளின் சாத்தியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
அடுத்த நாள் சூரியனோடு விடிவது ஒரு புதிய தொடக்கத்தின் குறியீடாகும். மக்கள் சாரி சாரியாக வரிசையில் நிற்கிறார்கள். மக்களோடு ஒரு புதிய வெளிச்சம் மிக்க வாழ்க்கையும் Benjamin, Kelly உள்ளிட்ட ZOO நபர்களுக்கு உறுதிப்படுகிறது. ஊடாக, Benjamin - Kelly இடையே ஒரு உறவு மலர்வதற்கான சாத்தியம், மகனுக்கும் தந்தைக்குமான உணர்வுச் சிக்கல்கள், மகனுக்கும் அவன் வயதையொத்த Kelly-யின் உறவுப் பெண்ணிற்கும் இடையே மலரும் நட்பு, ஏழே வயது நிரம்பிய சிறுமியின் பார்வையின் வழியே காண்பிக்கப்படும் உலகம் என்று பல subtexts படத்தின் பரிமாணங்களை பிரம்மாண்டப்படுத்துகின்றன.
ஒரு இடத்தில் Kelly கேட்கிறாள்: "முன் அனுபவமே இல்லாத நீ, ஏன் இந்த மிருகக் காட்சி சாலையை வாங்கினாய்?" Benjamin சொல்கிறான்: "Why not?"
"இருபது நொடி அசட்டுத் தைரியம்" என்னென்ன விடயங்களையெல்லாம் சாதிக்கிறது!
0 comments:
Post a Comment