கண்ணை நம்பாதே!

| Monday, January 6, 2014
 
THE WAY WAY BACK

நம்மை நாமே கண்டுபிடிப்பதுதான் ஆகப் பெரிய காரியம் என்பதாக எல்லா தத்துவ ஞானிகளும் சொல்கிறார்கள். கேள்வியே கேட்காமல் நம்மால் நம்ப முடிகிற விடயங்களில் இது ஒன்று. Know Thyself என்கிறார் சாக்ரடீஸ். ஆனால், அது என்ன அவ்வளவு எளிமையான காரியமா? நம்மை நாம் கண்டுபிடிக்க இந்த உலகம் அனுமதிப்பதே இல்லை. இது ஒரு அதிகாரம் பொறுத்த காரியம் என்று படுகிறது. ஒருவன் தன்னை தெரிந்து கொண்டு விட்டால் அவன் சமூகத்தை மதிக்க மாட்டான். மதிக்கத் தேவையில்லை. தெரிந்து கொண்டு விட்டவர்கள் யாரும் மதித்ததாக வரலாறு இல்லை. இது நடந்து விடுமோ என்ற பயத்தில் சமூகம் நம்மை உன்னிப்பாக கண்காணிக்கிறது.

The Way Way Back என்ற படம். 2013-ல் வெளிவந்தது. 14 வயது சிறுவன் தன்னை அறிந்து கொள்வதைப் பற்றிய படம். கதை மாந்தர்கள் அனைவருமே இந்தப் பையன் வழியாக தங்களை அறிந்து கொள்கிறார்கள். Duncan என்ற இந்தப் பையனின் அம்மா கணவனை விவாக ரத்து செய்துவிட்டு தனது புதிய ஆண் நண்பருடனும், மகள் மற்றும் மகனுடனும் Cape Cod என்ற கடற்கரை நகரத்திற்கு விடுமுறையை கழிக்க வருகிறாள். இவளுடைய புதிய ஆண் நண்பன் Duncan-ஐ emotional abuse செய்வதில் மிகுந்த விருப்பமடையும் வக்கிர புத்திக்காரனாக இருக்கிறான். ஒன்றில் இருந்து பத்து வரையிலான எண்கள் கொண்ட அளவுமானியில் உனக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பாய் என்று அம்மாவின் புதிய நண்பன் கேட்க, Duncan ஆறு என்று சொல்கிறான். ஆனால், காதலனோ 'மூன்று'தான் கொடுக்க முடியும் என்று கறாராக சொல்லிவிடுகிறான். அம்மா, அப்பா மற்றும் சுற்றியிருக்கும் அனைவரின் தன்னை நோக்கிய நடவடிக்கை காரணமாகவே, ஏற்கனவே குணா கமலஹாசன் போல ஆகிவிட்டிருக்கும் Duncan தனது புதிய அப்பாவின் ஈவிரக்கமில்லாத இந்த மதிப்பீட்டால் ரொம்பவும் மனமுடைந்து குன்றிப் போகிறான்.

விடுமுறைக்கு வந்த புதிய ஊரில் புதிய மனிதர்கள். உறவுகள் சிதைந்து போனதால் அதை மறைக்க போதைக்குள் தஞ்சம் புகுந்த பரிதாபமான மனிதர்கள், இயல்பான வாழ்க்கைக்குள் வர முடியாமல் ஏங்குவதும், இயல்பாக இருப்பவர்களை பார்த்து பொறாமையுடன் அவர்களையும் தங்களைப் போலவே ஆக்க முயல்வதும் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. Duncan இவர்களிடம் இருந்து தப்பிக்க தினமும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக விலகிப் போக முயன்றாலும், மிதிவண்டி திரும்பத் திரும்ப அவனை அந்த மன ஊனமுற்ற மனிதர்களிடமே கொண்டு வருகிறது. ஒருநாள், தற்செயலாய் அந்த ஊரில் இருக்கும் ஒரு water park உள்ளே செல்ல, சில ஆரோக்கியமான மனம் கொண்டிருக்கும் மனிதர்களை காண நேருகிறது. Owen அதிலே முக்கியமானவன். அந்த water park-ன் பணியாளர்களில் ஒருவன். ஒரு கட்டத்தில் Owen சொல்கிறான்: "மற்றவர்கள் உனக்கு மார்க் போடுவது உன்னுடைய பிரச்சினையல்ல. அது அவர்களின் மார்க்; அவர்களின் பிரச்சினை. இப்படியெல்லாம் எளிதாக மற்றவர்களை நம்பி விடாதே."

பணியாளர்களில் ஒருவனாக சேர ஆசைப்படும் Duncan, அங்கே சிறந்த பணியாளராக மலர்வது Owen சொன்ன வார்த்தைகளை நம்பியதால்தான். Owen தன்னை விட பல வயது குறைந்த, தன மகனைப் போன்று இருக்கும் Duncan-ஐ நண்பனாக நடத்தியதுதான் Duncan தன்னை கண்டுபிடிக்க காரணம்.

இதற்கிடையே, இவனின் அம்மா தன் புதிய காதலனின் புதிய அவதாரங்களைக் காண நேர்கிறது. புதிய புதிய பெண் நண்பிகள் வேண்டுவதான அவனின் குணத்தை மாற்ற முடியாது என்று கண்டுகொண்ட அம்மா விடுமுறையை திடீரென முடித்து ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறாள்.

ஊரை விட்டு நகரும் அந்த காரில் இருந்து இறங்கி ஓடுகிறான் Duncan. தன்னுடைய water park-ல் வந்து நிற்கும் அவன், Owen-னிடம் சொல்கிறான்: "Thank you, Owen. For everything."

Duncan தன்னை கண்டுபிடித்து விட்டான். நாம்?


0 comments:

Post a Comment