நயக்கேடு - குறிப்பு வரைக

| Tuesday, January 14, 2014
Notes On A Scandal என்ற படம் 2006-ல் வெளிவந்தது. ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சமூகம் பொருளாதாரத் தளங்களால் ஆனது. ஒரு தளத்தில் இருப்பருக்கு மற்றத் தளங்களின் மீது இயற்கையான ஆர்வம் உண்டு என்பதை நம்பலாம். பணக்கார யுவதி ஏழையான தன் காதலனுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதை இதன் கண் புரிந்துகொள்ள முடியும். மற்ற தளங்களில் இருப்பவர்கள் மீதான ஒரு கவர்ச்சியும், தானும் அவர் போல இல்லையே என்ற ஏக்கமும், அதே சமயத்தில் அவர் மேல் ஒரு பொறாமையும் இருப்பது மனித குணாம்சத்தின் வினோதமே. நாம் நேசிப்பவரும், வெறுப்பவரும் பல சமயங்களில் ஒரே நபராகத்தானே இருக்கிறார்கள்! நாம் நேசிப்பவர் நம்மை நேசிக்கவில்லை என்றானதும், அவரையே அழித்துவிடத் தீர்மானிக்கிறோமே, இது மனித வினோதமா, குரூரமா? எண்ணிக்கை அற்று நீளும் மர்மங்களில் இதுவும் ஒன்று.

Barbara இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறப் போகும் வரலாற்று ஆசிரியை. கண்டிப்புக்குப் பெயர் போனவர். திருமணம் ஆகாமலேயே வாழ்ந்து விட்டவர். மிகவும் அந்தரங்கமான உறவுக்காய் ஏங்கியே வாழ்பவர். வளரிளம் பருவத்தினருக்கே உரிய தீவிரமான ஏக்கத்துடன் தான் நேசிக்கும் நபருக்காய் எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனம் அவருள் எப்போதும் உயிர்ப்புடன் ஒளிந்து கொண்டிருக்கிறது. தன்னை விட, தன மகள் வயதே கொண்ட, மிகவும் வயது குறைவான Sheba ஓவிய ஆசிரியையாக பள்ளிக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அவரின் மீது மையலாகிப் போகும் Barbara, அவருடன் ஒரு அந்தரங்கமான அளவில் உறவாட ஏங்குகிறார். (அவர் ஓரினச் சேர்க்கையாளரா என்பது பற்றி படத்தில் எங்குமே சொல்லப்பட வில்லை. ஆனால், அவர் அப்படியான உறவை தன வாழ்நாளில் முதல் முறையாக தன் அந்தரங்க தோழியிடம் ஏற்படுத்திக்கொள்ள தீவிரமாக முயல்கிறார்; திரும்பத் திரும்ப தோல்வியே கிடைத்தாலும், அந்த நிராசையானது ஒரு வன்மமான காதலாக அவருள் வளர்ந்து யாருமே தடைபோட முடியாதபடி விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளது. நட்பா, காதலா, காமமா என்று அவராலேயே இனம் காண முடியாதபடி உள்ளே கனன்றடிக்கும் இந்தப் புயலில் சிக்குண்டு நிலைகுலைந்து போவது அவர்தான்.)

ஒருநாள் இரவு தன் புதிய தோழி Sheba பத்தாம் வகுப்பு மாணவனுடன் பாலுறவில் ஈடுபடுவதை பார்த்துவிட்ட Barbara, தோழியை blackmail செய்து, தான் விரும்பும் அவளுடனான ஒரு வினோத உறவுக்கு அவளைப் பலவந்தப் படுத்துகிறார். இந்த விடயம் வெளியில் தெரிந்தால், தன் குடும்பம், வேலை, குடும்பத்தின் பெயர், கணவன், குழந்தைகள், தன் விடலைக் காதலன், அவனின் குடும்பம் - என்று அனைத்துமே தூள் தூளாகும் என்றுணரும் Sheba, தன்னால் முடிந்தவரை Barbara-விற்கு உகந்தவளாக தன்னை ஆக்கிக் கொள்ள முயல்கிறாள். Down's Syndrome என்ற மன-உடல் சோர்வு நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் தனது ஏழு வயது மகன் முதல் முறையாக பள்ளியில் ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறான் எனும் எழுச்சியில், நிகழ்விற்கு குடும்பத்தோடு புறப்பட இருக்கும் Sheba-வை, Barbara வழிமறித்து, தனது பூனை இறந்துவிட்டதால் தான் சோகமாக இருப்பதாகவும், ஆறுதல் சொல்ல வீட்டிற்கு வா என்றும் வற்புறுத்துகிறார். Sheba மறுக்க, காதல் பழிவாங்கும் வன்மமாக மாறி, மாணவனுடனான Sheba-வின் காதல் பற்றிய செய்தியை பள்ளியில் கசிய விடுகிறார் Barbara. பள்ளியின் முதல்வர் Barbara-விடம், "நீ ஏன் இந்த விடயத்தை முதலிலேயே சொல்லவில்லை?" என்று கேட்க, உடனடியாக விருப்ப ஓய்வு வேண்டும் என எழுதிக் கொடுத்துவிட்டு, வேலையை உதறிவிட்டு வெளியே வரும் Barbara, Sheba-வை கடைசிவரை தன் அந்தரங்க சிநேகதியாக தக்க வைக்க காட்டும் தீவிரம், எவருக்கும் சற்று பயத்தை ஏற்படுத்தும்.

Sheba கைது செய்யப்பட்டு, பத்து மாதங்கள் சிறை தண்டனை பெறுகிறார். கையறு நிலையில் ஒரு பூங்காவிற்கு வரும் Barbara, அங்கு ஒரு அழகான இளம் பெண்ணைப் பார்த்ததும், அவளை தன் சிநேகதியாக ஆக்க முயலும் முதல் புன்னகையில், படம் முடிகிறது.

Barbara ஏன் அப்படி இருக்கிறார்?
தெரியாது. ஆனால், சிலர் அப்படித்தான்.

Barbara-வாக Judi Dench, Sheba-வாக Cate Blanchett -நேற்று Golden Globe விருதைப் பெற்றிருப்பவர் - நடித்திருக்கிறார்கள். செய் நேர்த்திக்காக பார்த்தேயாக வேண்டிய படம் இது.

0 comments:

Post a Comment