சாலிங்கரும் சரவணபவனும்

| Monday, January 6, 2014


நேற்றைய தி ஹிண்டு ஆங்கிலப் பதிப்பில் பிரதீப் செபாஸ்டியன் அவர்களின் ஒரு சிறிய நினைவுக் கட்டுரை வந்திருக்கிறது. மிகவும் சுவாரஸ்யமானது. இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க நவீனங்களில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதும், தங்களின் மகனோ மகளோ படித்துவிடுவாரோ என்று பெற்றோர் பதைபதைப்புடன் பயந்ததும், இளசுகள் தங்களின் வழிகாட்டியாகவே ஆக்கிக் கொண்டதுமான Catcher in the Rye இன்றும் சமூகக் குளத்தில் கல் எறிந்தபடியே இருக்கிறது. பொருள்முதல் வாதத்தை கேலி செய்து கொண்டே, அந்தத் தத்துவம் வாக்குக் கொடுத்த எதுவுமே சாத்தியப்படாமல், வெறுமை மட்டுமே சூழ்ந்துவிட்ட இந்த வாழ்க்கையில் கைவிடப்பட்டதாக உணர்ந்த அமெரிக்க இளைஞன், தன்னைச் சுற்றியுள்ள எல்லா அமைப்புக்களையுமே தூக்கியெறிய ஆவேசம் கொள்கிறான். குடும்பம்,பள்ளிக்கூடம், கோவில் போன்ற அமைப்புக்கள் மனிதனுக்கு வேண்டிய அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தரவில்லை. மாறாக, மிஞ்சியிருக்கும் கொஞ்சத்தையும் கெடுத்துவிடுவதாகவே இருக்கின்றன. அமைப்பின் அதிகாரம் தன குரல்வளையை நெரிப்பதாக உணர்ந்த ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் Catcher in the Rye-ல் தம்மையே கண்டனர்.

இப்புதினத்தில் மையக் கதை மாந்தரான, பள்ளியிலிருந்து இடைநின்ற அல்லது துரத்தப்பட்ட, Holden உச்சரிக்கும் கெட்டவார்த்தைகளை தம் மகனுக்கும் மகளுக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று கோவிலுக்குப் போன பெற்றோர்கள் அமெரிக்காவில் ஒரு சமயம் ஆயிரக்கணக்கில் இருந்ததாக சமகால வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. தனது தங்கையை [Phoebe] மட்டுமே பரிசுத்தத்தின் மிச்சமிருக்கும் ஒரே அடையாளமாக காணும் Holden, இந்தச் சமூகம் ஒரு அழுகிப் போன, அவலம் குவிந்துள்ள குப்பை என்று முடிவு கட்டுகிறான்.

பாரியமான அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்புதினத்தையும், இன்னும் பல நல்ல படைப்புக்களையும் இவ்வுலகிற்கு கொடையளித்தவரும், முழுக்க முழுக்க தனது எழுத்தை 'அமெரிக்கனிசம்' சூழுமாறு பார்த்துக் கொண்டவருமான JD Salinger, இந்திய ஆன்மீக, முக்கியமாக வேதாந்த, தத்துவத்தில் ஆர்வமுள்ளவர் என்பதும், தென்னிந்திய விடயங்களில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பதும், அறிவதற்கு ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் உள்ளது.

கடன் வாங்கிய புத்தகத்தைத் திருப்பித் தர வேண்டுமென்பதால், கூடப் படிக்கும் வெளிநாட்டுத் தோழியுடன் துணைக்குப் போகும் பிரதீப் செபாஸ்டியன், அந்த அமெரிக்க வீதியில் JD Salinger-ஐ எதிர்பார்த்திருக்க முடியாதுதான். உணவருந்த விடுத்த அழைப்பை நாகரீகமாக மறுக்கும் JD Salinger, பிரதீப்பிடம் ஒரு சிறிய தாளில் ஒரு பதார்த்தத்தின் பெயரை எழுதிக் கொடுத்து, 'இதைச் சாப்பிட்டு பாருங்கள், அற்புதமானது!" என்று சொல்கிறார்.

அதில் எழுதப்பட்டிருந்த பெயர்: ரச வடை.

0 comments:

Post a Comment