திண்ணை 2

| Monday, January 13, 2014
13-01-2014 

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா! 

இன்றைய Times of India செய்தித்தாளில் ஒரு சுவராஸ்யமான துணுக்கு வந்திருக்கிறது. Statistical Stylometry என்ற மொழியியல் துறை, ஒரு நூலில் இடம் பெரும் வார்த்தைகளின் இலக்கண இயல்புகளை அடிப்படையாக வைத்து அதன் 'படிக்கும் தன்மையை' [readability] எடை போட முயல்கிறது. Bestseller ஒவ்வொன்றுக்குமான குணங்கள் மற்ற பெரு வெற்றி புத்தகங்களோடு ஒத்திருக்கிறதா என்று இலக்கண ரீதியில் ஆராய முயலும் இத்துறை, பல புதிய ருசிகரமான தகவல்களைத் தருகிறது. பெரும்பாலான bestsellers, வினைச் சொற்கள், வினையுரிச் சொற்கள்[adverbs] மற்றும் வேற்று மொழி வார்த்தைகளை தவிர்க்கின்றன என்று இத்துறை lexical statistics-ஐ அடிப்படையாக வைத்து அறுதியிடுகிறது. மேலும், அம்மாதிரியான bestsellers வெளிப்படையாக அர்த்தங்களை வெளிப்படுத்தும் வினைச் சொற்களை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் இவ்வாய்வு தெரிவிக்கிறது. wanted, took, promised, cried, cheered போன்ற ஸ்தூலமான வினைச் சொற்கள் வாசகருக்கு அதிகம் 'தொந்தரவு' கொடுக்கின்றன போலும். cliche தொடர்களையும் bestsellers அதிகம் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது. மாறாக, bestsellers கூட்டிடைச் சொற்களை[conjunctions] அதிகம் பயன்படுத்துகின்றன. மன ரீதியான வினைகளை குறிக்கும் சொற்களான recognize, remember போன்றவைகள் அதிகமாக இவைகளில் காணப்படுவது ஒரு ஆச்சர்யமே.

வெற்றிபெறும் ஒரு சினிமாவிற்கு என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை பற்றிய சர்வேக்கள் நிறைய நடக்கும் இந்நாட்களில், புத்தகங்களுக்கென statistics அடிப்படையில் இப்படியான ஒரு lexical frequency count சுவராஸ்யமான முயற்சியாகவே படுகிறது. ஆங்கில மொழியின் ஆகச்சிறந்த அம்சமே, இத்தகைய புதிய, முன்னெடுப்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதே. இது போன்ற சற்று ஜனரஞ்சகம் கொண்ட செயற்பாடுகள் சாமான்யனையும் மொழி சார்ந்த, வாசிப்பு உட்பட, காரியங்களில் ஈடுபட வைக்கும்.

ஒரு தமிழனான எனக்கு ஆங்கிலத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

----

12-01-2014 


                                                                                    வார்த்தை என்ற மந்திரம்
 
'தமிழில் இந்த ஆண்டின் சொல் எது?' என்ற கட்டுரை பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதி இன்றைய தி ஹிந்து தமிழ் பதிப்பில் வந்திருக்கிறது. ஹர்ஷத் மேத்தா 1993-ல் பயன்பாட்டிற்கு மீள கொண்டு வந்த வார்த்தை scam என்பது. திருமதி டயானா அவர்களின் மர்மம் மிக்க இறப்பு paparazzi என்ற பதத்தை மீளும் பயன்பாட்டிற்கு கொணர்ந்தது. 2004-ம் ஆண்டைய திசம்பர் மாதம் tsunami என்ற வார்த்தையை பரவலாக்கம் செய்தது. [அன்று காலையிலே கூட, முதல் செய்தியாக ஆங்கில காணொலி ஊடகங்கள், NDTV 24X7 உட்பட, tidal waves என்ற சொற்றொடரைத்தான் பயன்படுத்தின]. தற்போது selfie என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும், 2013-ம் ஆண்டு ஆங்கில மொழியில் இந்த வார்த்தைதான் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்களைக் கொண்டுள்ள இக்கட்டுரை, நமக்கு சொல்வது என்னவென்றால், மொழி சார்ந்து சுவையான விவாதங்களும், அக்கறை மிகுந்துள்ள காரியங்களும், பதிப்புகளும் வெகுஜன அளவில் ஏராளமாக ஆங்கிலத்தில் நடந்து வருவது அதன் புதுமைக்கும் உயிர்ப்புக்கும் முக்கியமான காரணம் என்பதாகும். தமிழில் ஏன் இது போன்ற விவாதங்கள், சர்ச்சைகள், காரியங்கள், வாசகர் வட்ட அளவில் தொடங்கி பல்கலைக் கழகம் வரையிலான ஆய்வுக் கட்டுரைகள், மொழிசார் வெளியீடுகள் இல்லை என்ற வருத்தம் திரு.ஜம்புலிங்கம் அவர்களை இதை எழுதத் தூண்டியிருப்பது நல்லதே.

மொழியின் தன்மையை, புதுமையை, பயன்பாட்டை தீர்மானிப்பது சாமான்யரே. பண்டிதர்கள் இல்லை. மொழியை எப்படி பயன்படுத்துதல் தகும் என்ற prescriptions, மொழியை வளர்க்க முடியாது. திரு.ஜம்புலிங்கம் அவர்கள் நல்ல ஒரு விவாதத்தை தொடங்கியிருக்கிறார்.


----

11-01-2014

பயணங்கள் முடிவதில்லை

யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஒரு நீண்ட பயணம் ஆயிரம் புத்தகங்களின் உண்மைகளை வைத்திருக்கிறது என்று. அதுவும் சாலைப் பயணங்களைப் பொருத்தவரை புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமாயிருக்கலாம். எல்லா வகை மனிதர்களையும், நிலங்களையும், வாழ்வு சூழல்களையும் போகிற போக்கில் பார்க்க முடிகிறது. விரும்புகிற இடத்தில் நின்று விட்டேத்தியாக அவதானிக்க, காட்சிகளின் நிறத்தில் சுவராஸ்யம் கூடுகிறது.

சேலம் தொடங்கி பெங்களூரு , டும்கூர், சித்திர துர்கா, ஹம்பி, இலுக்கல், பிஜாப்பூர், சோலாப்பூர், திம்பூர்ணி, அஹமத் நகர் வழியாக ஷீரடி செல்ல கார் பயணத்தில் 22 மணி நேரம் பிடிக்கிறது. மெதுவாக காரை ஓட்டுவது முக்கியம். சாலையின் இரு மருங்கிலும் தங்களின் வேலைகளின் பொருட்டு நகரும் மனிதர்கள் தாங்கள் சார்ந்த ஊரின், கலாச்சாரத்தின் பிம்பங்கள். அவர்களின் தோற்றம், உடை, சாலையோரக் கடைகளில் கிடைக்கும் பதார்த்தங்கள் போன்ற எல்லாமே அந்த நிலவியலின் குணங்களை அன்னியருக்குக் காட்டிக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.

சேலத்திலிருந்து இரவில் கிளம்பும் ஆயிரக்கணக்கான லாரிகள் பெருஞ்சுமைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு இலக்கு நோக்கி மெல்ல நகரும் நத்தைகளாக குன்றுகளை மலைகளை பின்னுக்குத் தள்ளியபடியே முன்னேறுகின்றன. கருப்பு நிற சாலைகள் வண்டிகளின் ஒளிக்கற்றைகளால் பழுப்பேறிய இரும்பு நீள் கம்பிகளே போன்று முடிவேயில்லாமல் நீடிக்கும் விவாதங்களை நினைவு படுத்துகின்றன. ஊர்களை உடைத்துப் போட்டு பொருளாதாரத்தை சீர்படுத்த கட்டப்படுகிற நான்கு வழிப் பாதைகள், பிரித்த ஊர்கள், உறவுகள் கேட்கும் கேள்விகளை தாங்க மாட்டாது, வேட்டைக்குப் பயந்த ஒரு கருப்பு நாகத்தைப் போன்று அச்சமாக அடுத்த ஊர்களுக்கு ஓடிய வண்ணமே உள்ளன.

ஒரு பயணத்தின் கேள்விகள் பதிலே இல்லாதவை.

----

0 comments:

Post a Comment