கடல்புரத்தில்...

| Thursday, December 19, 2013
"அம்மா கடலம்மா, எங்க ஒலகம் நீயம்மா"
 எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதில் மாயமாகிப் போன தமிழனுக்கு அவனுக்குப் பயன்தராத எல்லாமே தமிழ் துவேஷமாக தெரிகிறது. தமிழ் பள்ளிகூடத்திற்கு மகனை மகளை அனுப்பினால் எதிர்காலம் பாழ் என்று நினைக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் தோராயமாக ஏழு கோடி பேர் என எதிர்பார்க்கலாம். இந்த ஏழு கோடி பெரும் ஓட்டுப்போட, இவர்களிடம் ஒட்டு வாங்க "தமிழ்" கோஷம் தேவை. தமிழுக்கு பெரும் சகாயம் செய்யும் பெருந்தகைகள் அமைதியாக மொழியியல் சேவை செய்து கொண்டிருக்க, ஒட்டு வங்கி அரசியல்வாதிகள், பட்டி மன்ற இரைச்சல் பேச்சாளிகள், பெரும்பாலான அரசுப் பள்ளிக்கூட, கல்லூரி தமிழ்ப் பண்டித பெருமக்கள் தமிழுக்காக விடுக்கும் அறைகூவல்கள் மூன்றாம் தரமானவை. எனக்குத் தெரிந்த எல்லா அரசு பள்ளி மற்றும் கல்லூரி தமிழ் ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். இதுதான் படித்த தமிழ் இவர்களுக்கு செய்யும் சேவை. தமிழ் இங்கே வெறும் அரசியல் கூச்சலாக மாறி ரொம்ப நாளாகிறது. தமிழ்த் தொண்டு செய்வோர் அமைதியாக இலக்கியத்திலும், கணினி துறையிலும், அறிவியலிலும் தமிழை ஈடுபடுத்தி வருவது, நம்மை கொஞ்சம் ஆறுதல் படுத்தும் விஷயம்.
அடுத்து கவலை அளிக்கும் விஷயம் "தமிழன்". தமிழன் எது செய்தாலும் சரி. கேள்வியோ, எதிர்வாதமோ ஒருவனை தமிழ்த் துரோகி ஆக்கி விடும். "துரோகி" ஆகப் பயந்து, கேள்வி கேட்காமல் இருப்போர் இங்கு ஆறு கோடி பேராவது தேறும். 2013ம் ஆண்டு 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் இலங்கை அரசிடம் கைதானார்கள். இலங்கையின் அட்டகாசம் இதுவென்றும், சிங்கள அரசை தடுத்து நிறுத்தாத மைய அரசு "தமிழர் விரோதி" என்றும் பிரச்சாரங்கள் விண்ணைப் பிளக்கின்றன. மன்மோகன் சிங் தடுமாறிப் போகிறார். இதைப் பற்றி ஊடகத்திடம் பேசும் புதுவையைச் சேர்ந்த நடுவண் அரசு அமைச்சர் நாராயணசாமி தெளிவாக விளக்காமல் உளறுவது "தமிழ் நேயர்களுக்கு" ரொம்பவும் வசதியாக போய்விட்டது. 
நடப்பதுதான் என்ன? தமிழ் மீனவர்களில் "well-equipped long liners" வைத்திருப்போர் சர்வதேச கடல் எல்லையை [International Maritime Boundary Line] மீறி இலங்கை கடல் எல்லைக்குள் போகும்போது அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையினரின் கடமை. அதை செய்யத் தவறினால், வட இலங்கை தமிழ் மீனவரின் வாழ்வுரிமையை காக்கத் தவறியதாக, இலங்கையின் மைய அரசின் மீது, புதிதாக வட இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரனின் தலைமையிலான TNA பிராந்திய ராஜ்ஜிய அரசு குற்றச்சாட்டை தொடுக்கும் அபாயம் உண்டு. இலங்கை நடுவண் அரசு அத்தகைய குற்றச்சாட்டை, மனித உரிமை மீறல் சம்பந்தமான ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதால் சர்வதேசியத்திடம் ஏற்கனவே வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், நிச்சயமாக விரும்பாது. IMBTஐ தாண்டும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவரை கைது செய்வதைத் தவிர கொழும்புக்கு வேறு வழியே தற்சமயம் இல்லை. 
இதில் தமிழ் நாட்டு மீனவர் தரப்பு என்ன சொல்கிறது? [1] தமிழ் நாட்டு மீனவர்கள் தெரியாமல் சர்வ தேச எல்லையைக் கடந்து விடுகிறார்கள். பதில்: இது வடிகட்டின பொய்யாகும். இன்று கடலில் நெடுந்தூரம் செல்லும் அனைத்து மீன்பிடி படகுகளிலும் GPS வழிகாட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. [2] தமிழ் நாட்டு மீனவர்கள் சர்ச்சைக்குரிய கடல் பிரதேசங்களில் கடந்து முப்பது வருடங்களுக்கு மேலாக மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களை அந்த இடங்களில் திடீரென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று சொன்னால் எப்படி? பதில்: 2009க்கு முன் இலங்கையில் இருந்த நிலைமை வேறு. அங்கே இனவெறிக்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த நிலையில், தமிழ் நாட்டு மீனவர்கள் சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் மீன் பிடிக்க முடிந்ததற்கு காரணம் இலங்கை அரசின் கண்காணிப்பு இல்லாததால் மட்டுமே. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இந்த "திடீர்" என்ற வாதம் செல்லாது. [3] இது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம். பதில்: இது வட இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் கூட. 
இதற்கு தீர்வுதான் என்ன? திரு.விக்னேஸ்வரன் அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மற்றும் இலங்கை, இந்திய நடுவண் அரசுகளின் அதி உயர் பிரதிகள் அமர்ந்து பேசி, பக்க சார்பு இல்லாமல், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் உதவியோடு அறிவுபூர்வமாக அணுகி எடுக்க வேண்டிய முடிவாகும். 
அதுவரையில், தமிழ் ஊடகங்கள் [காணொலி, இணையம் மற்றும் அச்சு] பொறுமை காக்கலாம். தங்களுடைய "செய்தி விற்பனை" குறித்து கவலையே வேண்டாம். "பிரியாணி" விமர்சனமும், படக்குழுவின் செவ்விகளும் இடத்தையும் நேரத்தையும் அடைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றன. போதாதென்றால், "ஹன்சிகாவிற்கும் சிம்புவிற்கும் சண்டையாமே, உண்மையா?" பார்த்துக் கொள்ளும். 
[இந்த இடுகைக்குத் தேவையான தரவுகள் மீரா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய A SEA OF CONFLICT கட்டுரையில் இருந்து பெறப்பட்டுள்ளது]
 

0 comments:

Post a Comment