ஜான் ஸ்டீன்பெக் - நோபெல் ஏற்புரை (1962)

| Sunday, December 22, 2013
ஜான் ஸ்டீன்பெக் - நோபெல் ஏற்புரை (1962)
இந்த மிகப்பெரும் பெருமைக்குரியதாக எனது படைப்புக்களைக் கண்ட ஸ்வீடிஷ் அகடெமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மிகவும் மதிக்கின்ற பெரும் படைப்பாளிகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்த விருது எனக்கு தரப்பட்டிருப்பது சரியானதுதானா என்ற சந்தேகம் வலுப்பினும், இந்த விருதினைப் பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்வதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்.

இலக்கியத்தின் தன்மை மற்றும் போக்கு ஆகியவற்றைப் பற்றி தனது அரும்பெரும் கருத்துக்களை இங்கு விருது பெரும் கனவான்கள் சொல்வது வாடிக்கைதான் என்றாலும் கூட, இந்த சமயத்தில் இலக்கியகர்த்தாக்களின் முக்கிய கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றி உரையாடுவதுமே பயன்தரும் என நான் நினைக்கிறேன்.

கானகமே அஞ்சி ஒடுங்கும் முகமாக பெருங்குரலெடுத்து, எமக்கு முன்னே இங்கே இப்பெருமைக்கு தங்களை உரித்தாக்கிக் கொண்ட இலக்கியச் சிங்கங்களைப் போன்றே கர்ஜிப்பது இந்த மேடைக்குப் பொருத்தமானதே. எலிகளைப் போல க்ரீச்சிடுவோருக்கு இந்த மேடை இல்லை.

தேடுவோர் யாருமே நுழையாத ஆலயங்களுக்குள்ளே நின்று தங்களது வெற்று வேண்டுதல்களை இறைஞ்சித் திரியும் சாமியார்கள் தம்மையும் பிறரையும் உயர்த்துவதற்கு தவறிய மேடைகளின் மீதேறி மதம் பிடித்து கூவுவதல்ல இலக்கியம்; சாரமற்றதால் விரக்தியாகி துறவிமார்கள் தங்கள் வெற்றுப் பகட்டை வெளிக்காட்டும் விதமாய் விளையாடும் ஆட்டமுமல்ல இலக்கியம்.

இலக்கியத்தின் வயதும், மனித பேச்சின் வயதும் ஒன்றே. பேசிப் பேசியே இலக்கியம் வளர்கிறது. மனிதனின் தேவை காரணமாகவே தன்மை மாறி மாறி தன்னை அது வளர்க்கிறது.

பாணர்களும், பாடகரும், கவிகளும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறானவர்களல்ல. ஆழிசூழ் காலந்தொட்டே மனிதம்தான் அவரின் பணிகளை, கடமைகளை, பொறுப்புக்களை தீர்மானித்திருக்கிறது.

குழப்பத்தால் விளைந்த சோம்பல் மற்றும் துயரத்தால் ஆன ஒரு காலத்தை மனிதகுலம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது. இங்கே எனக்கு முன்பாகவே நின்ற எமது முன்னோடி வில்லியம் ஃபாக்னெர் இந்த துயரத்தை மனிதம் மொத்தத்தையே பீடித்திருக்கும் பெரும் பயம் என்றும், இத்தகையதோர் பெரும் அச்சம் ஆன்மாவிலிருந்து கிளைத்ததல்ல என்றும், மனிதனின் இதயம் தன்னுடனேயே நடத்தி வரும் மோதலால்தான் இந்தப் பேதம் விளைந்தது என்றும், இலக்கியப் படைப்பாளிகள் இந்த குழப்பத்தைத்தான், பிடித்து உலுக்கும் இந்த அச்சத்தைத்தான், தமது எழுத்துக்குள் பிரதியெடுக்க வேண்டும் என்றும், இதுவே எழுத தகுதியானது என்றும் கூறினார்.

மற்ற எவரையும் விட மனிதனின் பலம், பலஹீனம் ஆகியவையை ஃபாக்னெர் நன்கறிவார். இந்தப் பயத்தைப் பற்றிய புரிதலையும் தீர்வையும் எழுத்தின் வழியே உருவாக்குவதன் மூலமே படைப்பாளி தனது இருப்பை நியாயப்படுத்த முடியும் என்பதையும் அவர் அறிவார்.

இது புதிதும் அல்ல. ஆதியிலிருந்தே இதுதான் படைப்பாளியின் பணி. நம்முடைய மன்னிக்க முடியாத தவறுகளை, மீள முடியாத தோல்விகளை தமது எழுத்தால் படைப்பாளி தோலுரிக்க வேண்டும்; நம்முடைய கேவலமானதும், பேராபத்துக் கொண்டதுமான ரகசியக் கனவுகளை தனது எழுத்தால் படைப்பாளி பொதுப் பார்வைக்கு கொண்டுவரக் கடவான். உலகத்திடம் இவைகளை நிர்வாணமாக்கிக் காட்டுவதின் மூலம் மட்டுமே பரிசுத்த நிலை சாத்தியம்.

மேலும், மனிதனின் உயர் குணங்களையும் பற்றி படைப்பாளி எழுதுவான். மனித ஆன்மாவிற்கும் இதயத்திற்கும் இயல்பாகவே உள்ள சாதிக்கும் ஆற்றலை படைப்பாளி கொண்டாடி மகிழ்வான். தோல்வியில் மனிதன் காட்டும் பெருந்தன்மையைப் பற்றியும் அவன் எழுதுவான். வீரம், நேசம் மற்றும் அன்பு மனித குணங்களே என்பதையும் எழுதுவான். நம்மைச் சூழ்ந்திருக்கும், முடியாததாய் தோன்றும் பயம் மற்றும் துயரத்திற்கெதிரான போரில், இவன் எழுத்துத்தான் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை. இவன் பேனாவே நம் ஜெயக்கொடி.

மனிதன் தன்னை மாசற்ற பொன்னாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உண்மையாகவே இல்லாதவனுக்கு இலக்கிய உலகத்தில் இடமில்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

நம்மைப் பீடித்திருக்கும் ஆகப்பெரிய இந்த அச்சமானது, மனிதனது அறிவு முன்நகரும் போது நடந்திருக்கும் மோதலில் உருவானதுதான்; செய்திருக்கவே கூடாததை எல்லாம் நாம் செய்ததும் இன்னொரு காரணமே.

இந்த பெரும் பயத்தை நாம் வென்றேடுத்தே ஆக வேண்டும். முடியாது என்று நம்ப வேண்டியதில்லை. இதிலே படைப்பாளிக்கு இருக்கும் பங்கு ஏனையரைவிட மிகப் பெரியதாகும்.

நண்பர்களே, மனித குலம் எவ்வளவு பாரியமான இடர்களைச் சந்தித்தே இவ்விடம் சேர்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். இயற்கைப் பேரழிவுகள் பல நம்மை தடம் தெரியாமல் ஆக்கிவிடக் கூடிய தருணங்களைத் தாண்டி வந்திருக்கிறோம். இதுவரை மனிதன் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையும் விட, பெரிய வெற்றியைப் பெற்றுவிடக்கூடிய இந்தத் தருணத்தில் நமது போராட்டத்தைக் கைவிட துணிவது மடமையே ஆகும்.

நூல்கள் பல பெரும் சிந்தனையாளர் என்று வருணிக்கும் ஆல்ஃப்ரெட் நோபெல் அவர்களுடைய சரிதத்தை அண்மையில் படித்தேன். மனதின் குரலோ கணிப்போ கட்டுப்படுத்தாமல், உருவாக்கும் நன்மைக்கும் அழித்தொழிக்கும் தீமைக்கும் இடையில் சார்பென்றும் இல்லாமல் வெடித்துக் கிளம்பும் பேராற்றலை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர் நோபெல். தன்னுடைய கொடைகளில் சிலவற்றை மனிதன் துஷ்பிரயோகம் செய்ததைக் கண்ட நோபெல், தான் மனிதனின் கடைசி அழிவிற்குக் காரணமாய் இருந்துவிட்டதை உணர்ந்திருக்கக் கூடும். எல்லாவற்றையும் சந்தேகப்படுபவராக நோபெல் மாறியிருந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்; நான் அவ்வாறு கருதவில்லை. நெறிப்படுத்தும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும், பேராசையைத் தடுக்கக்கூடிய கருவி ஒன்றை கண்டுபிடிக்க முனைந்த நோபெல், அதை மனிதனின் இதயத்திலும் ஆன்மாவிலுமே கண்டார். இந்த நோபெல் பரிசுகள் எந்தெந்த துறைகளில் வழங்கப்படுகிறது என்பதை கவனிக்கும்பொழுது, நோபலின் மனம் நமக்கு புலனாகிறது.

தொடர்ந்து பல்கிப் பெருகும் மனிதனின் அறிவுப் புலத்திற்காய் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த மனிதனையும் அவன் சகவாசங்களையும் அவனுள் புகுந்து அறிவதே இலக்கியத்தின் பணியாகும். மேலும், மனிதத்திற்கு தூணான சமாதானத்தை தேடிச் சென்று அடைவதற்கான அவனது தீரமான முன்னெடுப்புக்களைப் பாராட்டியும் இவ்விருதுகள் வழங்கப்படுவது, மற்றெல்லாவற்றையும் விட பொருத்தமானதே.

அவர் இறந்து ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே, இயற்கை ஆற்றலின் உயர்பட்சம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இந்தத் தருணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் நாம்?

கடவுளுக்கென்று மட்டுமே இருந்த சில அரும் பெரும் சக்தியை நாம் பறித்துக் கொண்டாகி விட்டது. கடவுள் தன்மையே கொஞ்சமும் இல்லாமல், குரங்கின் கையில் கிடைத்த தென்னம் பழமாய், இந்த மொத்த உலகிற்கும் அருள்பாலிக்கும் தேவலோக அதி உயர் அரியாசனத்தில் அமர்ந்துவிட்ட நாம், எந்த வகையில் இவ்வையகத்தை வழிநடத்தப் போகிறோம்?

அழிவையும் வாழ்வையும் இத்தருணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே முடிவு செய்யும்: நம்மை நாமே அறிய இதுவே தருணம்.
பயணத்திற்கான துணிவை எந்த தேவதையிடமும் துதித்துப் பெற வேண்டியதில்லை; அதுவும், கடவுளின் அரியாசனத்திலேயே அமர்ந்துவிட்ட பிறகு. இதற்கான துணிவை நம்மிடமிருந்தே பெற்றாக வேண்டும்.

இனி, மனிதனே தனக்கு தோழனும், துரோகியும் ஆவான். 
விவிலியத்தில் புனிதர் ஜான் அருளியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்வது இவ்விடத்தில் பொருத்தமே.

"எல்லாம் முடிந்த பிறகு,
அங்கே
ஆதி சப்தம் மிஞ்சும்:
அது மனிதனுக்காய்
மனிதனுடனேயே
இருக்கும்."

அனைவருக்கும் நன்றி.

0 comments:

Post a Comment