வாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல் ராவ்.
இப்பொழுதுதான், கொஞ்ச நாளைக்கு முன்புதான் அரை நிஜார் போட்ட பள்ளிக்கூட பையனாக இருந்தேன். சிறுவனாக இருக்கையிலேயே திடீரென்று வளர்ந்தாகி விட்டது. நம்முடன் பள்ளிக்கு வந்தவர்கள், பெஞ்சில் பக்கத்தில் உட்கார்ந்தவன், மைதானத்தில் கூட விளையாடியவர்கள் என்று பால்யத்தின் கரைகளில் நம்மோடு மீன் தூண்டிலோடு காத்திருந்தவர்கள் இப்போது எங்கே, என்னவானார்கள் என்று யோசிக்கும்போது, காலம் எவ்வளவு நிலையற்றது என்ற ஆயாசமே மேலிடுகிறது.
பள்ளிப் பருவத்தில் காலையில் தினத்தந்தியில் வரும் "கன்னித்தீவை" படிப்பதற்காக சீக்கிரமாகவே பள்ளிக்கு கிளம்பி, நேராக போகாமல், செட்டியார் டீக்கடை இருக்கும் சுற்று வழியாக சென்று, செட்டியாரிடம் திட்டு வாங்கிக்கொண்டே, "கன்னித்தீவு" இருக்கும் இரண்டாம் பக்கத்திற்காக காத்திருந்து, மெயின் ஷீட்டை படித்தவர் அதை பெஞ்சின் மீது வைத்த நிமிடத்தில் சோற்றுக் காக்கையென பறந்து போய், பறித்து சிந்துபாத்தின் அன்றைய சாகசத்தை படித்து மகிழ்ந்த நாட்களுக்கு இணையாக ஏதும் பின் நாட்களில் வரவேயில்லை.
சனிக்கிழமைகளில் குமுதம், வெள்ளிக்கிழமைகளில் விகடன், புதனில் கல்கி - அப்புறம் சாவி நாள், குங்குமம் நாள், இதயம் பேசுகிறது நாள் என்றெல்லாம் வாரத்தின் நாட்களின் பெயரே பத்திரிக்கைகளை வைத்துத்தான் என்றிருந்த பள்ளிக்கூட ஆண்டுகள் எங்களது வாழ்வின் பொக்கிஷமான வருஷங்களாகும். குமுதம் சிறந்ததா, கல்கி சிறந்ததா என்ற சண்டை மிகவும் தீவிரமாகி பக்கத்து வீட்டு பிராமணப் பையனோடு ஒரு வருஷத்திற்கும் அதிகமாக பேசாமல் இருந்ததும் ஞாபகம் வருகிறது. அப்புறம், அடுத்த வருடம் ஆடிப் பண்டிகையின் போது, ராத்திரியில் குகைப் பாலம் அருகே நடந்த பாட்டுக் கச்சேரிக்கு கூட்டமாக தெரு விடலைகள் எல்லோரும் போன போதுதான் மறுபடியும் பேசினோம். தூறல் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த அந்த முன் ராத்திரியில் புதுப்பித்த நட்பின் வியர்வையோடு அவன் கையை கெட்டியாக வலிக்குமளவு பிடித்துக்கொண்டே போனதும் வந்ததும் அதன் புதுமை குறையாமலேயே நினைவுக்கு வருவது, கடந்த காலம் நம் மீது செலுத்த முடிகிற ஆதிக்கம்தானே தவிர வேறென்ன?
நினைத்துப் பார்த்தால், இவையெல்லாம் நம்மின் வரலாறு. இவையெல்லாம்தான் நாம். அப்படியிருந்துதான் இப்படி ஆகியிருக்கிறோம். நமது அன்றைய பழக்க வழக்கங்கள் இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை எனும்போது, பால்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் தெரிகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமா?
இதைத்தான், திரு.விட்டல் ராவ் அவர்களின் "வாழ்வின் சில உன்னதங்கள்" ரொம்பவுமே விலாவரியாக சொல்கிறது. மேட்டூரில் பிறந்து அரசு அலுவலர்க்கான குடியிருப்பில் பால்யத்தை நகர்த்தி, தொலைபேசித் துறையில் வேலை கிடைத்ததின் பொருட்டு சேலம், மெட்ராஸ் என்று நகர்ந்த விட்டல் ராவ் பழைய பத்திரிக்கைகளின் தீராக் காதலனாக மாறி, தன்னுடைய ஜன்ம கடனாக முடியாப் பயணத்தை மூர் மார்க்கெட் நோக்கியும் மற்றும் மெட்ராஸின் பிளாட்பாரங்களுக்கும் அமைத்துக் கொண்டவர். மூர் மார்க்கெட்டின் பழைய புத்தக விற்பனையாளர்கள் விட்டல் ராவின் நண்பர்களாகவும், அவரது வாழ்வின் தவிர்க்கவொண்ணா கதாபாத்திரங்களாகவும் உருவானது, அவர் வாழ விரும்பிய, வாழ்ந்த ஆண்டுகளின் பெருங்கதையாக இந்தப் புத்தகத்தில் விரிகிறது. "பதினாறு கட்டுரைகள், இரண்டு காலம் (column) அச்சமைப்பில் சற்றே பெரிய, தரமான செக்சன் பைண்டு போட்ட 219 பக்கங்கள் கொண்ட பழைய புத்தகங்கள் பற்றிய சமாச்சாரங்கள் கொண்டது" என்று முடித்துவிடக்கூடிய புத்தகமல்ல இது.
நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சார்ந்த, படிப்பதை தனது அப்பாவைப் பார்த்து பழகிய, அவரைப் போலவே தனக்கான புத்தகங்களை பழைய புத்தகக்கடைக்காரர்களிடம் கறாராக பேசி வாங்கிய, அவைகளின் பக்கங்களில் இருந்து தன்னை உருவாக்கிக் கொண்ட மனிதரின் கதையுமாகும் இது. சொல்லப்போனால், இது விட்டல் ராவின் சுயசரிதம்தான். எவ்வளவு சுவையானதாக இந்த சஹ்ருதயரின் வாழ்க்கை இருந்திருக்கிறது? ஒவ்வொருவரும் தனது விருப்பத்திற்காகவே, விருப்பத்தின்படியே வாழ்கிறார்கள் என்ற எனது நம்பிக்கையை விட்டல் ராவ் மேலும் வலுப்படுத்துகிறார். இவரது வாழ்க்கையில் சேலம் நடேச ஆச்சாரி, மூர் மார்க்கெட் ஐரே, நாயக்கர், முதலியார் மற்றும் ஆழ்வார் ஆகியோர் வெறும் புத்தகக் கடைக்காரர்கள் மட்டுமல்ல, இவரின் அறிவு, திறன், கலா ரசனை, அனுபவம் ஆகிய எல்லாவற்றுக்குமே பொறுப்பேற்றுக்கொண்டவர்கள். யோசித்துப் பார்த்தால், இவர்களைப் போன்றவர்கள் மானுட வளர்ச்சிக்கே பெரும் பங்காற்றியவர்கள். அறிவை, கலையை, கலாச்சாரத்தை சேகரித்து, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு, விரும்புவர் விலை கொடுத்து வாங்க முடிந்த அளவுக்கே விற்று பேணியவர்கள். விற்றவர்களுக்கு இது தெரியுமோ என்னவோ, ஆனால் இவர்களிடம் போணி செய்த விட்டல் ராவ் போன்றவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
முதல் அத்தியாயம் மூர் மார்க்கெட் பற்றியது. நம்மை கையைப் பிடித்து மார்க்கெட் முழுவதும் சுற்றிக்காட்டுகிறார். பழைய புத்தகங்கள் வாங்கியது மட்டுமல்லாமல் தமது தலைமுறைச் சொத்தான மூன்று பேனாக்களையும் ரிப்பேர் செய்து கொள்ளும் விட்டல் ராவ், மூர் மார்க்கெட் எரிந்தது தற்செயலானது அல்ல என்று மிகவும் வருத்தமாக சந்தேகப்படுகிறார். Colliers, The Saturday Evening Post போன்ற பத்திரிக்கைகள் பற்றி எழுதியிருக்கும் கட்டூரைகள் மிகவும் சிறப்பானவை. இதழியல் எவ்வளவு நேர்மையாகவும் தீவிரமாகவும் செய்யப்பட்டு வந்தது என்பதை அறிகிறபோது, எனக்கு விட்டல் ராவ் அவர்களின் சமவயதுகாரனாக இல்லாமல் போய்விட்டேனே என்ற ஏக்கம் பெரிதாகிறது. சிறுகதைகளுக்கு இந்த இதழ்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன, சிறுகதை மேதைகள் எத்தனை பேர் இவைகளில் எழுதியிருக்கிறார்கள் என்ற பிரமிப்பு பெரியது. William Saroyan, John O Hara, John Wayne, William Humphrey போன்ற சிறுகதை மன்னர்கள் The Saturday Evening Post-ல் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். விட்டல் ராவ் ஒரு தேர்ந்த ஓவியர் என்பதால், இந்த இதழ்களில் வெளிவந்த சிறப்பான ஓவியங்களைப்பற்றியும், புகழ் பெற்ற ஓவியர்களைப்பற்றியும் விரிவாக கூடவே சொல்லிச் செல்கிறார்.
இதே போன்று LIFE பத்திரிக்கை பற்றிய கட்டூரையும் சிறப்பானதே. அந்தப் பத்திரிக்கை கலை மற்றும் இலக்கியத்த்திற்கு கொடுத்திருந்த முக்கியத்துவம் சிலாக்கியமானது. இதில் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இதன் அத்தியாயங்களின் நடு நடுவே புத்தகங்கள் சேகரிக்க தான் பட்ட கஷ்டங்கள், அவற்றைப் பாதுகாக்க தான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது என்பதெல்லாம் "புத்தக சேகரிப்பாளர்களுக்கு" மிகவும் அவசியமானவொன்று. புத்தக பைண்டர் பற்றிய கட்டூரை அபூர்வமான ஒரு கலையைப் பற்றியதும், லாபமே தராத அந்தக் கலையை சிலர் மிகத் தீவிரமாகவும் பக்தியுடனும் செய்து வந்தது பற்றியும் அறிகிற பொழுது, மனிதம்தான் எவ்வளவு ஆச்சர்யங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்ற பிரமிப்புத்தான் மென்மேலும் வளர்கிறது. Encounter மற்றும் The Illustrated Weekly of India இதழ்களை சேகரித்தது பற்றிய இரண்டு கட்டூரைகளும் புத்தகத்தின் மற்ற கட்டூரைகளுக்கு சுவாராசியத்தில் சற்றும் குறையாதவையே. கூடவே, Imprint மற்றும் The Sunday Times பற்றிய கட்டூரைகளையும் சொல்லலாம். A.S.ராமன் காலத்திலிருந்து தொடங்கி குஷ்வந்த் சிங் வழியாக M.V.காமத் மற்றும் பிரித்திஷ் நந்தி என்று முடியும் சுதந்திரத்திற்கு பின்னான ஆண்டுகளில் The Illustrated Weekly of India-ன் வரலாறை மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார் விட்டல் ராவ்.
ஓவியர் எம்.எஃப்.ஹுசேன் அவர்களை மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் செருப்பு போடாத வெற்றுக் கால்களோடு கமலஹாசனின் சினிமா பேனரை வரைந்துகொண்டிருந்ததை பதினோரு மணி மட்டை வெயிலில் பார்த்து பரவசப்பட்டு அவரோடு சம்பாஷித்திருக்கிறார் விட்டல். இங்கே, விட்டல் அவர்களின் சமூக விமர்சனம் ஈட்டியாக பாய்கிறது. ஹுசேன் அவர்கள் எப்பொழுதுமே சுதந்திரமான உணர்வு கொண்ட சைத்ரீகர் என்றும், பல காலம் முன்பே கடவுளரை நிர்வாணமாய் வரைந்தவர்தான் என்றும், அப்பொழுதெல்லாம் சும்மாயிருந்த இந்திய சமூகம் இப்பொழுது மட்டும் இவரை இந்தியாவை விட்டு ஏன் துரத்தியது என்றும், இந்திய சமூகத்திற்கு நிர்வாண சித்தரிப்புக்கள் புதிதானவை அல்ல என்றும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சுவற்றில் சுவாமி கிருஷ்ணர் கோபிகையரை நிர்வாணமாய்ப் புணர்வது வரையப்பட்டிருக்கிறதே அதற்கு என்ன செய்வீர்கள் என்றும் கேட்கும் விட்டல் ராவ் மீது நமக்கு பயம் ஏற்படுகிறது. விட்டல் ராவ், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். காஞ்சிபுரம் ஆபத்தான ஊர். அதிலும், வரதராஜப் பெருமாள் கோவில் ரொம்பவுமே ஆபத்தானது. எதிர்த்துப் பேசியவர் வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டார். கிருஷ்ணர் கோபிகையருடன் மும்முரமாக இருந்ததால் எதையும் கண்டுகொள்ளவில்லை போலும். ஒருவேளை, தெய்வம் நின்று கொல்லலாம்.
Book Collectors ஒவ்வொருவரும் படித்தேயாக வேண்டிய புத்தகம் இது. நர்மதா, சென்னை வெளியீடு. உரூபா 200/-.

0 comments:
Post a Comment