மண்ணின்
மனம் கமழ எழுதுவது முன்பெல்லாம் இலக்கிய முயற்சியாக அறியப்பட்டதில்லை.
அச்சுத் தமிழ் என்ற ஒன்று பாட புத்தக தமிழோடு நெருங்கிய உறவாய் பிரிக்க
முடியாதபடி இருந்தது. ஆங்கிலத்திலே முன்முயற்சிகளாக நடந்துவந்த diaspora
literature, ஏன் அதற்கு முன்னமேயே இருந்த வட்டார வழக்கு ஆங்கிலத்தில்
எழுதப்பட்ட பல நவீனங்கள் [டி.ஹெச்.லாரன்ஸ் அவர்களின் லேடி செட்டெர்லீஸ்
லவர் போன்றவை] இலக்கிய அந்தஸ்தை பெற்றிருந்த காலங்களில் தமிழில்
அம்மாதிரியான முன்னெடுப்புக்கள்
அரிதாகவும், வந்த சிலதும் இலக்கிய வாசிப்பின் அந்தஸ்தை பெறாமலும் சுவடு
தெரியாமல் இருந்தன. கி.ராஜநாராயணன் அவர்கள் இத்தகைய எழுத்துக்கு பெரிய
கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் முக்கியமானவர். இவரின் "கோபல்ல கிராமம்"
வெளிவந்த நாட்களில் பெரும் அலைகளை ஏற்படுத்திய நவீனம். [இது நவீன வகையில்
சேர்த்தியா என்ற சர்ச்சை இன்னும் நடப்பதுண்டு]. எழுபதுகளில் வெளிவந்த
"கோபல்ல கிராமம்" பல்வேறு காரணங்களால் முக்கியமான படைப்பாகும். துலுக்க
ராஜாவுக்கு பயந்து தெற்கு நோக்கி அலை அலையாய் புலம் பெயர்ந்த நாயக்கமார்களை
பற்றிய, ஒரு காலப்புள்ளியில் குத்தி நிற்கிற, கதை மட்டும் அல்ல இது.
இந்தப் படைப்பு முழுக்க காலம் முன்னும் பின்னும் நகர்கிறது. "நூத்தி
முப்பத்தைந்து" வயதான முதுகிழவி சொல்லும் கதையாக கடந்தகாலம் விரிய,
"கோட்டையார்" வீட்டுக் கதையாக கதை நடக்கும் காலம் தொடர்கிறது.
நாயக்கர்களின் கதை இது என்று மற்ற சமூகத்தினர் இதை அசட்டை செய்ய முடியாது.
இது எல்லோருடைய கதை. எல்லா கிராமத்தின் கதை. கோட்டையார் வீட்டு நாயக்க
அண்ணன் தம்பிகள், அக்கையாக்கள் எல்லா கிராமங்களிலும் உண்டு. ஒரு "பெரிய
வீடு" இல்லாத கிராமம் இல்லை. "சென்னா தேவிகள்" பற்றிய புராணங்கள் இல்லாத
நிலப்பரப்பே இந்திய மண்ணில் இல்லை. அந்நியரே புகாத, தூரத்தையே காலத்தால்
அளந்த ஒரு சமூகம் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளால் நிறம் மாறத் துவங்குவதை
இப்படைப்பின் இறுதியில் அறிகிற நாம், இந்த "கோபல்ல கிராமம்" இனி என்ன
ஆகுமோ என்ற பதைப்புடன் புத்தகத்தை முடிக்கிறபொழுது, கிரா அவர்கள் தன்னுடைய
படைப்புலகத்தால் ஒரு புதையுண்ட காலத்தை அதன் உயிரின் எல்லா அம்சங்களோடும்
மறு நிர்மாணம் செய்துவிட்டதை உணர முடிகிறது. இந்த நவீனத்தில் உரையாடலை
பயன்படுத்திய விதம் நம்புவதற்கே இயலாதது. கரிசல் இலக்கியத்தின் ஆகச்
சிறந்த படைப்புகளில் "கோபல்ல கிராமம்" சந்தேகமில்லாமல் முக்கியமானது. நான்
இப்பொழுதுதான் இதைப் படித்தேன் என்ற சொல்ல வெட்கமாக இருக்கிறது என்றாலும்,
இப்பொழுதாவது படித்தேனே என்பதில் ஆறுதல் அடைகிறேன்.
(காலச்சுவடு இலக்கிய வரிசை வெளியீடு, உரூபா 200/-)
0 comments:
Post a Comment