டார்ச் லைட் 5

| Sunday, December 29, 2013
மூடர் கூடம்

கலை வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டுமா? யதார்த்தவாதம் இலக்கியத்தில், கலையில் எடுத்துக்கொள்ளும் பங்கு என்ன? யதார்த்தத்தை விட்டு விலகியிருக்கிற ஒரு படைப்பை எதை வைத்து அடையாளம் கண்டு கொள்வது? வாழ்க்கையில் யதார்த்தத்தின் பங்கு என்ன? யதார்த்தத்தை விட்டு வாழ்க்கை அடிக்கடி விலகுவதின் காரணம் என்ன? அப்படி விலகிய தருணங்கள்தான் வாழ்க்கையையே முடிவு செய்யும் கணங்களாகிப் போவது தற்செயலா? அபத்தமா? எனக்கு தோன்றுவதுண்டு. இங்கே யதார்த்தம் என்று ஒன்றும் இல்லை. எல்லாமே மிகைப்படுத்தல்கள்தான். மிகைகள்தான் மிகையின்மையை நமக்கு காட்டுகின்றன. மிகையின்மையை நாம் அடையவே முடியாது. கூடியோ குறைத்தோதான் பொருந்திவரும். வேண்டுமானால், ரொம்பவும் மிகையானது என்ற அளவில் சில படைப்புக்களைப் பற்றி பேசலாம். எம்ஜியார், விஜயகாந்த் மற்றும் 99 சதவீத தமிழ் படங்கள், கவிதைகள், நாவல்கள் "ரொம்பவும் மிகையானது" என்பதிற்குள் வருவதென்பது தற்செயலா போன்ற கேள்விகள் சுவையானவை.

மூடர் கூடம் மிகைநிகழ் படைப்பு. இதில் கேள்வி இல்லை. இது "ரொம்பவும் மிகையானது" என்பதில் சேர்த்தியில்லை. இதிலும் கேள்வி இல்லை. இந்த இரண்டுக்கும் இடையில் நின்று இப்படைப்பு உருவாக்கித் தரும் சாத்தியங்கள் ஆச்சரியமானவை. நகைமுரண் மிகவும் பிறழ்ந்துபட்ட உருவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குரூரமான, நடந்துவிடவே கூடாத பயங்கரமான சம்பவத்தின் மூலம் ஒரு குடும்பம் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறது. தன்னை முதல் முறையாக குடும்பமாக ஆக்கிக்கொள்கிறது. உலகம் பிதுக்கிப் போட்ட சில நபர்கள் தன்னிச்சையான சம்பவங்கள் உதவியால் சந்தித்துக் கொள்கிறார்கள். சம்பவங்களின் உதவியாலாயே தம்மிடம் இருந்து வந்திருக்கிற மனிதத்தை அடையாளம் காண்கிறார்கள். மூடர்களாக தொடர்வது அப்படியொன்றும் இழிந்தது அல்ல என்ற பெரும் உண்மையை தரிசிக்கிறார்கள். எதையுமே 'பாவம் - புண்ணியம்' என்ற இரு கண் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நினைப்பை ஒழித்தொழிக்கிறார்கள். "சம்பவங்கள்தாம் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது" எனும் புரிதல் உண்டு இவர்களிடம். காதல், வீரம், அன்பு, பாசம் போன்றவை எல்லாம் subject to conditions என்பது இவர்களுக்கு சம்பவங்கள் வழியே நன்றாகத் தெரியவருகிறது.

படம் எடுத்தவருக்கு கேமரா மூலம் ஒன்றை சொல்ல முடிவது கையாளும் ஊடகத்தின் மேல் இருக்கும் ஆளுமையால்தான். வசனம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு, பாவம் மற்றும் மௌனம் மூலம் அர்த்தம் சொல்லப்படுவது பெரும் கலைஞர்களின் முறை. இப்படத்தில் பாவம் மற்றும் மௌனம் அர்த்தம் சொல்கின்றன. பெரிய கலைஞர்கள் குழந்தைகளை சிறப்பாகப் பயன்படுத்துவர். இதில் பிஞ்சுகள் குழந்தமை மீறியவர்களாக காட்டப் படவில்லை. ஆகப்பெரிய கவிகளின் படைப்புக்கள் பாடல்களாக, கொஞ்சமாக, பயன்படுத்தப்படுவது இயக்குனர் ஆளுமைகளுக்கு அஞ்சுவதில்லை என்று சொல்கிறது.

தற்கால நோக்கில், மூடர் கூடம் தமிழில் ஒரு முக்கியமான படம்.

----

 The Front Page

ஒரே நாளில் நடந்து முடிந்த சம்பவங்களை வைத்து தமிழில் எடுக்கப்பட்ட படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சுஹாசினி நடித்து ராபர்ட் ராஜசேகர் இயக்கிய எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு படம் ஞாபகம் வருகிறது. அண்மையில் நேரம் போன்ற சில படங்கள். The Front Page என்ற அமெரிக்க படத்தை பார்த்தேன். [1974-வது ஆண்டு வெளிவந்தது. இதற்கு முன்னரே இதே கதை 1930 சமயத்தில் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.] Billy Wilder இயக்கி Jack Lemmon மற்றும் Susan Sarandon நடித்தது. அற்புதமாக இருக்கிறது. கதா நாயகன் ஒரு பத்திரிகை நிருபர். மிகவும் திறமையானவன். ஆனால் ஒரு சமயத்தில் தான் செய்து வரும் வேலை போரடித்துவிட, ஒரு பணக்கார விதவையை திருமணம் செய்துகொண்டு Philadelphia சென்று செட்டிலாக விரும்புகிறான். முதலாளிக்கு அவனை விட்டு விட மனமில்லை. இதற்கிடையே, அடுத்த நாள் காலை அரசியல் கைதி Earl William தூக்கிலிடப்பட இருக்கிறான். இது குறித்து ஒரு scoop கிடைத்து விடாதா என்று ஏங்கும் கதா நாயகனின் முதலாளி நிருபரின் கல்யாணத்தை முறித்துப் போட்டு, அவனை தன்னுடனேயே வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். கடைசிக் காட்சியில் ரயிலடியில் அவன் கைப்பிடிக்கப் போகும் பெண்ணோடு வாழ்த்தி தன்னுடைய கைக்கடிகாரத்தை பரிசளிக்கும் முதலாளி, ரயில் கிளம்பியவுடன் போலீசிடம் புகார் கொடுக்கிறார்: "என்னுடைய வாட்சை திருடியவன் கிளம்பிய ரயிலில் பயணிக்கிறான். அவனைக் கைது செய்து கொண்டு வாருங்கள்."

படம் முழுக்க வசனம் சரமாரியாக விழுந்து கொண்டே இருந்தாலும் போரடிக்கவே இல்லை. மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். American Humor நொடிக்கு நொடி கிளம்பிக் கொண்டே இருக்கிறது. 

"மூடர் கூடம்" போன்றவை நம்பிக்கைத் தந்தாலும் The Front Page போன்ற படங்கள் நமக்கு தீராத ஏக்கமூட்டுவதாகவே உள்ளன.

----

Serendipity ஆங்கிலப் படத்தை சில வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தேன். முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட அதே feel good உணர்வுதான். ஒரே ஒரு வித்தியாசம். மாதவன் நடித்த ஒரு தமிழ்ப் படம் ஞாபகம் அப்போது வரவில்லை. இப்போது பார்த்தபோது ஜேஜே என்ற மாதவன் படம் நினைவுக்கு வந்தது. ஜேஜே creative inspiration வகையிலெல்லாம் சேர்த்தியில்லை. பிரதியெடுத்தல்தான். அதை இன்னும் aesthetic-ஆக செய்திருக்கலாம்.

----

தேவகோட்டையில் கந்தர் சஷ்டி கவச விழாவில் நாஞ்சில் சம்பத் போன வருடம் பேசியிருக்கிறார். YouTube-ல் கேட்டேன். வழக்கமான விசேஷம் எதுவும் அவர் பேச்சில் இல்லை. இருந்தாலும் முன்னாள் மதிமுக-காரர் ஆன்மீக மேடையில் பேசக் கேட்பது சற்று புதுமை. பக்தி இலக்கியங்களைப் பற்றி இன்னும் நிறைய ஹோம் வொர்க் செய்துவிட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

1 comments:

கௌதம் ஜி said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment