இந்திய சினிமா நூறாண்டுகளைக் கடந்திருப்பதின் நினைவாக விழாக்கள் எடுக்கப்படுகிற வேளையில், என்னைப் போலவே, என் வயதொத்த மற்றும் ஓரிரண்டு தசாப்தங்கள் முன் பின் பிறந்து வளர்ந்த இந்தியன் ஒவ்வொருவனையும் இந்தக் காட்சி ஊடகம் எப்படி பாதித்திருக்கிறது என்று நினைக்கையில், கடந்த பல நூற்றாண்டுகளில் இதைப்போல வேறெந்த ஊடகமும் இவ்வளவு பாரிய பாதிப்பை தனிமனித மற்றும் கூட்டு மனிதரின் மேல் ஏற்படுத்தவில்லை என்பது புரிகிறது. நகரும் சினிமா பேசும் சினிமா ஆன பிறகுதான் எவ்வளவு மாற்றங்கள்! மனிதன் கலையைப் பாதித்தது போய், கலை மனிதனை பாதிக்கும் நிலைக்கு வந்தானது. உண்மையில், இந்த இரண்டும் எப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. சினிமாவின் பாதிப்பினால் நடந்துகொள்ளும் மனிதனை எளிதாக இனம் கண்டுபிடிப்பதுபோல, மனிதனின் பாதிப்பினால் உருவான சினிமாவை கண்டுபிடிப்பது எளிதானதாக இல்லை. "இப்படத்தின் கதையும் சம்பவங்களும் கற்பனையே; யாரையும் குறிப்பிடுவன அல்ல" என்று கட்டியங் கூறும் சினிமாக்களும் யாரைப்பற்றியாவது தெரிவித்த வண்ணமே உள்ளன. படத்தில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்துடன் தம்மை ஒப்பிடமுடிகிறது ரசிகரால். தன்னைப் போல் ஒருவன் அல்லது தான் ஆக விரும்பும் ஒருவன்களால் சினிமாவின் கதை நிரப்பப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப்போல சினிமா பாதித்த வேறொரு நிலப்பரப்பு வேறு எங்கானும் இருக்க முடியுமா என்ற கேள்வி பதில் சொல்ல கடினமானது. பொதுவாக, தமிழர்கள் கதை சொல்லிகள். கதை கேட்பவர்களும் கூட. பெரும்பாலான இவர்களது வாழ்க்கை ஏழ்மையால் நிரப்பப்பட்டிருக்கிறது. சாமானியரின் நெஞ்சு முழுக்க ஏக்கங்களும், ஆசைகளுமே. இதை தூண்டிவிடுவதே போல, அவனது சமூக கட்டுப்பாடுகள், சாதி பேதம், கல்வி அறிவின்மை உள்ளிட்ட பல இடர்ப்பாடுகள். 50களிலும் 60களிலும் இவைகளால் பெரும் அவதிக்குள்ளாகி நின்ற அவனுக்கு தேவையாக இருந்ததெல்லாம் ஒரு தப்பிப்புத் தன்மை கொண்ட போதை. தெருக்கூத்துக்கள், பொம்மலாட்டங்கள் போன்ற பல கிராமியக் கலைகளில் இத்தன்மைகள் உண்டு என்றாலும், போதை பற்றாக்குறையே தொடர்ந்தது. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்த ஒரு புயல் வேகக் கூட்டம் இந்த போதையை கிண்ணங்களில் அல்ல, ராட்சச கோப்பைகளில் தர தயாரானபோது, மொத்த சமூகமுமே ஆர்ப்பரித்து வரிசைகளில் விழுந்தடித்து நின்றது, தமக்கான டிக்கெட்டுகளை வாங்க.
சினிமாவினால் புரட்சி நடப்பதில்லை. நடந்ததில்லை. நடத்திக் காட்டுவோம் என்றவர்கள் புரட்சி நடிகர்கள், புரட்சி கலைஞர்கள் ஆகிப்போனதும், அவர்களை நம்பிய விசிலடிச்சான் குஞ்சுகளின் வாழ்க்கை வறண்டுபோனதும் ஒன்றோடொன்று தர்க்கத்தால் தொடர்புடையவை. வேறு சில உண்மையான கலைஞர்கள் புரட்சியைப் பாட ஊடகம் சினிமாவென்று தேர்ந்து கொண்டாலும், ஒப்பிட்டுப் பார்த்த விசிலடிச்சான் குஞ்சுகளால் அவர்களது நிஜம் தெறிக்கும் கவிதைகளும் காட்சிகளும் எடுபடாமல் போயின. வெற்றி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதற்கான வழிகளும் என்ற பெருமகன்கள் வாழ்க்கையை நுண்ணியமாக கண்டிருக்கிறார்கள்! அப்படியானால், சினிமாவினால் என்னதான் நடந்தது? சில கட்சிகள் ஆட்சியை இழந்திருக்கின்றன. சில கட்சிகள் தோன்றியுள்ளன. சில கட்சிகள் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. தோன்றிய, தோற்றுப்போன, ஜெயித்த - என எல்லா கட்சிகளுக்குமே சினிமாத் தொடர்பு, காரணமாகவோ, ஆதயமாகவோ இருந்துள்ளது. சில தனி மனிதர்களின் வாழ்க்கை அதி உன்னதமடைந்துள்ளது. சில தனி நபர்கள் கடவுளர்கள் ஆகியிருக்கிறார்கள். கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. நான்கு தசாப்தங்களுக்கு மேல் நீண்ட ஆட்சிக்கட்டில் சாத்தியப்பட்டிருக்கிறது.
நான்கு கோடி மனிதர்களுக்கான ஐம்பது ஆண்டு கால கனவு நெய்யப்பட்டிருக்கிறது. சினிமாவுக்குப்போன சித்தாளுகளும், மேஸ்திரிகளும், தங்களுக்கான ஜோடிகளை திரையில் காணும் உருவங்களோடு பொய்யான லாகிரியில் திளைக்க முடிந்தது. நம்ப முடியாத அளவு லாபமும், எண்ணவே முடியாத அளவு நட்டமும்
சாத்தியமாகியிருக்கிறது.
சாதாரணினின் நடை, உடை, பாவனை வெள்ளித் திரையில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. இவைகள் சினிமாவிற்கு கடன் கொடுக்கப்பட்டும் உள்ளன.
சினிமாவினால் நடந்துள்ள நல்லதுதான் என்ன? சில தனி மனிதர்களின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்கள்.
இவர்கள் அனைவரும் சினிமாக் கலைஞர்களோ அல்லது சினிமாவோடு ஏதேனும் தொடர்புடையவர்களோ ஆவர். சாமான்யனுக்கு நடந்துள்ள நன்மைகள் உண்டா?
ஏன் அவனுக்கு குறிப்பிடும்படி ஏதும் நல்லது சாத்தியப்படவில்லை? தமிழகத்தில் சினிமாவின் ஆரம்ப வெற்றி பிரமிப்பானது.
மற்ற நுண்கலைகளை அழித்தொழித்தது மட்டுமன்றி, தன்னை சீராட்டிய ரசிகனின் தலையின் மேலேயே கைவைக்க துணிந்ததின் காரணத்தின் பின்னே ரசிகனும் உள்ளான்.
மிகை
உணர்ச்சியோடு சினிமா சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சுவாராஸ்யமானது. .
இதற்குப் பதில், மிகை உணர்ச்சியோடு அது எப்பொழுதேனும் சம்பந்தப்படாமல் இருந்துள்ளதா என்பதில் இருக்கிறது.
எல்லா ரசங்களையுமே தாறுமாறாக கூட்டிப் பெருக்கி ரசிகனை திக்குமுக்காட வைத்து அவனுமே மிகை உணர்ச்சிக்காரனாக மாறிவிட்டான்.
இந்த சமூகத்தின் இயல்புணர்ச்சியையே செல்லரித்தது சினிமாவின் முக்கியமான சாதனை.
சராசரி மனிதர்களின் காதல், மோதல், பகை, நகைச்சுவை, சோகம், வேதனை போன்ற தற்போதைய வெளிப்பாடுகளில் எல்லாமே சினிமாத்தனம் அவனையறியாமலேயே வெளிப்படுவது சமூகத்தின் கூட்டு மனதின் மேல் சினிமா செலுத்த முடிந்த ஆதிக்கக் கேடாகும்.
இதனிடம் சிக்காமல் தப்பியவர்கள் இல்லையா? சினிமா ஒரு காட்சி ஊடகம்.
கேமராவினால் பிடிக்கப்பட்ட ஒவ்வொரு பிம்பமும் நிதர்சனம் போன்றதுதானேயொழிய நிதர்சனம் அல்ல. சினிமாவிற்கு சவாலாக தற்பொழுது தொலைக்காட்சி. ஆனால், கதை ஒன்று; காட்சி இரண்டு - என்ற நிலைதான்.
கடைக்குப்
போய்
குடித்துக்கொண்டிருந்தவன்
இப்போது வீட்டிலேயே குடிக்கிறான். போதை மட்டும் அப்படியே தொடர்கிறது.
நல்ல
சினிமாவே இல்லையா? இருக்கிறது.
மிக நுண்ணிய அளவிலே வாழ்க்கையைக் காட்டிய, அதன் இயல்பை பாசாங்கு இல்லாமல் வெளிக்கொணர்ந்து மனிதனை உலுக்கியெடுக்கும் சினிமாக்கள் உள்ளன. பிரச்சினைகளை மட்டும் காட்டாமல், அவைகளின் மையம், தீர்வு இருக்கும் திசை ஆகியவையை பற்றி ஓங்கி ஒலிக்கும் திரைப்படங்கள் குறைவேயென்றாலும் கூட, இவைகளும் வெளியான வண்ணமே உள்ளன.
தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நாட்டில் வசிக்கும், தமிழனான ஒருவனுக்கு என்ன பிரச்சினை என்றால், மிக அபூர்வமான ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, நல்ல சினிமாக்கள் பெருமளவு ஏன் தமிழல்லாத பிற மொழிகளிலேயே வெளியாகின்றன?
நாம் விசிலடித்து கட்அவுட்டின் மீது பாலாபிஷேகம் செய்து கோட்டைக்கு அனுப்பிய முன்னாள் முதலமைச்சர்களும், இந்நாள் முதலமைச்சர்களும், வருங்கால முதலமைச்சர்களும் இதற்கான காரணத்தை நம்மிடம் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.
நாம்தான் கேட்பதில்லை, பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்.
0 comments:
Post a Comment