ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்...

| Tuesday, December 17, 2013
Stay Hungry. Stay Foolish.

[STANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005 அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை]

உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின் பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்த பெருமையுறுகிறேன்நான் பட்டம் எதுவும் பெற்றவனல்லஉண்மையில், பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான் பார்க்கிறேன். மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்கு சொல்லுவதுதான் எனது நோக்கம். வேறெதுவுமில்லை

 முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும். ரீட் கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே இடை நின்று, ஆனால் அதே இடத்திலே பதினெட்டு மாதங்கள் சுற்றித் திரிந்தேன். ஏன் கல்லூரிப் படிப்பை நான் பாதியில் நிறுத்த நேர்ந்ததுஇதற்கான காரணம் நான் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்திருந்தது. என்னைப் பெற்ற தாய் திருமணமாகாதவள்; கல்லூரியில் பட்டப் படிப்பை தொடர்ந்துகொண்டிருந்தவள். என்னை சுவீகாரம் தர முடிவெடுத்தாள், ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்என்னை சுவீகாரம் எடுக்கும் பெற்றோர் பட்டப்படிப்பை பெற்றவர்களாயிருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால், ஒரு வழக்கறிஞர் தம்பதியினர் என்னை சுவீகாரம் எடுக்க முடிவாயிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இது கைவிடப்பட நேர்ந்தது. அவர்கள் ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுக்க விரும்பியதுதான் காரணம். ஆகையால், காத்திருப்போர் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த எனது வளர்ப்பு பெற்றோருக்கு என்னை சுவீகாரம் எடுக்க நேர்ந்தது. ஆனால், எனது வளர்ப்பு பெற்றோர் பட்டதாரிகளல்ல என்று தெரியவந்த பெற்றவள், மிகுந்த தயக்கத்துடனேயே சுவீகாரம் சம்பந்தமான ஆவணங்களில், சில மாதங்கள் கழித்து, கையெழுத்திட்டாள்அதுவும், நான் வளர்ந்தவுடன் நிச்சயமாக கல்லூரிக்கு அனுப்பப்படவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் மட்டுமே.   

நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு 17 வயது. தெரியாத்தனமாக, இதோ இந்த Stanford சர்வகலாசாலையைப் போலவே மிகவும் பணக்கார கல்லூரி ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கான கட்டணங்கள் எனது பெற்றோரின் சேமிப்பு முழுவதையுமே கரைத்துக் கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் நான் யோசித்தேன். இவ்வளவு செலவழித்து நான் வாழ்க்கையில் ஆகப்போவது என்ன? அதற்கு இந்தக் கல்லூரிப் படிப்பு எந்த வகையில் உதவி செய்யப்போகிறது? எந்த அர்த்தமும் தெரியாமலேயே எனது பெற்றோரின் ஒட்டுமொத்த சேமிப்பையே கரைத்துக்கொண்டிருப்பது நியாயமா? எல்லாம் எனக்கு சரியாக நடக்கும் என்று நம்பி, உடனடியாக கல்லூரியை விட்டு விலகினேன். அப்போது, இந்த முடிவு என்னை பெரிய அளவில் பயமுறுத்தியது; ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கையில், வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவுகளில் இது ஒன்று எனப் புரிகிறது

இந்த முடிவிலே இன்னொரு லாபமும் இருந்ததுமிகுந்த சலிப்பையும் மனச்சோர்வையும் தந்து கொண்டிருந்த கல்லூரி வகுப்புகளுக்கு நான் போகவேண்டியதில்லை; மாற்றாக, எனக்கு பிடித்த வேலைகளைச் செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். எனக்கென அப்போது தங்குமிடம் ஏதுமில்லை. நண்பர்களின் அறைகளில் தரையின் மீது படுத்துறங்கினேன். கோக் பாட்டில்களை பொறுக்கியெடுத்து விற்று ஓரளவு பசியைப் போக்கினேன். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் நல்ல யோகம் எனக்கு. ஹரே கிருஷ்ணா கோவிலில் ஜோரான  சாப்பாடு கிடைக்கும். எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது அதன் பிரசாதம்

என்னுடைய வாழ்விலே நான் கற்றுக்கொண்டது இதுதான்: எதேச்சையாகவும் ஆவலுடனும் உள்ளுணர்வு உந்தித்தள்ள நான் செய்ததெல்லாம் பின்னாட்களில் பெரும் பயன் தந்திருக்கிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அலங்காரமான வடிவெழுத்துக்களை எழுத நான் கற்றுக் கொண்டதை சொல்லலாம். அந்நாளில் ரீட் கல்லூரி எழுத்துருக்களை அழகாகவும் அலங்காரமாகவும் எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒவ்வொரு சுவரொட்டியும், துண்டுப் பிரசுரமும் அழகான வடிவெழுத்துக்களைப் பயன்படுத்தி கையால் எழுதப்பட்டிருந்தவையாகும். கல்லூரியில் தொடர்ந்து படிக்காததினாலும், வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏதும் இல்லாததினாலும், நானும் இந்த அலங்கார எழுத்துக்களை எழுத கற்றுக்கொள்வது என்று முடிவு செய்தேன். செரிஃப் [Serif] மற்றும் சன்ஸ் செரிஃப் [Sans Serif] போன்ற வடிவெழுத்துக்களை எழுதவும் பயிற்சி பெற்றேன். எழுத்துருக்களின் வெவ்வேறு பரிமாணங்கள், அவைகளுக்கிடையே வேண்டியுள்ள இடைவெளி, அவைகளின் சில வகைகளை ஒட்டியமைத்தல் போன்றவற்றை அங்கு கற்றுக்கொண்டேன்இது ஒரு கலை வடிவம்; அறிவியலால் செய்ய முடியாததும் மிகவும் சூட்சுமமானதுமாகும். மிகுந்த விருப்பத்துடன் இதை கற்றுத்தேர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது  உதவப் போகிறது என்பது பற்றி ஒரு யோசனையும் இருந்ததில்லை அந்த நாட்களில்ஆனால், பத்து வருடங்கள் கழித்து, மகிண்டோஷ் [Macintosh] கணினியை நாங்கள் வடிவமைக்கும்போது, கற்றுக்கொண்ட அந்தக் கலை பெரிதும் துணை வந்தது.    மகிண்டோஷ் கணினி இந்த அம்சத்தையும் கொண்டதாக வெளிவந்ததுசொல்லப்போனால், அழகான எழுத்துருக்கள் கொண்டு வெளிவந்த முதல் கணினி அதுதான்கல்லூரியில் படிப்பு வேண்டாம் என்று நான் முடிவு செய்யாமல் இருந்திருந்தால், சும்மாயிருந்த நாட்களில் வடிவெழுத்து பயிற்சிக்கு செல்லாமல்  இருந்திருந்தால், மகிண்டோஷ் கணினிகள் அழகான எழுத்துருக்களைப் பெற்றிருக்க வாய்ப்பேயில்லை. விண்டோஸ் அச்சாக மகிண்டோஷை காப்பியெடுத்த ஒன்று என்பதால், இன்று உலகத்தில் எந்த கணினியிலும் அழகான வடிவெழுத்து அச்சுருக்கள் இருந்திருக்கவே வாய்ப்பில்லைபல்வேறு வடிவச்சுகளை கொண்ட எழுத்துருக்களும், அவைகளுக்கிடையேயான பொருத்தமான இடைவெளிகளையும் கண்ணுறும்போது, பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருப்பது புரிகிறதுகல்லூரியை உதறித்தள்ளியது, புதிதாக வடிவெழுத்துப் பயிற்சி பெற்றது - எல்லாமே பொருள் நிறைந்தவைதான். ஆனால், அந்த நாட்களில் இவையெல்லாம் அர்த்தம் தேடி செய்தவை அல்ல. அப்பொழுது எல்லாமே புள்ளிகள்; கோலம் தெரியவில்லை. புள்ளிகள் வைக்கப்படுகின்றபோது கோலத்தை பார்க்க முடிவதில்லை. கோலம் முடிந்த பிறகு, அதன் அழகை உணருகிறபோது, புள்ளிகளின் முக்கியத்துவம் புரிகிறது. ஆக, எதிர்காலத்தைப் பற்றிய எதோ ஒரு நம்பிக்கை உங்களுக்கு வேண்டும்துணிச்சல், விதி, வாழ்க்கை, கர்மவினைப்பயன் - எதையாவது ஒன்றை நம்பித்தான் ஆக வேண்டும்நம்பிக்கை என்னை கைவிட்டதேயில்லை; என் வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில்தான்.

நான் சொல்லப்போகும் இரண்டாவது கதை காதலையும், இழப்பையும் பற்றியதுஆரம்ப நாட்களிலிருந்தே, விரும்பியதை மட்டுமே செய்வேன். எனது நண்பன் வோஸும் [Woz] நானும், எனக்கு 20 வயதான நிலையில், என் பெற்றோரின் கார் ஷெட்டில் "ஆப்பிள்" நிறுவனத்தை தொடங்கினோம்.   கடுமையான உழைப்பின் பயனாக, கார் ஷெட் ஒன்றில் எங்கள் இருவரோடு மட்டும் ஆரம்பித்த நிறுவனம், பத்தே வருடங்களில் 4,000 பணியாட்களோடு 2 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தெழுந்ததுஎன்னுடைய 29-வது வயதில், எங்களின் ஆகப்பெரிய தயாரிப்பான மகிண்டோஷ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நான் "ஆப்பிள்" நிறுவனத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டேன். ஒருவருடைய சொந்த நிறுவனத்திலேயே அவருக்கு இந்த நிர்க்கதி நேருமா? "ஆப்பிள்" வளர்ந்தெழும் நிலையில், மிகவும் திறமைசாலி என்று நான் கருதிய நண்பரொருவரை நிர்வாகப் பொறுப்பிலே வேலைக்கு அமர்த்தினோம்ஆனால் நிறுவனம் வளர வளர அதைப்பற்றிய எங்களின்  தொலைநோக்கு வேறுபட்டன; கடைசியில் மோதல் தவிர்க்க முடியாததாயிற்று. முறுகல் முற்றியபோது, நிறுவனத்தின் இயக்குனர்கள் எனக்கு எதிராகப் போனார்கள். முப்பது வயதிலே, நான் மீண்டும் வேலையற்றவனானேன். அதுவும் அவமானகரமாக வெளியேற்றப்பட்டு. பெரும் உழைப்போடும், சிறிய விஷயங்களில் கூட மிகக் கவனமாகவும் வளர்த்தெடுக்கப்பட்ட, இளமைக் காலத்தை முழுவதுமாக எதற்காக நான் செலவிட்டேனோ, அந்த நிறுவனத்திலேயிருந்து வெளியேற்றப்பட்டது எனது நெஞ்சை நொறுக்கிப்போட்டது. சில மாதங்களுக்கு ஸ்தம்பித்துப் போனேன். என்னை நம்பிய மிகப்பல தொழில் முனைவோர்களை நான் கைவிட்டதாக உணர்ந்தேன். இத்தொழிலிலே இணை யாரும் இல்லை என்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்திருந்தபொழுது, தட்டிவிடப்பட்டு தடுமாறி தலைகுப்புற விழுந்தேன். டேவிட் பேக்கர்ட் [David Packard] மற்றும் பாப் நோய்ஸ் [Bob Noyce]  போன்றோரை சந்தித்து, அவர்களை கைவிடும்படியாக ஆனதற்கு மன்னிப்புக் கோரினேன்எல்லோரும் பார்த்து சிரிக்கும்படியான தோல்வி. கேவலமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடிவிடலாமா என்று கூட தோன்றியதுண்டு. ஆனால், நண்பர்களே, அந்த நிமிடத்திலே எனக்குள் ஒரு எண்ணம்என்னைபற்றியதான ஒரு உண்மை அது. நான் செய்வது எனக்குப் பிடிக்கும்பிடித்தால் மட்டுமே அதை செய்வேன்.  "ஆப்பிள்" என்னை தூக்கி எறியலாம். ஆனால், இன்னமும் எனது வேலை எனக்குப் பிடித்ததாகவேயிருக்கிறது. நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், செய்ய விரும்பிய செயலின் மேல் எனக்கிருந்த காதலை அவர்களால் பொசுக்க முடியவில்லைஎல்லாவற்றையும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க ஆயத்தமானேன்.

எனக்கு முதலில் புரியவில்லை; ஆனால், "ஆப்பிள்" நிறுவனத்தை விட்டு விலகியதுதான் எனக்கு நேர்ந்தவைகளிலேயே மிகவும் அற்புதமானதுபெரிய வெற்றியாளன் ஒருவனுக்கு இருக்கும் கவலையும் கவனமும் எனக்கு தேவைப்படவில்லைஒன்றை புதிதாக தொடங்குபவனுக்கு இருக்கும் அசட்டுத் துணிச்சல் எனக்கு மீண்டும் வந்தது. இந்தத் துணிச்சல் காரணமாகத்தான், எனது வாழ்க்கையிலேயே மிகப்பெரும் படைப்பூக்கங்களை வடித்தெடுத்த காலகட்டத்திற்கு வந்துசேர்ந்தேன்அடுத்த ஐந்து வருடங்கள் என்னை பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. இரண்டு நிறுவனங்கள் - நெக்ஸ்ட் [NeXT] மற்றும் பிக்ஸார் [Pixar] - தொடங்கியது இக்காலகட்டத்தில்தான். இதைவிட, வாழ்க்கையில் ஒரு மகத்தான பெண்மணியை சந்தித்து காதலாகி, குடும்பமாக விளங்கப்பெற்றதும் இப்போதுதான். எமது பிக்ஸார் நிறுவனம் இன்று உலகிலேயே அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிப்பில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் அனிமேஷன் திரைப்படமான பொம்மைக் கதை [Toy Story], பிக்ஸார்  தயாரிப்புத்தான். முதலிடத்தில் இருக்கும் அனிமேஷன் ஸ்டுடியோவும் "பிக்ஸார்"தான். அடுத்து நிகழ்ந்ததுதான் ஆச்சர்யமானது.    "ஆப்பிள்" நிறுவனம் என்னுடைய நெக்ஸ்ட்- வாங்கியதும், நான் ஆப்பிளிடமே திரும்பியதும் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. நெக்ஸ்ட்-ல் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பம் இன்று "ஆப்பிள்" புனர்ஜென்மம் எடுக்க மூலகாரணமாய் இருக்கிறதுசொந்த வாழ்க்கையில், லாரினும் [Laurene] நானும் மிகவும் மகிழ்ச்சியாக எங்கள் குடும்பத்தை வளர்த்திருக்கிறோம். "ஆப்பிள்" என்னை தூக்கி எறிந்திருக்காவிட்டால், இவைகளில் எதுவுமே நடந்திருக்காது. அது ஒரு கசப்பான மருந்துதான், சந்தேகமேயில்லைஆனால், நோயாளிக்கு தேவைப்பட்டது அதுதான். வாழ்க்கை சில சமயம் நமக்கு மரண அடி கொடுக்கிறது. நிலைகுலையாமல் நாம் நிற்க வேண்டியது இத்தருணங்களில்தான். நேசித்ததை மட்டுமே  செய்தது என்னை எப்போதுமே காப்பாற்றியிருக்கிறது. ஒன்றை பிடிக்காவிட்டால் அதைச் செய்யாதீர்கள்நீங்கள் மிகவும் நேசிப்பது என்ன என்று கண்டுபிடியுங்கள். உங்களின்  வேலை, காதல் - எதுவாகயிருந்தாலும் இதே மந்திரம்தான்வாழ்க்கையின் கணிசமான பகுதியினை நமது வேலையின் பொருட்டு கழிக்கிறோம்: இப்படியிருக்க, பிடித்ததை மட்டுமே நாம் செய்கிறோம் என்பது மிக முக்கியம். நம்மிடமிருந்து அரிய சாதனைகள் பிறப்பது என்பது இந்த நிலையில் மட்டுமே சாத்தியம்எது உங்களின் காதல் என்று இன்னும் நீங்கள் கண்டுபிடிக்காமலிருந்தால், உடனடியாக தேடுங்கள்; கண்டுபிடிக்கும்வரை நிற்க வேண்டாம். இதுவே காதலுக்கும் பொருந்தும்பிடித்தவரோடான வாழ்க்கையில்  நாள்பட நாள்பட சுவை கூடிக்கொண்டே போகும். ஆகையால், உங்களுக்குப் பிடித்ததை/பிடித்தவரை கண்டுபிடிக்கும்வரை தேடிக்கொண்டேயிருங்கள்நிற்க வேண்டாம்.

நான் உங்களுக்கு சொல்லவிருக்கும் மூன்றாவது கதை எதைப்பற்றியது தெரியுமா? இறப்பு. பதினேழாவது வயதில் நான் படித்த வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  "இதுதான் உன்னுடைய கடைசி நாள் என்று வாழ்ந்து வருவாய் என்றால், என்றாவது ஒருநாள் நீ சரி."  கடந்த 33 வருடங்களாக கண்ணாடியில் முகத்தை பார்க்கையில் என்னையே கேட்டுக்கொள்வதுண்டு. "இதுதான் என்னுடைய கடைசி நாள் என்றால், இன்றைக்குச் செய்ய இருப்பதைத்தான் நான் செய்வேனா?"  "இல்லை" என்பது தொடர்ந்து பதிலாக வரும்போதெல்லாம் நான் மாற வேண்டியதின் தேவையை உணர்வேன்நான் விரைவில் இறந்துவிடுவேன் என்ற உண்மைதான் மிகப்பெரும் முடிவுகளை எடுக்க காரணமாய் இருக்கிறதுஏனென்றால், புறவுலகு சார்ந்த எதிர்பார்ப்புகள், அகங்காரம், தோல்வியைப்பற்றிய பயம் - இவை எதுவுமே, சாவுக்கு முன்னால் அடிபட்டு விடுகிறது. உண்மையிலேயே எது முக்கியம் என்பது இத்தருணத்தில் மட்டுமே தெரியும்நம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்பதை சாவின் பிடியில் இருக்கும் ஒருவன் உணர்வான். ஆகவே நண்பர்களே, நான் சொல்கிறேன்: "பிடித்ததை மட்டுமே செய்யுங்கள்."

எனக்கு புற்றுநோய் என்பது ஒரு வருடத்திற்கு முன்புதான் தெரிந்ததுகணையப் புற்றுநோய். அப்படி ஒரு உறுப்பு நம்முள் உள்ளது என்பதே அப்போதுதான் தெரியும். குணப்படுத்த முடியாத வகையிலான புற்றுநோய் இது என்றும், அதிகபட்சம் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள்குடும்பம், வேலை, வர்த்தகம் ஆகியவற்றை அதற்குள்ளாக ஒழுங்குபடுத்துங்கள் என்ற மருத்துவ ஆலோசனை வேறு. "செத்துப் போவதற்கு தயாராகு" என்பதுதான் இதனுடைய அர்த்தம்அதாவது, உங்கள் குழந்தைகளிடம் வாழ்நாள் முழுவதும் என்ன பேசுவீர்களோ அதை மூன்று மாதங்களுக்குள் பேசிவிடுங்கள் என்று அர்த்தம். கும்பத்தில் நீங்கள் பார்த்து பார்த்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் செய்துமுடியுங்கள் என்று அர்த்தம். அதாவது, சீக்கிரமாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

 அன்று நாள் முழுதும் தொடர்ந்த சிகிச்சையின் முடிவில், நான் பீடிக்கப்பட்டிருப்பது ஒரு அரிய வகை புற்றுநோய் என்றும், முயன்றால் குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் மருத்துவர்கள் கூறினர்கணையத்தில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்ட சில செல்களை ஊன்மக்கூறு [biopsy] பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவை வைத்து இதை உறுதி செய்ததாக அருகிலிருந்த மனைவி சொன்னாள்இவை எல்லாம் முடிந்து, நண்பர்களே, இதோ உங்கள் முன்பு நான் நலமாக நிற்கிறேன்.  

சாவின் மிக அண்மையில் நான் நின்றது இந்த   நாட்களில்தான். இன்னும் சில தசாப்தங்கள் உயிர் வாழ முடியும் என்று நம்புகிறேன்சாவின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் நான் உங்களுக்கு சொல்வது, "இறப்பு என்பது நிச்சயமானதும், அறிவால் மட்டுமே அணுகக்கூடியதும் ஆகும்."  யாரும் சாவை விரும்புவதில்லை.  சொர்க்கத்திற்குப் போக விரும்புவன்கூட சாவை விரும்புவதில்லை.  ஆனாலும், அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும்.  யாரும் தப்ப முடியாது. வாழ்க்கையின் பெரிய கண்டுபிடிப்பே சாவுதான். வாழ்க்கையின் தன்மையையே முற்றாக மாற்றக்கூடியதும் அதுதான். இதனால் மட்டுமே பழையன கழிந்து புதியன வரும். இளமையின் வாசலில் நிற்கும் நண்பர்களே, உங்களுக்கும் வயதாகி, நடுங்கி, இங்கிருந்து விலகி எங்கோ போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான் சொல்வது நாடகத்தனமாக இருந்தாலும், உண்மையைத் தவிர இதில் வேறெதுவும் உண்டா?

நண்பர்களே, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவானது. இதில் வேறொருவர் கருத்துப்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். எந்தக் கொள்கையிலும் பிடிவாதம் வேண்டாம்கொள்கை என்பதே மற்றவரின் சிந்தனைதானேஉங்களின் வாழ்க்கை அதில் ஏதுஉங்கள் மனசாட்சியின் குரலை வேறொருவரின் இரைச்சல் அடக்கிவிட அனுமதிக்காதீர்கள்உங்கள் உள்மனம் சொல்வதை, இதயம் சொல்வதை பின்தொடர்ந்து செல்லுங்கள்அவைகளுக்கு உங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும்மற்றவர் சொல்வது எல்லாமே அடுத்தபடிதான்

நான் சிறுவனாக இருந்தபொழுது, எங்களுடைய  தலைமுறையினரை மிகவும் கவர்ந்த "மொத்த பூமியின் விவரம்" [The Whole Earth Catalog] என்ற பத்திரிக்கை நினைவுக்கு வருகிறதுஅந்த அற்புதமான இதழை நடத்தியவர், இதோ இங்கிருந்து மிக அண்மையில் இருக்கும் மென்லோ பார்க்-கில் [Menlo Park] வசித்து வந்த ஸ்டீவர்ட் ப்ராண்ட் [Stewart Brand].  அவரின் கவித்துவமான சிந்தனை இதழ் முழுதும் பரவியிருக்கும்நான் சொல்லவரும் காலம் 1960-கள்கணினிகள் உலகை ஆக்கிரமித்திருக்காத ஒரு காலம்தட்டச்சுப் பொறிகளாலும், கத்தரிக்கோல்களாலும், கைகளாலும் வடிவமைக்கப்பட்ட இதழ் அது. இன்று கூகுள் தேடுபொறி என்ன செய்கிறதோ, ஏறக்குறைய அதை மிகச் சிறிய அளவிலே, 35 வருடங்களுக்கு முன்பு, இந்த இதழ் எங்களுக்கு செய்து வந்தது. எங்களுக்கு மிகவும் பிடித்தமான பத்திரிக்கை அதுதான்.

பல இதழ்களுக்குப் பிறகுஸ்டீவர்ட் மற்றும் அவரது குழு இதை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1970களின் மத்திய வருடங்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது உங்களுடைய வயது இருக்கலாம். இந்த பத்திரிக்கையின் கடைசி இதழின் பின் அட்டையில், அதிகாலை கதிரவனின் பின்னணியில் நீண்டிருக்கும் ஒரு மலையோர சாலையின் புகைப்படத்தின் அடியில் இந்த வாசகம்: "பசித்தவனாக இரு: தெரியாதவனாக இரு". [Stay Hungry. Stay Foolish]  இதுதான் அவர்களின் விடைபெறும் வாசகம். பசித்தவனாக இரு: தெரியாதவனாக இருயோசித்துப் பார்க்கையில், இப்படித்தான் நானும் இருந்திருக்கிறேன். இப்படி இருந்ததால்தான், இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்இன்று பட்டம் பெறுகின்ற உங்களையும் நான் இதையே சொல்லி வாழ்த்துவேன்:
      "பசித்தவனாக இரு: தெரியாதவனாக இரு"
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

[ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் நோய்மையின் காரணமாக, 2011 அக்டோபர் 5-ம் திகதி மரித்துப் போனார்.]

0 comments:

Post a Comment