பொது வாழ்க்கையில் இரண்டு பிரபலங்களிடையே நன்றி பாராட்டும் குணம் அருகி வருகிறது.
அன்றைய தினம், அல்லது விடயம் நடந்து கொண்டிருக்கும் போது, அதே லட்சியத்தோடு உடன் பயணிப்பவர் கூட வரும் தருணம் வரை என்பதுதான், பொது வாழ்க்கையில் நட்புக்கும், நன்றிக்கும் அர்த்தம்.
மிக அரிதாகத்தான், நீண்ட கால அளவில் நட்பு தொடர்கிறது.
நீடித்திருக்கும் நட்பின் பின்புலக் காரணங்கள்
முடிந்துவிட்டதாக பொது வெளியில் தோன்றினாலும், வேறு காரணங்கள் உள்ளே ஏதேனும் பதுங்கி இருக்குமோ இல்லையோ தெரியாது, இந்த அபூர்வமான நட்புப் பாராட்டல்கள் நம்மை வியப்படையத்தான் வைக்கின்றன.
2009-ல் முடிந்து விட்ட போர்; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தி ஹிந்து, சிங்கள பேரினவாத அரசியல் தலைமையின் மீது கொண்ட நட்பையும், விசுவாசத்தையும் தொடர்ந்து காட்டிக்கொண்டே வருவதில், பொதுவெளியில் உள்நோக்கம் ஏதும் இல்லாததாக தெரிந்தாலும், பின்புலத்தில் ஏதேனும் விஸ்தார லாபங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்றே
படுகிறது. திரு.என்.ராம் அவர்கள் சிங்கள பேரினவாத தேசியத்தின் அதி உயர் விருதை பெற்றுக் கொண்டதின் நன்றியா, அல்லது திரு.ராஜபக்ஷே அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பாராட்டிவரும் நட்பா என்று குழப்பமாகவே இருக்கிறது.
இன்றைய
[26-01-2014] தி ஹிந்து தமிழ்ப் பதிப்பில், திரு.சமஸ் அவர்கள் சீறிலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான திரு.இரா.சம்பந்தன் அவர்களிடம் பெற்று
பதிப்பித்திருக்கும் செவ்வி மிக நீண்டதாக முழுப் பக்க அளவில் உள்ளது.
இந்த நேர்காணலின் சொல்லாடல் பாரியமான அரசியல் முக்கியத்துவம் கொண்டது.
ஆதிக்கம் செலுத்துவதிலும், பிறரை அடிமைப் படுத்தி தனது மேலாதிக்க அரிப்பை சொரிந்து கொள்வதிலேயும் சுகம் காணும் ஒரு நாசூக்கான சமூக உயர் தளத்தைச் சேர்ந்த குரூபிகள், தங்களது அரசியலை வெளிப்படுத்த பயன்படுத்தும் சொல்லாடல் சூட்சுமங்கள் நிறைந்தது.
பட்டினி கிடப்பவருக்கும், பரதேசிகளுக்கும், பாழ் நிலத்தையும் இழந்து புலம் பெயர வேண்டியிருந்தவர்களுக்குமான பச்சாதாபத்தையும் பரிவையும் காட்டுவதாக தொடங்கும் இவ்வகை சொல்லாடல், கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து, தனது மேலாதிக்க வெறிப் பித்தின் உச்சத்தில் ஏறி நின்று உண்மை, நியாயம் என்பதான முகக் கவசங்கள் மாட்டிக்கொண்டு வெற்றி ஓலமிடும்.
இந்த சொல்லாடல் போரில் நிராயுதபாணிகளான தர்மவான்கள் பலியிடப் படுவர்.
தர்ம சாஸ்திரம் போலவே தொடங்கும் இச் சொல்லாடல், விரைவில் சாணக்கிய கயமையில் முடிவது, தர்மவான்களின் தோல்வியே.
திரு.சமஸ் அவர்களிடம் மாட்டிக்கொண்ட எண்பது அகவையைத் தாண்டியிருக்கும் திரு.இரா.சம்பந்தன் அவர்களின் நல்லெண்ணத்தை யாருமே குறைத்து மதிப்பிட முடியாது.
போருக்குப் பிந்தைய நாட்களில்,
பழிவாங்கப் பட்ட மக்களின் துயர் துடைக்க அவர் தலைமையிலான கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் முயற்சிகள், தங்களை முற்று முழுவதுமாக தொலைத்துவிட்ட மக்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே ஆறுதல்.
போருக்குப் பிந்தைய நிதர்சனம் புரிந்து செயல்படும் தலைவர்களில் முக்கியமானவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள்.
மிகவும் நிதானமாகவும், சமகால வரலாற்றுப் பிரக்ஞை சூழ் கொண்ட வார்த்தைகளாலும் பொதுவெளியில் சொல்லாடுபவர்.
அனைத்திற்கும் மேலாக, தனிப்பட்ட அளவில், உத்தமர்; பிறரையும் அப்படியே நம்புவர்.
அவரிடம் திரு.என்.ராம் அவர்களின் 'வாயாக' அனுப்பப்பட்ட திரு.சமஸ் அவர்கள் முதலில் நியாயமாகத் தெரியும் வினாக்களாக கேட்டு, செவ்வியின் 'சார்பற்ற தன்மையை' கட்டமைக்க முயல்கிறார்.
"போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல் ... இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?" என்பதுதான் திரு.சமஸ் அவர்களின் முதல் கேள்வி.
திரு.சம்பந்தன் அவர்கள், நிலைமை படு மோசமாக இருக்கிறது என்ற அளவில்தான் பதிலிறுக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால், "நிலைமை மாறாவிட்டால், நல்லிணக்கம் ஒரு போதும் உருவாகாது" என்பதில்தான் அந்தப் பதில் முடிகிறது.
அடுத்த இரண்டு கேள்விகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்திக் கொண்டிருக்கும் மாகாண அரசின், அதிகாரமில்லாத, செயலற்ற தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளன.
இந்த வினாக்களின் மூலம், மாகாண அரசின் 'முடக்கப்பட்ட' நிலையை, திரு.சம்பந்தன் மூலமாகவே பெற்று, பொது வெளிக்குப் படையல் வைத்திருக்கும் திரு.சமஸ் அவர்கள், தி ஹிந்துவின் பேரினவாத அரசியலை தனது அடுத்தடுத்த கேள்விகளின் வழியாக அடுக்கி, பேட்டி காணப்படுபவரின் வாயாலேயே, பிரபாகரன் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் தலைவர்கள் 'வீணடித்த' சந்தர்ப்பங்களைப் பற்றி பேசச் செய்கிறார்.
திரு.சமஸ் அவர்களின் ஆறாவது கேள்வி இது.
"(நீங்கள் குறிப்பிட்ட) இரு சந்தர்ப்பங்களும் வீணடிக்கப் பட்டதில் பிரபாகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. அப்போது இது தொடர்பாக பிரபாகரனுடன் நீங்கள் பேசியது உண்டா?" ஏழாவது கேள்வி: "உண்மையில், பிரபாகரனுடைய அரசியல் திட்டம் என்னவாக இருந்தது?
உங்களுக்குப் பிடிபட்டதா?
அவருடன் உறவில் இருந்தபோது நீங்கள் இதுபற்றி எல்லாம் பேசியது உண்டா?
ஆக்கபூர்வமாக அவர் எதிர்வினையாற்றியது உண்டா?" ஆங்கிலத்தில் leading questions என்பார்களே, அதைப் போன்றவை இந்தக் கேள்விகள்.
"நீ எப்படி பதில்
சொல்ல வேண்டும் என்பதாக நான் கொடுக்கும் சமிக்ஞைகளை புரிந்து கொண்டு, நான் விரும்பும் பதிலையே சொல்" என்பதான கேள்விகள்.
திரு.சமஸ் அவர்களின் எட்டாவது கேள்வியில், திரு.என்.ராம் மற்றும் 'தி ஹிந்து' என்ற பத்திரிக்கையின் 135 ஆண்டு கால மொத்த அரசியல் வெளியே வருகிறது.
அந்தக் கேள்வி இதுதான்:
"அடிப்படையில் நீங்கள் ஒரு ஜனநாயகவாதி. பிரபாகரன் போன்ற ஒரு யதேச்சாதிகாரியுடன் எந்த அடிப்படையில் பணியாற்றினீர்கள்?" எவ்வளவு மூன்றாந்தர அரசியலால் நிரப்பப்பட்ட கேள்வி இது!
யதேச்சதிகாரம் என்பதாக எதை 'தி ஹிந்து' நினைக்கிறது?
யதேச்சதிகாரத்தைப் பற்றிய 'தி ஹிந்துவின்' வரையறை என்ன?
ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் இனத்தைக் காப்பாற்ற உலகம் வழங்கிய எந்த உபாயமும் பயன்தராத போது, இங்கு ஏற்கனவே நிறைய முறை பெருந்தலைவர்கள், சுபாஸ், காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர், பயன்படுத்தியிருக்கிற ஆயுதப் போராட்ட முறையை விருப்பமே இல்லாமல், அதை முன்னெடுத்த இளைஞர் குழாம்களை, அவைகளின் போராடும் முறைகளை 'யதேச்சதிகாரம்' என்று வர்ணிப்பு செய்யும் 'தி ஹிந்து', அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை செய்ததுதான் என்ன?
பிரபாகரன் மட்டுமே சீறிலங்கா வடகிழக்கு மாகாண மக்களின் ஒருமித்த பிரதிநிதி அல்ல என்று முப்பது வருடங்களாக உரக்கச் சொல்லி வரும் 'தி ஹிந்து', முப்பது வருடங்களாக பிரபாகரனை மட்டுமே மையப்படுத்தி ஏன் தனது 'சீறிலங்கா குறித்த ஊடக அரசியலை' நகர்த்தி வருகிறது?
இந்த மூன்றாந்தர கேள்வியை, முற்றிலும் நிராகரிக்கும் விதமாக, பதிலை பிரபாகரனைத் தொடாமல் கட்டமைக்கிறார் திரு.இரா.சம்பந்தன் அவர்கள்.
எந்த விதமான பதிலை திரு.சம்பந்தனிடம் இருந்து எதிர்பார்த்தாரோ, அது கிடைக்காத ஏமாற்றத்தில், தனது அடுத்த கேள்வியை, ஒன்பதாவதாக, கேட்கிறார் திரு.சமஸ்.
"புலிகளின் மிகப்பெரிய தவறுகளாக எதைக் கருதுகிறீர்கள்?". இதற்கு திரு.சம்பந்தனின் பதில் புதிதல்ல.
ஆட்சேபகரமானதும் அல்ல.
"எமது
போராட்ட வடிவை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்ற லெனினின் வாக்கியம் புரிந்தால், திரு.சம்பந்தன் அவர்களின் பதிலை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் புரிந்து கொள்ள முடியும்.
திரு.சமஸ் அவர்களின் பத்தாவது கேள்வி மூலம் தி ஹிந்து, இவ்விடயம் குறித்த தனது அரசியல் நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
புலிகள் மீண்டும் வருவார்கள், போராட்டம் மீண்டும் வெடிக்கும் சாத்தியம் உள்ளது என்று சொல்லும் அனைவரும் சமஸ் அவர்களின் வார்த்தையில், "மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள்." தனது பதிலில் திரு.சம்பந்தன் சொல்கிறார்:
"புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் அஸ்திவாரம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில், அக்கிரமங்களில் இருந்தது; அவர்களுடைய போராட்டம் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்தது.
ஆனால், காலப் போக்கில் முழுமையாக அதே நியாயத்துடன்தான் செயல்பட்டார்கள் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை..."
அமெரிக்காவில் நடந்த 9/11-க்குப் பிறகு, சர்வதேசியம் விடுதலைப் போராட்டக் குழுக்களின் மீதான தமது பார்வையை ஒரே மாதிரியாக மாற்றிக்கொண்டதும்,
பிரதேச அரசியலில் இரண்டு, மூன்று வல்லமைகள் தங்களது மேலாதிக்கத்தை நிறுவ நடத்திய கடும் போட்டியும், உலகளாவிய வலது சாரி ஊடக அரசியல் பேரினவாத அரசியலுக்குச் சாதகமாக மாறிப் போனதிலும், 'போராளிகள்' எல்லாம் 'பயங்கரவாதிகளாக' ஒரே நாளில் மாறிப் போனார்கள்.
'பயங்கரவாதிகளை' வேட்டையாடுவதில் மனித உரிமை அமைப்புக்களுக்கும் பெரிய ஆட்சேபம் ஏதுமில்லை.
மழை பெய்யாததால் சாயம் வெளுக்காத நரிகள் தங்களை சிங்கங்கள் என்று கட்டமைத்துக் கதைக்கும் போது, குருடர்கள் நம்பித்தானே ஆகவேண்டும்?
பதினேழு கேள்விகள் கொண்ட இந்த செவ்வியில், பதினாறாவது கேள்வியாக திரு.சமஸ் கேட்கிறார்: "புலிகள் காலத்தில் கிழக்கு மாகாண தமிழர்கள், வடக்கு மாகாண தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் இடையே ஒரு மனப்பிளவு ஏற்பட்டது.
இப்போது அதைச் சீரமைப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?" இல்லாத பிரிவினையை இருப்பதாக கட்டமைக்க முயலும் இந்தக் கேள்விக்கு, பெருந்தகை இரா.சம்பந்தன் அவர்கள் பதிலிறுக்கிறார்:
"அப்படியான ஒரு பிளவு இருப்பதாக நான் கூற மாட்டேன்.
நானே கிழக்கைச் சேர்ந்தவன்தானே?
அதனால் யாழ்ப்பாணத்தில் எனக்குத் தொடர்பு இல்லையா என்ன?
வடக்கோ, கிழக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களோ, இன்றைக்கு நாங்கள் ஒரு மக்கள்.
எங்களுக்கு சமமான உரிமை வேண்டும். அந்த ஒற்றுமை முக்கியம் என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறோம்." திரு.சம்பந்தன் வாயாலேயே மனப்பிளவு இல்லை என்று சொல்லக் கேட்கும் திரு.சமஸ் அவர்களுக்கு பதிலளிப்பவர் மீது தாங்கவொண்ணா சினம் மேலிடுகிறது.
அவரையே சின்னா பின்னமாக்கி, "அழுதாயே சின்னப்பையன் மாதிரி? அதை மறந்து விட்டாயா?" என்பதாக கோபம் தூக்கலாக கேட்கிறார் தனது கடைசிக் கேள்வியை:
"வலியாமத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, எம் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று சொல்லி கண்ணீர் விட்டீர்கள். இந்த வயதில் இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு, உங்களுக்கே அரசியல் நம்பிக்கை கேள்விக்குள்ளாகும் சூழலில், நாளை பிறக்கும் ஒரு குழந்தை எந்த நம்பிக்கையில் இலங்கையில் வளரும் என்று நினைக்கிறீர்கள்?"
இதுவும் leading question வகைதான்.
நாளை பிறக்கும் ஒரு குழந்தை இலங்கையில் வளர எந்த நம்பிக்கையும் இல்லை என்பது, நம் அனைவரையும் விட, திரு.என்.ராம் அவர்களுக்கும், 'தி ஹிந்து'விற்கும், சமஸ் அவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதாவது, போருக்குப் பிந்தைய சூழலில், போர் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜனநாயகம்
வடகிழக்கில் மலர்ந்து விட்டது என்று சர்வதேசியத்தை கிட்டத்தட்ட நம்பவைத்து விட்ட சூழலில், ராணுவத்தை வடக்கில் நிரப்பியிருக்கிற நேரத்தில், பெரும்பான்மை மக்களை பலவந்தமாக வடகிழக்கில் குடியேற்றிவரும்
காலத்தில், இனப் பேரினவாதம் தன்னோடு நூற்றாண்டுகளாக தோழமையோடு வாழ்ந்த ஒரு சக இனத்தையே மொத்தமாக அழித்துவிட்ட நிலையில், நாளை இலங்கையில் பிறக்கும் ஒரு குழந்தை வளர்ந்தெழும் என்ற நம்பிக்கை சிறிதும் கிடையாது என்று யார் சொல்கிறார்கள்?
சிங்களப் பேரினவாதம் தனது ஆகப் பெரிய தேசிய கௌரவத்தை வழங்கி பெருமைப் படுத்திய திரு.என்.ராம் அவர்களால் வழி நடத்தப்படும் 'தி ஹிந்துவே' சொல்கிறது.
இந்த இறுதி வினாவிற்கான பதிலாக, படிப்பவர் நெஞ்சமே உடைந்து போகும் வண்ணம், திரு.சம்பந்தன் சொல்கிறார்: "நான் கலங்குபவன் இல்லை.
ஆனாலும், அந்தத் தருணத்தில் எம் மக்களைப் பார்த்த போது, அவர்கள் துயரத்தைப் பார்த்த போது, என்னையும் மீறி உடைந்து போனேன்.
அது போகட்டும்.
எந்த ஓர் இனமும் காலங்காலத்துக்கு ஒடுக்கப்பட்டு கிடந்ததாகவே வரலாறு கிடையாது.
நிச்சயமாக, எமது மக்கள் விமோசனத்தை அடையும் ஒரு காலம் பிறக்கும்.
அந்த நம்பிக்கை என்னிடத்திலும், எம் மக்களிடத்திலும் நிறையவே இருக்கிறது.
அந்த நம்பிக்கையை எம் பிள்ளைகளிடத்திலும் விதைப்போம்."