RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் -2

| Thursday, December 13, 2018
(16) இச்சட்டத்தின்படி தகவல் பெறும் வழிமுறை யாது ?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு ஒரு பொது அதிகார அமைப்பிலிருந்து தகவலைப் பெற விரும்பும் இந்தியக் குடிமகன் ஒருவர், சம்மந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் பொதுத் தகவல் அலுவலருக்கு எழுத்து மூலம் ஹிந்தி /ஆங்கிலம் /அப்பிரதேச மொழி ஆகிய ஒன்றில் மனு செய்யலாம்.  விண்ணப்பமானது சுருக்கமானதாகவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ்  மனு அனுப்பும் நேர்வில், இச்சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தையும் மனுதாரர் செலுத்த வேண்டும்.

(17) எந்தப்பொது அதிகார அமைப்புகளுக்கு தகவல் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ?
இந்தச்  சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் (Second Schedule)  உள்ள சில உளவுத்துறை/பாதுகாப்பு  நிறுவனங்களுக்கு தகவல் அளிப்பதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட, லஞ்சம்/ஊழல் குற்றச்சாட்டுகள், மனித  உரிமை மீறல்கள் போன்றவை குறித்த தகவல் வேண்டலாக இருப்பின், இந்த நிறுவனங்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் தர உட்படுத்தப் பட்டவையே.

(18) தகவல் பெறும் உரிமை என்றால் என்ன ?
பொது அதிகார அமைப்பு  ஒன்றின் வசம் இருக்கும் தகவலை இந்தியக் குடிமகன் ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் கோரிப் பெறுவதற்காக அவருக்கு இருக்கும் உரிமையே தகவல் பெறும் உரிமைஆகும்.
(i) பணி, ஆவணம், பதிவேடுகளைப் பார்வையிடுதல்.
(ii) குறிப்பெடுத்துக் கொள்ளுதல், சான்றொப்பமிட்ட ஆவணங்கள், பதிவேடுகளைப்  பெறுதல்.
(iii) சான்றொப்பமிட்ட மாதிரிகளை (Samples) பெறுதல்.
(iv) குறுந்தகடுகள் (Diskettes), மின்னனு தரவு அட்டைகள் (Floppies),   நாடாக்கள்(Tapes), ஒளி நாடாக்கள் (Video Cassesses) மற்றும் வேறெந்த மின்னனுச் சாதனம் மூலமும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகள், அச்சடித்தப் பிரதிகள் ஆகியவை தகவல்என்பதில் அடங்கும்.  இவற்றை ஒரு இந்தியக் குடிமகன் எந்தப் பொது அதிகார அமைப்பிலிருந்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு கோரிப் பெற முடியும்.

(19) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் யார் தகவலைக் கோரிப்பெற முடியும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 3-ன் படி, இந்தியக் குடிமகன் ஒருவர் இச்சட்டப்படிக்கு தகவலைக் கோரிப்பெற முடியும்.

(20) தான் பிறப்பித்த உத்திரவை தகவல் ஆணையம் மீளாய்வு செய்ய இயலுமா?
முடியாது.

(21) தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதா?
ஆம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(7) -ன் படிக்கு, ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்தக்  கூடியதே.  (Binding).

(22) தகவல் ஆணையத்தின் முடிவு வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எவ்விதம் தெரிவிக்கப்படுகிறது ?
தகவல் ஆணையர் வழக்கை விசாரித்த பிறகு, முறையான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  ஆணையின் அச்சுப்பிரதி ஒன்று தகவல் கோரியவர்/மேல்முறையீட்டாளர் தரப்பிற்கும், பொதுத்தகவல் அலுவலருக்கும் தபால் மூலம் அனுப்பப்படுகிறது.  இதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.  உத்தரவின் நகல் ஆணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

(23) மனுதாரருக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஆணையம் கருதும் நேர்வில் நஷ்டஈடு எதையும் உத்தரவிட முடியுமா?
முடியும்.  பொருத்தமான நேர்வுகளில் மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்க தகவல் ஆணையம் உத்தரவிட முடியும்.

(24) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கான செயற்பாடுகளில் மனுதாரர் /மேல் முறையீட்டாளர் பங்கெடுக்க முடியுமா?முடியாது.

(25)பொதுத்தகவல் அலுவலர்கள் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ளல்களை தகவல் ஆணையம் பரிந்துரைக்க முடியுமா?
முடியும்.  எந்தவிதத் தகுந்த காரணமுமின்றி பொதுத்தகவல் அலுவலர் தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்ற நேர்விலும், பிரிவு 7(1) -ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்கியிருக்கவில்லை என்ற நேர்விலும், தீய எண்ணத்தோடு தகவலை வழங்க பொதுத்தகவல் அலுவலர் மறுத்துள்ளார் என்ற நேர்விலும், வேண்டுமென்றே தவறான, முழுமையற்ற, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கியுள்ளார் என்ற நேர்விலும், வழங்கியிருக்க வேண்டிய  தகவலை பொதுத்தகவல் அலுவலர் வேண்டுமென்றே அழித்துவிட்டார் என்ற நேர்விலும், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக எடுக்கப்பட்ட வேண்டிய துறை நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரைக்கும்.

(26) அபராதம் எதுவும் விதிக்கப்படுவதற்கு முன் பொதுத்தகவல் அலுவலரின் தரப்பை எடுத்துச் சொல்ல  அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
வழங்கப்படும்.  அபராதம் தன் மீது ஏன் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின், எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு பொதுத்தகவல் அலுவலருக்கு ஆணையத்தால் வழங்கப்படும்.

(27)மனுவை/மேல்முறையீட்டை விசாரிக்கும் ஆணையம் தண்டம் எதையும் விதிக்க முடியுமா?
எந்தவிதத் தகுந்த காரணமுமின்றி பொதுத்தகவல் அலுவலர் தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்ற   நேர்விலும், பிரிவு 7(1) -ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்கியிருக்கவில்லை என்ற நேர்விலும், தீய எண்ணத்தோடு தகவலை வழங்க பொதுத்தகவல் அலுவலர் மறுத்துள்ளார் என்ற நேர்விலும், வேண்டுமென்றே தவறான, முழுமையற்ற, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவலை பொதுத்தகவல் அலுவலர் வழங்கியுள்ளார் என்ற நேர்விலும்வழங்கியிருக்க வேண்டிய தகவலை பொதுத்தகவல் அலுவலர் வேண்டுமென்றே அழித்துவிட்டார் என்ற நேர்விலும், ஆணையம் தண்டம் விதிக்க முடியும்.   இக்காரணங்களின் பொருட்டு நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூற்று ஐம்பது வீதம் ரூபாய் 25,000-க்கு மிகாமல், (தகுந்த தகவல் தரப்படும் நாள் வரைக்கும்)  தண்டமாக தகவல் ஆணையம் பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக விதிக்கலாம்.

(28) மூன்றாம் நபரால் மந்தணத்தன்மையுடையதுஎன்று கருதப்படும் தகவலை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மனுதாரருக்கு வழங்க முடியுமா?
இப்படியான நேர்வுகளில், மூன்றாம்  நபர் எழுத்து மூலம் தான் சம்மந்தப்பட்ட தகவல் மந்தணத்தன்மை உடையதுஎன அறிக்கை வழங்க வேண்டும்.  மூன்றாம் நபருக்கு ஏற்படக்கூடிய சேதாரங்களை விட, பொது நன்மைக்கு நலம் பயப்பவை அதிகமாக இருப்பதாக பொதுத்தகவல் அலுவலர் கருதினால், அப்படியான தகவல்களை சட்டவிதி முறைகளுக்குட்பட்டு மனுதாரருக்கு வழங்க முடியும்.

(29) கோரப்பட்ட தகவலை மறுத்ததில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பொறுப்பு யாரைச் சேர்ந்தது?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(5) -ன் கீழ், கோரப்பட்ட  தகவலை மறுத்ததில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பொறுப்பு பொதுத்தகவல் அலுவலரையே சாரும்.

(30) தொலைக் காணொலிக் கூட்டங்கள் (Video Conferencing) வழியாக தகவல் ஆணைய விசாரணைகள் நடைபெறலாமா?
நடைபெறலாம்.  இம்மாதிரியான விசாரணைக்கான வசதிகள் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் உள்ள தேசிய தகவல் நிலையத்திலும் (National Informatics Center)  உண்டு.

0 comments:

Post a Comment