திருத்தி எழுத வேண்டிய தீர்ப்புகள்

| Thursday, December 13, 2018
"தமிழாற்றுப்படை" என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தமிழுக்கு தொண்டாற்றியவர்களைப் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் உரையாற்றி வருகிறார். அவ்வுரைகளின் சுருக்கப்பட்ட வடிவம் உரைக்குப் பிறகு இரண்டொரு தினங்களில் "ஹிந்து தமிழ் திசை" நாளிதழில் முழுப்பக்க அளவிற்கு வெளியாகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்பதிலும், மறக்கப்பட்ட நமது பெரியோர்களை நினைவு கூறும் விதமாக, தமிழ்நாடு முழுமைக்கும் நன்கு அறிமுகமான ஒரு பிரபலம் கட்டுரைகளை எழுதி வாசிப்பதும் மட்டுமல்லாமல், செல்வாக்கு பெற்ற பத்திரிகை ஒன்றிலும், இணையை காணொளிகள் வழியாகவும் பிறர் இவற்றைக் காணும்படிக்கு செய்து வருவதும் உள்ளபடிக்கே பாராட்டத்தக்கது.
வைரமுத்துவைப் பற்றிய அபிப்பிராயம் எனக்கு ஒன்று உண்டு. எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் அவர் எழுத்து சஞ்சிகைகளில் வெளியான துவங்கிய நாட்களிலிருந்து அவற்றைப் படித்து வருவதால், இசைமையோடு எழுதப்படும் கவிதைகளிலும், திரைப்பாடல்களிலும் திறமையாக செயல்பட்டுள்ளார் என்று சொல்ல முடியும். புதுக்கவிதையிலும், நாவல் படைப்பிலும், ஏன் சிறுகதையிலுமே கூட அவரைப் பற்றி வியந்தோதுவதற்கு எதுவும் இல்லை. தவிரவும் அவரது உரைநடை கூட சற்று டி.ராஜேந்தர் பாணியில் இருப்பதாக நினைக்கிறேன். 'கவர்ச்சி' என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவமும், 'ஆழம்' என்ற அம்சத்திற்கு அலட்சியமும் கொடுப்பதான நடை அவருடையது. சினிமாவிற்கான பாடல்களில் சிலாகிக்கும் படியாக நூறையாவது எழுதியிருப்பார் என்ற போதிலும் கூட, அவரைப் பற்றி நினைக்கையில் 'சாமர்த்தியமான மனிதர்' என்ற தொடரே மனதில் எழுகிறது. கலைஞரின் உற்ற தோழர்; ஆனால் திமுகவில் உறுப்பினர் அல்லர். அதிமுக மேனாள் தலைவர் ஜெயலலிதா அவர்களை வைரமுத்து கண்டுகொண்டதே இல்லை; ஆனால், அக்கட்சியில் அவருக்கு உற்ற பெருந்தகைகள் உண்டு. நாத்திகர் என்றே தம்மை வெளிப்படுத்துவார்; ஆனாலும், மரித்த மனிதரின் கல்லறையில் பால் தெளிப்பார். மதவாதத்திற்கு எதிரானவராக தன்னை கட்டமைத்துக் கொண்டே பாஜக-வின் விஜய் தருணுக்கு விழா எடுப்பார். தன்னை பெரியாரிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டே கற்பில் சிறந்த தமிழ்ப் பெண்களைப் பற்றி புளகாங்கிதம் அடைவார்.
இத்தோடு விட்டிருக்கலாம் அவர். 'தமிழாற்றுப்படை' என்ற அவரது நிகழ்வு நன்கு விளம்பரபடுத்தப் படுகிறது. அடுத்த நாளே, தமிழகத்தின் முக்கியமான தினசரி முழுப்பக்க அளவில் அக்கட்டுரைகளின் சுருக்கப் பதிப்பை வெளியிடுகிறது. இப்படியான கவனம் பெறும் நிலையில், தன்னுடைய தரவுகளில் அவர் இன்னும் பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். ராபர்ட் கால்டுவெல் பற்றிய அவரது கட்டுரையில் உள்ள பிழைகள், நம்பகத் தன்மையற்ற தரவுகள், கட்டுரை யாரைப் பற்றியதோ அப்பெருந்தகையின் சமகால வரலாறு பற்றிய விடயங்களில் கற்றோர் அஞ்சும்படிக்கு அசட்டையாக இருந்து விட்டார் என்றெல்லாம் இன்று (28-8-2018) ஆ.இரா.வேங்கடசலபதி இந்து தமிழ் திசையில் சுட்டிக்காட்டியிருப்பதும், வைரமுத்துவின் 'தொல்காப்பியர்' பற்றிய கட்டுரையில் காணப்படும் பிழைகள் பற்றி சி.அறிவுறுவோன் 'காக்கைச் சிறகினிலே' (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 2018 இதழ்கள்) மாத இதழில் விலாவாரியாக எழுதி வருவதும் கருதத் தக்கது. இவைகளுக்கு வைரமுத்துவின் பதில் என்ன என்பதில்தான் அவரின் இலக்கிய நாணயம் உறைந்திருக்கிறது. வேங்கடசலபதி மற்றும் அறிவுறுவோன் இருவருமே வைரமுத்துவின் கட்டுரைகளில் உள்ள கருத்துப் பிழைகள், தரவுகளின் போதாமை ஆகியவற்றை மட்டுமே சுட்டுகிறார்கள். கவிஞரைப் பற்றிய தனிமனித தாக்குதல்கள் எவ்விடத்திலும் இல்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதி பொதுவெளியில் வாசித்தவர் என்ற முறையில், சுட்டிக்காட்டப் பட்டவைகளைப் பொறுத்த வரையில், தன் தரப்பு நியாயங்களைத் தருவதற்கான பொறுப்பும் கடமையும் வைரமுத்துவிற்கு உண்டு.
பேரரசர்கள் கொஞ்சம் குனிந்து பார்க்கலாம்.
(பின்குறிப்பு: "கால்டுவெல்லும் என் மனக்குறையும்…." என்று தலைப்பிட்டு 29-8-2018 அதிகாலையில் திரு.பொ.வேல்சாமி அவர்கள் ஒரு நீண்ட குறிப்பை முகநூலில் பதிவு செய்துள்ளார்கள். தரவுகளின் போதாமையாலும், அப்படிப்பட்ட போதாமையை உணர்ந்தாலும், எப்படி சிலர் இருப்பதை வைத்துக் கொண்டே சல்லியடிக்கிறார்கள், பாரியமான தேடலை நடாத்துபவர்களை பதிப்பகங்களும், பல்கலைக் கழகங்களும் மனசாட்சியின்றி எப்படி இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பது பற்றி பொ.வேல்சாமி பதிவிட்டுள்ளார். இதிலும் தனிமனித தூஷணைகள் எதுவும் இல்லை என்ற போதிலும், தேடிப்பிடித்த மனிதனின் உள்ள அரற்றலை உணர முடிகிறது. வேல்சாமிகளை படிப்பாரில்லை; வைரமுத்துவை தூக்கிப் பிடிக்காமல் விடுவாரில்லை.

0 comments:

Post a Comment