கார்த்திக் சுப்புராஜுவின் பெண் சிலைகள்

| Thursday, December 13, 2018
ஒரு கலைப்படைப்பானது – கதையோ கவிதையோ – பிரச்சனைகளை முன்னிலைப் படுத்த வேண்டுமா, தீர்வுகள் சொல்ல வேண்டுமா, முற்போக்கு அல்லது பிற்போக்கு சக்திகள் என்று சொல்லப்படுபவர்களின் நிலைப்பாட்டை ஒட்டித்தான் அந்தக் கலைப்படைப்பில் சொல்லப்படக் கூடிய தீர்வுகள் இருக்க வேண்டுமா, அந்தக் கலைப்படைப்பின் வெற்றிக்கும் இந்த சங்கதிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதெல்லாம் வெறும் பாடசாலைக் கேள்விகளே. ஒரு படைப்பு இத்தனை சமாச்சாரங்களில் தன்னை ஒப்புக் கொடுப்பதில்லை. யாரையும் கேட்காமலேயே அது பிறக்கிறது. சொல்லப்போனால், அது கலைஞனிடமிருந்து வருவதில்லை; அவன் வழியாக வருகிறது. தானே வளர்கிறது. தன்னுடைய தேவை முடிந்ததும் மறைந்தும் போகிறது. பிறகு தோண்டி எடுத்தாலும் உயிர் இருக்காது. ஏன் செத்தது எப்படி செத்தது போன்ற கேள்விகளுக்கு ஏதேனும் விடை தோண்டுபவர்களுக்கு கிடைக்கலாம்.
‘இறைவி’ படத்தைப் பார்த்ததும் எழுந்த எண்ணங்கள்தான் இவை. இதில் வரும் பெண்கள் representative-ஆக இருக்கிறார்கள். பாலின மேலாதிக்கத்தை பிடிவாதமாக நிறுவும் ஆண்களிடம் பல்வேறு உறவு நிலைகளில் சிக்கிக்கொண்ட பெண்கள் தங்களை எப்படி விடுவித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நுட்பமாக பேசும் திரைப்படம் என்பதாக இதைக் கருதலாம். ஏன் எதிர்த்துப் போராடவில்லை, அவர்கள் போராடியிருக்க வேண்டும், அவர்கள் வெறுமனே தப்பித்துச் செல்கிறார்கள் என்பது முழுவதும் உண்மையில்லை. அவர்கள் போராடத்தான் செய்கிறார்கள். தப்பிப்பை வெற்றிகரமாக நிழத்துவதே மிகப்பெரிய போராட்டம்தான். இதில் நான்கு பெண்கள் ஆண்களிடமிருந்து தப்பிக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும், அதாவது கல்யாணம் கட்டிக்கொண்ட நாளிலிருந்து, தன்னுடைய கணவனால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார் வடிவுக்கரசி. கரித்துக்கொண்டேயிருக்கும் கணவனால் தன்னுடைய இயல்பான ஆசாபாசங்களைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்ற நிலையில் முதலில் மௌனத்திடமும் பின்னர் கோமாவிடமும் சரணடைகிறார் அவர். தன் கணவனைப் பழிவாங்குவதற்கு மிகக் குரூரமான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார் அவர். கணவனைப் போலவே தன்னுடைய இரண்டு மகன்களும் என்பது கோமாவிலிருந்து வெளியே வரவே கூடாது என்பதற்கான நியாயம். ஒரே அடி. மூன்று மாங்காய்கள். பாலின மேலாதிக்க மரபில் வேர் பாய்ச்சி நிற்கும் இந்த மூவரும், வடிவுக்கரசி கோமாவிற்குள் தப்பிப்பை நிகழ்த்திய பிறகு, வேரற்ற மரமாக வீழ்கிறார்கள். பெண்ணிடம் புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையே உணர முடியாத ஆண்களின் தவிர்க்க முடியாத வலியைத்தான் தந்தையும் இரண்டு மகன்களும் அனுபவிக்கிறார்கள். அம்மாவை முட்டாளாகப் பார்த்த அப்பாவின் கண்ணாடி வழியாகத்தான் மகன்களும் தங்களுடைய காதலிகளையும் மனைவிகளையும் பார்க்கிறார்கள்.
வெளியிடப்படாத தன்னுடைய படம் நிமித்தமாக குடித்துத் தள்ளும் மூத்த மகன் தனக்கு நல்லது எதுவுமே நடந்துவிடக் கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறான். மனைவி குழந்தையை ஜடமாகக் கூட கருதாதவன் மட்டுமல்ல, சராசரி மனநிலையும் இல்லாதவன். கடவுளர் சிலைகளைத் திருடுவதற்கு - கொலை கொள்ளைகளுக்கு மனசாட்சிக்கு தொந்தரவில்லாமல் உதவுபவன். குடிக்க வேண்டாம் என்று தன்னைக் கெஞ்ச வேண்டியது மனைவியின் தினசரி கடமை என்று நினைத்துவரும் இந்த ‘வெளிவராத’ கலைஞனை விட்டு வெளியேறும் அவள் எந்த உறவும் எல்லைகளுக்குக் கட்டுப்பட்டது என்பதைப் புரிய வைக்கிறாள். இவனை விவாகரத்து செய்வதோ இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்வதோ ‘பெண்ணீய’ நிலைப்பாட்டிலிருந்து எடுக்கப்படும் முடிவல்ல. அவள் முன்னால் இருக்கும் இயல்பான எளிதான மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கிறாள். அதற்கான உரிமையும் நியாமமும் அவளுக்கு உண்டு.
விஜய் சேதுபதி தாங்கியிருக்கும் மைக்கேல் கதாபாத்திரத்தோடு நிறைய ஆண்கள் தம்மைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். வேறு பெண்களோடு நாம் தொடர்பில் இருந்தாலும், நம் பெண்கள் ‘சுத்தமாக’ இருக்க வேண்டும் என்ற சராசரியான மன இயல்பு. இவரது புணர்ச்சி வேட்கைக்கான வடிகாலாக வரும் பெண் இவரை இதே காரணம் கொண்டு மட்டுமே அனுமதிக்கிறாள். இதை மைக்கேல் புரிந்து கொள்வதே இல்லை. அப்பாவின் பிள்ளை. தன்னை விரும்புவதுதான் இந்தப் பெண்ணிற்குத் தலைவிதி என்பதாக நம்பும் இவரை அந்தப் பெண் நிர்த்தட்சண்யமாக ஒடித்துப் போடுகிறாள். நீ பார்க்கும் பெண்களில் நான் ஒருத்தி என்பதைப் போல நான் பார்க்கும் ஆண்களில் நீ ஒருவன் என்பதை உணர்ந்து கொள் என்று புரிய வைக்கும் இந்தக் கதாபாத்திரம் ‘இறைவி’-யின் கதைமாந்தர்களிலேயே மிக முக்கியமானவள். தன்னுடைய வாழ்க்கை – விடுதலை – சுதந்திரம் என்பவற்றில் ஆணை எளிதாகக் கடந்து போகும் பாத்திரம் இவள் மட்டும்தான். மற்ற மூன்று பெண்களும் தங்களுடைய ஆண்களிடம் கதிப்பட்டு துன்புறும் போது, இவள் ஆண்களை தனக்காகப் பயன்படுத்திக் கொண்டு நேர்மையாக அதை சம்பந்தப்பட்ட ஆணிடம் விளக்கி நகர்ந்து போகிறாள். தனக்கான வழியை ஏற்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கான வழியையும் அடைக்காமல் நகரும் தன்மை கொண்ட நவீன பெண் மாந்தர். இந்தப் பாத்திரப் படைப்பில் மிகைத்தன்மை எதையும் கொடுத்து விடாதது திரைப்படத்தை சமகாலத்தியதாக ஆக்குகிறது. மைக்கேலிடம் பொய் ஒன்றை சொல்லி தன்னுடைய வாழ்க்கையிலிருந்து நகர்த்துவது அவன் மேலுள்ள காதலால் அல்ல, அவள் move on ஆவதற்கே.
மைக்கேலின் மனைவி பாத்திரப் படைப்பும் விஷேசமானதுதான். பார்க்க வந்தவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனைக் கண் கண்ட தெய்வமாக நினைத்தவள். கணவன் திருடன், கொலைகாரன், வழமையாக ஜெயிலுக்குப் போகிறவன் என்று தெரிந்தும் மன்னிக்கிறாள். அவன் ஜெயிலில் இருந்த காலத்தில் முதலாளி குடும்பத்தைச் சேர்ந்தவனும் கணவனின் நண்பனுமான இளைஞன் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லும்போது அதையும் யோசித்து, குழந்தை காரணமாக முடியாமல் எங்கோ கண்காணா இடத்திற்குப் போய் பஞ்சையான வாழ்க்கை நடத்துகிறாள். திரும்பி வரும் கணவனிடம் குடும்பத்தின் இரண்டாவது இன்னிங்சைப் பார்ப்பவளை வாழ்க்கை மறுபடியும் ஏமாற்றுகிறது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் வலிமையானது. “இந்த ஆண்கள் நீ ஆசைப்பட்டதை தரமாட்டார்கள்; போய் விடு” என்று அந்தப் பெரியவர் கதறுவதை உணர்ந்துகொள்ளும் அவள், கொலையுண்டு கிடக்கும் கணவனைப் பார்க்கவும் செய்யாமல் ரயிலேருகிறாள். தனக்கும் தன் மழலைக்குமான எதிர்காலம் இனிமேல் எந்த ஆணையும் சார்ந்ததல்ல என்ற ஞானத்தில், பெய்யும் மழை நோக்கி நகரும் ஜன்னலின் வழியே கைநீட்டுவதுடன் துளியாய் எங்கோ விழுகிறாள்.
வெளிவராத திரைப்படத்தின் இயக்குனரின் தம்பியாக பாபி சிம்ஹா நடிக்கும் பாத்திரம் சிறப்பானது. அம்மா, அண்ணி மற்றும் நண்பனின் மனைவி ஆகியோர் தங்களின் ஆண்களால் கேவலமாக நடத்தப்படுவது கண்டு மனம் பொருமும் இவன், ஒரு patronizing மனநிலையில்தான் பெண்களை அணுகுகிறான்; empowering மனநிலையில் அல்ல. இந்த மனோபாவமுமே gender hegemony-ன் கூறுதான்.
பெண்களுக்கும் ஆண்களுக்குமான உலகத்தை ஆண்கள் தம்வயப் படுத்திக் கொண்டார்கள். பெண்கள் தப்பிக்கிறார்கள். ஆண்கள் துரத்திப் பிடிக்கிறார்கள். தப்பித்தலும் துரத்துதலும் நடந்த வண்ணம் உள்ளது. சில சமயம், தப்பிப்பவர்கள் திரும்பி நின்று துரத்தத் துவங்குகிறார்கள். துரத்தியவர்கள் தப்பிக்கத் துவங்குகின்றனர். இந்தப் பாலின ஓட்டப்பந்தயம் முடியப்போவதேயில்லை. பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் கேலரியில் அமர்ந்து விசிலடிக்காமல் ஓடுகளத்தில் நிகழ்வதைப் பார்க்கும் லாவகம் கைவந்தவர்கள் மிகச்சிலரே.
கார்த்திக் சுப்புராஜ் அப்படித்தான் பார்த்திருக்கிறார். விவேகி.

0 comments:

Post a Comment