RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் - 4

| Thursday, December 13, 2018
(47)மாநில தகவல் ஆணையம் மத்திய தகவல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? மாநில தகவல் ஆணையத்தின் ஒரு ஆணையை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியுமா?
மாநில தகவல் ஆணையம் மத்திய தகவல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.  அப்படியான மேல்முறையீடு செய்ய முடியாது.  மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த ஆணை ஒன்றை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.

(48) தலைமை தகவல் ஆணையரும் மற்ற தகவல் ஆணையர்களும் பணியை எவ்விதம் பகிர்ந்து கொள்கின்றனர் ?
இதைப்பற்றிய விவரம் மத்திய  தகவல் ஆணையத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது.

(49)மத்திய தகவல் ஆணையத்தின் ஆளுகை வரம்பிற்குட்பட்ட (Jurisdiction) பொது அதிகார அமைப்புகள் யாவை ?
மத்திய அரசு அல்லது யூனியன் பிரதேசங்களின் அரசுகள் (தில்லி உட்பட) விடுவிக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழியாக உருவாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து பொது அதிகார அமைப்புகளும் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்பிற்குள் வருகின்றன.  மத்திய அரசின் அனைத்து துறைகளும், அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் மத்திய தகவல் ஆணையத்தின் வரம்பிற்குள் வருகின்றன.  மேலும் இதைப் பற்றிய விவரங்கள் முழுமையாக மத்திய தகவல் ஆணையத்தின் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.

(50) மத்திய தகவல் ஆணையம் எவ்விதம் கட்டமைக்கப்பட்டுள்ளது ?
மத்திய தகவல் தலைமை ஆணையரும், பத்திற்கும் மேற்படாத ஆணையர்களும் மத்திய தகவல் ஆணையத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  தகவல் ஆணையர்கள் பற்றிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் உள்ளன.

(51)அமைச்சரவைக் குறிப்புகள், ஆளுநரின் அறிவுறுத்தல்கள், குடியரசுத் தலைவருக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துகள் ஆகியவற்றை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வெளியிட முடியுமா?
இங்கே ஒரு விடயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  சாதாரண சூழ்நிலைகளில் இவைகள் வெளியிடப்பட வேண்டியதில்லை.  ஆனால், பொது நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவைகளை வெளியிடுவதால் ஏற்படும் பொது நன்மை என்பது கணிசமானது என்று சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பின் பொதுத் தகவல் அலுவலர் கருதுவாராயின், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின், இச்சட்டத்தின் படி விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தவிர பிறவற்றை வெளியிடலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் K.R.நாராயணன் அவர்களுக்கும் அப்போதைய பிரதம அமைச்சர் A.B.வாஜ்பாயி அவர்களுக்கும் இடையே நடந்த குறிப்பிட்ட கடிதப் போக்குவரத்துகளை பொது நன்மை கருதி வெளியிட சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் மறுத்தது இங்கு கருதத்தக்கது.

(52) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வழக்கு செலவு (costs) மற்றும் நஷ்ட ஈடு (compensation) ஆகியன பற்றி விளக்கவும்.
வழக்கு செலவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு செலவிற்கும் ஆதாரமான ஆவணங்களை மனுதாரர் முன்னிலைப் படுத்தியாக வேண்டும்.  மேல்முறையீட்டு நேர்வுகளில், பொதுவாக, மனுதாரருக்குப் பதிலியாக வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராக முடியாது.  சில சிறப்பு நேர்வுகளில் அப்படியான ஒரு ஏற்பாட்டை ஆணையம் அனுமதித்தாலுமே கூட, வழக்கறிஞரை அமர்த்தியதற்கான செலவுகளை இச்சட்டத்தின் படிக்கு மனுதாரர் கோரிப்பெற முடியாது.  சம்பந்தப்பட்ட தரப்புகளே மேல்முறையீடுகளில் தமக்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்.  இருப்பினும், பயணச் செலவுகள், செலுத்தப்பட்டிருக்கும் கட்டணம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட தரப்பு கோரிப்பெற முடியும்.
இச்சிக்கலின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கலாம்.  மனுதாரர் கோரியிருந்த தகவல்களை வழங்குவதற்காக பொதுத் தகவல் அலுவலர் பெருந்தொகை ஒன்றை செலவு செய்திருக்கலாம்.  இத்தொகையை மனுதாரரிடமிருந்து, அனுமதிக்கப்பட்ட வீதத்தில், பொதுத் தகவல் அலுவலர் கோரிப்பெற முடியும்.
வேறு தருணங்களில், மனுதாரருக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக ஆணையம் கருதலாம்.  மனுதாரருக்கு இழைக்கப்பட்ட நட்டம், அசௌகரியம், மன உளைச்சல் ஆகியவற்றிற்காக பொது அதிகார அமைப்பு அவருக்கு நஷ்ட ஈடு ஒன்றைத் தருமாறு ஆணையம் கட்டளையிடலாம்.  பொதுவாக இந்தத் தொகையானது ரூபாய் ஐயாயிரம் வரை இருக்கும்.
ஆனால் தனக்கு இழைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் கருதும் அநீதிக்கு பிராயச்சித்தமாக பொதுத் தகவல் அலுவலருக்கு தினந்தோறும் ரூ.250/- வீதம் ரூ.25,000/-க்கு மிகாமல் அபராதம் விதிக்க வேண்டும் என்று மனுதாரர் ஆணையத்தைக் கோர முடியாது.  பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் கோர முடியாது.  இத்தகைய அபராதமோ, ஒழுங்கு நடவடிக்கைக்கான பரிந்துரையோ பொருத்தம் என்று தாம் கருதுகிற நேர்வுகளில், மேல்முறையீட்டின் தன்மைக்கேற்ற தன்னிச்சையாக ஆணையம் முடிவு செய்வதாகும்.  அபராதம் விதிப்பது என்பது தனியான ஒரு செயல்.  மேல்முறையீட்டுடன் தொடர்பில்லாதது.  ஆணையத்தின் தன்னெழுச்சியான(suo motu) முடிவாகும் அது.

(53)தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவலைப் பெற தகுதியுடையோர் யார்?
இந்த சட்டத்தின் படிக்கு இந்தியக் குடிமகன்கள் யாவரும் தகவலைப் பெற முடியும். இந்தியக் குடிமகன்கள் அல்லாதோர் தகவலைக் கோரிப்பெற முடியாது.  யாரெல்லாம் இந்திய நாட்டு பிரஜைகள் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் படிக்கு முடிவு செய்யப்பட வேண்டியதாகும். மன்றங்களோ (associations), நிறுமங்களோ (companies), அல்லது அறக்கட்டளைகளோ (trusts) குடிமகன்கள் என்ற வரையறைக்குள் வரவில்லை.  இந்தியாவில் துவங்கப்பெற்று நடந்து வரும் அயல் நிறுவனங்களும் 'குடிமகன்' என்ற வரையறையில் இல்லை. இந்தியக் குடிமகன்களுக்கு மட்டுமே தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவலைக் கோரிப்பெறும் உரிமை உண்டு.  இந்தியக் குடிமகன் அல்லாதோர் சார்பாகவும் யாரும் தகவலை இச்சட்டப்படிக்கு கோரிப்பெற  முடியாது. தான் யார் என்று அடையாளப்படுத்துவதற்காக பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை ஒரு மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் நேர்வில், அது செல்லத்தக்க மனு என்றே கொள்ளப்படும்.  ஆனால், ஒரு அரசியல் கட்சியோ, தொழிலாளர் சங்கமோ தன்னால் பிரதிநிதித்துவப்படுகிறது (on behalf of) என்று அறிவித்து தகவலைக் கோரிப்பெற முடியாது.  ஒருவர் தன்னுடைய சொந்த தகுதியில் தகவல்களைக் கோரலாம்.  ஆனால், நிறுவனங்களுக்காக அவர் எந்தவொரு தகவலையும் பொது அதிகார அமைப்புகளிடமிருந்து கோரவியலாது.

(54)தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தகவல் வழங்கும் பொறுப்புக்கடமை கொண்டவர்கள் யார்?
அனைத்துப் பொது அதிகார அமைப்புகளும் தகவல் வழங்க கடமை கொண்டவர்கள். அரசால் நேரடியாக நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் அனைத்து நிறுவனங்களும் பொது அதிகார அமைப்புகள் ஆகும்.  ஒரு நிறுவனத்தின் எந்த அளவு அரசின் பங்கு / செயற்பாடு இருந்தால் அது பொது அதிகார அமைப்பாகக் கருதப்படலாம் என்பது குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.  ஒரு நிறுவனத்தின் மீது அரசு முற்று முழுவதுமான ஆளுகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.  நிறுவனம் ஒன்றின் மீது நிர்வகிக்க / கண்காணிக்க / ஒழுங்காற்று செய்ய அரசுக்கு கடப்பாடு உள்ளது என்பதே போதுமானது.  அப்படியான அமைப்பு பொது அதிகார அமைப்பு என்றே கருதப்படலாகும்.  அரசின் ஆளுகை மறைமுகமாக இருக்கும் துணை நிறுவனங்கள் கூட பொது அதிகார அமைப்புகள்தான்.
எடுத்துக்காட்டாக, BARC Family Relief Scheme என்பது ஒரு பொது அதிகார அமைப்பாக கருதப்படும்; ஏனென்றால், அது Bhaba Atomic Research Centre என்ற பொது அதிகார அமைப்பின் ஒரு துணை அமைப்பு. IRCON International என்பது ஒரு பொது அதிகார அமைப்பு; ஏனென்றால் அதன் நிர்வாக இயக்குனர்கள் அரசால் நியமிக்கப்படுவது மட்டுமன்றி, அதன் கணக்குகள் இந்திய அரசின் தணிக்கை அலுவலரால் (Comptroller and Auditor General of India) தணிக்கை செய்யப்படுகின்றன. Delhi Development Authoirty என்ற பொது அதிகார அமைப்பு நாற்பது சதவிகித பங்குகளை வைத்திருப்பதால் DISCOMS என்ற நிறுவனமும் பொது அதிகார அமைப்பாக கருதப்படும்.

(55)பொதுத் தகவல் அலுவலர் ஒருவர் வெளியிடக்கூடாத தகவல்கள் எவை?
பொதுத் தகவல் அலுவலர் தன்னிடம் ஆயத்தமாக இருக்கும் தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி வெளியிடக்கூடிய, வெளியிட்டாக வேண்டும்.  சில தருணங்களில் அதே பொது அதிகார அமைப்பின் கீழ் பணியாற்றும் மற்ற பொதுத் தகவல் அலுவலர்களிடமிருந்தும் தகவல்களை சேகரித்து மனுதாரர்களுக்கு அவர் வழங்க வேண்டி வரலாம். இருப்பினும், கீழ்க்கண்ட தகவல்கள் வெளியிடப்படக் கூடாதவை:
1. எந்தத் தகவல் வெளியிடுதலால் பொது நன்மைக்கு சாதகமான பலன்கள் ஏற்படாதோ அவற்றை வெளியிட வேண்டியதில்லை.
2. மூன்றாம் நபரின் சம்மதமில்லாமல் அவர் பற்றிய செய்திகள். எந்த செய்திகளை வெளியிட்டால் மூன்றாம் நபரின் புகழ் மற்றும் வணிக நலன்கள் பாதிக்கப்படுமோ அவற்றை வெளியிட முடியாது.
3. நடந்து கொண்டிருக்கும் புலனாய்வுகள், விசாரணைகள், குற்றவியல் வழக்குகளில் நடப்பு நீதிமன்ற விசாரணைகள், ஒழுங்கு நடவடிக்கை செயற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள், இவைகள் முற்று முழுவதுமாக முடியும்வரை வெளியிடப்படக் கூடாதவை.
4. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியின்றி அங்கு நிலுவையில் இருக்கும் எந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது.
5. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் இரண்டாவது அட்டவணையில் காணப்படுகின்ற உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றிய செய்திகள் பொதுவாக வெளியிடப்படக் கூடாதவை.  ஆனால், அப்படி ஒரு செய்தி அந்த நிறுவனங்களைப் பற்றி வெளியிடப்பட்டால் பொது நன்மைக்கு உகந்தது என்ற முடிவுக்கு பொதுத் தகவல் அலுவலர் வருவாரேயானால், அதை வெளியிடலாம். இந்த நிலையில் பொதுத் தகவல் அலுவலர் பல்வேறு விடயங்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுத்தல் அவசியம்.

(56)  பொதுத் தகவல் அலுவலரிடம் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்காமல் தவிர்க்கலாம்?
தான் சார்ந்திருக்கும் பொது அதிகார அமைப்பு பேணி வரும் ஆவணங்களிலிருந்து பொது தகவல் அலுவலர் தகவல் வழங்குகிறார். இந்த நிலையில், கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு கோருவதை மனுதாரர் தவிர்க்கலாம்.
1. பொது அதிகார அமைப்பு பேணி வரும் ஆவணங்களில் எந்த தகவல்கள் இல்லை என்று வினவுதல் தவிர்க்கப்படலாம்.
2. ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டு பொதுவெளியில் காணக்கிடைக்கின்ற தகவலை வழங்கச் சொல்லி கோருவதைத் தவிர்க்கலாம்.
3. பொதுத் தகவல் அலுவலரின் அபிப்பிராயங்களை கேட்பது தவிர்க்கப்படலாம். மேலும், ஏன், எதற்கு, எப்பொழுது, எப்படி, ஆம் / இல்லை போன்ற பொருண்மைகள் கொண்ட கேள்விகளைத் தவிர்க்கலாம்.
4. ஒரு விடயத்தைப் பற்றி பொதுத் தகவல் அலுவலரின் கருத்தைக் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி ஒரு விடயத்தைப் பற்றியதான தனது கருத்தை பொதுத் தகவல் அலுவலர் தெரிவிக்க முடியாது.
5. துறை அலுவலர்களின் தனி மனித அந்தஸ்தை குறைக்கும்படியான கேள்விகள் தவிர்க்கப்படலாம். மூன்றாம் நபரின் தனிப்பட்ட தகவல்கள் கோருவதைத் தவிர்க்கலாம்.
6. பொதுத் தகவல் அலுவலர் வெளியிட்ட ஒரு தகவலைப் பற்றிய தொடர் நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.
7. பொதுத் தகவல் அலுவலரை அறிவுரை தருமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.
8. பல கோப்புகளிலிருந்து தகவல்களை ஒன்றிணைத்துத் தருமாறு கோருவதைத் தவிர்க்கலாம். அல்லது ஒரு தகவலின் சாரத்தை மட்டும் வழங்குமாறு கோருவதைத் தவிர்க்கலாம்.