தி இந்துத்துவா சமஸ்களும், முகநூல் மார்க்சுகளும்

| Thursday, September 14, 2017
தமிழ் மொழியில் தினசரிகள் என்று பார்க்கிற பொழுது அவற்றின் பாரம்பரியமும் வளர்ச்சியும் நிச்சயமாக நாம் பெருமைப் படத் தக்கவையே.  அரசியல் விடுதலைக்கு முந்தைய காலத்தில் சுதேசமித்திரன் மற்றும் இதர தினசரிகள் மக்களிடையே அரசியல் உணர்வை தூண்டிவிட்டவாறு இருந்தன.  விடுதலைக்குப் பிந்தைய காலத்தை நோக்குமிடத்து, தினமணி தன்னுடைய தலையங்கங்களின் வாயிலாக அரசியல் கனலை மக்களிடையே தக்க வைத்துக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.  சிவராமன் போன்றோரின் பங்களிப்பு போற்றத்தக்க வகையில் இருந்தது. பெரியார் தனது தினசரிகளின் மூலம் திராவிடர் கழக கருத்துகளை தீவிரமாக எழுதி வந்தார்.  ஐம்பதுகளில் திராவிடர் முன்னேற்ற கழகம் அரசியலில் வெகு வேகமாக முன்னகர்ந்ததற்கு காரணமே தினசரிகளில் பிரசுரிக்கப்பட்ட அதன் முன்னணித் தலைவர்களின் அனல் கக்கிய எழுத்துக்கள்தான்.

இவர்களின் எழுத்துக்களின் பின்னணியில் ஜனநாயகப் பண்பு இருந்தது.  இல்லை என்போருக்கு ஏதாவது அரிதாக தடயங்கள் கிடைக்கலாம்.  நான் பெரும்பான்மையைச் சொல்கிறேன். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில், தீவிர மதவாத எழுத்துக்கள் எடுபடவில்லை. மிகச் சிறிய அளவிலான சாதீய செயற்பாடுகள் தெரியவந்த நிலையிலேயே தீவிரமாக எதிர்க்கப்பட்டன.  வ வே சு ஐயர் அவர்களின் குருகுலம் பிரச்சினைக்கு உள்ளாகி மூடப்பட வேண்டி வந்தது.  பெரியார் திராவிடம் - சுயமரியாதை - பிராமணீய எதிர்ப்பு - பெண் கல்வி - சாதீய எதிர்ப்பு போன்றவற்றின் காவலராக இருந்தார்.  வலது சாரி எழுத்துக்கள் - செயற்பாடுகள் பெரியாருக்குப் பயந்தன.  நம்ப மறுப்போர் அன்றைய வருடங்களின் தினசரிகளின் தலையங்கங்களைத் தேடிப் படிக்கலாம்.

பேராசிரியர் அந்தோணிசாமி மார்க்ஸ் கிண்டலாக (ஆனால் சரியாக) அழைக்கும் 'தி இந்து'த்துவாக்கள் ரொம்பவும் கில்லாடியான ஆசாமிகளாக இருக்கிறார்கள்.  மோடிக்கான ஆதரவை மோடி எதிர்ப்பெழுத்தின் வழியே உருவாக்குகிறார்கள்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மோடியை இந்துத்துவ தீவிரவாதி என்றும், இந்திய பன்மைத்துவத்தின் எதிரி மோடி என்றும் திரும்பத் திரும்ப சொல்லும் சமஸ்கள், மோடி போன்றோரை விடுத்த இந்துத்துவம் வரவேற்கக் கூடியதே என்ற நிலைக்கு வந்து சேர்கிறார்கள்.  இடது சாரிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அவ்வப்போது கட்டுரைகள் எழுத வைத்து தங்களது நடுநிலைமையை பொதுவெளியில் கட்டமைக்கும் இவர்கள், மோடியை தாக்குவது போன்ற பாவனையை மிகக் கவனமாக நிகழ்த்துகிறார்கள்.  மோடி தீவிர இந்துத்துவத்தின் முகம் என்றும், எதேச்சதிகாரத்தின் முகம் என்றும் கவனமாகவே சொல்லப்படுகிறது.  தங்களது நடுநிலைமை பாவனைக்கு இது முக்கியம்.  அதைக் கட்டமைத்து விட்டு, மெதுவாக வலதுசாரித் தத்துவத்திற்கும், அதற்குப் பின்னால், மோடிக்கோ அல்லது அன்றிருக்கப் போகும் அதிபெரும் வலதுசாரித் தலைவருக்கோ கொடிபிடிப்பதுதான் நியாயமானது என்ற நிலை பொதுவெளியில் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, பாவனையில்லாத தங்களது வலதுசாரி முகங்களைக் காண்பிப்பார்கள்.

ஒரு வகையில், சமஸ் மிகவும் எளிமையானவர்.  தன்னை மற்றவர்கள் decode செய்வதற்கு எந்தவித சிரமங்களும் தராதவர்.  ஆனால் அவருக்கு ஒன்று தெரியும்.  தன்னை எவ்வளவு எளிமைப்படுத்தினாலும், பாவனைகள் அற்ற தனது முகத்தை படிக்கும் கூர்மை அற்றவர்கள் இந்த நவநாகரிக படித்த தமிழ்ப் பெருமக்கள் என்பது சமஸ்களுக்குத் தெரியும். 

ஒன்றே ஒன்று மட்டும் சமஸ்கள் எதிர்பார்க்கவில்லை. இவர்களின் தினசரியைப் படிப்பவர்கள் ஐந்து ரூபாய்கள் கொடுத்துப் படிக்க வேண்டும்.  சமஸ்களின் "எதிரிகள்", இதிலே பேராசிரியர் அ மார்க்ஸ் முக்கியமானவர், தங்களது முகநூல் மற்றும் வலைப்பக்கங்களில் சமஸ்களை கிழித்தெடுக்கிறார்கள்.  சமஸ் வகையறா கையில் எடுக்கும் ஒவ்வொரு அம்சத்திற்கும் எதிரான வாதங்களை மார்க்ஸ் போன்றோர் காத்திரமாக எதிர் வைக்கும் போது, திணறிப்போய் 'நான் நல்லவன், என்னை இப்படித் திட்டுகிறார்களே, இவர்களை காலம் கேட்கும்' 
என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

காலம் அனைவரையும், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும்.
Though the mills of God grind slowly;
Yet they grind exceeding small;
Though with patience he stands waiting,
With exactness grinds he all.

(HW Longfellow)




0 comments:

Post a Comment