அனைவருக்கும் அரசுப் பள்ளி

| Thursday, September 14, 2017
இளங்கோ கல்லணை தன்னுடைய முகநூல் பதிவில் [6-7-2017] ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளார். தமிழக அரசு ஏன் தன்னுடைய பள்ளிகளை கோச்சிங் சென்டர்களாக மாற்ற வேண்டும் என்று கேட்கிறார். நல்ல பொருள் உள்ள கேள்வியாகத்தான் இதைப் பார்க்கிறேன். உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பு வேண்டி, மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் / தகுதித் தேர்வுகள் / பணித் தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது. அதற்கான கோச்சிங் சென்டர்கள் நாடு எங்கிலும் உள்ளன. சொல்லப் போனால், காளான்கள் போல வீதியெங்கும் இவைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விளையாட்டில் அரசுப் பள்ளிகளும் கலந்து கொள்ள வேண்டுமா? பள்ளிக் கல்வியின் நோக்கமே நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களை வெற்றி பெறச் செய்வதுதானா? நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்வி பயின்று, அரசு வேலைக்குள் புகுவது மட்டும்தான் கல்வியின் நோக்கமா? பள்ளிக் கல்வியின் நோக்கமே இதனால் சிதறிவிடவில்லையா? சிறுவர் சிறுமியரின் ஆளுமையை பன்முக நோக்கில் வளர்த்தெடுக்கும் நோக்கம் இதனால் வழிதிரிந்து விடாதா? இதைப் போன்ற கிளைக் கேள்விகள் நிறைய தோன்றிய வண்ணம் இருக்கின்றன. கல்வி வியாபாரிகள் இதைப் போல (நுழைவுத் தேர்வுகள்) அமைப்பு ஒன்றை விரும்புவார்கள். ஜோராக வியாபாரம் நடக்கிறது. மருத்துவம், ஐஐடி போன்றவற்றிற்கு பிரத்தியேகமான கோச்சிங் இல்லாமல் ஒரு அட்மிஷன் கூட நடப்பதில்லை. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே கல்வியின் முழுப் பரிமாணத்தை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. எது கடைவீதியில் விலை போகிறதோ, அதை மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு விற்பதில் அரசு முனைப்புக் காட்ட வேண்டியதில்லை. ஒன்று மட்டும் தைரியமாக சொல்லலாம். போட்டித் தேர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு, சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத் திட்டத்தைப் போலவே இங்கேயும் கொண்டு வந்தாலும், இங்கிருக்கும் அரசுக் கல்வி மாணவன் மருத்துவம், ஐஐடி போன்றவற்றில் நுழைய முடியாது. ராசீபுரம் - நாமக்கல் பள்ளிகளில் வியாபாரம் வேறு மாதிரி களை கட்ட ஆரம்பித்து விட்டது. இரண்டே வழிகள் எனக்குத் தெரிகின்றன. Level playing field வேண்டுமென்றால் இந்தத் தனியார் பள்ளிகளை ஒழித்துக் கட்டியே ஆக வேண்டும். அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில் படிக்கட்டும். இதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், மத்திய தர வர்க்கம் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டும். அடுத்ததாக, கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்பு அல்ல என்று தமது செயற்பாடுகளால் அரசுப் பள்ளிகள் எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும். இவைகளில், இரண்டாவதாக சொன்னது கடினம். முதலாவதை செயற்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு ஒரு GO போதும். அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப் போகிறார் என்ற வதந்தி சென்ற வாரங்களில் பரவலாக இருந்தது. கொஞ்சம் மாற்றி அவர் அறிவிக்கலாம். அரசு ஊழியர் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்றவாறு மாற்றினால் மருத்துவம், ஐஐடி போன்றவற்றிற்கு அரசுப் பள்ளிகளிலிருந்து மட்டும்தான் குழந்தைகள் போவார்கள். Peer group influence-ன் மகத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் தருணங்களில் படை வீரர்களின் மனநிலை பற்றிய புத்தகம் ஒன்றை நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். அவர்களின் ஆவேசம் நாட்டுப் பற்றால் உத்வேகப்படுவதை விட, தன்னுடைய சக தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பவைதான் அவர்களை ரௌத்திரம் கொள்ள வைக்கின்றன என்பதாகப் படித்திருக்கிறேன். தன்னுடன் சக பெஞ்சில் உட்கார்ந்து இருப்பவன் என்ன செய்கிறான் என்பதைக் காப்பியடிக்க, அவனைப் பார்த்து அவனைப் போலவே செய்ய ஒரு மாணவனுக்கு எளிதாக கை வரும். இதை பரீட்சித்துப் பார்க்க கடந்த முப்பது ஆண்டுகளாக ஏன் எந்த அரசுமே முன்வரவில்லை? பல தனியார் பள்ளிகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவில் 'படு பயங்கரமான' தகுதிகள் மற்றும் தன்மைகள் கொண்ட ஆசிரியர்களை வைத்துத்தான் மாநில / மாவட்டம் முதலிடங்களைப் பெற்றுவருகின்றன.
கடந்த ஓரிரு மாதங்களாக பள்ளிக் கல்வித் துறையில் நடந்து வரும் மாற்றங்களை bad to worse என்பதாகத்தான் உணர்கிறேன். சில குத்தகைக்காரர்களால் லாபம் பார்க்க முடியுமே தவிர, சமூகப் பொது நன்மை என்று ஒன்றும் இந்த 'சீர்திருத்தங்களால்' வந்துவிடாது. என்னுடைய கணக்குப் பொய்த்துப் போனால் நல்லதுதான். இளங்கோ கல்லணை சொல்வது போல, அரசு அமைத்திருக்கும் குழுவின் உறுப்பினர்கள் வேண்டியதான மாற்றங்களைப் பிரதிநிதிப் படுத்துவர்களாக இல்லை. 'அனைவருக்கும் அரசுப் பள்ளி' என்பதை நோக்கி நகரும் மாற்றம்தான் கடைசி மாற்றம். அதுவரை, தள்ளி நின்று ஆட்டத்தைக் கவனிப்பதில் தடையென்ன நமக்கு இருக்க முடியும்?

0 comments:

Post a Comment