RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் - 3

| Thursday, December 13, 2018

(31) செய்யப்படும் மேல்முறையீட்டைத் தீர்த்து வைக்கும் பொருட்டு தகவல் ஆணையம்  எடுத்துக் கொள்ளும் கால அளவு என்ன?
தகவல் ஆணையமானது மனுதாரர்களின் இரண்டாவது மேல்முறையீடுகளை தொடர்ந்து பெற்று வருகிறது.  இந்த மேல்முறையீடுகளை எவ்வளவு விரைவாகத் தீர்த்து வைக்க முடியுமோ அவ்வளவு விரைந்து ஆணையம் செயல்பட்டு வருகிறது.  பெறும் மனுக்களின் காலகிரயப்படி மனுக்கள் ஆணையத்தினால் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படுகின்றன.  தலைமை தகவல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் சில மேல்முறையீடுகள் முன்னுரிமை அடிப்படையில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படுவதும் உண்டு.  நிலுவையில் இருக்கும் மேல் முறையீட்டு/மனுக்களின் நிலவரத்தைப் பற்றி ஆணையத்தின் இணையதளம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.  வழக்குகளின் விசாரணை தேதிகள் பற்றிய விவரமும் சம்மந்தப்பட்ட ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம்  செய்யப்படும்.

(32) இரண்டாம் மேல்முறையீட்டைப்  பெற்றுக் கொண்டவுடன் ஆணையம் மேற்கொள்ளும் செயற்பாடுகள்  யாவை ?
ஆணையத்தின் தபால் பிரிவில் (Dak Section)  மேல்முறையீட்டு மனு பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(aமேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக் கொண்டவுடன், ஆணையத்தின் தபால் பிரிவு மனுவிற்கு ஒரு பதிவு எண்ணை வழங்கும்.  மேல்முறையீட்டு  மனு ஆணையத்திடம் நேரடியாக வழங்கப்படும் நேர்வில், அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும்.  பின்னர் மேற்கொள்ளப்படும் விசாரிப்புகளின் போது, இந்தப் பதிவு எண்ணைக் குறிப்பிடலாம்.  வழக்கு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், வழக்கு எண் வழங்கப்படும்.
(b) தபால் பிரிவில் பெற்றுக் கொண்ட மனு புதிய மேல்முறையீடாக இருப்பின், ஊசு பிரிவிற்கு மாற்றப்படும்.
(cCR பிரிவில் மனுவின் தன்மை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பரிசீலிக்கப்படும். மேல்முறையீடு முறையாக செய்யப்பட்டிருப்பின் வழக்கு எண் வழங்கப்படும்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம்  2005 பிரிவு 18-ன் படியான மனுவாக  இருப்பின், மனுதாரரின் மூல மனு இணைக்கப்பட்டுள்ளதா என்று சோதித்து மனுவை பதிந்து வழக்கு  எண் வழங்கப்படும்.  பிறகு, அதன் வரிசைப்படி விசாரணைக்கு வரும்.
(dவழக்கிற்கு தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல்  இருந்தால், விடுபட்டல்களை சுட்டிக்காட்டி மனுதாரருக்கு மனு திருப்பி அனுப்பப்படும். அதேபோல, மேல்முறையீட்டு மனுவுடன் மூல மனு இணைக்கப்படாவிடில், மனுதாரருக்கு அதை அனுப்பி வைக்கும்படி தபால் வழி  தகவல் அனுப்பப்படும்.
(eஆணையத்தில் ஒரு மனுவானது அகாலமாக பெறப்படும் பொழுது (முதல் மேல்முறையீடு செய்யப்படாமல் நேரடியாக  இரண்டாவது மேல்முறையீட்டை ஆணையத்திடம் செய்திருந்தாலோ, அல்லது முதல் மேல்முறையீட்டிற்கான காலக்கெடுவான 45 நாட்கள் காத்திருக்காமல் கெடு முடிவதற்கு முன்னதாகவே ஆணையத்திடம்  மேல்முறையீடு செய்திருந்தாலோ)  தள்ளுபடி செய்யப்படும்.

(33) ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யப்படுகிறபொழுது  ஏதேனும் கட்டணம் செலுத்தப்பட வேண்டுமா ?
செலுத்த வேண்டியதில்லை.

(34) மின்னணு சாதனம் ஏதேனும் வழியாக தகவல் ஆணையத்திடம்  இரண்டாவது மேல்முறையீடையோ, புகாரையோ அளிக்க முடியுமா ?
அளிக்க முடியும். மத்திய தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை www.cic.gov.in என்ற இணையதள முகவரியில் இரண்டாவது மேல்முறையீட்டை/புகாரைப் பதியலாம்.  தகவல் பெறும்  உரிமைச் சட்ட விதிகள்2012-ன் படி இணைக்க வேண்டிய ஆவணங்கள் மனுவுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்.  ஸ்கேன் செய்து அனுப்பப்படும் ஆவணங்களில் மனுதாரர் சான்றொப்பம்  இருக்க வேண்டும். 

(35) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு, புகாருக்கும் (Complaint)  மேல்முறையீட்டிற்கும் (Appeal) இடையில் உள்ள வேறுபாடு யாது?
பொது அதிகார அமைப்பு  ஒன்றின் முதல் மேல் முறையீட்டு அலுவலரின் உத்தரவை  எதிர்த்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(3)-ன் கீழ்  உரிய காலக்கெடுவிற்குள் செய்யப்படுவது இரண்டாம் மேல்முறையீடு(Second Appeal).
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 18-ன் கீழ் ஆணையத்திடம் நேரடியாக தெரிவிக்கும்  புகார்கள் (Complaints) மேல்முறையீடு ஆகா.  இரண்டிற்குமான வேறுபாடு  என்னவென்றால், மேல்முறையீட்டு நேர்வுகளில், உரிய தகவலை வழங்குமாறு பொதுத்தகவல் அலுவலருக்கு ஆணையம்  உத்தரவிட முடியும். புகாரளிக்கப்படுகின்ற நேர்வுகளில், இவ்வாறான உத்தரவுகளை ஆணையம் பிறப்பிக்காது.

(36) இரண்டாம் மேல்முறையீடு  உரிய காலக்கெடுவிற்குள் செய்யப்படாமலிருந்து பின்னர் செய்யப்பட்டால், அப்படி செய்யப்படுகின்ற இரண்டாம் மேல்முறையீட்டுடன் தாமதத்தை மன்னித்தருளுமாரு" (Condone Petition) வேண்டுகோள் செய்யப்பட வேண்டுமா?
ஆமாம்.  அப்படியான மன்னிப்பு வேண்டி பிரத்தியேகமான மனு செய்யப்பட வேண்டும்.

(37) இரண்டாம் மேல்முறையீட்டு காலக்கெடுவான 90 நாட்கள் கழிந்த பிறகும்,  ஆணையம் மேல்முறையீட்டை அனுமதிக்குமா?
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்  இரண்டாம் மேல்முறையீடு செய்யாமல்  இருந்ததற்கான தகுந்த காரணங்கள் மனுதாரரிடம் இருந்தன என்று  ஆணையம் கருதும் பட்சத்தில், காலக்கெடு முடிந்த பிறகும்  இரண்டாம் மேல் முறையீட்டை ஆணையம் அனுமதிக்கும்.

(38) ஆணையத்திடம் புகார் அளிப்பதற்கான காலக்கெடு ஏதும் உண்டா?
இல்லை. இருப்பினும், அளிக்கப்படும் புகாரானது சம்மந்தப்பட்ட விடயம் குறித்த நியாயமான காலக்கெடுவிற்குள் செய்யப்படுதல்  நன்று.

(39) புகார் ஒன்றை நேரடியாக ஆணையத்தில் அளிக்க முடியுமா ? ஆம் எனில், என்னென்ன நேர்வுகளில் நேரடியான புகாரை ஆணையத்திடம் அளிக்க முடியும்?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 18-ன் படிக்கு ஆணையத்திடம் நேரடியாக புகார்களை (Complaints) அளிக்கலாம்.
(a) பொது அதிகார அமைப்பு ஒன்று இச்சட்டப்படி பொதுத்தகவல் அலுவலரை நியமித்திருக்காத நேர்வுகளிலோ அல்லது துணைப் பொதுத்தகவல் அலுவலர் மனுக்களைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் நேர்விலோ, அல்லது பெற்றுக் கொண்ட மனுக்களை உரிய அலுவலரிடம் சேர்ப்பிக்க அவர் மறுக்கும் நேர்விலோ ஆணையத்திடம் நேரடியான புகாரை மனுதாரர் அளிக்கலாம்.
(b) இச்சட்டப்படி வழங்க வேண்டிய  தகவல்கள் மறுக்கப்படும் நிலையில்
(c)கோரியிருந்த தகவலைப் பற்றிய எவ்வித எதிர்வினையும் பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து  மனுதாரர் பெறாத நிலையில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் வழங்கப் பெறாத நிலையில்
(d)கோரியிருந்த தகவல் வழங்கும் பொருட்டு  தன்னிடமிருந்து நியாயமற்ற தொகை ஒன்று பொதுத்தகவல் அலுவலரால் கோரப்படுகிறது என மனுதாரர் கருதும் நேர்வில்
(eமுறையற்ற, முழுமையற்ற, தவறான, பொய்யான, தவறாக வழிகாட்டுகிற தகவல் தனக்கு பொதுத்தகவல் அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் கருதும் நேர்வில்
(f) இச்சட்டப்படிக்கு ஆவணங்களைப் பெறுவதில் அல்லது வேண்டுவதில் உள்ள சிரமங்களின் பொருட்டு மனுதாரர் நேரடியாக சம்பந்தப்பட்ட ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.

(40) ஆணையத்திற்கு அளிக்கப்படும் இரண்டாம் மேல்முறையீடு எத்தனை நகல்களில் செய்யப்பட வேண்டும் ?
ஒரு நகலில் மட்டுமே இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.

(41)  இரண்டாம் மேல்முறையீட்டின் போது ஆணையத்திற்கு அளிக்கப்படும் ஆவணங்கள் மேல்முறையிட்டவரால் சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டுமா ?
ஆமாம்.  இச்சமயத்தில் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் மேல்முறையிட்டவரால் சரிபார்க்கப்பட்டு சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.  இந்த இரண்டாவது மேல்முறையீடானது இணையம் வழியே பதியப்படுகிறதென்றால், சம்பந்தப்பட்ட நபரின் சான்றொப்பம் தாங்கிய ஆவணங்கள் மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

(42) இரண்டாவது மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
(i) தகவல் ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீட்டு விண்ணப்பம்.
(ii) தகவல் ஆணையத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பதில் ஏதேனும் இருப்பின் அவற்றையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
(iii) முதல்  மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பப்பட்ட மனுவின் நகல்.
(iv)முதல் மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டிருந்தால் அதன் நகல்.
(v)தன்னுடைய கோருதல்களுக்கு பலம் சேர்க்கும் என்று மனுதாரர் கருதும் ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றின் நகல்கள்.
(vi)இரண்டாம் மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களின் உள்ளடக்கப்பட்டியல்(Index).

(43) ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாம் மேல்முறையீட்டுக்கு என தனியான வடிவமைப்பு (Format) உள்ளதா ?
ஆம்.  உள்ளது.
1.  மேல்முறையீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி
2.  மேல்முறையீடு அனுப்பப்படும் தகவல் ஆணையரின் பெயர் மற்றும் முகவரி
3.  ஏற்கனவே தகவல் வழங்கியிருக்கும் தகவல் ஆணையரின் பெயர் மற்றும் முகவரி
4.  முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பெயர் மற்றும் முகவரி
5. விண்ணப்ப விவரங்கள்
6.  எந்த ஆணையை எதிர்த்தாவது இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், அந்த ஆணை எண் மற்றும் விவரம்
7.  மேல்முறையீடு செய்யக் காரணமாய் இருந்துள்ள வழக்கின் தன்மை பற்றிய விவரம்
8.  மனுதாரரின் கோரிக்கை
9.  எதன் அடிப்படையில் கோரிக்கையையும் பரிகாரமும் வேண்டப்படுகிறது
10. மனுதாரர் அளிக்க விரும்பும் வேறு தகவல்கள் (ஏதேனும் இருப்பின்)
11. விவரங்கள் அனைத்தும் என்னால் சரிபார்க்கப்பட்டவை என்று மனுதாரரின் சான்றொப்பம்.

(44) இரண்டாம் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு என்ன ?
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் தகவல் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இரண்டாம் மேல்முறையீட்டை மனுதாரர் செய்ய வேண்டும்.

(45) ஆணையத்திடம் இரண்டாம் மேல்முறையீடு செய்வதற்கு முன், முதல் மேல்முறையீடு செய்திருப்பது அவசியமா ?
ஆமாம்.  முதல் மேல்முறையீடு செய்திருக்காமல் இரண்டாம் மேல்முறையீடு செய்யப்பட்டால், மேற்படி மனு ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்படும்.

(46)எந்த  சூழலில் ஆணையத்தை இரண்டாம் மேல்முறையீடு பொருட்டு மனுதாரர் அணுகலாம்?
(i) முதல் மேல்முறையீடு செய்து 45 நாட்களுக்குப் பிறகும் முதல் மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து எந்தத் தகவலும் பெறப்படாதிருக்கும் நேர்விலும்
(ii) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19(3)-ன் கீழ் முதல் முறையீட்டு அலுவலரின் தகவல் மனுதாரருக்கு திருப்தி தராத நேர்விலும் ஆணையத்தை இரண்டாம் மேல்முறையீட்டின் பொருட்டு அணுகலாம்.

0 comments:

Post a Comment