எல்லோருடைய வாசிப்பு அனுபவத்திலும் இது நிகழ்ந்திருக்கலாம். நூற்றுக்கணக்கான புத்தகங்களைக் கடந்து வருகிறோம். ஒரு கட்டத்தில், கண்மூடித்தனமாக தேர்ந்தெடுப்பதுமில்லை. யாருடைய பரிந்துரையோ அல்லது விமரிசனமோ நாம் ஒரு புத்தகத்தை தெரிவு செய்வதற்கு காரணமாகிறது. அல்லது, நமக்குப் பிடித்த துறையை / விடயத்தைப் பற்றியதாக இருக்குமாயின், நாமே சுயமாக தேர்ந்தெடுக்கிறோம். கொச்சி நகரில் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். முப்பது நாற்பது புத்தகங்கள் இருக்கலாம் – காலணிகளை விடும் இடத்தில் கொட்டி வைத்திருந்தான். இவ்வளவு கேவலமாக போட்டு வைத்திருந்த காரணத்தைக் கேட்ட போது சொன்னான்: “இந்த இடத்தில் இருப்பதற்குக் கூட லாயக்கு இல்லாதவை இவை. யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். போகும் போது, இவைகளை நீ கூட எடுத்துக் கொண்டு போகலாம். எல்லாம் குப்பை.” பிறகு ஏன் வாங்கினாய் என்ற கேட்ட பொழுது சொன்னான்: “இது ஒரு professional hazard. படிப்பது தொழிலென்று ஆன பிறகு, குப்பைகளும் வந்து சேர்ந்த படி இருக்கும். குப்பை என்று தெரிந்தவுடன் தூக்கி எறிய வேண்டியதுதான்.” சேலம் வந்து சேர்ந்தவுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கழித்துக் கட்டினேன். வீடே சுத்தமானது போல ஒரு உணர்வு.
ஆனால் இங்கு சொல்ல வந்தது வேறு மாதிரியான புத்தகங்களைப் பற்றி. படிக்கத் துவங்கியவுடனேயே அதன் கனம் தெரிந்து போய் விடும். இதனுடைய தாக்கம் நம்முடன் ரொம்ப நாட்களுக்கு இருக்கும் என்று தெரிந்துவிடும். எதிர்ப்படுபவர்கள் தீர்ந்தார்கள். அவர்களிடம் இதைப் பற்றி பேசியே தீர வேண்டும். நமது விலாவரியில் அவர்களும் கடைக்கு ஓடி ஒரு பிரதியை வாங்கிக் கொண்டுதான் வீடு போவார்கள். பிறகு எத்தனையோ புத்தகங்களை கடந்து போனாலும், மனசு திரும்பத் திரும்ப இந்த புத்தகத்திற்கு வந்தபடியே இருக்கும்.
அப்படி ஒரு புத்தகமாகத்தான் “திருடன் மணியம்பிள்ளை”-யைப் பார்க்கிறேன். இதை கடைகளில் சில வருடங்களுக்கு முன்னாலே பார்த்திருந்தாலும், ஒரு திருடனின் தன்சரிதம் என்ன சொல்லிவிடப் போகிறது என்ற எக்காளத்தில், குப்பைகளைக் கவனமாகப் பொறுக்கிக்கொண்டு நகர்ந்ததுண்டு. “நான் ஒரு சுவராஸ்யமான புத்தகத்தைத் தருகிறேன், படியுங்கள்” என்று தேர்ந்த வாசக நண்பர் ஒருவரின் பரிந்துரையிலும் இரவலிலும்தான் இதைப் படிக்கத் துவங்கினேன். கனமான புத்தகம். உருவிலும் கருவிலும். அறுநூறு பக்கங்கள் நீண்டாலும் ஒவ்வொரு பக்கமுமே ஒரு fable என்பதாக வந்திருக்கிறது. ஒரு திருடனின் வாழ்க்கைதான் எவ்வளவு சுவராஸ்யமானது! வாழ்க்கையை அதன் அழுகிய வடிவிலும் கனவு வடிவிலும் ஒரு திருடன் மூன்றாம் நபர் ஒருவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறான். கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல. ஒவ்வொரு பத்தியின் கடைசி வாக்கியமும் இயல்பாகவே practical philosophy ஒன்றோடு முடிகிறது.
வாழ்க்கை மெல்ல முடியாமல் துப்பிப்போட்ட எத்தனையோ கழிவுகளில் ஒருவர்தான் மணியன்பிள்ளை. சொந்த அத்தைக்காரி சொல்லி அக்கா குழந்தையின் அரைஞாணை கழற்றியதுடன் துவங்குகிறது மகாத்மா கள்ளன் மணியன்பிள்ளையின் பணிவாழ்வு. இரண்டாயிரத்திற்கும் அதிகமான திருட்டுகள். ஒருமுறை கர்னாடக சட்டசபை உறுப்பினர் என்ற விளிம்பு வரை வந்த தொழிலதிபர். கள்ளுக்கடை அதிபதி. கொல்லம் வெஸ்ட் காவல் நிலையத்தின் எடுபிடி. பார் கவுன்சிலில் பதிவு பெறாத வக்கீல். மணியன் பிள்ளை ஒரு நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியிடப்பட்ட நாளில் திருவனந்தபுரம் சிறையில் தண்டனைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார் கள்ளன் பிள்ளை.
பிள்ளையிடமிருந்து நாம் என்ன தெரிந்து கொள்வது? வாழ்க்கையில் மனிதனின் எதிர்பார்ப்பிற்கு எந்தவித அர்த்தமுமில்லை. ஒரு நொடியில் வாழ்க்கையின் மொத்த அர்த்தமுமே மாறிப்போகிறது. வாழ்க்கையின் சாகசத் தன்மையை உணராதவர்கள் சவத்திற்குச் சமம். சாகசங்கள்தான் நாம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். சாகசத்தையுமே கூட துறவி மன நிலையில் செய்பவன் மகாத்மா. கெட்டதும் நல்லதும், மேன்மையும் கெடுதியும், வாழ்வும் தாழ்வும் யாருக்கும் எந்நேரத்திலும் நேரலாம். விட்டேத்தி மனநிலைதான் நம்மைக் காப்பாற்றும் ஒரே தேவன்.
இந்தப் புத்தகத்தின் பிரதி ஒன்று கூடவே இருப்பதும், மனம் தொய்வுற்ற நேரங்களில் இதைப் புரட்டுவதும் நமக்குத் தேவையான மருந்தாகக் கூடும்.
0 comments:
Post a Comment