RTI 2005 : எழும் வினாக்களும் விழும் விடைகளும் -1

| Thursday, December 13, 2018

(1) தகவல் என்றால் என்ன? எது தகவல்?
தகவல் எந்த வடிவிலும் இருக்கலாம்.  பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், அபிப்பிராயங்கள், அறிவுரைகள், பத்திரிகைச் செய்திகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், பயண விவரக்குறிப்புகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், மாதிரிகள், முன் வடிவங்கள், மின்னனு வடிவில் இருக்கும் தகவல்கள் போன்றவை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு தகவல்என்ற வார்த்தையில் அடங்கும்.  தவிர, பொது அதிகார அமைப்பு ஒன்றின் அதிகார வரம்பிற்குள் வரும் தனியார் அமைப்பும் இச்சட்ட வரம்பிற்கு உட்பட்டதே.  (அதாவது, பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்தவரை, கல்வித்துறை அலுவலர்களின் வரம்பிற்குட்பட்ட சுயநிதிப் பள்ளிகளும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் வருபவையே.  தனியார் பள்ளி என்பதால் இச்சட்ட வரம்பிற்குள் வர மாட்டோம் என்று கூறி தகவல் தர மறுப்பது சட்ட விரோதமானதாகும்).    

(2) பொது அதிகார அமைப்பு என்றால் என்ன ?
இந்திய அரசியலமைப்பின்படிக்கு செயற்படுத்தப்பட்டுள்ள/ நிறுவப்பட்டுள்ள நிறுவனம் /அமைப்பு/அதிகார அமைப்பு பொது அதிகார அமைப்புஎனப்படும்.  அல்லது இவ்வாறான அமைப்புகள் பாராளுமன்றம் அல்லது மாநில சட்ட மன்றங்களால் செயற்படுத்தப்பட்டிருக்கலாம்.  அல்லது மத்திய அரசு/ மாநில அரசின் அறிவிப்பின் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ள அரசின் நிதி உதவியோடு நடத்தப்படும் அமைப்பாக இருக்கலாம்.  மத்திய அரசு/ மாநில அரசின் நிதி உதவியோடு நடந்து வரும் அரசு சாரா (Non governmental) அமைப்பாக இருக்கலாம்.  அரசு சாரா அமைப்புகளுக்கு அரசின் நிதி உதவி நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருப்பினும்  கூட, அத்தகைய அமைப்புகள் பொது அதிகார அமைப்புஎன்றே கொள்ளுதல் வேண்டும்.

(3) பொதுத்தகவல் அலுவலர் என்பவர் யார் ?
ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தங்கள் அலுவலர் ஒருவரை பொதுத்தகவல் அலுவலர், என்று நியமிக்கிறது.  தகவல் வேண்டும் மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு தகவல் வழங்க வேண்டிய பொறுப்பு இவரையே சாரும்.

(4) துணைப்பொதுத் தகவல் அலுவலர் என்பவர் யார் ?
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ், தகவல் கோரும் மனுக்களை துணைக் கோட்ட (Sub-divisional) அளவிலும் பெற்றுக் கொள்ளும் அலுவலர்கள் சில துறைகளில் நியமிக்கப்படுவர். இவர்களே துணைப்பொதுத்தகவல் அலுவலர்கள் ஆவர்.  தாங்கள் பெற்றுக் கொண்ட தகவல் கோரும் மனுக்களை பொதுத்தகவல் அலுவலருக்கும், முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கும் அனுப்பி வைப்பது இவர்கள் கடமையாகும்.  ஆனால், தகவல் கோரும் மனுக்களுக்கு பதில் அளிப்பது இவர்கள் கடமை அல்ல.  எடுத்துக்காட்டாக, இந்திய அஞ்சல் துறையில் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இவ்வாறான துணைப் பொதுத் தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(5)பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து தகவலைப் பெற ஒருவர் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு ?
தகவல் பெறுவதற்காக ரூபாய் பத்து மட்டும் செலுத்தப்பட வேண்டும்.  தகவல் கோரும் மனு அனுப்பப்படும் பொழுதே இத்தொகையையும் அனுப்ப வேண்டும்.  வரைவோலை(Demand Draft), வங்கிக் காசோலை, (Banker’s Cheque) அல்லது இந்திய அஞ்சல் வில்லை(Indian Postal Order) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இக்கட்டணத்தை செலுத்தலாம்.  எந்தப் பொது அதிகார அமைப்பிடமிருந்து தகவல் வேண்டப்படுகிறதோ அதன் "கணக்கு அலுவலர்"(Accounts Officer) சார்பில் இத்தொகை செலுத்தப்பட்ட வேண்டும்.  கணக்கு அலுவலரிடம் நேரடியாகவும் தொகையாக இக்கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.  துணைப் பொதுத்தகவல் அலுவலரிடமும் தொகையாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.  இத்தொகையை சம்மந்தப்பட்ட அரசுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 27 மற்றும் 28 ன் கீழ் அரசிதழில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இத்தொகையை மாற்றிக்கொள்ளலாம்.     

(6)வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மனுதாரர் செலுத்த வேண்டிய கட்டணம் யாது?
தகவல் கோரும் மனுதாரர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வருபவராக இருப்பின், அவர் கட்டணம் ஏதும்   செலுத்தத் தேவையில்லை.  இருப்பினும், அதற்கான அத்தாட்சியை அவர் முன்னிலைப்படுத்த வேண்டும்.

(7) தகவல் கோரும் மனுக்களை   அனுப்ப ஏதேனும் குறிப்பிட்ட வடிவ மாதிரி (Format) உள்ளதா?
குறிப்பிட்ட வடிவ மாதிரி எதுவும்  இல்லை.  வெற்றுத்தாளில் எழுதப்பட்ட மனுவாக இருக்கலாம்.  இருப்பினும், தகவல் கோருபவரின் பெயர், முகவரி  தெளிவாக மனுவில் குறிப்பிட்டிருப்பது அவசியம்.

(8)தகவல் கோருபவர் எந்தக் காரணத்திற்காக குறிப்பிட்ட தகவல் கோரப்படுகிறது என்பதை சொல்ல வேண்டுமா?
தேவையில்லை.

(9) தகவல் வெளியிடுவதிலிருந்து  விலக்குகள் ஏதேனும் உள்ளனவா?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 8(1) மற்றும் 9 தகவல் விலக்குகள் பற்றி விளக்குகின்றன.  இருப்பினும் சட்டம் பிரிவு 8(2)  என்ன சொல்கிறதென்றால், 8(1) -ன் படியோ, அல்லது ரகசிய காப்புச் சட்டம் 1923-ன் படியோ ஒரு தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அப்படியான தகவல் வெளியிடப்பட்டால் பொது நன்மைக்கு (Public Interest)  அனுகூலம் என்று பொதுத்தகவல் அலுவலர் திருப்தியுற்றால், அவற்றை வெளியிடலாம்.

(10) தகவல் பெறும் உரிமை சட்ட மனுக்களை தயாரிப்பதற்காக மனுதரார் ஒருவருக்கு ஏதேனும் உதவிகளை இச்சட்டம் வழங்குகிறதா?
எழுத்து மூலமாக தகவல்  பெறும் சட்ட மனுக்களை மனுதாரர் ஒருவர் தயாரிக்க முடியாத நிலை இருப்பின், அம்மனுவை தயாரிப்பதற்கான உதவியைக் கோரி அவர் சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலரை நாடலாம்.  அவர் வேண்டிய  உதவிகளை  அளிப்பார்.  தகவல் கோருபவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நேர்வில்,  இம்மனுக்களை தயாரிக்கத்
தேவையான அனைத்து உதவிகளையும் பொதுத்தகவல் அலுவலர் அவருக்கு வழங்குவார்.

(11) தகவல் வழங்குவதற்கான காலக்கெடு என்ன?
பொது அதிகார அமைப்பு தகவல் கோரும் மனுவைப் பெற்ற நாளிலிருந்து 30  நாட்களுக்குள் வேண்டப்படும் தகவலை இச்சட்டத்தின்படி வழங்கியாக வேண்டும்.  ஒருவரின் வாழ்வு (Life), சுதந்திரம் (Liberty) போன்றவை சம்மந்தப்பட்ட விடயங்களில் தகவல் கோரப்பட்டிருந்தால், 48 மணி நேரத்திற்குள் இச்சட்டப்படிக்கு தகவலை வழங்க வேண்டும்.  பொதுத்தகவல் அலுவலருக்கு, ஒரு மனுவானது துணைப் பொதுத்தகவல் அலுவலர் வழி அனுப்பப்பட்டிருந்தால் கூடுதலாக 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
 (30 நாட்கள்+ 5 நாட்கள், 48 மணி நேரம் + 5 நாட்கள்) 

(12) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 -ன் படிக்கு மேல் முறையீட்டு வழிமுறைகள் உள்ளனவா? இருப்பின், விவரிக்கவும்.
பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து பெற்ற தகவல்கள் திருப்தி தராத நேர்வில், மனுதாரர் முதல் மேல்முறையீட்டு மனுவை முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பலாம்.  சம்மந்தப்பட்ட பொது அதிகார அமைப்பில் முதல் மேல் முறையீட்டு அலுவலரானவர் பொதுத்தகவல் அலுவலரின் மேலதிகாரியாக இருக்க வாய்ப்புண்டு.  மனுவிற்கான பதிலை பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து  பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், முதல் மேல்முறையீடு செய்வதாக இருந்தால், முதல் மேல்முறையீட்டை முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு மனுதாரர் அனுப்ப வேண்டும்.  முதல் மேல்முறையீட்டை பெற்றுக் கொண்ட மேல் முறையீட்டு அலுவலர் 45 நாட்களுக்குள் அவரது பதிலை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும்.

(13) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு, இரண்டாவது மேல் முறையீடு என்பது யாது ?
முதல் மேல்முறையீட்டை முதல் மேல்முறையீட்டு அலுவலர்  பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தகவல் ஏதும் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடமிருந்து பெறாமல் போகும் நேர்விலோ அல்லது முதல் மேல்முறையீட்டு அலுவலர் வழங்கிய பதிலில் திருப்தியுறாமல் போகும் நேர்விலோ, மனுதாரர் சம்மந்தப்பட்ட தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீட்டை செய்யலாம்.  முதல் மேல்முறையீட்டு அலுவலரின் தகவலைப் பெற்ற நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மனுதாரர் தனது இரண்டாவது மேல்முறையீட்டை செய்ய வேண்டும்.

(14) புகார் மனுக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு ஒருவர் அனுப்ப முடியுமா ?
பொது அதிகார அமைப்பு  ஒன்று தனது அமைப்பிற்கான பொதுத் தகவல் அலுவலரை நியமித்திராத காரணங்களினால் தனது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் மனுவை மனுதாரர் அனுப்ப முடியாத நிலையிலும், துணைப் பொதுத் தகவல் அலுவலரும் மனுதாரர் ஒருவரது மனுவைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் நிலையிலும்,  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படிக்கு உரிய காலக்கெடுவிற்குள் மனுதாரருக்கு தகவல் வழங்கப்படாத நிலையிலும், நியாயமற்ற கட்டணத் தொகை  ஒன்று பொதுத் தகவல் அலுவலரால் கேட்டுக்கொள்ளப்படும் நேர்விலும், பிழையான, முழுமையற்ற, பொய்யான தகவல் தமக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் நம்பும் நேர்விலும், அவர் தகவல் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.

(15) மூன்றாம் நபர் பற்றிய தகவல் என்றால் என்ன?
தகவல் வழங்கக் கோரும் மனுவில் மனுதாரர் தவிர ஆனால் மனுவில்  சம்மந்தப்பட்டுள்ள மற்றொரு நபர் இச்சட்டத்தின்படி மூன்றாம் நபர் என்று கருதப்படுவார்.  எந்தப் பொது அதிகார அமைப்பிற்கு மனு அனுப்பப்படுகிறதோ, அதைத் தவிர்த்த வேறொரு பொது அதிகார அமைப்புமே கூட "மூன்றாம் நபர்" என்ற பெயரில் அடங்கும்.

0 comments:

Post a Comment