சுரா-வின் காற்றில் கலந்த பேரோசை

| Thursday, December 13, 2018
கடந்த சில நாட்களாக சுந்தர ராமசாமியின் "காற்றில் கலந்த பேரோசை" என்ற கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தொகுப்பு. சுரா-வின் இலக்கியக் கொள்கைகளை வாசகர் நன்கு விளங்கிக் கொள்ளும் படிக்கு, பல்வேறு விடயங்களில் அவர் என்ன கருதுகிறார், இலக்கிய வடிவங்களைப் பற்றிய அவரது பார்வை, தமிழில் சமகாலத்தில் எழுதி வந்த கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள் போன்றோரைப் பற்றிய மதிப்பீடு, வழங்கப்படும் பரிசுகளைப் பற்றிய அவரது விளங்குகை ஆகிய அனைத்தும் இதில் விரவிக் கிடக்கிறது. இவை மட்டுமன்றி சமூகத்தில் எப்பொழுதும் பேசப்பட்டு வரும் பொதுவானவையான கல்வி, குடும்பம், பெண்களின் நிலை ஆகியவை குறித்து சுரா-வின் நிலைப்பாடு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. முன்னூறு பக்கங்களுக்கு மேலாக நீளும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நின்று நிதானமாக ஒரு வாக்கியத்திற்கு அடுத்து இன்னொரு வாக்கியம் என்று உள்வாங்கி கிரகித்து மலைத்து அந்தப் பிரமிப்புடனேயே முன்னம் நகர வேண்டியுள்ளது.
இதில் முக்கியமாக, ஒரு கட்டுரையில், தமிழில் ஞானபீட விருது மிகச் சிலருக்கே இதுவரை கிடைத்திருக்கிறது என்றாலும் அந்த விருதிற்குரிய எழுத்தாளர்கள் தமிழில் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லும் சுரா, அந்த வருடத்தில் தமிழிற்கு ஞானபீட விருது கிடைத்திருப்பதாகவும், ஆனால் அதில் தமக்கு சம்மதமில்லை என்றும் எழுதுகிறார். அந்த வருடம் ஞானபீட விருதைப் பெற்றவர் அகிலன். சித்திரப்பாவை - என்ற நாவலுக்காக. அந்த வருடத்திய விருதில் தமக்கு சந்தோசப்பட எதுவுமில்லை என்று சொல்லும் சுரா, இந்த எழுத்தின் தரம்தான் தமிழில் எழுதப்படும் எழுத்துக்களின் தரம் என்று மற்றவர் நினைத்து விட இடமுண்டு என ஐயுறுகிறார்.
அகிலன் தனது 'சித்திரப்பாவை' நாவலுக்கு இந்த விருது வாங்கியது குறித்து அவரது நண்பரான நாரண.துரைக்கண்ணன் அவர்கள் (இவர் அகிலனை 'இளவல்' என்றே குறிப்பிடுகிறார்) "நாவலின் தன்மை எப்படியிருந்தாலும், விருது எம்முறையில் வாங்கப்பட்டிருந்தாலும்" தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற முறையில், இளவலுக்கு கிடைத்தது பற்றி தனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியது பற்றிக் குறிப்பிடும் சுரா, நாரண.துரைக்கண்ணன் அவர்கள் இதில் இரட்டை வேடம் தரிக்கிறார் என்கிறார். தமிழுக்கு ஞானபீடம் கிடைத்திருப்பது அகிலனின் வழியாக; சித்திரப்பாவை வழியாக - என்பதில் தமிழர் யாரும் பெருமைப்பட ஏதுமில்லை என்று தகிக்கிறார் சுரா. 'நாவலின் தன்மை எப்படியிருந்தாலும் இளவலுக்கு கிடைத்தது மகிழ்ச்சி' என்பது முரண். நாவலின் தரத்தை மதிப்பிட்ட பின்புதான் ஒரு விருது வழங்கப்படும் என்பதால், இதுதான் தமிழின் சமகால இலக்கியத்தின் தரம் என்பதாக ஆகாதா என்று வினவும் சுரா, கல்கி, சாண்டில்யன், லஷ்மி போன்றோர் தமிழ் இலக்கியத்தின் காட்டான சான்றுகள் ஆக மாட்டார் என்கிறார்.
என்னுடைய கருத்தும் இதுவேதான். அகிலனை என்னிடம் அறிமுகப்படுத்தியவர் எனது பெற்றோருடன் கூட ஆசிரியராகப் பணிபுரிந்த ஒருவர். எனக்கும் ஆசிரியர். அகிலனை மிகவும் மேலேற்றி பேசினார். அவர் இன்னொருவரையும் உசத்தியாகப் பேசியபடி இருப்பார். மு.வரதராசன் அவர்கள். அந்தப் பள்ளிக்கு நூலகம் என்று இரண்டு மரப்பீரோக்கள் இருந்தன. பெரும்பாலும் ரஷ்ய மொழிபெயர்ப்புகள், மு.வரதராசனார், அகிலன், லஷ்மி, நா.பார்த்தசாரதி என்றவாறே புத்தகங்கள் இருக்கும். ஆசிரியரின் மகன் என்ற முறையில் அந்தப் பீரோக்களிலிருந்து புத்தகங்கள் எப்பொழுதுமே கடனாக எனக்கு வழங்கப்படும். மு.வ. மற்றும் அகிலன் புத்தகங்கள் வாசிக்குமாறு வற்புறுத்தப்பட்டதால் படிக்கத் துவங்கி இருபது முப்பது பக்கங்களில் ரொம்பவுமே போரடித்து அந்த ஆசிரியரிடம் புகார் செய்திருக்கிறேன். ஆனால் அவர் விடாப்பிடியாக இவர்களின் நாவல்களை என்னை வாசிக்க வைத்திருக்கிறார். இவர்களின் எந்தப் புத்தகமுமே என்னை, அந்த வயதிலுமே, கவர்ந்ததில்லை.
சித்திரப்பாவை மிகவும் சாதாரண ஒரு கதை. இதற்கு ஞானபீடம் கொடுக்கப்பட்டால் அதன் காரணமாகவே இது மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் இதை தமிழின் சமகால இலக்கியத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொண்டால், நிகழும் ஆபத்தை எப்படி வர்ணிப்பது? நமக்கு பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் எழுத்தாளர்கள் பலமுறை இந்த விருதை தங்களது தகுதியால் பெற்றுள்ளனர். அவர்களின் விருதிற்குரிய படைப்புகள் இந்தியாவின் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் கூட வந்திருக்கின்றன. அவற்றைப் படிக்கும் பொழுது, கன்னட இலக்கியத்தைப் பற்றிய மரியாதை பலமடங்கு அதிகரிக்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சிற்றிதழ்கள் வெளிவருவது கன்னடத்தில்தான். இந்தப் பின்புலத்தில் ஏன் அந்த மொழி கர்த்தாக்கள் அதிக முறைகள் ஞானபீடம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அசோகமித்திரன், சா.கந்தசாமி, மா.அரங்கநாதன், நகுலன், கி.ராஜநாராயணன், கு.பா.ராஜகோபாலன், அழகிரிசாமி, ப.சிங்காரம், வண்ணநிலவன், ஜி.நாகராஜன் போன்ற எண்ணற்றவர்கள் இந்த விருதைப் பெற்றதில்லை.
தமிழைப் பொறுத்தவரை, நாம் மற்ற இந்திய மொழிக்காரர்களுக்கு சொல்லிக் கொள்ளலாம். எங்களது சமகாலத்து இலக்கியத் தரத்தை அறிய விரும்பினால், இந்த விருது பெற்றவர்களைத் தவிர்த்து மற்றவர்களை வாசியுங்கள். அதுதான் எமது இலக்கியம்; தரமும் கூட.

0 comments:

Post a Comment