முகநூல் பக்கத்தை மேலும் கீழுமாக உருட்டிக் கொண்டிருந்தபொழுது ஊடகவியலாளர் சமஸ் தான் விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியான நீயா நானா-வில் கலைஞர் குறித்து பேசியிருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க வேண்டுமென்றும், குறிப்பாக தான் பேசியிருக்கும் ஆறு நிமிடங்களைப் பார்க்க வேண்டுமென்றும் எழுதியிருந்தார். மட்டுமல்லாமல் hotstar பக்கத் தொடர்பையும் தந்திருந்தார். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், வேளாண்மைப் பெருமக்கள், மாணவர்கள், தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிவோர், அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுனர்கள், கவிஞர்கள், விளிம்பு நிலையில் தவிப்போர், திமுக தொண்டர்கள், திராவிடக் கருத்தியலாளர்கள், பொதுமக்கள், பெண்ணீயவாதிகள் என்று சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருப்போர் கலந்து கொண்ட நிகழ்வு அது. ஒரு மணி நேரம் நான்கு நிமிடங்கள் நீட்சி கொண்டது.
எனக்குத் தெரிந்து ஒரு தலைவன் மறைந்து, அவனுடைய கொடை இந்த சமூகத்திற்கு என்னவாக இருந்தது என்பது குறித்து இவ்வளவு அடர்த்தியான உரையாடல்களை தமிழகம் இதற்கு முன்னர் நடத்தியிருக்கவில்லை. கலைஞர் தமிழ் சமூகத்திற்கு என்னவாக இருந்தார், ஏன் தொடர்ந்து போராட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது, பெரியாரின் சமூகக் கனவுகளை சட்டங்களாக்க, திராவிடத்தின் பெயரிலேயே தமிழகத்தை ஆட்சி செய்த பிறரை விட, கலைஞர் எவ்வளவு தீவிரமாக முயன்றார், அவரது நடைமுறை அரசியல் சிக்கல்கள் என்ன, அவற்றை சமாளிக்கும் பொருட்டு அவர் விட்டுக் கொடுத்தது என்ன, வென்றெடுத்தது என்ன என்பது குறித்து நாம் இன்னும் பல வருடங்களுக்கு அலுக்காமல் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
எனது நண்பர்கள் பலர் எம்ஜியார் ரசிகர்கள். எம்ஜியார் ரசிகர்கள் என்பதாலேயே கலைஞரை வெறுப்பவர்கள். தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிய வரலாறை ஆவண சாட்சியாக ஆழமாக ஏதும் படித்திராதவர்கள். எனக்குக் கிடைத்த பெரும் பேறாக, கடந்த மூன்று தசாப்தங்களாக திராவிடக் கருத்தாக்கத்தைப் பற்றி போற்றியும், ஏசியும் எழுதப்பட்டுள்ள ஆயிரமாயிரம் பக்கங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தது. தமிழக வரலாற்றிலேயே 1921 முதல் 1937 வரைக்குமான பதினெட்டு ஆண்டுகளும், 1967 தொடங்கி அதிமுக தலைவர் செல்வி.ஜெயலலிதா இறப்பு வரையிலுமான ஆட்சிக்காலம்தான் பொற்காலம் என எண்ணத்தக்கது என்பதற்கான சாட்சியங்களை சமகால அரசியல் தன்னுடைய எண்ணிறைந்த பக்கங்களில் குறித்து வைத்துள்ளது. அதை எதையும் படிக்காமல் வெறும் பிம்பங்களின் கவர்ச்சியில் காட்டுக்கூச்சல் செய்பவர்களை எளிதாக நம்மால் கடக்க முடியும்.
மேலே சொன்ன நிகழ்ச்சியின் போது, கோபிநாத் அரங்கில் இருந்தவர்களிடம் 'உங்கள் பிள்ளைகளுக்கு கலைஞரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவீர்கள்?' என்று கேட்டார். நான் ஏன்ன பதில் சொல்லியிருப்பேன் என்று யோசிக்கிறேன். "என்னுடைய தந்தையார் ஒரு ஆசிரியர். ஆனால், அவர் ஆசிரியர் ஆவதற்கும் அதனால் தன்னுடைய அடிப்படை ஆதாரங்களைத் தேடிக் கொள்வதற்கும் சொல்லவொண்ணாத் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய பாட்டனார் தன்னுடைய மகனை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக உருவாக்குவதற்கு வேறு எவரின் உதவியும் இன்றி தன்னந்தனி ஆளாக ஆறாயிரம் வருட ராட்சசர்களிடம் போராட வேண்டியிருந்தது. ஆனால், என்னுடைய தந்தை என்னை ஒரு அரசு ஊழியனாக உருவாக்குவதற்கு தேவையான அதிபெரும் உதவிகளை கலைஞர் அவருக்கு செய்து தந்திருந்தார். கலைஞர்தான் என்னை சாதிப்பட்டியலில் "பிற்படுத்தப்பட்டோர்" என்ற அடுக்கிற்கு நகர்த்தி முன்னேற்றியவர். அவரின் சமூக நீதிதான் என்னை இன்று ஆசிரியனாக்கியிருக்கிறது. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்ததைப் போல, மொத்தக் குடும்பமுமே எந்த வித முதலீடும் இல்லாமலேயே, அரசுப் பள்ளிக்கூடமும் அரசுக் கல்லூரியும் மட்டுமே முதலீடாக, இன்று வளர்ந்திருக்கிறது என்றால் பெரியாரும் கலைஞரும் மட்டுமே காரணம். இதைத் தெரிந்து கொள்" - இப்படித்தான் கலைஞரை என் வீட்டுப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
சமஸ் சொல்வதைப் போல, இந்த நீயா நானா நிகழ்ச்சி முழுமையாக பார்க்க வேண்டியதுதான்.
--------
--------
இங்கே சிங்காரம் இருக்கிறாரா?
தமிழில் புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களில், சமகால அளவில், சி.மோகன் அவர்களுக்கு கிடைத்திருப்பதை விடவும் சிறப்பான இடமும் புகழும் கிடைத்திருக்க வேண்டும். அவரது "நடைவழிக் குறிப்புகள்" பற்றி பல தீவிர வாசகர்கள் சிலாகிப்பதைக் கேட்டிருக்கிறேன். தற்போது இந்து தமிழ் திசை நாளிதழில் ஞாயிறு தோறும் "நடைவழிப் பயணங்கள்" என்ற தலைப்பில் எழுதி வருகிறார். இந்த வரிசையில் தற்போது 'புயலிலே ஒரு தோணி' என்ற முக்கியமான நாவலை எழுதியவரான ப.சிங்காரம் அவர்களைப் பற்றி எழுதி வருகிறார். இதற்கு முன்னர் ஜி.நாகராஜ் பற்றி படிப்பவர் மனம் நெகிழும் வண்ணம் எழுதியிருந்தார். தமிழில் இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிய ஆவணங்கள் குறைவு. ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும், அவரது குடும்பத்தார் உட்பட, தகவல்கள் கச்சிதமாக கிடைக்கின்றன. அங்கு ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை சமகாலத்திலேயே ஆவணப்படுத்தப் படுகிறது. அவனது அங்கீகரிப்புடனேயே அது வெளியிடவும் படுகிறது. தமிழில் கதையே வேறு. பாட்டில் காக்கை வந்தால் அதை எழுதியது காக்கைப்பாடினியார் என்று முடிவு செய்கிறோம். பாடலில் டுபுக்கு என்ற வார்த்தை வருமானால் அதை யார் எழுதியிருப்பார்?
திரும்பவும் சி.மோகன். மோகனின் எழுத்தே சிலாகிக்க வேண்டியது. அமைதியான எழுத்து. இயல்பாகவே ஆராவாரம் தவிர்ப்பது. நினைவுகளை கொஞ்சமும் சலமின்றி மீட்டெடுக்க முயல்வது. ப.சிங்காரம் என்ற இலக்கிய மேதமையை தமிழிற்கு அறிமுகப்படுத்தியதே மோகன் அவர்கள்தான் என்று நடைவழிப் பயணங்கள் வழியே தெரிந்துகொள்ளும் போது, வாழ்க்கையை எவ்வளவு அறியாமையில் நடத்தியிருக்கிறோம் என்று வெட்கப்பட வேண்டியுள்ளது. நம்மைச் சுற்றியும் கூட எத்தனையோ அபூர்வமான மேதமைகள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். நாம் கத்தரிக்காயை விலைபேசிக் கொண்டிருக்கும் போது, அமைதியாக தக்காளியை வாங்கி நகர்பவர் நோபல் பரிசு ஒன்றிற்கான படைப்பின் கடைசி வார்த்தையை எழுதிவிட்டு சந்தைக்கு வந்திருக்கலாம். சந்திக்கும் புதியவர்களிடம் 'தயவுசெய்து நீங்கள் யார் என்று சொல்லிவிடுங்கள்!' என்று கெஞ்சுவது நேர்மையான காரியம். உங்களில் யாராவது ஒரு ப.சிங்காரம் இருக்கலாம். கண்டுபிடிக்க நானொன்றும் சி.மோகன் இல்லை. நீங்களே சொன்னால்தான் உண்டு.
சிங்காரம் ரக மேதைகள் கொஞ்சம் முன்னால் வந்து நில்லுங்கள், ப்ளீஸ்!
0 comments:
Post a Comment